மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!இன்றைய இளைய தலைமுறைக்கு இந்திய விடுதலைப் போரின்வரலாற்றை, அதன் வீரம் மிக்க நினைவுகளை, தியாக வேள்விகளை அறிமுகம்செய்ய வேண்டியது அவசியக் கடமையாகிறது.  காவி இருள் சூழும் அபாயம் இந்திய நாட்டை நோக்கி வேகமாய் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேசத்தின்விடுதலைக்கு தங்கள் உயிரையே விலையாய் கொடுத்த தியாகிகளை மத துவேஷத்தால் தேச துரோகிகளாக சித்தரிப்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம், எத்தகைய வன்முறை அது? அகண்ட இந்து ராஷ்டிர கொடுங்கனவின் தத்துவ பின்னணி இஸ்லாமியர்களை குறிவைத்து வளர்வது எத்துனை பெருந்துயர்? வளர்ந்தெழுந்த  விடுதலைப் போரின் விதையாய் விழுந்த இஸ்லாமியர்கள் வரலாற்றை மீட்டெடுத்து, காவி இருளின், கொடுங்கனவின் தடுப்பு அரணாக முன்நிறுத்த வேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகிறது. வரலாறு என்ன சொல்கிறது? கொஞ்சம் பயணிக்கலாம்.

1857ல் நடந்த முதல் விடுதலை போரின் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆதாவது 1757-ல் சிராஜ்-உத்-தௌலா ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் பெரிய யுத்தம். அவரது வழியை பின்பற்றி அடுத்த 190 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வரலாறு மிகப்பெரியது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இந்த வீரம் மிகுந்த போராட்டத்தில் கொஞ்சமும் பின்தங்கவில்லை.

1800-1801 ஆண்டுகளில் ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். மலபார் கேரளவர்மா, மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய கனீஷ்கான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா (Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் மகத்தான கூட்டமைப்பை உருவாக்கினர்.

இக்கூட்டமைப்பின் சார்பில் வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக கனீஷ்கான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை யுத்தத்திற்குத் தலைமைப் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கூட்டமைப்பின் முக்கிய திட்டமே கோவை - சேலம் பகுதிகளைக்  கைப்பற்றுவதாகும். 4000 குதிரைப்படை வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார்.  ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம்  தோல்வியில் முடிந்தது. இக்கிளர்ச்சியில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர் மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும் தூக்கிலிடப்பட்டனர் (1)

பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் இராமநாதபுரத்திற்கு கலக்டர் ஜாக்ஸன் துரையைச் சந்திக்க சென்றபோது அதில் வீரமிகு இஸ்லாமிய தளபதிகள் பலரும் அஞ்சாமல் சென்றனர்
மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்…
என்று அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது  வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல். (2)

மலேசியாவின்  பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் கிளிங்கர்கள் எனப் பிறமொழி பேசுபவர்களால் அழைக்கப்பட்டனர். இதன் பின்னால் சுதந்திரப் போராட்ட வீரர்களின்  தியாக வரலாறு மறைந்துள்ளது. மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்ட பின்பு ஆங்கில அரசு அவரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள் என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு  நாடு கடத்தி விலங்கிட்டு, கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக் கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என அழைக்கப்பட்டனர். நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேறிய தமிழர்களை அழைப்பதற்குரிய பெயராக மாறியது.

அத்தகைய  கைதிகள் கூட்டத்தில் தலைமையேற்ற இருவரில் ஒருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற துரைச்சாமி. மற்றவர் முக்கிய படைத் தளபதிகளில் ஒருவரான சேக் உசேன் என்ற இஸ்லாமிய இளைஞர். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று அழைக்கப்பட்ட இவர், கிளர்ச்சிப் படையின் முதல் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார்.  (3)

சென்னையில் பிறந்து உத்திரப் பிரதேசத்தில் வாழ்ந்தவர் மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். விடுதலைக்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர். லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ''ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டை பாதுகாக்க முடியாது'' என்று முழக்கமிட்டார். ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.(4)

1920 - இல் ஈரோட்டில் நடைபெற்ற உலமாக்களின் மாநாட்டில் முழுக்க முழுக்க தேசிய பிரச்சனைகளே பேசப்பட்டன. மௌலான முகம்மது அலி இம்மாநாட்டில் ஆற்றிய உரை அன்று தமிழக உலமாக்கள் தேசிய நடவடிக்கைகளில் வேகமாக ஈடுபட உந்து சக்தியாக அமைந்தது. பள்ளிவாசல்களையும் அரபிக்கல்லூரி – மதரசாக்களையும் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற – பேசுகின்ற – செயல்பாட்டுக்குரிய களங்களாக மாற்றின. இக்காலகட்டத்தில் திண்டுக்கல்லை மையப்படுத்தி உலமாக்கள் பலர் இந்த தேசிய இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக உயர்த்திப் பிடித்துள்ளனர். மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள்  கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் கலந்து கொள்ளக்கூடாது என பகிரங்க அறிவிப்பை விடுத்தார்.  அதற்கு அன்றைய உலமாக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.(5)

ஆண்களுக்கு நிகராக இஸ்லாமிய பெண்களும் களம் கண்டனர். 1922ல் தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தேசபக்தை பீபியம்மாள் ”என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன்” என்று ஆவேசம் பொங்க உருதுமொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப் மொழி பெயர்த்தார். இதே சுதந்திர வேட்கையுடன் இறுதி வரை இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924 ஆம் ஆண்டு காலமானார். பீபியம்மாள் விருப்பபடி அவரது பூதவுடல் கதர் துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதே போல திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம். இஸ்லாமிய பெண்கள் வீதியில் இறங்கி போராடினால் என்னாகும் என காட்ட ஆங்கிலேய அரசு மரியம் பீவிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.

கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரது மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேர்களும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1943 ஆம் ஆண்டுவரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை  அனுபவித்திருக்கிறார்.   தேசத்தின் மீது அளவில்லா பற்றுக்கொண்ட அவரது மனைவி பியாரிபீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாலும் வீரமுழக்கமிட்டு மகிழ்ச்சியுடன்  சிறை சென்றார்.

இந்திய தேசிய ராணுவத்தின ஒற்றர்ப் படைப்பிரிவு மலேசியாவிலுள்ள பினாங்கு தீவில் இயங்கி வந்தது. இந்த ஒற்றர் படையின் முதல்கட்ட நடவடிக்கையாக ஐந்து ஒற்றர் படை வீரர்கள் கேரளாவின் கோழிக்கோடு அருகிலுள்ள தண்ணூர் கடற்கரையில் 27-12-1942- இல் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் வந்திறங்கினர். இதே நேரத்தில் பர்மாவில் இருந்து அரகடகன் வழியாக மற்றொரு குழு இந்தியாவிற்குள் நுழைந்தது. இவ்வீரர்கள் தங்களது பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வரும்போது சிலரால் காட்டிக் கொடுக்கப்பட்டு அனைவரும் கைதானர்.

சென்னை கோட்டையில் விசாரிக்கப்பட்டு அனைவரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணை நடத்திய நீதிபதி மாக்,  நால்வருக்கு மரணதணடனையும் 14 பேருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கினார். மரண தண்டனைப் பெற்ற மற்ற நால்வர்  வைக்கம் அப்துல் காதர்,  பவுஜாசிங், எஸ்.சி.பரதன், ஆனந்தன். இந்த ஒற்றர்படை வழக்கில் ஐந்தாண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனைப் பெற்ற 14 பேருள் தமிழ்நாடு கீராம்பூரைச் சேர்ந்த முஹம்மது கனி என்ற இஸ்லாமிய இளைஞரும் உண்டு (7)

இதுமட்டுமல்ல சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்ற நீல் சிலை தகர்க்கும் போராட்டம் சென்னையில் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற இராமநாதபுரம் முஹம்மது சாலியா முன்று மாதமும், சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் போன்றோர் 6 மாதம் முதல் 2 வருடம் வரையும் கடுங்காவல் தண்டனை பெற்றனர்

1921 - இல்  கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் நிலக்கோட்டைத் தாலுகாவில் சிறை  சென்ற மதுரை ஹாஜி முகம்மது மௌலானா சாஹிப்,  உத்தமபாளையம் முகம்மது மீரான் என்ற ஹாஜி கருத்த ராவுத்தர், மதுரை நகரின் வீதிகளில் தான் இயற்றிய பாடல்களைத் தன் மனைவியுடன் பாடிக்கொண்டு உலா வந்து சுதந்திர எழுச்சியை ஊட்டிய வா. ஏ.ந.வ. முகையதீன் அபதுல் காதிர், வில்லுப்பாட்டில் ஒரு பாவலராகத் திகழ்ந்த தாராபுரம் பி.என்.அப்துல் கபீர் , ஒத்துழையாமை இயக்கப் பிரச்சார பாவலர் விருதுநகர்  அப்துல் ரகுமான்.  விஸ்வநாததாஸ்,  செங்கோட்டை கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் எழுச்சியூட்டி வந்த காலகட்டத்தில், அவர்களுக்கு நிகராகப் பல நாடக மேடைகளில் சுதந்திர கீதம் இசைத்தவர் காதர்பாட்சா. 'சுதந்திர முரசு' 'விலாவர் ஜரினா' போன்ற தேசபக்தி நாடகங்களில் பாடி நடித்து சுதந்திரப் போராட்டத்திற்கு  தனது பங்களிப்பைச் செய்தவர் மதுரை ஏ.பி.மொய்தீன்.  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று 'ஆத்திரம் கொள்' என்பது போன்ற பல சுதந்திர கீதங்களைப் பாடியவர் கவிஞர் கா.மு. ஷெரிப். என தேசபக்தர்களின் பட்டியல் தொடர்கிறது.

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி¬ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்ல்லாம் உச்சமாய் இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் ஆவார். ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார்.

கட்டுரையின் நீளம் கருதி இத்தோடு முடிக்கிறேன். இத்தகைய தியாக சீலர்களை மத்தியில் ஆட்சி பொறுப்பேறுள்ள பிஜேபி கொச்சைப் படுத்துகிறது. என்ன செய்ய போகிறோம்? இந்த வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வது நமது கடமையல்லாவா?

உதவியவை: 1 (* K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence. 1800-1803,, PP.110-111.). 
2. பேராசிரியர்  நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மு கதை பாடல்
 3.  Miltry consultations, Vol.307(19.1.1803), P.1249 - இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில் சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது. 
4.சாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65. 
5.Shan Muhammad, Freedom Movement in India – The Role of Ali Brothers, P.153.  
6.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்…மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை. 
7. மா.சு.அண்ணாமலை, சும்மா வரவில்லை சுதந்திரம். தினமணிச்சுடர்.4.8.1996.,பக்கம்.9. 
8.  ச.கா.அமீர் பாட்சா, 'இந்திய விடுதலையில் இஸ்லாமியரின் பங்களிப்பு',குர்ஆனின் குரல்,மார்ச் 1998,பக்கம் 39-40.. 

----------------------- 2016 ஆகஸ்ட்  இளைஞர் முழக்கம் இதழில் நான் எழுதிய கட்டுரை --------------------


விடுதலை போரில் பெண்கள் - 21 

1927-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையில் ஏறாளமான பெண்கள் அடங்கிய குழு   சைமன்   கமிஷன்   எதிர்ப்பு   நடவடிக்கைகளை   துவக்கியது.   அவற்றில்   யாமினி   பூர்ணதிலகம்மா,   திருமதி.   மாசிலாமணி,   திருமதி.   ருக்மணி   லட்சுமிபதி   மற்றும்   பலரும்முனைப்புடன்   ஈடுபட்டனர்.   அதே   நேரம்   சென்னையைச்   சேர்ந்த   இந்தியப்   பெண்கள் அமைப்பும் சைமன் குழுவை இரண்டு காரணங்களுக்காக எதிர்த்தது. ஒன்று அக்குழுவில் இந்தியர்கள்   இடம்பெறாதது.   மற்றொன்று   பெண்கள்   இடம்   பெறாதது.   இது   தேசியதலைவர்கள் பலர் கவனிக்காத பார்வையாகும். 

இந்த பார்வையினுடாக பல பெண்கள்இப்போராட்டத்தில்  கலந்துக்கொண்டது சிறப்பு  அம்சமாகும். இந்த  போராட்டமே பின்பு வந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் நிறைய பெண்களை ஈர்த்தது. அதேபோல் டிசம்பர் 31, 1929 நள்ளிரவில், இந்திய தேசிய காங்கிரஸ் லாகூரின் ராவி நதிக்கரையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றியது. ஜனவரி 26,1930   இல்   வெளிப்படையாக   விடுதலைப்   பிரகடனம்   அல்லது   முழு   விடுதலையைவெளியிட்டது. இவ்விடுதலைப் பிரகடனமானது மக்களின் மீதான வரிகளைத் தடுத்து நிறுத்தத்தயாராவதை உள்ளடக்கியிருந்தது, இது குறித்த அறிக்கை இப்படி கூறியது:

""இது இந்திய மக்களின் பிரிக்க இயலாத, பிற மக்களைப் போல, விடுதலைப்பெறவும் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிக்கவும், வாழ்க்கையின் தேவைகளைப்பெறவும்,   அதனால்   வளர்ச்சியின்   முழு வாய்ப்புக்களைக்   கொள்ளவுமான உரிமையுடையது என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் மேலும் நம்புவது எந்தவொரு அரசும்   இந்த உரிமைகளை   மக்களுக்கு   மறுக்கிறது   மற்றும்   அவர்களை   ஒடுக்குகிறது எனில்   மக்களுக்கு   இதற்கு   மேலும்   அவ்வரசினை   மாற்ற   அல்லது ஒழிக்கும் உரிமையுள்ளது.   இந்தியாவின்   ஆங்கிலேய   அரசு   இந்திய மக்களின்   சுதந்திரத்தை மறுப்பதோடு   அல்லாமல்,   மக்களின்   மீதான சுரண்டலில்   தனது   அடித்தளத்தை அமைத்துக்   கொண்டுள்ளது,   மேலும் இந்தியாவை   பொருளாதார,   அரசியல்,பண்பாட்டு மற்றும் ஆன்மீக ரீதியில் சீரழித்துள்ளது. ஆதலால் நாம் நம்புவது, இந்தியாஆங்கிலேயர் தொடர்பைத் துண்டித்துப் பூர்ண ஸ்வராஜ் அல்லது முழு விடுதலையை அடையவேண்டும்"". 

இதுதான் அந்த அறிக்கையின் சாரம்.காங்கிரஸ்   செயற்குழு   காந்திக்கு   சட்ட   மறுப்பு   நடவடிக்கையை   முன்னெடுக்கும்பொறுப்பினைக் கொடுத்தது, அத்தோடு காந்தியின்   கைதினைத் தொடர்ந்து தானேபொறுப்பினை எடுத்துக் கொள்ளத் தயாராகவும் இருந்தது. 1882 உப்புச் சட்டம்ஆங்கிலேயருக்கு உப்பின் சேகரிப்பிற்கும் உற்பத்திக்கும் ஒட்டுமொத்த உரிமையைக் கொடுத்தது,   அதன் கையாளுகையை   அரசு   உப்புக்   கிடங்குகளிலும்   உப்பு   வரி விதிப்பதிலும் வரையறுத்தது.   உப்புச்   சட்டத்தை   மீறுவது   ஒரு   குற்றச்   செயலாக கருதப்பட்டது. உப்பானது கடற்கரையில் வாழ்பவர்களுக்கு இலவசமாகக் கிடைத்து வந்தாலும் கூட, இந்தியர்கள் அதனை காலனிய அரசிடமிருந்து நுகர வற்புறுத்தப்பட்டனர். 

இவைகள் பெரும் வீச்சாக நாடெங்கும் பரவியது.1929 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாடு சட்டமறுப்பு   போராட்டம் தொடங்க   தீர்மானித்தது.   காந்தியடிகளிடம்   சகலப் பொறுப்புகளையும் ஒப்படைத்தது.   சபர்மதி   ஆசிரமத்திலிருந்து   சுமார்   150 தொண்டர்களுடன் பம்பாய்க் கடற்கரையிலுள்ள தண்டி என்ற இடத்திற்கு உப்பெடுப்பதற்காக பாதயாத்திரை தொடங்கினார் தடுத்து நிறுத்தபட்ட காந்தியடிகளுக்கு ஆறு வருடம் தண்டனை கொடுக்கப்பட்டது. அதே சமயம் தமிழ்நாட்டிலும் இப்போராட்டம் தொடங்கியது. வேதாரண்யம் கடற்கரையில்   ராஜாஜி   கைது செய்யப்பட்டார்.   அடுத்து   கே.சந்தானம் அவர்களுடன் "சென்னை இளைஞர் சங்கம்" என்ற அமைப்பை தொடங்கி இளைஞர்களிடமும், மகளிரிடமும் போராட்ட   விதைகளை   விதைத்த     ருக்மணி   லட்சுமிபதி   அம்மையாரும் சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

இருநூறு ஆண் சத்தியாகிரகிகள் மத்தியில் ஒரே பெண், முகாமில் ஆண்களுடனேயே தங்குவார். இவர் போராட்டத்தின் காரணமாக   கைது செய்யப்பட்டு ஒருவருடம் தஞ்சாவூர்   சிறையில்   வைக்கப்பட்டார். சென்னை நகரிலும்  தி.   பிரகாசம்   அவர்கள் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. துர்காபாய் அம்மாள் தலைமை ஏற்று உதயவரம்   என்ற   இடத்தில் கிருஷ்ணம்மா   மற்றும்   சில   பெண்களுடன்   உப்புச்   சட்டத்தை மீறினார்கள். தடையுத்தரவையும்   மீறி   சென்னை   சாந்தோம்   கடற்கரையில் உப்புக் காய்ச்சத்   தொடங்கினர்.   போலீஸார்   கடுமையான   அடக்குமுறை செய்து கூட்டத்தையும் கலைத்தனர். துர்காபாய்   அம்மையார்   அத்தோடு சோர்ந்துவிடவில்லை   வடஆற்காட்டிற்குச் சென்று ஏராளமான பெண்களை திரட்டினார். பின்னர் மே மாதம் 25-ஆம் தேதி உப்புச் சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சினார். நூற்றுகணக்கான பெண்கள் தமிழ்நாடு முழுவதும் கல்லூரி, கல்விக் கூடங்கள், அந்நியத் துணிக்கடைகள், மதுபான கடைகள் இவற்றை மறியல்   செய்யும்   போராட்டத்திலும்,   கதர்   உற்பத்தியிலும்   பெண்கள் ஈடுபட்டனர். இவர்கள்   வியாபாரிகளிடம்   அவ்வியாபாரத்தை விட்டு விடுமாறும், வாடிக்கையாளர்களிடம் அப்பொருட்கள் வாங்க வேண்டாம் என்றும் வேண்டுவார்கள்.இவை பயன் தரவில்லையென்றால் கடைகளுக்கு முன்னால் படுத்து விற்பனையை தடைசெய்வார்கள்.

இவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் லத்தியாலும்,சிறை தண்டனையினாலும் ஒடுக்கியது. இந்த தண்டனைகளையெல்லாம் பொருட்படுத்தாதுமேலும் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டதுதான் சட்டமறுப்பு இயக்கத்தின் வெற்றிக்குஒரு பொது தன்மையை கொடுத்தது.இவையெல்லாம்   சேர்ந்துதான்   அதனை   தொடர்ந்து   நடந்த சட்டமறுப்புஇயக்கத்தில்  பெண்களை  அதிக   அளவு  ஈர்த்தது.   தடியடி, அடக்குமுறை,  வழக்குகள்,சிறைச்சாலை என எத்தகய அடக்கு முறைக்கும் பெண்கள் அஞ்சாமல் போராடினர்.கீழ்வரும் சில விபரங்கள் அந்த தீவிர தன்மையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும்.

சட்ட   மறுப்பு   இயக்கத்தில் சென்னை   மாகாணத்தில்   தண்டிக்கப்பட்டவர்கள் :சாதாரண   சட்டம்   :   450   (பெண்கள்   33),   தொல்லை   மற்றும்   புறக்கணிப்பு தடுப்புஅவசரச் சட்டம், 1932 பிரிவு-5, :290 (பெண்கள்29), சட்டவிரோதமாக துண்டுதல் அவசரச்சட்டம்   1932   பிரிவு-3:   14   (பெண்கள்   3)   ஆதாரம்:   அரசு   ஆணை எண்.386 அ இ பொது துறை இ 7-03-1932. சிறையிலடைக்கப்பட்ட பெண்கள் மிகவும் கொடுமைபடுத்தப்பட்டனர். மூடநம்பிக்கை சார்ந்தது எனிநும்ம் பெண்கள் புனிதமாக கருதிய குங்குமமும்   அவர்கள் கையிலணிந்திருந்த   வளையல்களும்   பலாத்காரமாகப் வேலூர் மத்தியச் சிறையில் பறிக்கப்பட்டன.

கேவலமாந படுக்கைகள் மிகவும் அசுத்தமாக அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஒருவாரத்திற்கு  குளிக்கக் கொடுக்கும்   எண்ணெய் ஒருநாளைக்குக்  கூடபோதுமானதாக   இல்லை. சாப்பிடக்   கொடுக்கும்   சாதத்திலும்,   மாவிலும்   பூச்சிகள்நிரம்பி   இருக்கும். இதைவிட   கொடுமையின்   உச்சமாக   நூறு   பெண்கள்   வரை   ஒரு கழிப்பிடத்தைத்தான்   பயன்படுத்த   நிர்பந்திக்கப்பட்டனர்.   கல்   உடைத்தல், கம்பளி நெய்தல்   போன்ற   வேலைகள்   செய்யவேண்டும்.   சென்னை குற்றவாளிகள்   திருந்துவதற்கான   சிறையில்   அரசியல்   கைதிகளும்   மற்ற குற்றவாளிகளும்   சேர்ந்துஒரே   பிரிவில்   பன்னிரெண்டு   பேர்   தூங்க வேண்டும்.   இச் சத்தியாக்கிரகத்தில்   சென்னை ராஜதானியில் மட்டும் பிப்ரவரி மாதம் 1933 வரை கைதாகி சிறை சென்றவர்கள் எண்ணிக்கை   13674. அவர்களில்   633   பேர்   பெண்கள்   என்பது   குறிப்பிடத்தக்கது. பெண்கள் அதிக அளவு சிறைக்குச்சென்ற   போராட்டம் இதுவேயாகும். இப்படியான போராளிகள் வரலாற்றில் ஓரிரு வரிகளில் நம்மை கடந்து செல்வதுதான் நமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் சோகமாகும். முறையான ஆவணங்களில் கிடைக்கும்பெண் போராளிகள் மிகவும் குறைவே.. இருப்பினும் அவர்களை தேடிச்செல்வோம்.

