மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

விடுதலைப் போரில் பெண்கள் - 20

1920ம் ஆண்டு காந்தியடிகள் துவக்கிய ஒத்துழையாமை இயக்கம் பாதியில் நிறுத்தபட்ட விரக்தி தேசம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. அதே நேரம் தமிழகத்தில் நீதிக்கட்சி ஒப்பீட்டளவில் பல முற்போக்கான சட்டங்களை கொண்டுப்வந்த பின்னணி இருப்பினும் விடுதலை போராட்டங்கள் ஓய்ந்துவிடவில்லை. தேசத்தின் ஏதோ ஒரு மூளையில் ஏதோ ஒரு வடிவத்தில் விடுதலைகான போராட்டங்கள் நடந்துக்கொண்டுதான் இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் பல முணைகளில் காங்கிரஸ் இயக்கம் மக்களை போராட்டத்தி ஈர்த்துக்கொண்டிருந்தது. அப்போராட்டத்தின் போது மதுரையை சேர்ந்த பத்மாசனி அம்மாளும் கடலூர் அஞ்சலையம்மாளும் 1857ல் நடந்த மாபெரும் எழுட்சியை, அதன் மக்கள் பங்கெடுப்பை, தியாகங்களை சொல்லி மக்களை தூண்டியது வீண்போகவில்லை. 

அது நெருப்பாய் பற்றிடத்தான் செய்தது. சில ஆண்டுகள் கழித்து இதுவே நீல் சிலை சத்தியாக்கிரகத்திற்கு அச்சாணியாய் இருந்தது. அதுமட்டுமல்ல தமிழகத்தின் பல வீராங்கனைகளை உலகிற்கு அடையாளம் காட்டவும் செய்தது. குறிப்பாக அன்றைய தென்னார்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் ஒரு சாதாரன நெசவு குடும்பத்தில் பிறந்து மிக உயர்ந்த போராளியாக திகழ்ந்த அஞ்சலையம்மாள் முக்கியமானர் ஆவார்.

சாவக்கரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தடை செய்யப்பட்ட ""1857 இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்ட வரலாறு"" என்ற புத்தகத்தை, திருமதி டி.வி.எஸ். சௌந்தரம் அவர்கள் அழகு தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இந்த புத்தகம் இருக்கிறது என்று அரசாங்கத்திற்கு தெரிந்தால் உடனே அவர்கள் வீட்டில் சோதனை நடக்கும் நிலைதான் அன்று இருந்தது. அன்னிய ஆட்சியாளர்கள் அந்த அளவு அந்த எழுச்சியை வெறுத்தனர். அப்போராட்டத்தின் நினைவுகளை அழிக்க துடித்தனர். அந்த தகிப்பின் உச்சம் அவர்களுக்கு தொடர்ந்தது. இவைகளை அறிந்தும் மிகவும் துணிச்சலுடன் அப்புத்தகத்தை தமிழில் கொண்டுவந்தார். எவ்வளவோ கஷ்டங்களிருந்தும் தைரியமாகவும், வெற்றிகரமாகவும் இப்புத்தகத்தை பாண்டிச்சேரியிலிருந்து கொண்டு வந்து இவர் எளிய தமிழில் மொழி பெயர்த்து விடுதலைப் போருக்கு உதவினார்.

இப்புத்தகத்தில்தான் அந்த 1857 எழுட்சியை கொடூரமாக அடக்கிய ஆங்கிலேயர்களின் ரத்தம் தோய்ந்த வரலாறு பலருக்கு அறியத்துவங்கியது. இப்புதகத்தை படித்த பின்னர்தான் பல தேசபக்தர்கள் அப்படியான சமபவங்களை வெளியே பேசத்துவங்கினர். குறிப்பாக  1857 புரட்சியின் போது ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் செய்த கொடுமைகள் விவாவதமானது. அந்த நீல் என்கிற கொடூர மனம் படைத்த அதிகாரி இந்திய போராளிகளை கொடூரமாக சுட்டுகொன்றதும், கூட்டங் கூட்டமாய் தூக்கில் தொங்கவிட்டதும், நிராயுதபாணியான தேசபக்தர்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்டது தெரிந்தது. அந்த போராட்டத்தின் போது லக்னோ அருகில் குதிரையிலிருந்து கட்டளையிட்டுக் கொண்டிருந்த நீல் இந்திய போராளிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டான். அவனது படுகொலைகள் செய்த வீரத்தை பாராட்டி, சென்னை மவுன்ட் ரோட்டில் ஆங்கிலேயர்கள் அவனது நினைவாக சிலை வைத்திருந்தனர். இது இந்தியர்களை கடுமையாக எரிச்சல்பட வைத்தது. எனவே இந்த சிலையை அகற்றும் சத்தியாகிரகத்தை துவக்கினர்.

இச்சத்தியாகிரகம் 1927 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள கர்னல் நீலின் சிலையை அகற்றத் தொடங்கப்பட்டது. அக்கொடியவன் சிலையை எப்படியாவது அகற்றிவிட வேண்டுமென்ற தேசபக்தி மேலோங்கியது. உடனே மதுரை ரெ. சிதம்பர பாரதி, ரா. ஸ்ரீநிவாஸ வரதன், பத்மாசனி அம்மாள் ஆகிய மூவரும் போராட்டத்திற்கான திட்டம் வகுத்து, திருநெல்வேலி தேசபக்தரான சுப்பராயலு நாயிடுவையும், இராமநாதபுரம் முகம்மது சாலியாவையும் போராட்டத்தை தொடங்குவதற்கு அனுப்பத் தீர்மானித்தனர். அவர்களுக்கு சென்னை செல்வதற்குரிய செலவை பத்மாசனி அம்மாள் தன் கொலுசை அடகு வைத்து கொடுத்து உதவினார். இருவரும் ஆகஸ்ட் 11-ஆம் நாள் தேசியக்கொடி, பூமாலை, உளி, சம்மட்டி, ஏணி முதலியவற்றுடன் சென்று சிலையை உடைக்க ஆயத்த பணிகளை ஆரம்பித்தனர். சற்றுநேரத்தில் பதறிப்போன ஆங்கிலேய  அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். 

தடைகள் பல வந்தபோதும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. பலர் கைதானார்கள். இப்போராட்டத்தின் சிறப்பே தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும் பெண்கள் வந்து கலந்து கொண்டதாகும். அவர்களில் ஒருவரான சேலம் அங்கச்சி அம்மாள் செப்டம்பர் 1-ஆம் நாள் கழுத்தில் மாலையுடனும் கையில் கோடரியுடனும் போலீசை மீறி சிலையை உடைக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலும், 7 ரூபாய் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டார். 

அப்போதுதான் இப்போராட்டத்தில் கடலூரைச் சேர்ந்த அஞ்சலையம்மாளும் அவர் மகள் அம்மாகண்ணு என்கிற லீலாவதி என்ற 12 வயது சிறுமியும் கலந்துக்கொண்டு செப்டம்பர் 6-ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். அஞ்சலையம்மாளுக்கு 25 ரூபாய் அபதாரமும் அதில் தவறினால் ஒருவார கடுஞ்சிறைத் தண்டனையும் அம்மாகண்ணு என்கிற லீலாவதிக்கு  நான்கு வருடம் குழந்தைகள் இல்லத்தில் வைக்கவேண்டும் என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது.

1890 ஆம் ஆண்டு கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் ஒரு எளிய வீட்டில் பிறந்தவர் அஞ்சலையம்மாள். திண்ணை பள்ளியில் 5 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். தனது 31ஆம் வயதில் 1921 ஆம் ஆண்டு விடுதலைப்போராட்டத்தில் இறங்கிய அஞ்சலையம்மாவைத் தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இவர்பேச்சில் பெண்கள் வசீகரிக்கப்பட்டு தேச பக்தி கொண்டவர்களாகி விடுவார்கள். இவரது போராட்ட குணத்தால்தான் தென்னாற்காடு மாவட்ட வேலுநாச்சியார் என்று மக்கள் செல்லமாக அழைத்தனர். இவரது கணவர் முருகன் இவருக்கு உற்றதுணையாக போராட்டத்தின் நின்றார். போராட்டத்தில் ஈடுபட்டு நிறைமாத கர்பினியாக சிறைக்குச் சென்றவர்க்கு அழகிய ஆண் குழுந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜெயில் வீரன் என பெயரிட்டார். அவர் இப்போது ஜெயவீரனாக வாழ்ந்து வருகிறார். மற்றொரு மகனின் பெயர் காந்தி.

இப்போராட்டத்தில் ஓராண்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டவர் அதன் பின் தனது போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கினார். 1931 ஆம் ஆண்டு உப்புசத்தியாகிரகத்தில் கடலூர் சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டார். 1933 மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாதம் கடலூர் சிறைக்கு மீண்டும் சென்றார். 1940ம் ஆண்டு தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு முதலில் 6 மாதம் கடலூர் சிறையிலும் பின்பு 18 மாதம் வேலூர் சிறையிலும், பின்பு 8 மாதம் 2 வாரம் பெல்லாரி சிறையிலும் அஞ்சாது இருந்தார். மொத்தம் 4 வருடம் ஐந்து மாதம் அவரது வாழ்க்கை சிறையில் கழிந்தது. இவரும் பத்மாசனி அம்மாளும்தான் சத்தியாகிரகத்தில் முதலில் சிறைபுகுந்த பெண்கள் என்ற சிறப்புக்குறியவர்கள் ஆவார்கள்.

கள்ளுக்கடை இருக்கும் இடங்களில் எல்லாம் துண்டு பிரசுரம் கொடுத்து மறியல் செய்து கைதாவது இவரது இயல்பானது. சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டிற்கு  பெண்கள் படையுடன் ஊர்வலமாய் சென்று சாதனை படைத்தார். கடலூர் ஜில்லா போர்டு உறுப்பினராகவும், மூன்று முறை சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அஞ்சலையம்மாள். அவரது சட்டமன்ற உரைகளில் உழைப்பாளிகள் பிரச்சனைகளை பேசியது குறிப்பிடதக்கது. 1927 ஆம் ஆண்டு இவர் நீல் சிலையை அகற்றக்கோரி துவங்கிய போராட்டம் இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவையால் ராஜாஜி முதலவராக இருந்தத போது 1937 ஆம் ஆண்டு அகற்றப்பட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இன்று அவரது தலைமுறை மிகவும் சிரமத்தில் கடலூரில் வசித்து வருகின்றனர். 

இப்போதுகூட தமிழக சட்டமறத்தில் அவரை நினைவு கூர்ந்து காங்கிரஸ்காரர்கள் யாரும் பேசவில்லை கம்யூனிஸ்டுகளே அவரது நினைவை போற்றுகின்றனர். இத்தகைய போராளிகளை ஒவ்வொரு மாவட்டமாய் தேடத்துவங்கினார் ஆயிரமாயிரம் அஞ்சலையம்மாக்கள் எழுந்து வருவார்கள்.!
(தொடரும்) 

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark