செவ்வாய், 6 ஜூலை, 2010

இதயம் இழந்த தேசத்தில்..


            இரண்டு ஆவணப்படங்களை முன்வைத்து
தீண்டாமை இல்லாத சமத்துவபுர மாநிலமாக தமிழகம் இருப்பதாலும், சமூக கொடுமைகள் சூரியனை கட்ட பணித்துளிப்போல மறைந்துவிட்டதாலும்,  தமிழக முதல்வருக்கு "அம்பேத்கர் சுடர்" விருது வழங்கப்பட்டுள்ளது. அவரும் "இன்னூமா இந்த ஊர் நம்பல நம்புது" என்ற வடிவேலு சிரிப்புடன் பெற்றுக்கொண்டார். இதை படிக்கும் உங்களுக்கு "கேக்கிறவன்...."  என்ற பழமொழி நினைவுக்கு வந்தால் விருது வாங்கியவர் பொறுப்பல்ல. விருது வழங்கியவர்களைதான் நீங்கள் கேள்விகேட்க முடியும். தங்கள் பிழைப்புக்காக தீண்டாமையை கண்டும் கானாமல் இருக்கும் தலித் இயக்கங்கள் வாழ்வியல் யதார்த்தம் என்னவென்று தெரிந்தே அமைதிக்காக்கின்றனர். அம்பேத்கர்சுடர் விருதை தமிழக முதல்வர் பெற்ற மாதத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை அதிகார வர்க்கத்தின் மனதில் இருக்கிற சாதி உதைத்து மிதித்த அவலத்தை உலகம் கண்டது, இந்த அவலத்தையும் உலக வரைபடத்தில் சிறு புள்ளியாக இருந்தாலும், உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பி இருக்கின்ற ஒரு கிராமம் குறித்தும் இரண்டு ஆவணப்படங்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டில் வெளியிடப்பட்டது. காங்கியனூர் கருவரை மற்றும் உத்தபுரம் - உடைபடும் சுவர்கள் என்ற இந்த இரண்டு ஆவணப்படங்களும் தமிழகம் முழுவதும் மக்களிடம் அவசியம் செல்லவேண்டிய காட்சிப்படங்களாகும்.

காங்கியனூர் கருவரை: 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 துவங்கி கிட்டதட்ட ஒரு ஆண்டாக நடந்த தொடர் போராட்டத்தின் கரு ஆவணப்படமாக வந்துள்ளது. மனுதர்மத்தின் சாதிய கட்டளைகளை அறிமுகம் செய்து, விழுப்புரம் மாவட்டம் முகையூர் பகுதியில் உள்ள காங்கியனூர் கிராமத்தில் உள்ள திரௌவுபதி ஆலையத்தில் தீமிதி விழாவுக்கு தலித் மக்கள் அனுமதிக்க மறுப்பதுடன் இந்த ஆவணப்படம் துவங்குகிறது. ஆலைய திருவிழாவிற்கு தலித் மக்கள் பணம் மட்டும் ஆதிக்கசாதியினருக்கு தேவைபடுகிறது. வசூல் செய்கின்றனர். ஆனால் தீமிதி விழா தினத்தன்று தீமிதிக்க வரும் பக்தர்கள் சாதி விசாரனை செய்யப்பட்டு தலித்துகளாக இருந்தால் வெளியேற்றப்படுகின்றனர். மீறி நெருப்பு மிதிக்க இறங்கிய மணிகண்டன் என்ற 18 வயது இளைஞன் அடித்து நொறுக்கப்படுகிறார். தலித் மக்களின் வாக்குமூலங்கள் பார்ப்பவர்களை கோபம்கொள்ள செய்கிறது. மனித நாகரீகத்தின் மீது காறி உமிழும் இந்த வெக்கங்கெட்ட செயலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போராட்டகளத்திள் இறங்குகிறார்கள். மார்க்சிஸிட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் லதா உள்ளிட்ட தலைவர்கள் போராட்டகளத்திற்கு செல்கிறார்கள். அந்த தினம் தஞ்சை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்துக்கொண்ட சீனிவாசராவ் அவர்களின் நினைவு தினம்.

காக்கி வர்ணாஸ்ரமத்தின் புதிய நிறமாய் மாறியது, காவல்துறையின் கைத்தடி சாதியத்தின் செங்கோலாய் மாறியது, காட்டுமிராண்டிகளாய் மாறிய காவல்துறையினர் விழுப்புரம் மாவட்ட அன்றைய காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமையில் அணிவகுத்து நிற்கின்றனர். சுதந்திரம் அடைந்த நாட்டில் மனிதர்களாய் வாழ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக்கேட்ட,  சமூகநீதி கேட்டு போராடிய போராளிகளை கொடூரமாக தாக்கும் காட்சிகளை பார்க்கும் போது இதயம் பதட்டத்தில் உறைந்து போகும். போராளிகள் செங்கொடியுடன் ஆலயம் போக வேண்டும் என்று அனுமதி கேட்டு எழுந்த தகராறு அல்ல இது. சட்டமன்ற உறுப்பினர் என்ற மக்கள் பிரதிநிதியையாவது தலித் மக்களுடன் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு, காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலாவது தலித் மக்கள் ஆலயத்தினுள் அனுமதிக்கவேண்டும் என்று கேட்டு அதுவும் மறுக்கப்பட்டு அங்கு சென்றவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர் லதா கீழே தள்ளப்பட்டு காவல்துறையின் பூட்ஸ் கால்களால் அடிவயிற்றில் மிதிக்கப்பட்டு கர்பப்பை பாதிக்கப்பட்டு மூன்று மாதம் சிகிச்சையளிக்கப்பட்டர்.

ஆனல் செப்டம்பர் 30 காவல்துறையின் நரவேட்டைக்கு பின் அக்டோபர் 7 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் தலித் மக்கள் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். இதை ஏன் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பே நடத்தியிருக்ககூடாது? என்று ஆவணப்படத்தில் கே.பாலகிருஷ்ணன் எழுப்பி இருக்கும் கேள்வி மிகவும் முக்கியமானது. தமிழக அரசு தீண்டாமை குறித்து கடைபிடித்துவரும் கள்ள மவுனத்தை வீதிகளில் இறங்கி போராடி கலைத்துவருவது ஆட்சியாளர்களை கோபம் கொள்ள வைக்கிறது. அந்த ஆத்திரத்தின் அடிகள்தான் போராளிகள் உடலில் விழுந்தது. ஏதோ தமிழக அரசு தானே யோசித்து அம்மக்களை ஆலையத்தினுள் அழைத்துச் செல்வது போல நாடகமாடியது. விழுப்புரம் மாவட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் முத்துகுமார் எழுப்பும் கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்தது. "காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் ஆலையத்தின் கருவரைக்குள் தேவநாதன் என்ற அய்யோக்கியன் செய்த ஆபாசத்திற்கு கூட கழுவப்பாடாத கடவுளின் கருவரை, காங்கியனூரில் தலித்துகளின் ஆலைய நுழைவுக்குப்பின் கழிப்பதற்காக கழுவப்பட்டுளது எனின் தலித்துகள் குறிதத நமது சமூகத்தின் பார்வை என்ன?"

தலித்துகளின் வாழ்வியல் உயர்சாதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ள மனச்சித்திரம் அவர்கள் ஊருக்குள் வாழதகுதியற்றவர்கள் என்பதுதான். இதை மாற்ற அம்மக்களுக்கு நிலம் மட்டுமே அடிப்படை ஆதாரம் என்பதை இறுதியில் இந்த ஆவணப்படம் சொல்லி முடிக்கிறது.  ஆனால் இந்த ஆவணப்படத்தில் இன்னும் அந்த கிராமத்தின் வரலாறு, அந்த கோயில் உருவான விதம், கோயிலின் வரலாறு, அக்கிராம மக்களின் சமூக வாழ்க்கை வரலாறு போன்றவற்றை ஆவணப்படுத்தி இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். இயக்கிய விஜயனும், புதுயுகம் நடராஜனின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.

உததபுரம் - உடைபடும் சுவர்கள்: அன்று மாலை உத்தபுரத்தின் தெற்குத் தெருவில், வடக்குத்தெருவை சார்ந்த ஆதிக்க சாதியினரும், காவல்துறையினரும் நடத்திய தாக்குதல்கள் மிகவும் வலிமையானது. தலித் மக்களிள் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. அவர்கள் சேமித்து வைத்திருந்த சாதாரண பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அந்த காட்சிகளை நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த மூன்று கர்பிணி பெண்களின் வயிற்றில் இருந்த குழந்தைகள் அழிந்து போயினர். ஆம் அத்துனை வன்மம் மிக்க தாகுதல் அது. அந்த வன்மத்தின் பிண்ணனியில் ஒரு வரலாறு மறைந்திருந்தது. "உத்தபுரம்" இந்திய நாகரீகத்தின் மேலே கேலிசெய்து சுவர் எழுப்பப்பட்ட கிராமம். அந்த கிராமத்தின் தலித் மக்கள் வசித்த பகுதியை தடுத்து  மதில்மேல் மின்சார கம்பி வைத்து  கட்டப்பட்டிருந்த சுவர் பதிணெட்டு ஆண்டுகளாக நமது ஜனநாயகத்திற்கு சவால்விட்டு நின்றிருந்தது. காப்பீடு ஊழியர் சங்க தோழர்கள் ஆய்வில் இந்த உண்மையை கண்டுபிடித்தனர். மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் கவனத்திற்கு வரும்வரை. இவர்கள் கவனத்திற்கு வந்தவுடன் அது தேசம் தழுவிய பிரச்சனையாக மாறியது. 

தொடர் போராட்டங்கள் நடந்து தமிழக அரசு அந்த அவமான சின்னைத்தை இடிக்க தயாராக இல்லை. ஆதிகசாதியினர் அந்த ஊரில் எந்தவிடத தீண்டாமையும் இல்லை, அது பாதுகாப்பு சுவர் என்று தலித் மக்களை மேலும் கேவலம் செய்தனர். கலவரத்தில் ஆதிக்கசாதி அராஜகத்தால் கையில் வெட்டுப்பட்ட பெரியகருப்பனும், காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் காலில் தோட்டா துளைத்த வாசிமலை என்ற இளைஞனும் சாட்சியாய் நம்முந் நிற்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் அந்த சுவரை இடிக்கும் நேரடி போராட்டத்திற்கு நேரடியாய் வருவதாக அறிவித்ததும் தமிழக அரசு விழித்துக்கொண்டது. அவர் வருவதற்கு 6 தினங்களுக்கு முன் அரசு அந்த தீண்டாமை சுவற்றின் ஒரு சிறிய பகுதியை இடித்தது. அதற்கே கோபம் அடைந்த ஆதிக்க சாதியினர் கோபம் அடைந்து தங்களது ரேசன் கார்டுகளை தூக்கி எரிந்துவிட்டு மலைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்களின் சாதி திமிரை கண்டிக்க வேண்டிய ஆளும் கட்சி திமுக பிரமுகர்கள் அவர்களை மலகளில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். அதன்பின் அரசின் சமாதானத்திற்கு பின் மலை இறங்கினர். அதன் பின் அங்குள்ள கோயிலில் வெள்ளை அடிக்கும் போது ஏற்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்தான் முதல் பாராவில் நீங்கள் கண்டது.

சாதியத்தின் கொடிய நெருப்பில் அகப்பட்டு இன்றுவரை அந்த கிராம மக்கள் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆளும் வர்க்கம் தீண்டாமை கொடுமையை ஓட்டு பாதிக்காமல் பாதிக்காமல் அகற்ற முடியுமா என்று கணக்கீடு செய்து கொண்டு இருக்கிறது. இந்த உத்தபுர சம்பவங்களை மாதவராஜ் இயக்கி ப்ரியா கார்த்தி ஒளிபதிவு செய்து ஆவணப்படமாக மாற்றி இருக்கின்றனர். ஆவணப்படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அந்த பிரச்சனையின் நிதிகேட்ட போராட்ட ஊர்வலத்தின் கால்கள் நடப்பது போல காட்சிபடுத்தப்பட்டிருக்கும். இன்னும் நீதிகேட்டு ஆயிரக்கணக்கான கால்கள் போராட்ட களத்தில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதில் பெருமை படதக்க விஷயம் என்னவெனில் அப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதிகேட்டு நடக்கும் கால்களில், உயரும் போராட்ட கரங்களில் சரிபாதி உயர்சாதி மக்களுடையது. இந்த அதிசயம் நடக்க காரணம் அந்த மக்கள் தங்களை செங்கொடியில் குறிப்பாக மார்க்ஸிட் கட்சியின் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டதுதான். ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கான கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமையில் பாதிகப்பட்டிருக்கும் போது வீரவசனம் பேசிய தலித் தலைவர்கள் ஓடி ஒளிந்துக்கொண்டனர். 

                                              எதுக்கலிக்கும் குமட்டல்களை செறித்து நிற்கிறோம்
நீங்கள் ஏசும் போது கண்ணீரோடு சிரித்து நிற்கிறோம்!
வாக்காளர் பட்டியலில் வந்து நிற்கிறோம்
உங்கள் வரலாற்று பக்கங்களில் எங்கிருக்கிறோம்!
ஊரில் உள்ள கொடிகளெல்லாம் தள்ளி நின்றது
செங்கொடியில் கைகள்தானே அள்ளிக்கொண்டது!
காற்றில் பாடல் கசிந்து வருகிறது.... இன்னும் இன்னும் போராட்டக களம் அழைத்து நிற்கிறது. இந்த இரண்டு ஆவணப்படங்களும் அந்த களத்திற்கு வலுசேர்க்கும்.
--------------------------------  ஜூலை - 2010 உழவன் உரிமை இதழ்

4 கருத்துகள்:

  1. வாக்காளர் பட்டியலில் வந்து நிற்கிறோம்
    உங்கள் வரலாற்று பக்கங்களில் எங்கிருக்கிறோம்!
    ஊரில் உள்ள கொடிகளெல்லாம் தள்ளி நின்றது
    செங்கொடியில் கைகள்தானே அள்ளிக்கொண்டது!//

    http://sindhan.blogspot.com/2010/07/blog-post_06.html

    ”உயரத்தில்
    மழைமேல் வாழ்வது
    உன் உரிமை ...
    நீ எம் தலை மேல் அல்லவா குந்தியிருக்கிறாய்?”

    ”அமைதி நீடிக்கிறது”
    மேலிருந்து ஆசிர்வதிக்கிறார் கடவுள்
    உன் வழியாக

    கீழிருந்து கர்ஜிக்கிறது காலம்
    என் வழியாக
    ”கடந்த காலத்தின்
    மயானம் உயிர்த்தெழுகிறது”

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு