மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

விடுதலைப் போரில் பெண்கள் - 8


சூரைக்காற்று எழுந்ததால் சூழ்ந்த புயலும், அதனால் எழுந்த கடலின் அலையும் ஓங்கியடித்து ஓய்ந்த கடற்கரையாய் தேசம் கிடந்த 1857 ன் மாபெரும் எழுச்சியின் பாரம்பரியத்தை, அதன் வராற்றை, அதன் நினைவுகளை அசைப்போட ஆயிரமாயிரம் இருந்தது இந்திய மக்களுக்கு..

வேலுநாச்சியை நினைக்கும் எந்த ஒரு வரலாறு ஆசிரியனும் அவளது வெற்றிக்கு அட்சாரம் போட்ட, அல்லது வெள்ளையர்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல, ஆங்கிலேயர்கள் அசைக்க முடியாதவர்கள் அல்ல என பாடம் நடத்திய குயிலியின் வரலாற்றை மறக்க முடியாது அல்லது மறைக்க முடியாது. வேலு நாச்சியாரின் போர்ப்படையில் வாள் படை, வளரிப் படை, பெண்கள் படை ஆகிய மூன்றும் பிரதானமானவை. வாள் படைக்கு தலைமை ஏற்றவர் சின்னமருது, வளரிப்படைக்குத் தலைமை ஏற்றவர் பெரிய மருது. பெண்கள் படைக்குத் தலைமையேற்றவர்தான் குயிலி. குயிலி தலைமையிலான பெண்கள் படைக்கு 'உடையாள் பெண்கள் படை' எனப் பெயர் சூட்டியிருந்தார் இராணி வேலு நாச்சியார். 

உடையாள் என்பவள் ஒரு மாடு மேய்க்கும் சிறுமி. அரியாகுறிச்சி அருகில் வேலுநாச்சியார் சென்று திரும்பிய போது எதிரிகள் உடையாளிடம் வேலுநாச்சியார் சென்ற பாதை குறித்துக் கேட்டபொழுது காட்டிக் கொடுக்க மறுத்தாள். ஆகவே, எதிரிகளால் தலை வேறு முண்டம் வேறாக உடையாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாள். அவள் நினைவாக அப்படை பிரிவுக்கு அவள் பெயர் வந்தது. குயிலி வேலுநாச்சியிடம் வந்தது சுவராசியமான கதையாகும்.

வேலு நாச்சியாரின் போர்ப் பயிற்சிக்கான ஆசிரியர்களில் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலு மிக முக்கியமானவர். வேலுநாச்சியாரை சிறுவயது முதலே கண்காணித்து வருபவர். வேலுநாச்சியார் தனது கணவருடன் தேனிலவுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்றிருந்த சமயத்தில்கூட பாதுகாவலராக அரண்மனையால் அனுப்பப்பட்டவர் வெற்றிவேலு. அதேபோல், தன் கணவரைப் பறிகொடுத்த பிறகு திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையத்தில் தங்கியிருந்து படை திரட்டிய கால கட்டத்தில் தன் மெய்க்காப்பாளராக வேலுநாச்சியார், சிலம்புவாத்தியார் வெற்றிவேலுவையே நியமித்திருந்தார். இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக விளங்கிய சிலம்புவாத்தியார் எதிரிகளால் விலை பேசப்பட்டார். வேலு நாச்சியாரின் திட்டங்களை, ஆதரவு சக்திகளை, அன்றாட நிகழ்வுகளை எதிரி களுக்குக் காட்டிக்கொடுத்து வந்தார்.

ஒரு நாள் குயிலியின் தாயார் உடல்நிலை சரியில்லாததால், குயிலி சிவகங்கைக்குச் செல்ல விருந்தார். இதை அறிந்த சிலம்பு வாத்தியார் அவளை அனுகி, பெண்ணே உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?'' என்று கேட்டார். குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தும் தெரியாது எனக் கூறினார். எனவே ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகிலிருக்கின்ற மல்லாரிராயன் என்பவரிடம் ஒப்படைக்கச் சொன்னார். அன்று இரவு ஓய்வாக இருக்கும் நேரத்தில் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் குயிலி படித்துப் பார்த்தார். வேலுநாச்சியாரின் அன்றாட அசைவுகளையும், அவரை வீழ்த்திட அடுத்து எதிரிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சிலம்பு வாத்தியார் அதில் குறிப்பிட்டிருந்தார்.

நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் ராணியின் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து அவரை குயிலி விரைந்துச் சென்று மகாராணியின் பாதுகாவலனான அவனை படுகொலை செய்தார். சம்பவத்தை அறிந்தா வேலுநாச்சியார் தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.

இச்சூழலில் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பும் ஆங்கிலேயரின் கைக்கூலிகளான மல்லாரிராயனும், அவன் தம்பி ரங்கராயனும் குயிலியை மையப்படுத்தி சாதிவெறிக்குத் தூபமிட்டுக்கொண்டிருந்தனர். அதாவது மேல்சாதியைச் சார்ந்த சிலம்பு வாத்தியார் வெற்றிவேலுவை கீழ்சாதிப் பெண்ணான குயிலி குத்திக் கொலை செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகமான சக்கிலியர் குலத்தில் பிறந்த குயிலிக்கு ஆதரவாக வேலுநாச்சியார் செயல்பட்டால் நம் சாதி கவுரவம் என்ன ஆவது? தாழ்த்தப்பட்டவர்கள் நம்மை எள்ளி நகையாட மாட்டார்களா? என குயிலியின் செயலுக்கு சாதிய நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இதைபற்றியெல்லாம் வேலுசாச்சியார் கவலைப்படவில்லை. குயிலியை பெண்கள் படைபிரிவுக்கு தலைவியாக்கி அழகுபார்த்தாள். நாட்கள் கடந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ஆம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.

முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான் மல்லாரி ராயன். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். வேலு நாச்சியாரின் படைகள் வீறு நடைபோட்டன. அடுத்து திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயன் பெரும்படையோடு எதிர்த்து நின்றான். மருது சகோதரர்கள் அவனைத் தவிடு பொடியாக்கினர். அடுத்து வெள்ளைக்கார அதிகாரிகள் மார்டின்ஸ், பிரைட்டன் மற்றும் நவாபின் படைத் தளபதி பூரிகான் தலைமையில் மானாமதுரையில் மாபெரும் படை எதிர்த்து நின்றது. வேலு நாச்சியாரின் பீரங்கிப்படை அதனை விரட்டியது.

வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தியிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தியிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்த போராளிகளுக்கு இது சோர்வை உருவாக்கினாலும், போற்களத்தில் பின்வாங்கும் முடிவை அவர்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என்ன செய்வது? இதுமட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது...
                                                                                                             (போர் தொடர்கிறது)0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark