புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் பெயர் நீக்கப்பட்டுள்ளது
.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைத் துறைக்கு(ஸ்கூல் ஆப் பெர்பாமிங் ஆர்ட்ஸ்), நாடகத் தந்தை என்று போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை காரணம் ஏதுமின்றி பல்கலைக்கழகம் சத்தமில்லாமல் நீக்கி உள்ளது. "நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள்' என்பது நீக்கப்பட்டு "பல்கலைக்கழக நிகழ்கலைத் துறை' என்று மட்டுமே தற்போது அழைக்கப்படுகிறது.நிகழ்கலைத் துறையின் விழா அழைப்பிதழ்களில்கூட சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. சுவாமிகள் மீது பற்று கொண்ட பேராசிரியர்கள் மட்டுமே அவரது பெயரை மறக்காமல் குறிப்பிட்டு வருகின்றனர்.தமிழ் நாடகக் கலைக்கு அரிய தொண்டாற்றிய சங்கரதாஸ் சுவாமிகள், நலிந்து கொண்டிருந்த தமிழ் நாடகக் கலைக்கு புத்துயிர் அளித்தவர்.
இருபதாம் நூற்றாண்டு துவக் கத்தில் சுவாமிகளின் பாடல்களையும், வசனத்தையும் பாடாத, உச்சரிக்காத நடிகர்களே இல்லை என்ற அளவிற்கு அவருடைய நாடகப் பணி அமைந்திருந்தது.பவளக்கொடி, அல்லி அர்ச்சுனா, சாரங்கதாரா, சிறுத்தொண்டர், பிரகலாதன், பிரபுலிங்க லீலை, நல்ல தங்காள், சத்தியவான் சாவித்திரி, கோவலன், வள்ளி திருமணம், மணிமேகலை, ரோமியோ ஜூலியட், உள்பட 50க்கும்மேற்பட்ட நாடகங்களை தமிழுக்கு அளித்துள்ளார்.ஆங்கில மோகத்தில் தமிழ் பேசுவதைகூட கவுரவக் குறைவாக கருதிய காலக்கட்டத்தில் மேடைகளில் தமிழ் வளர்க்க சங்கரதாஸ் சுவாமிகள் அரும்பாடுபட்டுள்ளார்.
இசையரங்குகளில் தெலுங்கு ஆதிக்கம் செலுத்திய சமயத்தில் எளிமையும், அர்த்தமும் மிகுந்த இனிமையான செந்தமிழ் பாடல்களை இயற்றி நாடகங்களின் மூலம் மக்களிடம் கொண்டு சென்றார்.சுவாமிகள் இயற்றிய நாடகங்கள் படித்தவர்கள் மட்டுமல்லாமல், பாமரரும் பார்த்து ரசிக்கும் வகையில் காலத்தைக் கடந்து மக்கள் மனதில் நிற்கின்றன.அவரது வள்ளி திருமண நாடகத்தில் வேடனாக வந்து வள்ளியை பார்த்து முருகன் பாடும் "காயாத கானகத்தே நின்றுலவு நற்காரிகையே...' என்ற பாடல் காலத்தை கடந்து நின்று இன்றும் இனிமையாக ஒலித்துக் கொண்டுள்ளது.தூத்துக்குடியில் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தம்முடைய 55வது வயதில் 1922ம் ஆண்டு புதுச்சேரியில் காலமானார். அவருடைய சமாதி கருவடிக்குப்பம் இடுகாட்டில் உள்ளது.தமிழகம் எங்கும் கலைச் சேவை புரிந்து புதுச்சேரி மண்ணில் கலந்த சுவாமிகளின் பணி தமிழ் நாடக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டதாக விளங்குகிறது.சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியது தமிழறிஞர்கள், கலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை எழுப்பி உள்ளது.உண்மையான அஞ்சலி எது?புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் கட்டடங்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சுப்ரமணிய பாரதியார் தமிழியற்புலம், ராமானுஜம் கணித புலம், அம்பேத்கர் நிர்வாக கட்டடம், மதன்ஜீத் தெற்காசிய மையம், நேரு அரங்கம், டாக்டர் சலீம் அலி புலம், ஆனந்தரங்கப்பிள்ளை நூலகம் என மறைந்த தலைவர்களின் பெயரை பல்கலைக்கழக நிர்வாகம் சூட்டியுள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில், நிகழ்கலைத் துறைக்கு சூட்டப்பட்டிருந்த நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் பெயர் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு தினம் வரும் 13ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மீண்டும் அவரது பெயரை நிகழ்கலைத் துறைக்கு சூட்டுவது அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக