சனி, 1 ஆகஸ்ட், 2009

ஊடகங்கள் - இழந்துபோன ஜனநாயகம்

- பி. சாய்நாத்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு

நமது நாட்டின் ஆன்மாக்கள் வாழுமிடம் என அழைக்கப்படும் இந்திய கிராமங்களின் அவல ரேகைகள் மீது பல ஆண்டுகளாக பயணம் செய்து அம்மக்களின் துயரங்களை பொதுத்தளத்தில் விவாதப் பொருளாக மாற்றி கவனத்தை ஈர்த்துவரும் பத்திரிகையாளர், மகசேசே விருதுபெற்ற சாய்நாத் அவர்கள் சென்னையில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நாளைய பத்திரிகையாளர் முன்பு ஆற்றிய உரையை இந்திய சமூக விஞ்ஞான கழகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

Media பத்திரிகைகள், தொலைகாட்சிகள், இணையம், வார,மாத இதழ்கள் என ஊடகங்கள் முன்னெப்போதையும் விட அதிகமாகவும், விரைவாகவும் செய்திகளை மக்களிடம் கொண்டு வருகின்றன. நடப்பில் உள்ள செய்தியை மக்களுக்கு கொடுப்பது என்ற ஊடக மரபைத் தாண்டி செய்தியை உற்பத்தி செய்யும் பணியை ஊடகங்கள் செய்து வருகின்றன. தாங்கள் நினைப்பதையே முக்கியத்துவம் நிறைந்த செய்தியாக மக்கள் மனதில் பதியவைக்க முடிகிறது. பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனங்கள் செய்தித்துறையில் எந்த செய்தியை பரபரப்பாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்பவையாக மாறிவருகின்றன. கேளிக்கைகளுக்கு முன்னுரிமைக் கொடுப்பதும், யதார்த்தத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளுவதும் சாதாரண நிகழ்வாக மாறிவருகிறது.

தாங்கள் நினைப்பதுதான் உலகத்தின் முக்கிய செய்தி என்று செயல்படும் போக்கின் விளைவு என்னவென்றால் உலக அழகிப் போட்டிக்கு முதல் பக்கம் ஒதுக்குவதும், நமது நாட்டின் தலைநகரில் குளிரால் ஐந்து பேர் இறந்து போனது உள்பக்கத்தில் மிகச்சிறிய செய்தியாக வருவது என்றாகிவிட்டது. உலக அழகிப் போட்டியில் பங்கெடுத்த அழகிகளின் உணவு, உடை, அலங்காரம், அவர்களது உதட்டுச்சாயம், உள் ஆடைகளின் வண்ணம், முகத்தில் பூசும் கிரீம், பூனை நடையழகு போன்றவற்றை சிலாகித்து எழுதும் நமது ஊடகங்கள் குளிரில் மனிதன் எப்படி இறந்துபோவான் என்ற குறைந்தபடச விசாரணை கூட செய்வதில்லை. குளிரில் மனிதன் இறந்து போக சில காரணங்கள் உள்ளது. அவன் வீடற்றவனாக இருக்க வேண்டும். சாலை ஓரத்தில் வசிக்க வேண்டும். போர்த்திக்கொள்ள குறைந்தபட்ச போர்வை இல்லாமல் இருக்க வேண்டும். கடும் பட்டினியால் வாட வேண்டும் இவைகள் இணையும் போதுதான் மரணம் அவனைத் தழுவும். ஆக செய்தி நமது தேசத்தின் தலைநகரில் வீடற்ற, சாலைஓரத்தில் உடலை மறைக்க துணிகள் ஏதுமற்ற, பட்டினிகிடந்து மனிதர்கள் மரணிக்கின்றார்கள் என்பதுதான். ஆனால் இப்படிபட்ட செய்தியை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

பத்திரிகையாளர் சாய்நாத் இதுகுறித்து குறிப்பிடுகிறார், “நமது காலத்தின் நிகழ்வுகளை பிரதிபலிப்பதில் எவ்வுளவு பொருத்தமாக செயல்படுகிறோம் என்பதை அடிப்படையாக வைத்துக்கொண்டு பார்த்தால் நாம் எந்த அளவுக்கு தேறுவோம்? நமது நாட்டின் முக்கிய நிகழ்வுகள் என்பது ஷில்பா ஷெட்டியோ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையோ அல்லது லக்மே இந்தியா பேஷன் வார கொண்டாட்டத்தையோ நான் குறிப்பிடவில்லை. இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூடத் தோன்றலாம். அப்படியென்றால் நமது காலத்தின் மகத்தான நிகழ்வுகள் என்பவை எவை? உதாரணமாக உலகளாவிய உணவு நெருக்கடி இப்போது நிலவுகிறது. நமது நாடு காலணி ஆதிக்கத்தில் இருந்தபோது சந்தித்ததைப் போன்ற நாடு முழுவதும் வேலை தேடி இடம் பெயரும் அவலநிலை பெருமளவிற்கு நிலவுகிறது....

இல்லாத வேலையைத் தேடி லட்சக்கணக்கான மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். பசுமைப் புரட்சிக்கு பிறகு மிக மோசமானதொரு விவசாய நெருக்கடியை நாம் சந்தித்து வருகிறோம். பட்டினியும் அதிகரித்து வருகிறது. பத்தே ஆண்டுகளில் 1,66,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது 2002 ஆம் ஆண்டிலிருந்து அரைமணிநேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நமது காலத்தின் இத்தகைய நிகழ்வுகளுடன் நாம் எத்தகைய தொடர்பு வைத்திருக்கிறோம்? இந்த நிகழ்வுகளை நாம் எப்படி பிரதிபலித்திருக்கிறோம்?

விவசாய தற்கொலைகள் அதிகம் நடந்த அல்லது நடக்கும் விதர்வபா பகுதிக்கு நமது நாட்டின் பிரதமர் பார்வையிடச் சென்ற போது அங்கு அவருடன் வெளியிலிருந்து சென்ற பத்திரிகையாளர்கள் வெறும் 6 பேர். ஆனால் அதேநேரத்தில் அங்கிருந்து ஒருமணி நேர விமானப் பயண தூரத்தில் உள்ள மும்பையில் நடந்த லக்மே இந்தியா பேஷன் வார நிகழ்ச்சியில், அதாவது பருத்தி ஆடைகள் அணிந்த மாடல்களின் அலங்கார அணிவகுப்பை காண, அதை செய்தியாக்க 512 அங்கிகாரம் பெற்ற செய்தியாளர்கள் வந்திருந்தனர். அதாவது பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயி நாளன்றுக்கு 8 பேர் சாவதைவிட, பருத்தி ஆடை அணித்த அழகிகள் நமது செய்தியாளர்களின் முக்கிய செய்தியாகின்றனர். இதற்கான காரணத்தை பின்வருமாறு சாய்நாத் விளக்குகிறார்.

“அதிகமான ஏழை மக்களைக் கொண்ட இந்த நாட்டில் வறுமை பற்றிய செய்திகளைத் திரட்டுவதற்கு யாரும் கிடையாது. உலகத்திலேயே மிக அதிகமான அளவில் வீட்டுவசதி பிரச்சனையை சந்தித்து வரும் நமது நாட்டின் வீட்டு வசதி பற்றி எழுத செய்தியாளர்கள் இங்கில்லை. உண்மை என்னவென்றால் விவசாயத்திற்கான, தொழிலாளர்களுக்கென செய்தியாளர்கள் இல்லை என்றால், நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேரைப் பற்றி நாங்கள் பேசத் தயாராக இல்லை என்று கட்டமைப்பு ரீதியாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கு கவலையில்லை. நீங்கள் ஒரு வட்டத்திற்குள் அவர்களை அடைத்து வைக்கிறீர்கள். இது ஒரு விதத்தில் கட்டமைப்பிலிருந்து வெளியே நிறுத்தி வைப்பதைப் போலத்தான். இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. விபத்தும் அல்ல. 70 சதவீதம் மக்களிடம் நாங்கள் பேச விரும்பவில்லை என்று சொல்கிற வகையில் ஓர் அமைப்பை நாம் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்’’

லாபவெறியும் அதனால் எழுகிற பரபரப்பு செய்திகளும் உண்மையைப் பேச மறுக்கின்றன. ஊடகத்துறையில் ஏகபோகம் என்பது ஒரு தொழில் . தொலைகாட்சி சேனல்கள் என்பது ஒரு தொழில். செய்தித்தாள்கள் என்பது ஒரு தொழில். ஆனால் இதழியல் என்பது ஒரு தொழில் அல்ல. இதழியல் என்பது ஒரு சேவை. என்று குறிப்பிடும் சாய்நாத் சில கேள்விகளை எழுப்புகிறார்.

“வறட்சியின் விளைவாக ஆஸ்திரேலியாவில் 10,000 குடும்பங்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு இடம் பெயர்ந்தன என்ற செய்தியை தொலைகாட்சியில் பார்த்தேன். ஒரு முக்கியமான செய்தி இது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வறட்சி என்ற பேச்சே இல்லாமல் 80 லட்சம் இந்திய விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டிருக்கிறார்கள். அதாவது 10 வருட காலத்தில் 5 நாட்களுக்கு 10,000 குடும்பங்கள் விவசாயத்தை கைவிட்டிருக்கின்றன. இந்தச் செய்தியை நாம் எங்கே கொடுத்தோம்? சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்தமாய் என்ன? 1991 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 11 கோடியே 10 லட்சம் விவசாயிகள் இருந்தனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது 10 கோடியே 30 லட்சமாக குறைந்துள்ளது. இந்த 80 லட்சம் பேர் எங்கே போனார்கள்? அவர்கள் எங்கே இடம் பெயர்ந்து போனார்கள்? இந்த பூமிக் கண்டத்திலேயே மிகப்பெரிய செய்திகளில் ஒன்று இது. இருந்தாலும் அந்த செய்தியை கொடுக்க நாம் தவறியிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் 10,000 குடும்பங்கள் ஆனால் இந்தியாவில் 5 நாளுக்கு 10,000 குடும்பங்கள். உண்மையில் இந்தியாவில் இடப் பெயர்வு 2001 க்கு பிறகுதான் துவங்கியது என்பதையும் கவனத்தில் நிறுத்துங்கள். டில்லியில் மட்டுமே ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 லட்சம் பெண்கள் வீடுகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கை பற்றிய நமது கருத்து என்ன? ஜார்கண்டில் விவசாயத்தை கைவிட்டுவிட்டு அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இந்தச் செய்தியையாவது நாம் சொன்னோமா? இல்லவே இல்லை!”

இப்படியாக பத்திரிகைகளின் தார்மீகம் குறித்து கேள்விகளை எழுப்பிக்கொண்டே செல்கிறார். இன்னும் கூட நிறைய கேள்விகள் மிச்சமிருக்கிறது. நமது தேசத்தின் அடிப்படை மக்கள் பிரச்சனைகளில் மக்களுக்கு ஆதரவாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காத ஊடகங்கள் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் இடதுசாரிகளின் தோல்வியை இந்த நாட்டின் கொண்டாட்டமாக சித்தரித்தன. ஒழிந்தார்கள் இடதுசாரிகள் இனி இந்தியா ஒளிரும் என்றெல்லாம் எழுதி மகிழ்ந்தனர். ஐந்தாண்டுக்காலம் பல “ஆக்கப்பூர்வமான” பணிகளுக்கு இடதுசாரிகள் தடையாக இருந்ததாக குற்றம் சாட்டினர். ஆனால் இடதுசாரிகள் எண்ணிக்கை குறைந்ததால் ஆளும் காங்கிரஸ் தனது “ஆக்கப்பூர்வமான” பணிகளை துவக்கிவிட்டது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பெருமளவு விற்பனை செய்யவேண்டும் நிதித்துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வரவேண்டும். இந்திய முதலாளிகளுக்கு கூடுதல் வரிகளையும், வரிகளுக்கான கூடுதல் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும். உரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைக் “கட்டுப்பாட்டை” அகற்ற வேண்டும். ரயில்வே, சுரங்கம், அணுசக்தி போன்ற துறைகளில் அரசின் மேலாண்மை நீக்கப்பட வேண்டும். பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு துறைகளில் 49 சதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும், சில்லரை வணிகத்துறையில் அந்நிய பகாசூர கம்பெனிகள் முதலீட்டை அனுமதிக்க வேண்டும்என்றும் 2009 2010 க்கான ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆக சாதாரண உழைப்பாளி மக்கள் வாழ்க்கை இன்னும் மோசமான நிலைக்கு கீழே செல்ல இருக்கிறது. கோடிக்கணக்கான சில்லரை வர்த்தகர்கள் அதன் தொழிலாளிகள் வீதிக்கு வர இருக்கின்றனர். ஒவ்வொரு பட்ஜெட்டுக்கும் 65 ஆயிரம் கோடியை அரசுக்கு வாரி வழங்கிய காப்பீட்டு துறை சீரழிய இருக்கிறது. இந்த ஆபத்தான பணிகளைத்தான் இடதுசாரிகள் கடத்த ஐந்தாண்டுகளாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இப்போது ஆட்சியாளர்களை நாடாளுமன்றத்திற்குள் தடுக்க பலம் பொருந்தியவர்கள் இல்லை. ஆனால் மக்கள் மன்றத்தில் வழக்கம் போல இடதுசாரிகள் போராடுவார்கள் ஆனாலும் நமது ஊடகங்கள் அவர்களது தியாகத்தையும் போராட்ட குணத்தையும் கொச்சைப்படுத்தியே தீரும். அதற்கு சிறந்த உதாரணம் மேற்குவங்கம் பற்றி தற்போது ஊடகங்கள் பரப்பிவரும் செய்திகள். ஆயுத பலத்துடன் அச்சத்தின் பிடியில் மக்களை மிரட்டி வைத்திருந்த மாவோயிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் செய்த அக்கிரமங்களை, அவர்கள் மக்களை கிராமம் கிராமமாக வெளியேற்றியதை ஒளிபரப்பாத, அச்சிடாத ஊடகங்கள் அவர்கள் இராணுவத்தால் தாக்கப்படுவதை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தி அங்கு கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளதை போல சித்தரிக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் ஊடகங்களின் அரசியலை, அவைகளின் சமூகப் பார்வையை அறிந்துக்கொள்ள சாய்நாத்தின் இந்த நூல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். வாசிக்க.. விவாதிக்க.. இன்னும் பலகேள்விகளை எழுப்ப வாசிப்போம்!

3 கருத்துகள்:

  1. true... it is called " media prostitute..."

    பதிலளிநீக்கு
  2. சில - பல இடங்களில் , அருந்ததி ராயை படிப்பது போல் தோன்றினாலும், அத்தனையும் உண்மை.... பலமாகவே அறைகிறது. பெரிய அணைகளும்... கார்களும் ... வேண்டாம் என்று கூறினாலும் ( இந்த கட்டுரை அப்படி சொல்லவில்லை ...) , அது ஓர் இடத்தில இருந்து பணத்தை எடுத்து வேறு இடத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது...

    விவசாயிகளுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும். ...குறிந்த பட்சம், கள் இறக்கவாவது அனுமதிக்க வேண்டும் ..... MBA போன்ற உயர் படிப்பு படித்தவர்கள், ( மாற்றி சிந்திப்பவர்கள் ) கிராமத்தின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்தவது என்று ஆராய்ந்து, திட்டங்கள் வகுக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. Its a good article about indian media. They are very irresponsible.They dont bother about farmers in india.

    பதிலளிநீக்கு