வியாழன், 11 மார்ச், 2010
இரா.விஜயசங்கரின் "பெரியாரும் திராவிட இயக்கமும்"
தந்தை பெரியார் குறித்து இரண்டு விதமான கருத்துக்களே இன்றைய தமிழக அரசியலில் சூழலில் மேலோங்கி நிற்கிறது. அவரின் மகத்தான பணிகளை, தமிழக சமூக முன்னேற்றத்தில் அவரின் உழைப்பை மறைத்து அல்லது சரியாக மதிப்பிடாமல் மொத்தமாய் நிராகரிப்பது. அல்லது அவர் விமர்சனங்களுக்கு அப்பார்பட்டவர், அவர் குறித்து யாராவது விவாதங்களை முன்வைத்தால் பொருத்துக்கொள்ளாமல் விமர்சனம் செய்பவர்களை பழித்து, அவரை தெய்வநிலைக்கு கொண்டு செல்வது என்பதாகவே அமைந்துள்ளது. இந்த இரண்டு கருத்துக்களும் வாழ்நாள் முழுவதும் சகல விதமான மூடப்பழக்க வழக்கங்களை கேள்விக் கேட்டுக்கொண்டிருந்த பெரியாருக்குச் செய்யும் அவமரியாதையாகும்.
தர்கப்பூர்வமாய் அசைக்க முடியாத கேள்விகளை சமூக வெளி எங்கும் எழுப்பிவந்த தந்தை பெரியாருக்கு இது பொருந்தும் என்றால் அவர் பெயரில் இயக்கம் நடத்துபவர்களுக்கும் இது பொருந்தும். தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்கள் குறித்து விருப்பு வெறுப்பற்ற, உழைக்கும் வர்க்கம் சார்ந்த ஆய்வு தேவைப்படும் நேரத்தில் இந்த நூல் ஒரு அசைவின் துவக்கமாய் இருக்கும் என நம்பலாம். ஒரு இயக்கம் செய்ய வேண்டிய (அதாவது இடதுசாரி இயக்கம்) பணியை தனிநபராய் விஜயசங்கர் துவக்கியுள்ளார். அவரது உழைப்பு அபாரமானது. மார்க்சிய சட்டகத்தூடாக பயணிப்பது.
பெரியார் பெயரைச்சொல்லி இயக்கம் நடத்துபவர்களின் செயல்பாடுகளை எடைபோட்டு "அறிவியல் அறிவும், பார்வையுமற்ற ஒரு சமூக சூழலை மாற்றுவதற்காக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கையிலிருக்கும் அரசியல் அதிகாரத்தையும், சமூக செல்வாக்கினையும் பகுத்தறிவுச் சிந்தனை வழிவந்தவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதைதான் புரிந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது" என தனது புத்தகத்தை துவங்கும் விஜயசங்கர், திடாவிட இயக்கங்களின் றூற்றாண்டுகால வளர்ச்சியை மிகச்சுருக்கமாக விவரிக்கிறார். மிகச்சுருக்கமாக விளக்கினாலும் வராலாற்றின் சாரம் அதில் குறையவில்லை.
பெரியார் போட்ட தளத்திலிருந்து எழுந்து, ஆனால் திசைமாறி தமிழகத்தில் இரண்டு தலைமுறைகளையும் தாண்டி திராவிட இயக்கங்களின் ஆட்சி தொடரும் இந்த சூழலில், திராவிட இயக்கங்கள் குறித்து இளம் தலைமுறையினர் ஒரு சுருக்கமான ஆனால் சரியான வழியில் புரிந்துணர இப்புத்தகம் ஒரு தூண்டுகோலாய் அமையும். திராவிட இயக்கங்கள் குறித்து இடதுசாரி சிந்தனையுடனான ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிக சொற்ப்பம் அல்லது இல்லை என கூற முடியும். அந்த இடத்தை நிறப்ப விஜயசங்கரால் முடியும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஒருமணி நோர உரைக்காக தயாரிக்கப்பட்ட குறிப்புகளாய் இந்த புத்தகம் தெரியவில்லை. திராவிட இயக்கம் குறித்த நீண்டநாள் வாசிப்பும், பல்வேறு விபரங்களை சேகரித்து, சேகரித்ததை சரிபார்த்து அதை இடதுசாரி கண்ணோட்டத்தில் ஒப்பிடுட்டு ஒரு ஆழமான வாசிப்பின் வெளிபாடாக இது தோன்றுகிறது.
"மாநிலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இரு பத்தாண்டுகளுக்குள் மத்திய ஆட்சியிலும் அதிகாரப் பங்கினைப் பெற்றிருக்கும் திராவிட கட்சிகள் தங்களின் அடிப்படைக் கொள்கைகளை விட்டு அதிக தூரம் வந்துவிட்ட போதிலும், தமிழகத்தில் இன்றும் 65 முதல் 70 சதவீதம் வரை வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவது எவ்வாறு என்பதும் சிந்திக்க வேண்டியது" என்று குறிப்பிடுகிறார். எனவேதான் திராவிட இயக்கங்கள் குறித்து மேலோட்டமான புரிதல்களுடன் பேசுவதை, வெறும் சினிமா கவர்சியால் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள் என்ற கருத்துகளை உதிர்த்துவிட்டு அவர்களின் சமூக பினைப்பின் சாரத்தை பார்க்க வேண்டியுள்ளது. மாற்று அரசியலை முன்வைத்து போராடும் இடதுசாரி இளைஞர்களுக்கு இது இன்றைய அவசியத்தேவையாய் உள்ளது. அரசியல் அற்ற தன்மையுடன் உருவாக்கப்படும் இளம் தலைமுறைகளுக்கு திராவிட இயக்கங்கள் குறித்த ஒரு ஆழமான புரிதல் தேவைப்படுகிறது. அவர்களது ஆக்கப்பூர்வ பணிகளை நிராகரிக்காமல் அவர்களது வர்க்க நலன் சார்ந்த பார்வைகளை புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.
திடாவிட இயக்கம் தோன்றிய பின்னணியை "பெரும்பாலும் நிலபிரபுத்துவத்தின் பிடியிலிருந்த ஒரு சமுதாய அமைப்பின் மீது பிரிட்டிஷ் காலணி ஆதிக்கம் ஏற்படுத்திய அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சாரத் தாக்கங்களும் அவற்றின் எதிர்வினைகளும் உருவாக்கிய சூழலில்தான் பல அரசியல் சமூக இயக்கங்களும் சிந்தனைகளும் தோன்றின. தென்னிந்தியாவில் அவ்வாறு தோன்றியதுதான் திராவிட இயக்கம்" என்று குறிப்பிடும் போதே அந்த நேரத்தில் வாய்ப்புகளுக்கான அடையாள அரசியலின் தோற்றம் உருவானதை புரிந்துக்கொள்ள முடிகிறது.
எப்படியெனில் ஒவ்வொரு சாதியிலும் இருந்த படித்த வர்கத்தினர் தமது அரசியல் பொருளாதார நலன்களை பாதுகாக்க ஸ்தாபனத்தை ஏற்படுத்தினர். ஆதிதிடாவிட மகாஜன சபா 1892லும், செங்குந்த மகாஜன சங்கம் 1908லும், நாடார் மகாஜன சங்கம் 1910லும், விஸ்வகர்மா மகாஜன சங்கம் 1912லும், வன்னியகுல சத்திரியர் சங்கம் 1919லும் உருவான பின்னணி இதுதான். ஆனால் "சாதியம் கெட்டிப்பட்டிருந்த ஒரு நிலப்பிரபுத்துவச் சூழலில், வர்க்கங்கள் உருவாகி தன்னுணர்வு பெறாத வரலாற்று தருணத்தில் இது நிகழ்ந்தது" என்பது இன்னும் ஆழமான விவாதத்திற்கு உரியதாய் இருக்கிறது. அல்லது பின்னணியுடன் அதற்கான விளக்கங்களை கோரி நிற்கிறது.
"பல ஆயிரம் ஆண்டுகளாக வர்ணாசிரம தர்மம் அளித்த வளமான வாய்ப்புகளில் ஒன்றான கல்வியை முழுவதும் அனுபவித்து முன்னணியில் இருந்த பிராமணர்கள் இயற்கையாகவே இந்த (பிரிட்டிஷ்) நிர்வாக இயந்திரத்தின் பெரும்பாலான பதவிகளில் அமர்ந்தனர்" இதன் எதிர் வினையாக பிராமணர் அல்லாதோர் ஒன்றுபட தென்னிந்திய நல உரிமை சங்கம் பிறந்தது. ஆனால் இதன் தலைமை பொறுப்பில் எம்.சி.ராஜா போன்ற ஓரிருவரை தவிர்த்து ஆதிக்கம் செலுத்திய அனைவரும் ஜமீன்தார்களும் மிராசுதார்களும் புதிதாய் பிறந்த தரகு முதலாளிகளும் ஆவர். இவர்கள் மட்டுமன்றி பிரிட்டிஷ்காரர்களின் ஆதரவானர்களான சர், திவான் பகதூர், ராவ் பகதூர் போன்ற பட்டங்களை பெற்றவர்களும் ஆவர். இந்த தலைமை பிரிட்டிஷை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்காமல் இருந்ததை அதாரத்துடன் சுட்டுகிறார்.
அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், காங்கிரஸ் கட்சியின் சனாதான சமரச கொள்கையில் மாற்றுக் கருத்துக்கொண்டு வெளியேறி பிராமணரல்லாதோர் இயக்கம் வைத்த வகுப்புவாரி பிரதிநிதிதுவத்தை ஆதரித்து அதில் இணைகிறார். ஆனால் அவருக்கு நீதிக்கட்சியுடன் பல கேள்விகள் இருக்கிறது. "நீதிக்கட்சி அரசாங்கப் பதவிகளையும் கல்வியையும் பிராமணரல்லாதோர் பெறவேண்டும் என்ற இலக்கினை அடைவதுடன் திருப்தி அடைந்துவிட போகிறதா அல்லது வயல் வெளிகளிலும், கிராமப்புரங்களிலும் வறுமையில் உழலும் பெரும்பாலான பிராமணரல்லாதோரின் பிரச்சனைகளையும் எடுத்துக்கொள்ளப்போகிறா" என்று வினா எழுப்பியவர் பெரியார். அவர் இந்த காலகட்டத்தில் சமதர்ம பிரச்சாரத்தை மேற்கொண்டதும் ஒரு கட்டத்தில் அதைகைவிட்டு உழைக்கும் வர்க்கத்தை புறம்தள்ளி சாதியத்தை உயர்த்திப்பிடித்த நீதிக்கட்சிக்கு திரும்பிச் சென்றதையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
சுயமரியாதை இயக்கம் அதில் இருப்பவர்கள் தங்கள் பெயர்களிலும், உடல்களிலும் இருந்த சாதி அடையாளத்தை துறக்க வேண்டுமென்றது. சாதி மறுப்பு திருமணங்கள் உள்ளிட்ட பல முற்போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால் பெரியாரின் இந்த முற்போக்கு நடவடிக்கைகள் நீதிக்கட்சிக்குள் பிளவை உண்டாக்கியது. பெரியாரின் கடுமையான பணிகளுக்கு இளம் வயதுடைய அண்ணாதுரை வந்து இனைந்தது மிகவும் உதவியாக இருந்தது. அண்ணாவின் ஆளுமை நீதிகட்சியின் பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றும் தீர்மாணத்தை முன்மொழியும் அளவுக்கு சென்றது.
திராவிடர் நாடு அல்லது தமிழ்தேசியம் தீவிரமாக பேசப்பட்டாலும், நாட்டின் விடுதலையை முன்வைத்து மேலெழுந்த இந்திய தேசியத்திற்கு பின்னால் மக்கள் அணி திரட்டப்பட்டனர். உதாரணமாக ராமயண நூலை வீதிகள் தோறும் கொளுத்துவது என பெரியார் அறிவித்த காலம்தான் தேசிய அரசியலில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மொத்த இந்திய தேசியத்தையும் வெகுண்டெழ செய்தது. திராவிடர் கழகத்தில் பெரியாருக்கு பக்கமாய் இருந்த அண்ணாதுரையின் சாதுரியம் இதை கணக்கிட்டது. அதனால்தான் "இந்துஸ்தான் சுயராஜ்யம் என்று நாளை கொண்டாடப் போகும் வடநாட்டு ஏகாதிபத்திய ஆட்சி, பிரிட்டிஷாருக்கு ஏஜெண்டாக - கையாளாகயிருந்து வெள்ளையருடன் வடநாட்டு பிர்லா, பஜாஜ் கோஷ்டியினர் செய்துள்ள ஒப்பந்த ஆட்சியேயின்றி, சுய ஆட்சி என்று எந்தக் காங்கிரஸ் அரசியல் நிபுணராகிலும் கூற முடியுமா?" என்று வினா எழுப்பி விடுதலை தினத்தை பெரியார் துக்க தினம் என்றதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 1949ஆம் ஆண்டு அவர் தி.மு.கவை துவக்கிய போது இந்திய தேசியத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை முன்நிறுத்திய விதம் கவனிக்கத்தக்கது. அதாவது வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற முழக்கம் இந்திய தேசியத்தை கட்டமைத்த முதலாளிகளுக்கு எதிராக தமிழ் முதலாளிகள் ஆதரவை தி.மு.காவிற்கு பெற்றுக்கொடுத்தது. பின்பு வளர்ச்சிப் போக்கில் தேசிய சந்தை தமிழ் முதலாளிகளின் தேவையான போது கிடைக்கும் சமிஞையும் அதில் இருந்தது.
தமிழகத்தின் பெரும்பான்மையான இடைநிலை சாதியினரான வளர்ந்து வந்த முதலாளிகளையும் நிலபிரபுகளையும் தன்வயப்படுத்திய திராவிட இயக்கம் அவர்களை தக்கவைக்க தனது கொள்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தத் துவங்கியது. கடவுள் இல்லை என்பது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றூம் பின் ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம் என்றும் மறுகியது. இடஒதுக்கீட்டில் நடத்திய அவர்களது சாதனை இரண்டு தலைமுறையினரை அவர்கள் பக்கம் நிற்க வைத்தது. இன்று சமூக நீதிக்கு எதிராக தனியார் மயத்தை அவர்களே அமுல்படுத்தும் சூழலில் அவர்களது வெகுஜன ஆதரவு தளம் தொடர்கிறது. தமிழ் மொழியின் மொத்த குத்தகைதாரர்களாக தங்களை அறிவித்துக்கொன்டவர்களின் ஆட்சியில்தான் தமிழில் ஒரு எழுத்தை அறியாதவர் சட்ட, பட்ட மேற்படிப்பில் பட்டம் பெறலாம் என்ற நிலை. இந்த முரண்பாடுகளை இன்னும் ஆழமாய் விவாதிக்க இந்ந நூல் தூண்டுகோலாய் அமையும்.
விஜயசங்கரின் உரை நூலாக்கப்பட்டுள்ளது. எனவே விவான தகவல்களும், ஆய்வுகளும் வெளிவரவில்லை. ஆனால் இந்த நூலை அவர் விரிவாக எழுதுவது அவசியம். ஏனெனில் கீழ்கானும் கேள்விகள் அதைத்தான் கோருகின்றன...
* தேசியம் என்ற கட்டமைபின் அரசியல் பரிமானங்கள் எழுந்துவந்த வரலாற்று தேவையின் பின்னணியை வர்க்க அரசியல் பார்வையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
* தேசியம் என்ற கருத்துருவாக்கத்தில் புறக்கணிக்கப்படும் தொழிலாள வர்க்க அரசியல் நிலை குறித்து சர்வதேச அரசியல் பின்னணியுடன் விவாதிக்க வேண்டியுள்ளது.
* நிதிகளின் உலகமயமாக்கல் எழுப்பியுள்ள வாழ்வியல் நெருக்கடிக்கு மத்தியில், மேலெழுந்துவரும் அடையாள அரசியலின் பின்னணியுடன் திராவிட இயக்கத்தின் இன்றைய பரிமாணத்தை உள்வாங்க வேண்டியுள்ளது. நிகழ்கால அரசியல் புரிதலுக்கு இது அவசியமானது.
* நீதி கட்சி தோன்றிய பொருளாதார பின்னணியையும் அவர்களது வெகுஜன செயல்பாட்டையும் விளக்க வேண்டும். அதன் வர்க்க நலன் குறித்த செயல்பாட்டை விவரிக்க வேண்டும்.
* இந்தியாவில் ஊடும் பாவுமாக இனைந்துள்ள வர்கம் சாதி குறித்தும் இதனை திராவிட இயக்கங்கள் "கவனமாக" கையாண்ட முறை குறித்தும் விரிவாக பேச வேண்டும். இன்றுவரை தலித் மக்களுக்காக திராவிட இயக்கங்கள் செய்த சமூக, அரசியல், பொருளாதார பங்களிப்பு குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது.
* இந்த வரலாற்று கட்டத்தில் சாதி கட்டமைப்பை எதிர்த்து இடதுசாரிகளின் நடத்திய போராட்டம் போராட்டம் மற்றும் வர்க்க அணிதிரட்டலுக்கான முயற்சி என்ன? அவைகள் செய்த காத்திரமான பங்களிப்பு என்ன? இவைகளை புறக்கணித்து திராவிட இயக்கங்களின் செயல்பாடு எந்த வகையில் வினையாற்றியது என்பதை இணைக்க வேண்டும்.
* பெரியார் - அண்ணா - கலைஞர் - எம்.ஜி.ஆர் ஆளுமைகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள பிம்பங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.
மேற்கண்ட விபரபங்களுடன் இந்த நூலை விரிவாக எழுதுவது திராவிட இயக்கங்கள் குறித்த ஒரு குறிப்பிடதக்க அறிமுகத்தை இளம் தலைமுறைக்கு உருவாக்கும். அதுமட்டுமல்ல இடதுசாரிகள் பார்வையில் திராவிட இயக்கம் குறித்த ஆய்வின் தேவையை அது நிறப்பும். பெரியாரின் புத்தகங்களை வாசித்து மட்டுமே எழுதாமல் அதை அன்றைய காலகட்டத்துடன், தேசிய இயக்கங்கள் எழுச்சியுடன், சர்வதேச நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு எழுதிய விஜயசங்கரின் முயற்சி விரிவான ஆய்வுகளம் நோக்கி படர கைகொடுப்போம். அதாவது அவரது நூலை வாசித்து அவருடன் விவாதிப்போம். விமர்சனங்களை முன்வைப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
விடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...
-
ஆர்ப்பாட்டத்தை மறியலாக மாற்றிய காவல்துறை ஒரு தொழிற்சாலையில் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிகழ்வுக்கு எதிராக ...
-
1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...
முதலில் திராவிடக்கட்சிகள் என்று கூரும்போது அவை இடம் சாந்த அரசியல் நடத்திப் பிழைத்தார்கள் என அறிக. திராவிடர் [ர்] என்ற இனம் சார்ந்த அரசியல் அல்ல.
பதிலளிநீக்குஅண்ணாவின் ஆளுமையால் பார்ப்பனரல்லாதர் இயக்கம் திராவிடர் கழகமானது என்பது பிழை. அந்த வியாசம் அச்சடித்தது [தயாரித்தது]அண்ணாவின் திராவிடநாடு அச்சகத்தில் அல்ல.மாறாக பெரியாரின் குடிய்ரசு அச்சகத்தில்தான் . பெரியார் நினைத்ததை செய்ய அண்ணாவைப்பய்யன்படுத்தினார்.வீரமணி பயிற்சிவகுப்புகளில் இதை கூறுகிறார்.இப்போது கூரமாட்டார் பயப்படுவார்.
பெரியாரிடமிருந்து பிரிந்து சென்ற பலரில் அறிஞர் அண்ணா மட்டுமே வெற்றி பெற முடிந்தது.அவர் பெரியாரின் அடிப்படைக் கொள்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் வெற்றிக்காக "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்","ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற அள்விற்கு விட்டுக் கொடுத்தார்.
பதிலளிநீக்குஅதையே பின் வந்தவர்கள் நெற்றி அடையாலம் முதல், சாமியார் அடிமைத்தனம் வரை பெரிய மனித வேடங்களாகப் போட்டு வாழத் தலைப்பட்டனர்.
பார்ப்பனப் பத்திரிக்கை பலத்திற்குப் பயந்தனர்.அதுவும் கடந்த தேர்தலில் முறியடிக்கப் பட்டது.
அ தி மு க முற்றிலும் அண்ணாவின் கொள்கைகளுக்கெதிரானக் கட்சியாக நடிகையின் கைப்பவையாகக் கலைஞர் எதிர்ப்புக் காரர்களின் கூடாரமாக மாறிவிட்டதால் அதன் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
அடிப்படையில் இனி பெரியாரின் தாக்கமில்லாதக் கட்சிகள் தமிழ்நாட்டில் வர முடியாது என்ற அள்விற்கு வளர்ந்துள்ளதே பெரியாருக்கு ஒரு சிறு வெற்றி.
அவருடையக் கடைசிக் கேள்வியான
"உங்களில் பலர் படித்திருக்கிறீர்கள், சிலர் பதவிகள் பெற்றிருக்கிறீர்கள், ஆனால் எத்தனை பேர் பண் பட்டிருக்கிறீர்கள், இன்னும் சூத்திரர்களாகத் தானே உங்களை விட்டுப் போகின்றேன் " என்பதற்குப் பதில் சொல்பவர்களே பெரியாரின் உண்மைத் தொண்டர்கள்.
அது நிறை வேறித்தான் ஆகும்.
அதுவே பெரியாரின் வெற்றியாகும்.
good
பதிலளிநீக்கு