பரலோகத்திற்கு வழிகாட்டுபவர்கள் பணி நியமனத்தில் வழிகாட்ட மறுப்பது குறித்த விசாரனை.---------------------------------------- - எஸ்.ஜி.ரமேஷ்பாபு
- 1 -
இடதுசாரிகள் போராடிக் கொண்டுவந்த "தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை" எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் "வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வராதீர்கள்" என்ற இந்த புத்தகம்.
எல்லாம் நன்றாக நடப்பதுபோல இருக்கிறது, திருப்பிக்கேட்காதவரை அல்லது இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வரை. ஆதிக்க சாதியினர் இந்த சமூகத்தின் மீது காலகாலமாய் சுமத்தி வந்த அவர்களுக்கான நீதியை கேள்விக் கேட்டால் கலவரம் என முத்திரை குத்துகின்றனர். தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு அவர்கள் மண்ணுக்குப் போன பின்பும் அவர்களைப் பின் தொடர்கிறது. கிராம இடுகாடுகள் அவர்களுக்கு எட்டாத தூரத்தில் இருக்கின்றன.மேல்சாதியினர் மறுப்புக்கு உள்ளாகும் இடத்தில் அவர்கள் புதைக்கப்பட்டால் அடுத்தநாள் அவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுத் துவம்சம் செய்யப்பட்டிருக்கும்.
இவைகளுக்கு அடிப்படை காரணம், இந்து மதம் தன்னை தக்கவைத்துக்கொள்ள உருவாக்கிய வர்ணாசிரம அத்ர்மம்இந்த அதர்மமே நமது நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களை மாற்று மதங்களை நோக்கி விரட்டியது என்பதும், மாற்று மதங்களை வேரறுக்க வர்ணாசிரமம் எத்தகைய சாகசங்களை செய்தது என்பதும் வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய ரகசியமாய் காத்திருக்கிறது.
இந்திய நாட்டின் சகல கட்டமைப்பிலும் சாதி தன்னை நிலைநிறுத்திக் கொண்டதன் விளைவு உலகமெல்லாம் அன்பை போதித்த கிருத்துவமும், இஸ்லாமியமும் இந்தியாவில் தனது இறுப்பை நிலைநிறுத்த இந்த கேடுகட்ட சாதி அமைப்பை சத்தம் போடாமல் அல்லது எதிர்ப்பது போல பாவனை செய்துகொண்டு கடந்து செல்கின்றன.
"இந்துக்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகள் என்று எதுவும் இல்லை. இந்து அல்லாதோரிடம் அவ்வாறான பிணைப்புகள் நிறைய உள்ளன".
"இந்துக்களிடம் சாதிக்கு இருக்கும் சமூக முக்கியத்துவம் இந்து அல்லாதவர்களிடம் இல்லை. சாதி விதிகளை மீறியதற்காக ஒரு முஸ்லிமையோ, சீக்கியரையோ சாதியில் இருந்து விலக்கி வைக்க மாட்டார்கள்".
"பிற மதத்தினரிடையே சாதியைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு புனிதமான மதக்கடமையாக இல்லை. இந்துக்களிடமோ அது கட்டாயக் கடமை. பிற மதத்தினரிடையே சாதி என்பது வெறுமனே ஒரு பழக்கம். பிற மதத்தவர் சாதியை ஆரம்பித்து வைக்கவில்லை. சாதி அவர்களிடம் மிஞ்சி இருக்கிறது அவ்வளவுதான்". என மாமேதை அம்பேத்கர் 'சாதி ஒழிப்பு' என்ற தலைப்பில் 1936 இல் எழுதிய வார்த்தைகளை நினைவில் கொண்டேதான் இதை அணுக வேண்டும்.
ஆனால் நமது நாட்டில் கிருத்துவ, இஸ்லாம் மதங்களில் அதிக அளவு இருப்பவர்கள் தலித் மக்களே. அவர்களுக்கு இந்த மதங்கள் கல்வி என்ற ஆக்கபூர்வ சமூக அலகில் எந்த அளவு இடம் கொடுக்கின்றன என்ற கேள்வியை இந்த புத்தகம் முன்வைக்கிறது.
- 2 -
வேதங்களை கற்பதே கல்வி என்றால் அதை நாங்களும் கற்போம் என்று துணிந்த சம்பூகன் தலையை ராமனே வெட்டிக் கொன்றதாய் வால்மீகி ராமாயணம் கூறுகிறது. சத்திரியன் கர்ணனுக்கும் வேதம் மறுக்கப்பட்டது. ஏகலைவன் கட்டைவிரல் வெட்டுப்பட்டது. பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் வேதம் கற்பிக்க முயற்சித்தவன் நாக்கை துண்டாக்கியும், வேதம் ஓதுவதை கேட்பவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியும் தங்களுக்கு போட்டியாளர்கள் யாரும் உருவாகிவிடாமல் பார்த்துக் கொண்டதன் காரணமாக (வேதக்)கல்வியிலும், அது சார்ந்த அரண்மனை வேலைவாய்ப்பிலும் ஆக்கிரமித்தனர்.
கையில் பைபிளுடன் வந்த ஆங்கிலேயர்கள், வியாபாரத்தை துவக்கி, பின் நாட்டைப் பிடிக்கை படைகளையும் உருவாக்கினர். அவர்கள் படையில் தலித் மக்கள்தான் முதலில் சேர்ந்தனர் அல்லது சேர்க்கப்பட்டனர். ஏனெனில் இவர்களும் அவர்களைப் போலவே மாட்டுக்கறி உண்ணும் பங்காளிகளாக இருந்தனர். ஊரில் இலவசமாய் வேலைவாங்கப்பட்டு, ஊரின், வாழ்வின் வெளியே ஒதுக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலையும், ஊதியமும், அதுவரை அனுபவிக்காத மரியாதையையும் ஈர்ப்பையும் கொடுத்தது ஆச்சரியமல்ல. ஆனால் கல்வியிலும், அது சார்ந்த அரண்மனை வேலைவாய்ப்பிலும் ஏற்கனவே ஆக்கிரமித்த ஆதிக்க சாதியினர் ஆங்கிலேயர்களின் அலுவல் பணியிலும் சேர்த்து பின் படைவரிசை உள்ளேயும் வந்தனர்.
அவர்களால் தலித் மக்களுடன் ஒன்றிணைய முடியாது என்ற காரணத்தால் பிரிட்டிஷ் படையில் தலித்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது.சமூக வரலாற்றின் துவக்கத்திலிருந்தே கல்வி மறுக்கப்பட்டவர்கள், திண்ணை பள்ளிகளின் பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியாதவர்கள் ஆங்கிலேயர் வருகைக்கு பின் எப்படி இருந்தனர்?
பொதுவாய் கல்வி பரவலானது. ஆனால் எவரும் படிக்கலாம் என்ற முற்போக்கு முழக்கத்துடன் வெள்ளைகாரர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி அனைவருக்கும் கிடைத்ததா?
1813 இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரிட்டிஷ் அரசு கல்விநிலையங்களை துவக்கினாலும் 1854 வரை அதாவது 41 வருடங்கள் தலித் மக்களால் அதற்குள் நுழைய முடியவில்லை. 1835 இல் மெக்கல்லே வருகை புதிய கல்வி தத்துவத்தை அறிமுகம் செய்தது. இரத்தத்தால், சதையால் இந்தியன் ஆனால் கலாச்சார சிந்தனையால், உணர்வால் ஆங்கிலேயனாய் இருக்க ஏற்பாடு.
1837 இல் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கிலம் ஆட்சி மொழியானது.
1844 இல் ஹார்டிங் - "ஆங்கில மொழியை கற்க இந்தியர்கள் விரும்புகிறார்கள்" என அறிவித்ததை தொடர்ந்து,
1853 இல் கிழக்கிந்திய கம்பெனி கல்வி குறித்து ஆய்வு செய்தது.
1854 சர் சார்லஸ் வுட் தயாரித்த "அலுவலக நடவடிக்கைகளுக்கான ஆவணம்" வெளியிடப்பட்டது. இது இந்தியாவில் ஆங்கிலக் கல்வி முறைக்கான வேத புத்தகம் என அழைக்கப்பட்டது.
இதன் பரிந்துரையின் அடிப்படையில் 1857 இல் பம்பாய், கல்கத்தா, மதராஸில் பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டது, செனட், தேர்வு முறைகள், பொதுக்கல்வி இயக்குனர் தலைமையில் ஒரு பொதுக்கல்வித் துறை அமைத்தல் என்பவை இன்றுவரை நடைமுறையில் உள்ளது.இத்தனை மாற்றங்கள் நடந்த அதே நேரம் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி நிலை என்ன?
உதாரணம் பம்பாய் ராஜதானி; 1881 ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வி படிப்பவர்களில்: மொத்த மாணவர்கள் 3,15,633 இதில் தலித்துகள் 2,862 அதாவது 8 சதம். நடுநிலைக் கல்வி: மொத்த மாணவர்கள் 11,245 இதில் தலித்துகள் 17 பேர். அதாவது 0.14 சதம். உயர்நிலைக் கல்வி: மொத்த மாணவர்கள் 4,959 இதில் ஒருவர்கூட இல்லை. கல்லூரிகளில் படித்த 473 பேரில் ஒரு தலித் கூட கிடையாது. (புள்ளிவிபர ஆதாரம்; அம்பேத்கர் கல்வி சிந்தனைகள்)
இன்று உள்ள நிலையோடு ஒப்பிட்டு பார்க்க மேற்காணும் புள்ளிவிபரங்கள் உதவும்.
"வெறும் பட்டப்படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிக பயன் தராது. இந்துக்களுக்கு கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தரக் கல்வி கற்பதுதான். இந்தக் கல்வி தாழ்த்தப்பட்ட சாதியினரின் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவேதான் பலர் தங்கள் குழந்தைகளை வெறும் பட்டப்படிப்புக்கோ, சட்டத்துறை படிப்புக்கோ அனுப்புகின்றனர். சர்க்கார் உதவி இல்லாமல், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தரக் கல்வியின் கதவுகள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒருபோதும் திறந்திருக்க மாட்டா" - அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பலதரப்பினர் நடத்திய இடையறாத போராட்டம், சுதந்திர இந்தியாவின் கல்வி பரவலாக்கத்தேவை போன்றவை இன்று அரசு கல்லூரிகளில், உயர்கல்விகளில், தொழில்நுட்ப்பத்துறையில், விஞ்ஞானத்துறையில் முழுமையாக இல்லாவிடினும் ஓரளவு தலித் மக்களை முன்னேற வைத்துள்ளது ( ஓரளவு என்பதே கவலைக்குறிய எண்ணிக்கை. இன்று இந்திய அளவில் உயர்கல்வி பெறும் தலித்துகள் எண்ணிக்கை 8.37 சதம்தான்) ஆனால் தனியார் மற்றும் அரசின் உதவி பெறும் தனியார் கல்வி, சிறுபான்மை கல்வி நிலையங்களின் கல்வி நிலை என்ன என்பதை தமிழக அளவில் இந்தப் புத்தகம் ஆராய்கிறது.ஆராய்ச்சியின் முடிவில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளிவருகிறது.
- 3 -
தமிழகத்தில் 100 சதம் அரசு உதவி பெறும் சுமார் 160 தனியார் கல்லூரிகளில் இருக்கும் மொத்தப் பணியிடங்கள் (விரிவுரையாளர்கள்) 9,866 இதில் 618 பேர் மட்டுமே தலித்துகள். பழங்குடியினர் எவரும் இல்லை. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5,326 இவர்களில் 838 பேர்மட்டுமே தலித்துகள். பழங்குடியினர் ஒருவர். இதில் கவனம் கொள்ள வேண்டிய செய்தி: அரசு கல்லூரிகளிலுள்ள மொத்த பணியிடங்கள் (விரிவுரையாளர்கள்) 4,915. அதாவது அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் இரண்டு மடங்கு எண்ணிக்கை அதிகம். இடஒதுக்கீட்டின் படி 9,866 விரிவுரையாளர்களில் 1,883 தலித் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும் ஆனால் இருப்பது 618 பேர் ஆக 1,265 பணியிடங்கள் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உதவி பெறும் 160 கல்லூரிகளில் முதல்வராக ஒரு தலித்கூட இல்லை. இதைவிடக் கொடுமை இந்த 160 கல்லூரிகளில் 62 கல்லூரிகள் மத, மொழிவாரி சிறுபான்மையினரால் நடத்தப்படுகிறது. இந்த 62 இல் 50 கல்லூரிகளில் ஒரு விரிவுரையாளர்கூட தலித் கிடையாது. என்ற விபரங்களை கொடுக்கும் இளங்கோவன், "கூட்டம் சேர்க்கவும், தம்முடைய பலத்தையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும் தலித்துகளை சார்ந்திருக்கும் இவர்கள் ஆன்மீக விடுதலை பெறுங்கள்; உங்களுக்கு மோட்சத்தின் கதவு திறந்திருக்கின்றன என்று கூறிவிட்டு நிர்வாகத்தின் கதவுகளை மூடுவதும், பரலோகத்திற்கு வழிகாட்டுபவர்கள் பணி நியமனத்தில் வழிகாட்ட மறுப்பதும், ஆன்மீக அரவணைப்பு எனச் சொல்லி அன்றாட வாழ்வில் கைவிரிப்பதும் முறையா" என கேட்கிறார்.
சிறுபான்மை கல்லூரிகளில் 751 தலித், 49 பழங்குடி விரிவுரையாளர்கள் பணியாற்ற வேண்டும் ஆனால் 61 தலித் விரிவுரையாளர்கள் மட்டுமே உள்ளனர் அதுவும் 61 கல்லூரிகளில் 14 இல் மட்டுமே. இந்த கல்லூரிகளில் 50 கல்லூரிகள் மட்டுமே 100 சதம் மான்யமாக 8 ஆண்டுகளில் பெற்ற தொகை 1064.07 கோடி ரூபாய்.சரி, சிறுபான்மையினர் அல்லாத 101 அரசு உதவி பெறும் கல்லூரிகள் யோக்கியதை என்ன? 1,124 தலித், 62 பழங்குடியினர் இருக்க வேண்டிய இடத்தில் 559 தலித்துகள் மட்டுமே உள்ளனர். இந்த 101 கல்லூரிகளும் அரசிடமிருந்து 8 ஆண்டுகளில் 100 சதம் மான்யமாக பெற்ற தொகை 1503.31 கோடி. உயர்கல்வியில் தலித்துகள் நிலை மிகவும் மோசமாய் உள்ளது. 1999 - 2000 பல்கலை மான்யக் குழு அறிக்கை சுட்டுவது என்ன? பட்டப்படிப்பில் 8.37 சதமும், முதுகலையில் 8 சதமும், ஆய்வு நிலையில் 2.77 சதமுமே தலித்துகள் உள்ளனர்.
இந்தப் பின்னணியில் தகவல் கிடத்த 22 கல்லூரிகளில் ( இதில் 15 கிருத்துவ கல்லூரி, 5 முஸ்லிம் கல்லூரி) கடந்த 10 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 1,41,553 இதில் தலித்துகள் 19,581 (13.8 சதம்) பழங்குடியினர் 692 (0.49 சதம்)சோர்வில்லாமல் விபரங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை பயன் படுத்தி இந்த நூலில் பயன்படுத்தி உள்ள இளங்கோவன் இன்னும் நிறைய கேள்விகளை முன்வைக்கிறார். படித்த தலித் சமூகத்தை நம்பி பயன் இல்லை என்பதை குறிப்பிடுகிறார்.
ஆனால் இப்பிரச்சினைகளுக்கு போராட்ட வழிமுறைகளே தீர்வு என்பது படிப்பவர்களுக்கு புரியும். ஏனெனில் ஆட்சியாளர்களுக்கு அந்த மொழியில் சொன்னால்தான் புரியும். ஆனால் தனியார் மற்றும் சிறுபான்மை கல்லூரிகளை எதிர்த்து அரசே நின்றால்கூட அது எப்படி இந்தக் கல்லூரிகளால் திசை திருப்பப்படும் என்பதற்கு நமது அண்டை மாநிலமான கேரளா படிப்பினையை தருகிறது. இதை அய்.இளங்கோவன் தெரியாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை.. ஒருவேலை இந்தப் புத்தகத்திற்கு சம்பந்தமில்லாததாக கருதியிருக்கலாம். ஆனால் விஷயம் அப்படி அல்ல...
- 4 -
கடந்த ஆண்டு கேரளாவில் இடதுசாரி அரசாங்கம் அங்குள்ள தனியார் மற்றும் சிறுபான்மை கல்லூரிகளில் தங்கள் விருப்பம் போல கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளையடிப்பதை தடுக்க சட்டம் கொண்டுவந்தனர். தங்களது லாப வேட்டையில் அரசு தலையிடுவதை கண்டு கொதிப்படைந்த "கல்வி தந்தைகள்" தங்களது மத அடையாளங்களை புறக்கணித்துவிட்டு அரசுக்கு எதிராக ஒன்றாய் அணிதிரண்டனர். அவர்களுக்கு ஒரு துணைப்பாட நூல் கதை காரணமாய் அமைந்தது.
அந்த துணை பாட நூல் கதை இதுதான்;ஒரு மாணவனை துவக்கப் பள்ளியில் சேர்க்கவரும் அவனது பெற்றோர் அங்கு அவர்களது மதம் குறித்து விசாரிக்கப்படுகின்றனர். காரணம் அவர்களது குழந்தைக்கு மதம் என்னவென்று குறிப்பிடுவதற்காக ஆனால் தங்களது மகனுக்கு மத அடையாளத்தை சொல்ல மறுத்து, அவன் வளர்ந்து அனைத்து மதங்களின் நூல்களையும் படித்து அவைகள் குறித்து தெரிந்துக்கொண்டு தனக்கு தேவையான மதத்தை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு என வாதிடுவர்.
இந்தக் கதையை எதிர்த்து கேரளாவில் இடதுசாரி அரசு மதச்சுதந்திரத்தில் தலையிடுவதாகச் சொல்லி போராட்டங்களை நடத்தினர்.தேர்தலில் இடதுசாரி அரசுக்கு எதிராக வாக்களிக்க மக்களை அணி திரட்டினர். அவர்களுக்கு கதை பிரச்சனையில்லை தங்களது லாபத்தில் யாரும் தலையிட அவர்கள் அனுமதிப்பதில்லை. அப்படி தலையிட்டால் மதம் என்ற கருவியை பயன்படுத்துவர். ஆக இவர்களை எதிர்க்க கேரளாப்போல கொள்கை வலிமையான அரசு தேவை, அதுமட்டும் போதாது மக்களையும் அணித்திரட்ட வேண்டும் என்ற படிப்பினையை இந்த புத்தகத்துடன் இணைத்து சொல்லவேண்டி இருக்கிறது.
-------------------------------------------------------- ---------------------------------------
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வராதீர்கள்
- ஆசிரியர் ஐ. இளங்கோவன்.
வெளியீடு: தலித்முரசு. விலை 30 ரூபாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
விடுதலை போரில் பெண்கள் - 5 வீழும் வரை போரிடு! விழும்போது விதையாய் விழு! இந்தியாவை மெல்ல மெல்ல ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் ஒன்ற...
-
ஆர்ப்பாட்டத்தை மறியலாக மாற்றிய காவல்துறை ஒரு தொழிற்சாலையில் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிகழ்வுக்கு எதிராக ...
-
1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு புறப்படும் பெண்கள் எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒ...
கேரளாவில் உங்களது ‘இடதுசாரி’ அரசு மத அடையாளங்களைக் களைய போராடிவருகிறதாகவும், இந்த அரசைப் பின்பற்றி இந்தியாவின் அனைத்து அரசுகளும் செயல்பட்டால் நிச்சயமாக மத அடையாளங்களைக் களைந்துவிடலாம் என்றும் ஆணியறைந்துள்ளீர்கள் நண்பர் ரமேஷ்பாபு அவர்களே!
பதிலளிநீக்குஇதே கேரளாவில் இ.எம்.எஸ். என்கிற சங்கரன் நம்பூதிரிபாடு ‘இந்தியா வேதங்களின் நாடு’ எனும் தனது நூலில், ”இந்தியாவுக்கான மார்க்சியம் என்பது இந்துமத வேதங்களிலும் உபநிடதங்களிலும்தான் இருக்கிறது. இதையே நான் இந்தியாவுக்கான மார்க்சியம் என்றும் சொல்வேன்” என்று குறிப்பிட்டுள்ளாரே, நண்பர் ரமேஷ்பாபுவுக்கு அது தெரியுமா? தெரியும் என்றால் மத அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையை உமது கட்சி பொலிட்பீரோவிலிருந்து தொடங்க வேண்டுமா, அல்லது ஏதுமறியாத மக்களிடமிருந்து தொடங்கவேண்டுமா என்பதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.
சமீபத்தில் கூட காஞ்சிக் கிரிமினல் ஜெயேந்திரன் கேரளாவுக்குச் சென்ற போது, உங்களது ‘இடது சாரி’ அரசின் முதல்வர் திருவாளர் அச்சுதானந்தன் அவர்கள் அரசு மரியாதை கொடுத்து அந்தக் கிரிமினலை அழைத்துச் சென்றதை நீங்கள் அறிவீரா? இதுவும் ஒருவேளை மத அடையாளங்களை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதற்கான அடையாளம் தானோ?
மக்களிடம் போய் நியாயம் பேசுவதற்கு முன்னால் உங்கள் கட்சிக் கூடாரத்திற்குள் இருக்கும் அம்பிகளை மத அடையாளத்தைத் துறக்கச் சொல்லி வலியுறுத்திப் பேசுங்கள். அதன் பிறகு தெரியும் அவர்கள் தமது மத அடையாளத்தைத் துறக்கிறார்களா, அல்லது மார்க்சிஸ்ட் கட்சியைத் துறக்கிறார்களா என்பது.
நட்புடன்
பகத்
தலித் பற்றிய தங்களது கட்டுரை வியப்பின் விளிம்பில் ஆழ்த்தியது. ஆராய்ச்சிக்கு நன்றி மேலும் தொடர வேண்டும்.
பதிலளிநீக்குஅன்புள்ள நண்பர் பகத், வண்க்கம்.
பதிலளிநீக்குதங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. கேரளாவில் உள்ள இடதுசாரி அரசாங்கம் பாடத்திட்டத்தில் செய்த ஒரு நல்ல அம்சத்தை தங்களுக்கு பாராட்ட முடியாமல் போனதில் வருத்தம் இல்லை, மொத்த கட்டுரையில் தங்களுக்கு தேவையானதை மட்டும் விமர்சனம் செய்வது உங்கள் உரிமை என்றே எடுத்துக்கொல்லாம்.