(இன்னும் போராளிகளை சந்திக்கலாம்) 
ஒரு தலைமுறை காணாத அடைமழை கடந்த நவம்பர் எட்டாம் தேதி துவங்கி பெருமழையாய் உருகொண்டு நின்றது. மாதம் முழுவதும் மழை. மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. மிக எளிதாக பல்லாயிரம் ஆண்டுகளாய் கடலோடு கலந்த மழையின் பாதை எங்கும் அடைபட்டுக் கிடந்தன. நிலங்களில் தவழந்ததண்ணீர் மனிதன் செய்த தவறுகளை பயன்படுத்திக்கொண்டது. தன் வழக்கமான வழிதடம் தேடி அலைந்த மழை நீர், அடைக்கப்பட்ட கட்டமைப்புகளால் வெள்ளமென திரண்டது. உயர்ந்து நின்றவீடுகளுக்குள் புகுந்தது. புலம் பெயர்ந்து, பெருநகர் அடைந்து, உச்சமென உழைத்து, அலைந்தலைந்து கிளையின் மீது சேர்த்த தேனடை சேமிப்பு உரு குலைந்தது. இருபதாண்டுகால மனித உழைப்பு நாசமானது, இரு பத்தாண்டு சேமிப்பை 20 நொடிகளில் கவர்ந்து சென்றது மழை. மாநகர் மனிதர்கள் பித்தாகி நின்றனர். இருண்டகாலம் அனுபவமாய் மாறியது.

கழிக்க, குளிக்க, குடிக்க என எல்லாவற்றிற்கும் கழிவு நீரை முதலில் கண்டதுஇப்போதுதான். மெல்லிய புன்னகையுடன் வெள்ளம் நின்று ரசித்தது. “வரப்புயர” என அவ்வை பாட்டிச் சொன்னதை மாமன்னர்களும், மகாராணிகளும் தவறாக புரிந்துக்கொண்டதன் விளைவு இது. நிலங்களில் கரையான வரப்பு உயர்ந்தால் நீர் உயரும், நீர் உயர்ந்தால் நெல் உயரும். ஆனால் தங்கள் வரப்புகளை உயர்த்த நீர் வரப்புகளை கட்டிடங்களாய் மாற்றினர். வரப்புயர்ந்தது. அதனால்நீர் உயர்ந்தது. உயர்ந்த நீர் எங்கே செல்லும்? எளிதான மழைநீரின் கணக்கிது. எனினும் கோபப்படுகிறோம். நாசமாய் போன வெள்ளம் என சபிக்கின்றோம். நன்று! 

எப்படியாகினும் இந்த பெரு மழையும், வெள்ளமும் பல கதவுகளை திறந்துவைத்துள்ளது. அதில் ஒன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. ஆக்கிரமிப்புகள் எனில் உடனடியாக குடிசைகளை அகற்றுவது என்ற சித்திரம்தான் எல்லோருக்கும் தோன்றுகிறது. அந்த கொடூர அரசியல் குறித்து பின்பு விவாதிக்கலாம், இப்போது பெருநிறுவனங்களின் ஆக்கிர மிப்பையும் அவர்களது மனித நேயத்தையும் விவாதிக்கலாம். பன்னாட்டு நிறுவனங்களும், பெருமுதலாளிகளும், கணினி துறைகளும்கூட தூய்மை பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என நமது நண்பர்கள் மகிழ்ச்சியாக பேசித்திரிகின்றனர். உண்மை அதுவா? பன்னாட்டு நிறுவனங்களும், கணினிதுறை முதலாளிகளும் எங்கு தூய்மை செய்கின்றனர்? அதிகமாக அவர்களது அலுவலகங்கள் எதிரில்தான். அதற்கும் விளம்பரம் அவர்களுக்கு! ஆனால் இவைகளில் பணியாற்றும் இளைஞர்கள் இவர்களை போல அல்ல. தவித்த மக்களுக்காக பொருட்களை அள்ளிக்குவித்து,

கரடு முரடாண பாதைகளில் பயணித்து வந்தனர். உண்மையான அக்கரையுடன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினர். ஆனால் பெருமுதலாளிகள் செய்தது என்ன? கடலூர் மாவட்ட அனுபவம் பார்ப்போம். கடலூர் மாவட்ட கடற்கரையோரம் தனது கட்டுமானப் பணிகளை செய்து வரும் அனல்மின்நிலையம் ஒரு மாதம்வேலைவாய்ப்பு இல்லாமல் முடங்கிக் கிடந்த மக்களுக்கு செய்தது என்ன? சைமாசாயக்கழிவு ஆலை என்ன செய்தது? இந்த ஒரு நிறுவனங்களும் மக்களின் வாழ்க்கையை அழித்ததுதான் அதிகம். கடலூர் கடைமடை பாசன பகுதியாகும். எவ்வளவு மழை பொழிந்தாலும் வெள்ளம் சூழும் நிலை அரிதுதான்.

வெள்ளாறு, பரவனாறு, பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மணிமுத்தாறு, உப்பனாறு, வட வாறு என்ற ஆறுகளும் இவைகளில் பிரியும் ஏரிகளும் உண்டு. 18 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலம் கொண்ட வீராணம் ஏரி, பிருமாண்டமான பெருமால் ஏரி, வெல்லிங்டன் ஏரி, கொத்தவாச்சேரி ஏரி, பக்கிம்காம் கால்வாய், கான்சாகிப் வாய்க்கால், பாசிமுத்தன் ஓடை, 450க்கும் மேற்பட்ட ஏரிகளும், பெரிய குளங்களும் இருந்த மாவட்டம் இது. எவ்வளவு மழை பொழிந்தாலும் தண்ணீர் கடலோடு ஓடி அடையும் நில அமைப்புக்கொண்டது. ஆனால் கடலூர் மாவட்டத்தின் கடற்கரையோரம் மெல்ல மெல்ல பெரும் நிறுவனங்கள் ஆக்கிரமிக்கத் துவங்கின. கடலூர் முதுநகரின் அருகில் துவங்கிய சிப்காட் மெல்ல மெல்ல சிதம்பரம் நோக்கி விஸ்தரித்து செல்கிறது.

சிப்காட் 2, சிப்காட் 3 என விரிவாக்கம் அடைந்துக்கொண்டு இருக்கிறது. கடலூரிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் சிப்காட் 3 என்ற பகுதி சைமா சாயக்கழிவு அலைகளை தற்போது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு அமைத்துக்கொண்டு இருக்கிறது. இடையில் நாகார்ஜூனா எண் ணெய் சுத்திகரிப்பு ஆலை 1200 ஏக்கர்நிலங்களை கடற்கரையோரம் கையகப் படுத்தி வேலைகளை செய்து வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐ.எல்.எப்.எஸ் என்ற அனல் மின்நிலையம் சுமார் 1400 ஏக்கர் நிலங்களை வலைத்து தனது மின் உற்பத்தியை துவங்கி உள்ளது.

இவர்கள் கடற்கரையோரம் செய்த கட்டுமானப் பணிகள் உருவாக்கிய விளைவுகள் என்ன? சைமா சாயக்கழிவு நிறுவனங்கள் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள பகுதியில் தரை மட்டத்தை இயற்கையாய் உள்ளதைவிட மூன்று அடி உயர்த்திவிட்டனர். 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காம்பவுண்ட் சுவர் எழுப்பி விட்டனர். அதிலும் குறிப்பாக பெரியபட்டு, ஆண்டார்முள்ளிபள்ளம், தச்சமபாளையம், வாண்டியாம் பள்ளம், சின்னாண்டிகுழி, பெரியாண்டிகுழி, மடவாபள்ளம், சாமியார்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள நான் காயிரம் ஏக்கர் நிலங்களின் வடிகால் வாய்க் காலை உள்ளே வைத்து காம்பவுண்டு சுவரை அடைத்துவிட்டனர். இதன் விளைவாக அப்பகுதியில் இருந்த நெற்பயிர்கள் மொத்தமாய் மூழ்கின, சவுக்கை நாற்று மொத்தமாய் கருகியது, காய்கறிகள் அழிந்தன. ஆனால் இந்த நிறுவனம் எந்த கவலையும் கொள்ளவில்லை.

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுடன் நாங்கள் சென்று பார்வையிட்ட அன்றைய மாலையே சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் போராட்டத்தை துவக்கியதன் விளைவு உடனடியாக நிறுவன சுவர் உடைக்கப் பட்டு, வாய்க்கால்களை வெட்டும் பணிதுவக்கப்பட்டது. அடுத்த இரண்டுநாள் கிட்டதட்ட 3 கிலோ மீட்டர் வாய்க்கால்கள் வெட்டப்பட்டு அங்கு தேங்கிய தண்ணீர் பக்கிம்காம் கால்வாயில் கலக்கப்பட்டது. அதனால் சில ஆயிரம் ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் பாதுகாக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் உள்ள சவுக்கை நாற்று விவசாயிகளில் எட்டுமாத உழைப்பு கருகிப்போனது. மற்றொரு பக்கம் ஐ.எல்.எப்.எஸ் என்றஅனல் மின்நிலையம் புதுசத்திரம் ரயில் நிலையத்திலிருந்து கரிகுப்பத்தில் உள்ளதனது நிறுவனத்துள் நிலக்கரியை கொண்டு செல்ல ஒரு புதிய வழித் தடத்தை போட்டது. நிலத்திலிருந்து சுமார் 7 அடி உயரம் கொண்ட இரும்பு ரயில்பாதை சுமார் 6 கிலோமீட்டர் செல்கிறது. இப்பாதை பல கிராமங்களில் வடிகால் வழித்தடத்தை மொத்தமாய் அடைத்துச் செல்கிறது. ஒரு இடத்தில் மட்டும் சிறு குழாய்கள் அமைத்து வடிகால் எற்படுத்தி உள்ளனர். இந்த பெருமழை உருவாக்கிய வெள்ளம் அவ்வழியாக செல்லபல நாட்கள் ஆனது. அதற்கும் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் அழிந்தன. ஆனால் 15 ஆயிரம் கோடி முதலீட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தினர் இது குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளவில்லை. தொடர்ந்து வரும் நிறுவனங்களால், சமவெளியில் ஓடிவருகிற மழைநீர் நிலங்களை கடந்து கடலில் கலக்கும் இயற்கைசமன்பாட்டை தொலைத்த கடற்கரையோரமாக கடலூர் மாறியுள்ளது. 

யாருமே எதிர்பாராத இந்த தொடர் மழையும் அது உருவாக்கிய வெள்ளமும் சுமார் ஒன்றரை மாதம் மக்கள் வாழ்க்கை யை முடக்கி போட்டது. எவ்வித வேலைவாய்ப்பும் இல்லாமல் மக்கள் பசியுடன் வீட்டில் முடங்கிக்கிடந்தனர். இயற்கை யுடன் இணைந்து இந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான வெள்ளமும் கடலூர் மாவட்ட மக்களை அவதிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களுக்கு பல்லாயிரம் கோடிமுதலீட்டில் உருவாகியுள்ள இந்த நிறு வனங்கள் என்ன செய்தன? இவர்களின் மனித நேயம் என்ன? ஏற்கனவே உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காத இந்த நிறுவனங்கள், அப்படியென்ன இவர்கள் மீது அக்கறை கொள்ள போகின்றன! மூன்று அடியில் நீர் கிடைக்கும் கடற்கரையை நாசப்படுத்தியவர்கள் இவர்கள், விவசாய விளை நிலங்கள் நெற்பயிரை இழந்து உள்ளது. ஒரு பட்டத்திற்கு சவுக்கு விவசாயத்தில் 4000 ரூபாயும், தைலம் வளர்ப்பில் 6000 ரூபாயும் பெற்றவர்கள் வாழ்க்கைநாசமாகியுள்ள சூழலில் இந்த நிறுவனங்கள் இரண்டு மூன்று கிராமங்களுக்கு மட்டும் ஓரிரு கிலோ அரிசியும், ஒருபோர்வையும் கொடுத்து தங்கள் கடமை யை முடித்துக்கொண்டன. எந்த மக்கள் கூலி வேலை செய்து பிழைத்தார்களோ அந்த நிலங்களை பிடுங்கிக்கொண்டு, அவர்களுக்கு அங்கு வேலைவாய்ப்பும் தராத இந்த நிறுவனங்கள், மழை வெள்ளத்தால் உருகுலைந்த இப்பகுதி மக்களுக்கு ஒருமாதகால உணவு தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். அப்படி செய்தால்கூட அவர்கள் நிறுவனத்திற்கு காம்பவுண்ட் சுவர் எழுப்ப பள்ளம் தோண்டிய பணத்தில்பத்தில் ஒரு பங்குதான் செலவாகி இருக்கும்.

ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் புடைசூழ மாவட்டத்தின் அனைத்து சாலைகளிலும் குறுக்கும் நெடுக்குமாக சென்ற அமைச்சர்கள் கண்களுக்கு இப்பகுதி மக்கள் பிரச்சனை எட்டாதது அதிசயம்தான். எப்போதும் போல இப்போதும் பெருநிறுவனங்களுக்கு எதிராக எதையும் செய்யாமல் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. முதலாளித்துவம் எப்போதும் எளிய மக்கள்வாழ்க்கையை கண்கொண்டு பார்த்த தில்லை பார்க்கப்போவதும் இல்லை. அதற்கு இந்த பெருமழையில் உருவான இந்த செயற்கை வெள்ளமே ஒரு சாட்சி.

09.01.2016 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை


நடுங்கித்தான் போனேன்.. எட்டு மாத பிஞ்சுக் குழந்தையின் உயிரற்ற உடலை “அய்யோ தோழரே குழந்தைய பாருங்க” என என் கைகளில் வைத்த போது. பரங்கிப்பேட்டை அகரம் தலித் குடியிருப்பு தோழர்கள் சூழ்ந்து நிற்க, அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்து நின்ற தருணம் அது. பிஞ்சுக் குழந்தை தூங்குவது போல என் கைகளில். அந்த களங்கமற்ற முகம் இப்போதும் கண்களில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. சுனாமியில் பிணங்களை சுமந்த அனுபவம் உண்டு எனினும் இது வேறு கொடூரம். குடியிருப்புகளைச் சுற்றித் தேங்கி நின்ற தண்ணீரில் தவழ்ந்து விழுந்து மூழ்கி இறந்த இரண்டாவது குழந்தையின் உடல் இது. அக்குழந்தையின் வீட்டை பார்வையிட்டபோது அங்கு தண்ணீரோடு வறுமையும் சூழ்ந்திருந்தது தெரிந்தது. அதற்கு முதல் நாள்தான் கரிகுப்பம் இருளர் குடியிருப்பில் தேங்கி நின்ற தண்ணீரில் 3 வயது குழந்தை மூழ்கி இறந்து கிடந்தது. மதிமுக பொது செயலாளர் வைகோவும், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனும் அக்குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்.

வெள்ளத்தால் மரணமடைந்த கணக்கை முடிந்த அளவு வெட்டிச் சுருக்க நினைக்கும் அதிகாரிகள், குழந்தைகளை உயிரினக் கணக்கில் சேர்த்துக்கொள்ள மறுத்தனர். ஆடுகளைக்கூட கணக்கெடுக்கும் அதிகாரிகள் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ள மறுத்து சொன்ன காரணம் விசித்திரமானது. 18 வயதுக்கு மேல் இறந்தால்தான் கணக்கில் வருவார்கள். அப்போதுதான் நஷ்டஈடு கிடைக்கும் என்று புதிய கதையை சொன்னார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் அக்குழந்தைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

முதலில் பலியாவது...

2004 சுனாமி, 2005 மழை, வெள்ளம், 2008 நிஷா புயல், 2009 நீலம் புயல், 2011 தானே புயல், இப்போதைய புயல், மழை வெள்ளத்தில் அனைத்து பகுதி மக்களுக்கும் பாதிப்பு என்றாலும் விளிம்பு நிலை மக்களுக்குதான் அதிகம் பாதிப்பு. இந்திய சமூக அமைப்பின் வடிவமைப்பு இதற்கு ஒரு காரணம். எல்லா தலித் குடியிருப்புகளும் ஊருக்கு ஒதுக்குப்புறமாய், வயல்களின் ஓரம், வாய்க்கால்கள், வடிகால்கள் ஓரம் அமைந்திருப்பது கூடுதலான பிரச்சனை அவர்களுக்கு. நீர்நிலைகளை கொஞ்சம்கூட பராமரிக்காத நிர்வாகத்தின் மெத்தனப் போக்கிற்கு முதலில் பலியாவது ஊரின் ஒதுக்குப் புறமாய் தள்ளிவைக்கப்பட்டுள்ள இம்மக்களின் குடியிருப்புகள்தான்.

நவம்பர் 8ஆம் தேதி துவங்கிய மழை பல நாட்கள் பொழிந்து முடிந்தது. மழை நின்ற ஏழு தினங்கள் கடந்து, கடந்த 24ஆம் தேதி வரை வில்லியநல்லூர், அத்தியாநல்லூர், பெரியபட்டு, சிலம்பிமங்களம் உள்ளிட்ட பல தலித் குடியிருப்புகளில் வீடுகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் நீரால் அங்கு துர்நாற்றம் வீசத்துவங்கி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கச்சொல்லும் பணியை மேற்க்கொண்டுள்ளோம். உண்மையில் தலித் மக்களின் எளிய வாழ்வாதாரம் சமீப புயல், மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கூலிவேலைக்கு செல்லும் வாய்ப்பு முற்றிலும் அடைக்கப்பட்டதால் அவர்களின் உணவுத் தேவை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

தேசிய தலித் கண்காணிப்பகம் - தலித் மனித உரிமைக்கான தேசிய பிரச்சாரம் - புதுதில்லி மற்றும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகிய அமைப்புகள் சார்பில் மூன்று நாட்கள் சிதம்பரம் வட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு “மழை வெள்ள நிவாரணப் பணிகளில் நிகழும் சாதியப் பாகுபாடுகள் மற்றும் புறக்கணிப்பு ஆய்வு அறிக்கையை” கடந்த 25ஆம் தேதி வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த அறிக்கை 20 கிராமங்களில் 8392 குடியிருப்புகளில் ஆய்வு செய்துள்ளது. இதில் தலித் குடியிருப்புகள் 3424 ஆகும்.

“மண் மற்றும் கீற்றுச் சுவர்களால் அமைக்கப்படிருந்த குடிசைகள் அனைத்தும் சேதமடைந்திருந்தன. எந்த தலித் கிராமங்களிலும் அரசு நிவாரண முகாம்களை அமைக்கவில்லை, ஏற்கனவே அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களும் தூரத்தில் இருந்தன. அரசு கொடுப்பதாக விளம்பரப்படுத்தப்பட்ட தார்பாலின் ஷீட்கள் எந்தக் குடியிருப்புக்கும் கிடைக்கவில்லை.”

“குடிநீர் பெரிய பிரச்சனையாக உள்ளது. இருக்கும் ஓரிரண்டு குழாய்களிலும் சாக்கடை நீர் கலந்துவிட்டதால் குடி நீர் எடுக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. கழிப்பிடம் மற்றும் மாதவிடாய் போன்ற சுகாதாரம் தொடர்புடைய அனைத்தும் மொத்தமாய் புறம் தள்ளப்பட்டுள்ளது.” 

“கணக்கெடுத்த கிராமங்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் இதில் இருவர் தலித்துகள், பாதிப்படைந்த கான்கிரீட் மற்றும் கூரை வீடுகளில் 1276 தலித்துகளுடையது, 61 வீடுகள் தலித் அல்லாதோருடையது. இறந்த கால்நடைகளில் 274 தலித்துகளுடையது, 18 தலித் அல்லாதோருடையது.” போன்ற பலவற்றை இவ்வறிக்கை சுட்டிகாட்டுகிறது. 

உண்மையில் கடந்த 14ஆம் தேதி இரவு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்திய இரவு போராட்டம்தான் தா.சோ. பேட்டை இருளர் குடியிருப்புப் பகுதிக்கு குடிநீரையும், நஞ்சைமகத்துவாழ்க்கை, மடுவங்கரை, அகரம் போன்ற தலித் குடியிருப்புகளுக்கு அரிசி மூட்டைகள் மற்றும் குடிநீரையும், பாரதி நகர் இருளர் பகுதிக்கு உணவு பொட்டலங்களையும் கொண்டு சென்றது.

கணக்கெடுப்பில் பாரபட்சம்

பாதிப்புகளுக்கு உள்ளான குடிசைகளை கணக்கெடுப்பது மிகவும் பாரபட்சமான முறையில்தான் இருக்கிறது. ஊருக்கு இரண்டு அல்லது மூன்று குடிசைகள்தான் பாதிக்கப்பட்டதாகக் கணக்கெடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் 17,150 வீடுகள் சேதமடைந்திருப்பதாகக் கூறியது இத்தகைய கணக்கெடுப்பில்தான். குடிசையின் நான்கு சுவர்களும் முழுமையாக விழுந்திருந்தால்தான் அது முழுப் பாதிப்பு கணக்கில் வரும், மூன்று சுவர்கள் விழுந்திருந்தாலோ, கூரை மொத்தமாக நாசமடைந்திருந்தாலோ அது முழுப் பாதிப்பு கணக்கில் வராது. முழுமையாகப் பாதிப்படைந்திருந்தால் ஐந்தாயிரம், மூன்று பக்கம் விழுந்தாலோ, கூரை முழுவதுமாக பாதித்திருந்தாலோ, தண்ணீர் தேங்கி மண் தரை முழுமையாக பள்ளமாகி இருந்தாலோ பகுதி பாதிப்பு என நான்காயிரம்தான். இதை வைத்துக்கொண்டு ஒரு குடிசைக்கு தேவையான கீற்றுகளைக்கூட வாங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். 

இதற்கே போராட வேண்டியிருக்கிறது. கடந்த 16ஆம்தேதி மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் மதியம் மூன்று மணிக்கு துவங்கி மறுநாள் விடியற்காலை 3 மணிவரை நடத்திய காத்திருப்புப் போராட்டத்திற்குப் பிறகுதான் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளையும் கணக்கெடுக்க ஒப்புக்கொண்டனர். ஒவ்வொரு பிரச்சனையையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் போராட வேண்டிய சூழல்தான் இப்போதும் கடலூரில் நிகழ்கிறது. நூற்றிற்கும் அதிகமான சாலை மறியல் மாவட்டம் முழுவதும் நடந்துள்ளது. இப்போதும் நடந்துக் கொண்டிருக்கிறது. 

அதிகாரிகள் வரவில்லை என, வந்தாலும் முழுமையாகக் கணக்கெடுப்பதில்லை என, கணக்கெடுத்து நிவாரணம் கொடுப்பதில் பாரபட்சம் என, கொடுக்கும் நிவாரணத் தொகையில் பாதித் தொகை பிடிக்கப்படுகிறது என குடிநீர் வேண்டுமென, கால்நடைகளை கணக்கெடுக்கவில்லையென, பாதிக்கப்பட்ட பயிர்களின் சேதாரத்தை கணக்கிடவில்லையென போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் கடலூரில் இயல்பு நிலை திரும்பியதை நிரூபிக்க படாதபாடுபடுகின்றனர்.ஒரு பெரும் பாதிப்பின் வலிகளைப் பேசும்போது அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது ஒரு உழைக்கும் மக்கள் இயக்கத்தின் கடமை. எனினும், கடையனுக்கும் கடையோனாய் இந்த சாதிய சமூகம் ஒதுக்கி வைத்துள்ள சமூக மக்களின் வாழ்க்கைப் பாதிப்புகளை உரத்துச் சொல்ல வேண்டியது மிக முக்கிய அரசியல் பணியாகிறது. ஆட்சியாளர்கள் எப்போதும் புறம் தள்ளிவைத்துள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது அனைத்து சமூக மக்களின் அவசியக் கடமையாவதை இந்த வெள்ளம் மீண்டும் நினைவூட்டுகிறது.

--- 28.11.2015 அன்று தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை----


மெல்லிய தூறல்கள் விழுந்துக் கொண்டிருந்த வெள்ளியன்று இரவு (13.11.2015) 8 மணிக்கு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அந்தப் போராட்டம் துவங்கியது. எந்த அறிவிப்பும் இல்லாமல் துவங்கிய போராட்டம் அது. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த எங்கள் குழுவின் மொத்த கோபத்தின் வெளிப்பாடு அந்த போராட்டம். இயற்கை பேரிடரின் துயரத்தை அரசாங்கம் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்ற புரிதலுடன்தான் போராட்டத்தில் அமர்ந்தோம். ஆனால் அதிகாரிகளின் அலட்சியமும், அரசாங்கத்தின் மெத்தனமும்தான் நாங்கள் இரவு நேரத்தில் போராட்டம் துவங்க காரணமாகியது. மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற இதுவே காரணமாகும். சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் தீபாவளிக்கு முதல் நாளே நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மழையும் புயலும்முடிந்த பிறகுதான் மாவட்டத்தின் மொத்த பாதிப்பும் தெரியவந்தது. உயிர் சேதம், பயிர்கள் சேதம், வாழை, கரும்பு, முல்லை உள்ளிட்ட விளை பொருட்களின் சேதம், மின்சாரம் அடியோடு துண்டிப்பு, குடிநீர் இல்லாமல் தவிப்பு என மக்கள் நரக வேதனையை அனுபவிக்க துவங்கினர்.

நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து உணவு மிகப்பெரிய பிரச்சனையானது. ஆனால் நிவாரண பணிகளோ ஆமை வேகத்தில்தான் நடந்தது. ஆனால் உடனடியாக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு இயல்பு நிலையை உருவாக்கியது போல நாடகமாடத் துவங்கியது. கடலூர் மாவட்டத்திற்கு ஐந்து மந்திரிகள் வந்தனர். பிரச்சனையே அதுதான். எல்லா அதிகாரிகளும் அவர்கள் பின்னால் அணிவகுக்க துவங்கிவிட்டனர். குறிப்பாக எதிர்கட்சிகள் இருக்கும் தொகுதிகள் புறம்தள்ளப்பட்டது. சிதம்பரம் தொகுதியில் குறிப்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 13ம் தேதி இரவு வரை யாருக்கும் ஒரு உணவு பொட்டலம் கூட வழங்கப்படவில்லை. 11ம் தேதி இரவு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கரிகுப்பம் கிராமத்தில் இருளர் வாழும் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது, உடனடியாக அங்குஉணவு பொட்டலங்களை அனுப்புங்கள் என கூறியதும் அவர் உடனடியாக அனுப்புவதாக சொன்னார் ஆனால் 13ம் தேதி இரவு வரை அங்கு எந்த உதவியும் போகவில்லை.

13ம் தேதிவரை த.சோ.பேட்டை இருளர்கள் குடியிருப்பு, சோத்து கொல்லை, செஞ்சேரி, மடுவங்கரை, பெரியமதகு, நஞ்சைமகத்து வாழ்க்கை உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒரு சொட்டு குடிநீர்கூட கிடைக்கவில்லை அதாவது 5 தினங்களாக. மேலும் நாங்கள் சென்ற 16 கிராமங்கள் இன்னும் இருளில்தான் மூழ்கி உள்ளது. மண்டபம் கிராம மக்கள் வேறு வழியில்லாமல் போராடிய போது சிதம்பரம் காவல்துறை அவர்களை கடுமையாக தாக்கியது. ஒரு மாற்று திறனாளி ஓட வழியில்லாமல் கடுமையாக தாக்கப்பட்டார். இவைகள் உருவாக்கிய கோபம்தான் 13ம் தேதி இரவு போராட்டமாக மாறியது.போராட்டம் துவங்கியதும் வழக்கம் போல காவல்துறையினர் பாய்ந்து வந்து நின்று கொண்டனர்.

அதிகாரிகள் வந்தனர். எந்தவித உதவியும் இல்லாத குறிப்பிட்ட கிராமங் களுக்கு உதவிகள் கிடைக்கும் வரை இங்கிருந்து எழுந்து செல்லமாட்டோம் என கூறிவிட்டோம். நேரம் கடந்துக்கொண்டே இருந்தது. அதிகாரிகள் மாறி மாறி சட்டமன்ற உறுப்பினரிடம் பேசினர். காலையில் நிவாரண பணிகளை செய்து விடுகிறோம் அவர் ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டார். முடியாது!

உடன் அசுர வேகத்தில் பணிகள்துவங்கியது. இரவு 11 மணிக்கு உணவு பொட்டலங்கள் தயாராகி கிராமங்களுக்கு சென்றது. டேங்கர் வண்டிகளில் இரு கிராமங்களுக்கு குடிநீர் சென்றது. அரிசி மூட்டைகள் அரசு வண்டியில் வந்து இறங்கி கிராமங்களுக்கு சென்றது. அலட்சியமாக மக்களை கவனித்த வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார். உடனடியாக ஒரு சிறப்பு அதிகாரி பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு நியமிக்கப்பட்டார். இனி முழு நிவாரணபணிகளையும் அவரே கவனிப்பார் என உத்தரவு வந்தது. அதன்பிறகுதான் 11.30 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களும் போராட்டத்தை முடித்துக்கொண்டோம். 

அதே நாளில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்த மாதர் சங்கத் தோழர்கள் பண்ருட்டி பெரியகாட்டுபாளையம், சின்ன காட்டுபாளைம், மேட்டுக்குப்பம் பகுதியில் நிவாரண பணிகளில் ஏற்பட்ட பாரபட்சத்தை கண் டித்து மக்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட அந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு 957 குடும்பத்தார்களுக்கு ரூபாய் 47.08,500 (சுமார் ஐந்து லட்சம்) நிதியை பெற்றுக்கொடுத்தனர். ஆளும் கட்சியினரின் நிவாரண உதவி பாரபட்சம் மேலும் போராட்டங்களை கடலூர் மாவட்டத்தில் அதிகப்படுத்தவே செய்யும். இதோ இந்த பதிவை எழுதி கொண்டிருக்கும் போது கரிகுப்பம் கிராமத்தின் இருளர் குடியிருப்பிலிருந்து தொலைபேசி அழைப்பு.. “தோழர் நாங்க இருளர் காலனியிலிருந்து பேசுறோம்.. வீடுகளை சுத்தி நின்ன தண்ணியில விழுந்து மூணு வயசு கொழந்த செத்து போச்சு, உடனே வாங்க தோழர்... காலையில செத்து போச்சுயாருமே வரல..” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அங்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

----- 15.11.2015 அன்றைய தீக்கதிரில் வந்த பதிவு-----


கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நிலை இருந்தால், பா.ஜ.க. சுயமாக எந்த தீர்மானமும் செய்ய முடியாமல் திணறும். நிலைமை அப்படி இல்லை. பா.ஜ.க., வீட்டுப் பெரியவர் ஆர். எஸ்.எஸ். அவருடைய மனம் கோணாமல் நடந்து கொள்ள பா.ஜ.க., முயற்சிக்கும். சில சமயங்களில் உரசல் வருவதால் உறவு விட்டுப் போகாது.
இது சோ ராமசாமி கூறியது. ஆதாவது பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு 15 மாதங்களுக்கு முன்னர்.
கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பின்னணியில் இருந்து இயக்குவதாக கூறப்படுவது தவறு.. அந்த குற்றச்சாட்டில் உண்மை எதுவும் இல்லை. நானும் பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். அதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றது பதவி ஏற்பின் போது எடுத்துக் கொண்ட ரகசியகாப்பு பிரமாணத்தை மீறிய செயலில்லை.
இது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கூறியது. அதாவது அவர்கள் ஆட்சிக்கு வந்த 15 மாதங்களுக்கு பின்னர். “இருக்கு ஆனா இல்ல” என்ற பாணியிலான இந்த பேட்டியிகளின் பின்னணி என்ன?
டவுசர் பாண்டிகள் மாநாட்டில். . .
                கடந்த 15 மாதங்களாக ஆட்சியில் இருக்கும், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ.க, அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூன்று நாள் கூட்டம் கடந்த செப்டம்பர் 2,3,4 ஆகிய தேதிகள் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், முன்னாள் ராணுவத்தினரின், ‘ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்’ கோரிக்கை; மறைமுகமாக இடஒத்துக்கீட்டை ஒழிக்கும் வகையில் நடந்த படேல் சாதியினரின் ஓ.பி.சி., ஒதுக்கீடு கோரிக்கை; எதிர்க்கட்சிகளின் குரலால், மக்களின் போராட்டங்களால் முடக்கப்பட்ட நில மசோதா, தொழிலாளர்களை முடமாக்கும் தொழிலாளர் சீரமைப்பு நடவடிக்கைகள், காவிமயமாக்க முயற்ச்சிக்கும் கல்வித் துறை சீர்திருத்தங்கள் போன்றவை குறித்து விவாதிக இருப்பதாக செய்திகள் திட்டமிடப்பட்டு கசியவிடப்பட்டது. இருப்பினும் உள்நாட்டுப் பாதுகாப்பு, காஷ்மீர் பிரச்சனை ஆகியவைகள் குறித்து இக்கூட்டத்தில் அவர்கள் விவாதிப்பதை திட்டமிட்டு மறைத்தனர்.
                ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களான “டவுசர் பாண்டிகள்” 95 பேர் கலந்துக்கொண்ட, இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் “அடால்ப்” மோடியும், “என்கவுண்டர்” அமித்ஷாவும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். மேலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிகர், போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சர் ஆனந்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களில் தேர்ந்தெடுத்த சிலரும் கலந்துக்கொண்டனர்.
                இடதுசாரி கட்சிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அபாயகரமான போக்கை மிகுந்த கவலையுடன் சுட்டிக்காட்டியது. மாயாவதி “ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை மோடி அன்மையில் சந்தித்துப் பேசியிருப்பதன் மூலம், மத்திய அரசை இயக்குவது அந்த வகுப்புவாத – பாசிச அமைப்புதான் என்பது தெளிவாகிறது. மத்திய அமைச்சர்கள் பலர் தங்களது செயல்பாடுகள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கமானது சட்டத்துக்கும், மக்களின் உணர்வுகளுக்கும்தான் அடிபனிய வேண்டுமே தவிர, வகுப்புவாத சிந்தனையுடைய ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு அடிபனியக் கூடாது.” என விமர்சனம் செய்தார்.
கோரிக்கையோடு சென்று…
                இவைகளைதான்டி இந்த கூட்டத்தில் எழும் கேள்விகள் பல உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் அமைச்சர்கள் மதவாத அமைப்பின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் துறையின் நடவடிக்கைகளை விவரிப்பதும், அந்த அமைப்பின் ஆலோசனைகளை கேட்பதும் மிகவும் ஆபத்தானது. இது ஏதோ கற்பனையின் விளைவாகவோ அல்லது பாஜக மீதான எரிச்சலாலோ சொல்லப்படும் குற்றச்சாட்டு அல்ல. ஒரு உதாரணம் போதும் இதை தெரிந்துக்கொள்ள.
                சிந்து சமவெளி நாகரிகம் சரசுவதி நாகரிகம் என்று இல்லாத நதியின் பேரால் நாகரீகத்தை உருவாக்குவதும், உலக புகழ்பெற்ற தாஜ்மகால் இராஜபுத்திர அரண்மனை என்று கட்டுக் கதைகளாகப்புகுத்துவதும், மொகலாயர் ஆட்சி எல்லாம் இந்துக்களுக்கு எதிரானது என்றும் கதையளக்கும் வரலாற்றாசிரியர்களை நிறைய தயாரித்து வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இதில் கைதேர்ந்த கிருஷ்ணா கோபால், சோனி, தத்தாத்ரேய ஆகிய மூவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசின் கல்வி அமைச்சர் சுமதி இராணியை சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
                தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக்கட்டணங்கள் உயர்வாக இருக்கிறது. பள்ளிகளிலும் ஒழுக்கத்தைப் போதிக்கும் பாடத்தைச் சேர்க்க வேண்டும். வரலாற்றுப் பாடத்தில் பல தவறுகள் சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்பதாகும் அந்த கோரிக்கைகள். உலகம் அறிந்த இந்தியாவின் புகழ்பெற்ற இர்பான்ஃ ஹபீப், தொமிலாதாப்பர், கே.எம்.பணிக்கர் போன்ற கல்வியாளர்கள் இல்லை மேற்கண்ட மூவரும். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் விஷ சிந்தனையாளர்கள். இவர்கள் வைத்த கோரிக்கைகளில் மிக ஆபத்தானது பள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்கும் பாடத்தை சேர்க்கவேண்டும் என்பதாகும். இதன் பொருள் ஏ :பார் அர்ஜூன், பி பார் பிரம்மா, சி பார் கவ், டி பார் துருவா, ஜி பார் கணேஷ் எனத் துவங்கி இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகள் முக்கிய பாடங்களாகும். சமஸ்கிருதம் வேதமொழி, வேதமே இந்நாட்டின் அடிப்படை எனவே சமஸ்கிருதம் படி என்பார்கள். இவர்களது ஆலொசனைகளை பரிசிலிப்பதாக சொன்ன மத்திய அமைச்சர் கடந்த கூட்டத்தில் இதைதான் விவாதித்திருப்பார் என்பதை தனியே சொல்லத்தேவையில்லை.
இப்போது மட்டுமல்ல…
அதே போல பிஜேபி ஆட்சியின் பரம இரகசியம்கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தெரியாமல் நடக்க இயலாது என்பதற்கு உலகறிந்த உதாரணம் எற்கனவே உள்ளது.1999 மே 11,13 ஆகிய இரு நாள்களில் வாஜ்பாய் தலைமையிலான அப்போதை பா.ஜ.க. கூட்டணி அரசு இராஜஸ் தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில் அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. மத்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான இரகசியம் இது. குடியரசுத் தலைவருக்குக்கூட முதல் நாள் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே நாளில் ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் “அணு ஆயுத இந்தியா” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழ் வெளியிட்டது. அணுகுண்டு வெடிப்புத் தகவல் முன் கூட்டியே ஆர்.எஸ்.எஸங்க்குத் தெரிந்திருந்தாலொழிய இந்தச் சிறப்பிதழைக் கொண்டு வந்திருக்க முடியாது எனது குழந்தைகள்கூட சொல்லிவிடமுடியும்.
இதுதான் அவர்களின் பாசிச செயலபாடு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தெரியாமல் ஒரு அணுவைக்கூட அவர்களால் அசைக்க முடியாது. ஏனெனில் ஆட்சியாளர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களாக இருக்கும் போது “அவர்களுக்கு தெரியாது” என்பது பைத்தியகார மனிதனின் சித்தம் கலங்கிய வார்த்தையாகதான் இருக்க முடியும். ஆக இந்து அடிப்படிவாத அமைப்புகுத்தான் விபரம் புரியாமல் மக்கள் வாக்களித்து அமரவைத்துள்ளனர். அதற்கன அறுவடையை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க துவங்கியுள்ளனனர். விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்க்கு ஆதவாக நின்ற அமைப்பான ஆர்.எஸ் எஸ், சிறையிலிருந்து தாப்பிக்க மண்ணிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த வாஜ்பாயை முன்பு பிரதமராக முன்நிறுத்தியது. அப்போது அதற்கு வாய்பாய் போல ஒரு சாந்தமான முகம் தேவைப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அடுக்கடுகாக தவறுகளால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நின்றது. காங்கிரஸ் மீது இருந்த கோபத்தை தனது மூலதனமாக பயன்படுத்தியது. எதையும் செய்யமுடியும் என்பதுபோல ஆக்ரோஷ்மாக நடிக்கும் மோடியை முன்நிறுத்தியது.
மோடியும் தனது வெளிநாட்டு பயணங்களுக்கிடையில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாராளுமன்றத்திற்கு வந்து இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக நில கையகபடுத்தும் சட்டம், தொழிலாளர் உரிமைகளை மொத்தமாய் சீரழிக்கும் தொழிலாளர் சீரமைப்பு நடவடிக்கைகள், பொத்துறையை விற்பத்தற்கும் தரகு வேலைகளை, நாளைய பொது சமூகத்தில் ஆழமான பிளவை உருவாக்கும் கல்வித் துறையை காவிமயமாக்க சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அழுத்தமாக செய்து வருகிறார். ஆனால் இந்த வேகம் போதது என ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது. அதனால்தான் அதன் மூன்றுநாள் கூட்டத்திற்கு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை அழைத்து வேப்பில்லை அடித்து அனுப்பி உள்ளது. இந்தியாவின் வரலற்றின் அபாய கட்டம் வேகமாக நெருங்குவதை உணர முடிகிறது. எதின்விணையின் வேகம் இன்னும் விசையோடு புறப்படவேண்டியிருக்கிறது.
அக்டோபர் மாத இளைஞர் முழக்கத்தில் வெளியான எனது கட்டுரை


அந்த கிராமத்தின் பெயர் வெய்யலூர். அக்கிராமத்தின் தலித் பகுதியில் யாராவது மரணமடைந்தால் பிணத்தை ஊரினுள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. வயல்வெளியில் இறங்கிதான் எடுத்துச்செல்ல வேண்டும். மழைக் காலத்தில் யாராவது இறந்தால் வயல்வெளியில் தண்ணீரில் இறங்கிச்செல்ல முடியாதே? இருக்கட்டும் தண்ணீர் வடிகின்றவரை பிணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! இதுதான் அந்த ஊரின் வழக்கமாக இருந்து வந்தது. ஒரு மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்துப் போக பிணத்தை ஊருக்குள் அனுமதிக்க முடியாது என மறிக்கின்றனர். எந்த சாதி ஆதிக்க வெறியர்கள் அனுமதி மறுத்தார்களோ அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதநேய உள்ளம்இத்தகவலை மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட அலுவலகத்திற்குச் சொன்னது. கட்சியின் அன்றைய மாவட்ட செயலாளரும், இன்றைய கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன், செங்கல்மேடு ஜி.கலியபெருமாள், பண்ணப்பட்டு ஏ. கணபதி உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் திரண்டு அக்கிராமத்திற்கு சென்றனர். சவ ஊர்வலம் தயாரானது.

ஊருக்குள் தலித் பிணத்தை அனுமதிப்பதில்லை என சாதி வெறியர்கள் திரண்டு நின்றனார். மனித நாகரீகத்தின் அநீதிக்கெதிரான போர்க்களத்தில் செங்கொடி எப்போது பின்வாங்கியது? ஒரு கையில் செங்கொடியை உயர்த்தி, மற்றொருகையில் பாடையைச் சுமந்தனர் மார்க்சிஸ்ட் தலைவர்கள். தோழர்கள்கள் புடைசூழ ஊர்வலம் ஊருக்குள் புகுந்தது. ஆயுதங்களுடன் நின்றவர்கள் மெல்ல மெல்லப் பின் வாங்கினர். காரணம் பாடையை சுமந்து, அதற்கு பாதுகாப்பு அரணாக வந்தவர்களில் அவர்களுடைய சாதியைச் சேர்ந்தவர்களும் அரணாக வந்துகொண்டிருந்தார்கள். ஆம். அந்த அதிசயம் நடக்கதான் செய்தது. அவர்கள் சாதி உணர்வுகளை கடந்த மார்க்சிஸ்ட்டுகள். அப்பகுதி விவசாயிகளின் பிரச்சினைக்காகவும், பிற்படுத்தபட்ட மக்களின் நலனுக்காவும் இதே செங்கொடியும், இதே தலைவர்களும் பல போராட்டங்களை நடத்தியதை அம்மக்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இதுதான் செங்கொடியின் பாரம்பரியம்.

இம்மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாதி கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடப்பதும், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகின்ற சூழலில்தான் மார்சிஸ்ட் கட்சி ஆணவக் கொலைகளுக்கு எதிரான மாநாட்டை இன்று (செப்.29) கடலூரில் நடத்துகிறது. சாதியின் பெயரால் ஆண்டாண்டுகாலமாக ஒடுக்கிவைக்கப்பட்ட மக்கள் திரள் தங்களின் உரிமையை பல வழிகளில் மீட்க எழுகின்றபோது அவர்களுடன் நின்று ஆதரவளிப்பதுதான் ஜனநாயக இயக்கங்களின் கடமையாகும்.ஆனால் சாதிய மோதல்கள் நடக்கும்போதெல்லாம் தமிழகத்தை ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி கண்களை இறுக்க மூடிக்கொள்கின்றன. பிரச்சனையில் பங்கெடுக்கும் இயக்கங்களை தவிர மற்ற அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் அமைதியாகவே இருக்கின்றன. ஊருக்குள் வரும் தேரைக் கொளுத்தினாலும் சரி, அல்லது சேரி என்றழைக்கப்படும் ஊரையே கொளுத்தினாலும் சரி அதை சாதி ஆதிக்க தாக்குதலாக பார்க்காமல் “சாதி கலவரம்“ என்றே சொல்கிற ஊடகங்கள் பொதுவிவாதத்தை தூண்ட மறுக்கின்றன.

இதற்குபின்னால் சாதிய சமூகத்தின் வன்மம் மறைந்துள்ளது. “அதுசரி அவன் ஏன்யா ஊருக்கார பொண்ணைக் காதலிக்கிறான்,” என்ற கேள்வியில் ஒளிந்திருப்பது என்ன விதமான உணர்வு? தன் மகன் எதிர்கால தமிழக முதல்வராகவே மாறிவிட்ட கனவில் இருக்கும் அய்யாஅவர்கள் “தலித் இளைஞர்கள் கூலிங் கிளாஸ் அணிந்தும், டி சர்ட், ஜீன்ஸ் அணிந்தும்தங்கள் சாதி பெண்களை கவர்கிறார்கள்,” என்று கூறியதன் வேறுவகை வெளிப்பாடுதானே? அறிவியல் தொழில்நுட்பமும், நாகரீகம் வளர்ந்த காலத்தில் இளைஞர்கள் பழகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள சூழலில் கொஞ்சமேனும் நம்பிக்கை அளிக்கும் சாதி மறுப்பு திருமணங்களை குற்றமாகவும், அந்த திருமணங்களை எற்றுக்கொள்ளும் பெற்றோர்களை குற்றவாளிகளாகவும் உணரவைக்கும் நிலையை மாற்ற வேண்டாமா? தன் சமூக பெண்ணை காதலித்த குற்றத்திற்காக கோகுல்ராஜின் தலையை அறுத்தெரிந்ததற்காகத் தேடப்படும் நபர் வாட்ஸ் அப்பில் தினமும் காவல்துறைக்கு ஆணை பிறப்பிக்க முடிகிறது!

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவின் மரணத்திற்கு ஆதாரம் கொடுப்பதாக தன்னை தியாகியாக்கிக் கொள்ள குரல் பதிவை அனுப்ப முடிகிறது! படை பல பராக்கிரமம் பொருந்திய தமிழககாவல்துறையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சாதி ஆணவக் கொலைகளை தடுத்துநிறுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் நிச்சயமாக இந்த வன்முறை அதிகரிக்கவே செய்யும். சமூக சீர்த்திருத்த தலைவர்கள் வாழ்ந்தமண் என பெருமிதம் பேசிக்கொண்டிருப்பதில் மட்டும் பயன் இல்லை. அரசு இயந்திரத்தின் அடிமுதல் நுனிவரை புரையோடிப்போய் உள்ள சாதி உணர்வை கலைந்திட அறிவியல்பூர்வமான நடவடிக்கையும் அணுகுமுறையும் தேவை. தமிழகத்தை ஆள்பவர்களும் ஆண்டவர்களும் தங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேர்விலேயே சாதிபார்க்கும்போது அதிகாரம் கையில் இருக்க சாதியத்தின் ஆணிவேரை அல்ல அதன் நுனியைக்கூட சாய்க்கப்போவதில்லை. 

ஒன்றுபட்ட மக்கள் இயக்கம் மட்டுமே அரசு எந்திரத்தை நடவடிக்கை எடுக்கவைக்கும்.இந்திய நாடு முழுவதுமே சாதி அணவக் கொலைகளை எதிர்த்து போராடிவரும் மார்க்சிஸ்ட் கட்சி பொது சமூகத்திற்குவேண்டுகோள் விடுக்க இந்த மாநாட்டைநடத்துகிறது. பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி கலந்துகொள்ளும் இம்மாநாடு, இப்போதே இப்பிரச்சினையை பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.மக்களிடையே விவாதத்தையும் தூண்டி விட்டுள்ளது. அந்த விவாதம் விரிவடைய, சமுதாய மனசாட்சி விழிப்படைய “சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக இணைந்து நிற்போம் வாரீர்” என அனைத்து சமூக மக்களையும் அறைகூவி அழைக்கிறது மாநாடு.

29அன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை

முதல் நாள் மாலை துவங்கி விடிய விடிய கைகள் கட்டப்பட்டு, அடி வாங்கி உடல் கிழிந்து தளர்ந்து கிடந்தார் முருகேசன். மறுநாள் காலை.. கடுமையாக தாக்கப்பட்டு தள்ளாடியபடி காரில் கொண்டு வரப்பட்ட கண்ணகியும் அவர் அருகில் கைகால் கட்டப்பட்டு கிடத்தப்பட்டார். முந்திரி காட்டில் ஊரார் கூடி நிற்க இருவருக்கும் விஷம் புகட்டினர். கண்ணகி வாயை திறக்க மறுத்ததும் அவர் காதில், மூக்கில் விஷம் ஊற்றப்பட்டது. கண்ணகியின் பெற்றோரும் உடனிருக்க இருவரின் உயிர் அடங்கும் நேரத்தில் கொளுத்தப்பட்டனர். உடல்களை எரிப்பதற்கு முன்னேற்பாடுகள் தயாராக இருந்தது. தனித்த சுடுகாடுகளில். மேற்கண்டது திரைப்படத்தின் காட்சியோ.. நாவலின் பகுதியோ அல்ல இது. கடலூர் மாவட்ட விருத்தாசலம் பகுதியில் உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் நடந்த கொடூரம் முருகேசனும் கண்ணகியும் செய்த குற்றம் சாதி மறுத்துகாதலித்ததுதான்.

அதிலும் வேதனை என்னவென்றால் முருகேசன் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது தாயாரும் உறவினர்களும் புதரின் மறைவிலிருந்து கத்தி அழக்கூட வாய்ப்பில்லாமல் இந்த நிகழ்வின் சாட்சிகளாய் நின்றதுதான். இதுதான் நமது `நாகரீக’ சமூகத்தின் கேவலமான சாதிய முகம். கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடப்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சமூக ஆய்வறிக்கைகள் கூற்றுபடி 25 நாடுகளில் கவுரவத்தின் பெயரால் கொடூரமான கொலைகள் நடக்கிறது. உலகில் அதிகமாக கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடப்பது துருக்கியில்தான். மைதானத்தின் மத்தியில் இடுப்புடன் மண்ணில் புதைத்துவிட்டு ஊரே கூடி நின்று கல்லால் அடித்து,சிதில் சிதிலாக உடலைசிதைப்பது என்னவகையான மனநிலை? கவுரவத்தின் பெயரால் இவை யாவும் நியாயப்படுத்தப்படுகிறது. இப்படி நடக்கும் கொலைகளுக்கு மதம், இனம், எல்லைகள் போன்ற ஏதோ ஒன்று காரணமாய் அமைகிறது. 
இந்தியாவில் மதமும் மதம் சார்ந்த பிரிவுகளும், சாதியும் அந்த அமைப்பு உருவாக்கும் சாதி ஆணவமும் கொலைகளை நோக்கி தள்ளுகிறது. இந்தியாவில் பஞ்சாப்பில்தான் அதிக சாதி மறுப்பு திருமண கொலைகள் நடக்கிறது. அடுத்த இடங்களில் உத்திர பிரதேசமும், ஹரியானாவும் தொடர்கிறது. சாதி மறுப்பு திருமணங்கள் அதிகம் நடப்பது பஞ்சாப்பில்தான். அங்கு நடக்கும் மொத்த திருமணங்களில் 22 சதம் சாதி மறுப்பு திருமணங்கள். அடுத்த இடத்தில் கேரளம் உள்ளது. அங்கு நடக்கும் திருமணங்களில் சாதி மறுப்பு திருமணங்கள் 19 சதமாகும். தமிழகத்தில் நடக்கும் சாதிமறுப்பு திருமணங்களில் எண்ணிக்கை வெறும் 2 சதம்தான். ஆனால் நடக்கும் திருமணங்கங்களின் எண்ணிக்கைக்கும் நடக்கும் கொலைகளுக்குமான சதவிகிதத்தில் முதலிடம் பிடிப்பது தமிழகம்தான். ஆனால் தமிழகத்தில் கவுரவத்தின் பெயரால்கொலைகளே நடக்கவில்லை என காவல்துறையினரும், முதலைமைச்சர்களும் சத்தியம் செய்கிறார்கள். 

இந்தியாவில் பிறப்பவர்கள் பிறக்கும்போதே சாதி முத்திரையோடுதான் பிறக்கிறார்கள். அவர்களின் உடல்களை வளர்ப்பது பெற்றோராக இருந்தாலும், அவர்களது மனநிலையை விஷம் கொடுத்து வளர்ப்பது சாதியம்தான். இந்திய சமூகத்தை பீடித்துள்ள சாதி என்ற பௌதீகம் நவீன உலகின்நுட்பங்களை தனதாக்கிக்கொள்ள முயற்சித்துக்கொண்டே இருகிறது. இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான இணைய வெளியை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறது. சாதி பெருமிதம் குறித்து வெறுப்பேற்றும் பணிகளை இணையம் முழுவதும் செய்து வருகின்றனர்.இது, நிகழ் சமூகத்தின் பிரதிபிம்பம். சாதி மறுப்பு திருமணங்களை செய்யும் குடும்பங்களை சாதி உறவுகள்தான் அலைக்கழிக்கின்றது. உனது குடும்பம் இனி வெளியில் தலைகாட்ட முடியுமா? என்ற கேள்வியில் துவங்குகிறது அவர்களது கோரத்தாண்டவம். இதுநாள் வரையில் தனது குடும்பத்தின் மீதான கவுரவம் இனி என்னாகுமோ என்ற அச்சத்தை அந்த குடும்பங்களில் விதைக்கிறது.தனது உறவுகள் மத்தியில் இனி தலைகாட்ட முடியுமா என்ற எண்ணமும், தாழ்ந்த சாதியை சார்ந்த ஆணோ பெண்ணோ தனது குடும்பத்தில் வந்து சேர்ந்தால் என்னாகும் என்ற பதட்டமும், சமூகம் இனி என்ன சொல்லும் என்ற கற்பிதமும் கொலை அல்லது தற்கொலையை நோக்கி தள்ளுகிறது. 

இதுதான் தர்மபுரியில் திவ்யாவின் தந்தையையும், புதுக்கூரைப்பேட்டையில் கண்ணகி, முருகேசனையும் காவு வாங்கியது. மற்றொரு பக்கம்ஒவ்வொரு குடும்பத்தை உன்னிப்பாய் கவனித்து வரும் சாதியம், தனது சாதியில் இரத்த கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. உலகின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் உங்களது சாதிய சங்கங்களால் உங்களை எளிதாகதொடர்பு கொள்ள முடியும். மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சாதியை கடந்து போகாவண்ணம் நமது வாழ்க்கை கட்டமைக்கப்பபட்டுள்ளது. இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இதற்கான வரலாற்று பின்னணி இருக்கிறது. 