இ.எம்.எஸ் எழுதிய புத்தகத்தின் பெயர் "வேதங்களின் நாடு". தாங்கள் தங்கள் விருப்பத்திற்கு இந்தியாவை சேர்த்து "இந்தியா வேதங்களின் நாடு" என பெயர் வைத்துள்ளீர்கள். போகட்டும், அடுத்து தாங்கள் குறிப்பிடும் வார்த்தை அந்த புத்தகத்தில் எங்கும் இல்லை என்பதை அன்புடன் சுட்டிகாட்ட விரும்புகிறேன். தாங்கள் ஒரு முறை அந்த புத்தகத்தை படிக்க முயற்சி செய்யவும். இந்த வேதங்கள் எப்படி வருண முறையை உருவாக்கி சாதி படிநிலையை கட்டமைத்து உழைப்பாளி மக்களை இன்றுவரை வஞ்சித்து வருகிறது என்பதை மிகச்சிறப்பான முறையில் அதில் எழுதி உள்ளார். ஒரு புத்தகத்தின் முழுமையை உள்வாங்காமல் வார்த்தைகளை மட்டு பிடித்து எடுத்து கேள்வி கேட்பதில் ஆபத்து உள்ளது என்பதை நண்பர் பகத் ஏற்றுக்கொள்வர் என நம்புகிறேன்.
அது இருக்கட்டும், தாங்கள் குறிப்பிட்டதை போல இ.எம்.எஸ் அல்ல யார் எழுதினாலும் எனக்கு அதில் கருத்து உடன்பாடு கிடையாது
அடுத்து பல ஆண்டுகள் பலர் கேட்ட கேள்வி தாங்கள் மீண்டும் கேட்டுள்ளீர்கள். அவர் கேரளாவில் எப்படி அறியப்பட்டாரோ அப்படியே அழைக்கப்பட்டார். ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் தலித் மக்கள் விடுதலைக்கு அவர் போராடியதும், அவர் முதல்வரான 1957ம் ஆண்டு போட்ட முதல் கையெழுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் கிடைக்க போட்ட கையெழுத்து என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். அதனால் அந்த ஆட்சி கலைக்கப்பட்டதும் இந்தியாவின் வரலாறு.
அம்பேத்கர் என்பது மாமேதை பீமாராவின் பார்பன ஆசிரியரின் பெயர் என்று தாங்கள் அறிவீர்களா? பார்பானின் பெயரை தாங்கியதாலே அந்த மாமேதையின் மகத்தான பணிகளை சிறுமைபடுத்தி பார்ப்பீர்களா?
கேரளாவில் அச்சுதானந்தன் காஞ்சி கிரிமினல் ஜெயேந்திரனை அரசு மரியாதையுடன் அழைத்துச் செல்லவில்லை. இது தவறான தகவல் என நினைக்கிறேன்.
மார்க்சிஸ்ட் கட்சியில் மட்டுமல்ல எந்த இயக்கத்திலும் பிராமணர்கள் உறுப்பினராய் இருப்பது தவறல்ல. ஆனால் அந்த பிராமண சித்தாந்தத்தை கடைபிடிப்பதும், அதை அமலாக்கம் செய்வதும் தவறு. அந்த தவறு மார்க்சிஸ்ட் கட்சியில் நடக்காது. தாங்கள் தயவு செய்து சீனிவாசராவ் வாழ்க்கை வரலாற்றை படிக்கவும்.
நட்புடன்
ரமேஷ்பாபு
பகத் வணக்கம், தாங்கள் வரலாறுகளை படிக்காமல், நுனிப்புல் மேய்கிறீர்கள், அவசியம் வேதங்களின் நாடு புத்தகத்தை படிக்கவும்
பதிலளிநீக்குஅன்புடன்
கவிவர்மன்