வனத்தின் மகளான தாடகையையும், நான்காம் வர்ணத்தவனாகிய சம்புகனையும் இராமபிரான் கொலைசெய்தது எதற்காக? ஏகலைவனின் கட்டைவிரல் துரோணனால் வெட்டப்பட்டது எதனால்? மாவீரன் கர்ணன் போட்டியிலிருந்து தூக்கி எறியப்பட காரணம் என்ன? எல்லாவற்றையும் நானே படைத்தேன்.. இந்த பாழாய் போன சாதி அமைப்பு முறையும்.. எனவே எதையும் படைத்த என்னால்கூட மாற்ற முடியாது என சூத்திரதாரி கண்ணனின் உபதேசம் மீண்டும் மீண்டும் போதிக்கப்படுவது எதனால்? சாதி மீறலில் எந்த எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை என சட்டமியற்றிய மனுவுக்கு ஏன் சிலைகள் நிறுவப்படுகிறது? எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். சாதிய அமைப்பை பாதுகாப்பது. 

சாதிய அடுக்கில் உயர் வகுப்பை சேர்ந்த முத்துப்பட்டன் கடைநிலையில் உள்ள அருந்ததிய சமூகத்தை சார்ந்த அக்காள் - தங்கைகளின் மீது காதல் கொண்டான். அதன் பொருட்டு அவன் தன் நிலையை இறக்கிக்கொண்டு செருப்பு தைக்கும் தொழில் கற்றான், அந்த பெண்களை மணம் முடித்தான். அதன் விளைவாக ஆதிக்க வெறியர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். அதன்பின் அவன் தெய்வமாக்கப்பட்டன். இப்போதும் நெல்லை மாவட்டம் முத்துப்பட்டன் கோவிலில் செருப்பு வைத்து வழிபடுவது தொடர்கிறது. தருமபுரியில் இரயில் தடத்தில் மண்டை ஓடு சிதறக் கிடந்த இளவரசனும், திருச்செங்கோட்டில் தலை அறுக்கப்பட்டு கிடந்த கோகுல்ராஜூம், மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட மதுரை வீரன் கதையின் தொடர்ச்சிதானே!சாதி இந்துப் பெண்ணை காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்தான் தஞ்சை சூரக்கோட்டை மாரிமுத்து. ஆத்திரம் கொண்ட ஆதிக்கவெறியர்களால் அவனது ஆணுறுப்பு அறுந்தெறியப்பட்டது. அப்போது சாதி மீறலுக்கு எதிராக சட்டமியற்றிய மனுவின் சிரிப்போசை கேட்டிருக்கும்தானே? இன்னும் நாட்டார் தெய்வங்கள் கதைகளை தேடிச்சென்றால் சாதி மறுப்பால் கொலையான சாமிகளின் எண்ணிக்கை நிறைய கிடைக்கும். 

ஆக வரலாற்று பூர்வமாக இச்சமூகத்தில்கவுரவத்தின் பெயரால் கொலைகள் நடந்துகொண்டே இருக்கிறது. எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் இம்மண்ணில் தோன்றி இதற்கெதிராக சண்டமாருதம் செய்துள்ளனர். ஆனாலும் அனைத்தையும் சாதி உள்வாங்கி செரித்து நிற்கிறது. முற்போக்கு கருத்துகளை கொண்ட இஸ்லாமிய மதமும், கிருத்துவ மதமும்கூட இந்திய சாதி அமைப்பிடம் தோற்றுப்போனது. ஏற்றத் தாழ்வான சமூகத்தின் பிரிக்கமுடியாத அம்சம் இதுவாகிப் போனது. சாதியத்திற்குள் இருக்கும் ஒருவர் தலித்துகளிலிருந்து தனது வாழ்க்கைத் துணையை தேர்தெடுப்பதையே சாதி மறுப்பு திருமணம் என சட்ட ரீதியாக வரையறுத்துள்ளது அரசாங்கம். அவ்வாறு மணம் புரிபவர்களை ஊக்கப்படுத்தவும், பாதுகாக்கவும், தேவையான உதவிகளை செய்வதற்கும் ஆற்றல் இல்லாமல் தவித்து நிற்கிறது அரசு நிர்வாகம். இதற்கு காரணம்,ஆட்சியாளர்களிலும், காவல் மற்றும் நீதித்துறையிலும் இன்னும் பிற அரசு இயந்திரங்களிலும் உள்ளவர்களிடம் ஓங்கியிருக்கும் சாதிய உணர்வுதான்.

தன் சாதியின் தூய ரத்தத்தில் இன்னொரு சாதியின் இரத்தம் கலப்பதை தீட்டாக கருதாத ஒரு சமுதாயத்தில் மட்டுமே ஆணவக் கொலைகளை தடுக்க முடியும். சாதிய கொடுமைகளை அல்லது படிநிலையை வெறும் ரத்தக்கலப்பினால் மட்டுமே குலைத்துவிட முடியாது, ஆனால் ரத்தக்கலப்பு நிகழாமலும் மாற்றிவிட முடியாது. ஆனால் இதற்கான முயற்சிகள் இரத்த வெள்ளத்தில் மீண்டும் மூழ்கடிக்கப்படுகிறது. ஆனால் ஆதிக்கத்தை திணிக்கும் சாதியினரின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பும், கல்வியும் நெடுங்கனவாய் இருந்தாலும் அதுகுறித்தெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. அரசியலை நாடகமாக நடத்தும் இவர்கள் காதலை நாடகம் என்கின்றனர்.எனவே உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக பிரமாண்டமான மாநாட்டை கடலூரில் நடத்துகிறது. எப்படியேனும் காதலை காரணம் வைத்து கலவரத்தை தூண்ட நினைக்கும் சாதி ஆதிக்க வெறிக்கெதிராக, உழைப்பாளி மக்களை திரட்டி சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு ஆதரவாக சமூக பொதுபுத்தியை மாற்றிட அழைக்கிறது. இது எதோ சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஆதரவான மாநாடு மட்டுமல்ல.. சாதி ஆதிக்கத்தை எதிர்த்து மக்களை ஒன்றுபடுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியும் ஆகும்.

‪25.09.2015 #‎தீக்கதிர்‬ நாளிதழில் வெளியான எனது கட்டுரைமோடி பதவியேற்றது முதல் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு இரண்டு மதக்கலவரங்கள் நடந்து வருகிறது என்ற தகவல் நமது ஊடகங்களால் அவ்வுளவு பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை. மதத்தின் பெயரால் கலவரங்களில் அல்லது கொலைகளில் ஈடுபடுபவர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அதில் ஈடுபடமுடிகிறது. இதற்கு ஆதரவான தார்மீக உணர்வும், ஆதரவும் மோடியின் ஆட்சியில் எப்படி கிடைக்கிறது என்பது வரலாற்றுப் பூர்வமாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டியதாகிறது.   

பல்லாண்டுகாலமாக மக்களின் நம்பிக்கை சார்ந்து மட்டுமே இருந்த மதம், நவீன அரசியலின் முடிவெடுக்கும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றது? அது நவீன அரசியலில் காலடி எடுத்துவைக்க அடிப்படை எங்கு உருவானது? மன்னர்களும் படைகளும் மட்டுமே கோலோச்சிய அரசியலில் மக்கள் பங்கெடுத்தது எப்போது? இவைகளை கொஞ்சமேனும் தொடர்பு படுத்தாமல் இன்றைய அரசியலின் மதவாத நடவடிக்கையை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாது.

ஒற்றுமையை குலைக்க பயன் படுத்தப்பட்ட மதம்:

1857ம் ஆண்டு நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் விடுதலைப் போராட்டம் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மதம் கடந்து நடத்திய தீரம் மிகுந்த போராட்டம் ஆகும். பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக இந்திய சமூகத்தில் முதல் மாபெரும் ஒன்றினைவாக இது திகழந்தது. இந்தியாவை தொடர்ந்து ஆள வேண்டுமெனின் இந்த ஒற்றுமைமை சீர்குலைக்காமல் முடியாது என்பதையும் ஆங்கிலேயர்கள் புரிந்துக்கொண்டனர். அந்த போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த பிறகுதான் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து நேரடியாக ஆட்சியதிகாரத்தை ஆங்கிலேய அரசாங்கம் பெற்றுக்கொண்டது. 

அதன் பிறகு பல ஆண்டுகள் கழிந்து ஆயுதங்களற்ற அரசியல் போராட்டங்கள் துவங்கின. அரசியல் இயக்கங்கள் தோன்றின. முதல் விடுதலைப் போருக்கு 26 ஆண்டுகள் கடந்து 1885ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோன்றிய பின்னணி ஆங்கிலேய அரசாங்கத்திடம் இந்திய உயர் வர்க்கத்திற்கு சலுகைகள் பெறுவதாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு வெகுஜனங்களை ஈர்க்கும் சக்தியாக மாற்றம் கொண்டது. அதுவும் காந்தி அவர்கள் தலைமையேற்றதும் அதன் வீரியம் அதிகமானது. இதே நேரத்தில்தான் நவீன அரசியல் சகாப்தம் இந்தியாவில் ஏற்பட்டது. தொழிற்சாலைகளும், ஒரு ஆலையின் கீழ் திரண்ட தொழிலாளர் திரளோடும், பரவலாக படித்த முதல் தலைமுறையோடு எழுந்தது.

இதற்கிடையில் நாடெங்கிலும் பரவிக்கொண்டிருந்த தேசிய விழிப்புணர்வும், ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டத்தையும் அடக்குவதற்காகா அனைத்து வழிகளையும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்த துவங்கினர். அதில் முக்கியமானது மதரீதியாக மக்களை பிரித்தாள்வது ஆகும். இதன் ஒரு பகுதியாக கேர்சன் பிரபு வங்காளத்தை பிரிக்க முயன்றது ஆகும். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையில் பகைமையை உருவாக்க இது பயன்பட்டது. தேசிய இயக்கத்தின் தலைமையில் இரு மத்தத்தை சார்ந்த மக்களும் போராடியதால் அந்த ஒற்றுமைக்கு வெற்றி கிடைத்தது.

இந்த தோல்வி ஆங்கிலேயர்கலை இரு பக்கம் உள்ள மதவாத அமைப்புகளுக்கும் தூபம் போட்டு வளர்க்க தேவையை உருவாக்கியது. ஒத்துழையாமை இயக்கமும், காங்கிரஸ் மற்றும் கிலாபத் இயக்கங்களும் சேர்ந்து வளர்த்து வந்த ஒற்றுமையும் ஆவேசமும் சௌரி சௌரா சம்வத்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டதால் தேக்க நிலையை அடைந்தது. இந்த நிலையை பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் இந்துமதவெறியர்களை தூபம் போட்டு வளர்த்தனர். பல்வேறு இடங்களில் வகுப்பு மோதல்கள் வெடித்தது.

இந்து முஸ்லீம் ஒற்றுமை, அகிம்சை, தீண்டமை ஒழிப்பு போன்ற முழுக்கங்கங்கள் வகுப்பு கலவரங்கள் மூலம் பின்னுக்கு தள்ள முயற்சிக்கப்பட்டது. இது ஒரு புறம் எனில் மற்றொரு பக்கம் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளில் வாய்ப்பு பெருவதற்காக வகுப்புவாத தீ பற்றவைக்கப்பட்டது, 

விடுதலை முழக்கத்துடன் இணைக்கப்பட்ட மதம்:

மதம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையப்பகுதிக்கு வர ஒரு முக்கிய காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை பீடத்தில் அமர்ந்திருந்த பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய் ஆகியோர் முக்கிய காரணமாய் இருந்தனர். பார்ப்பன சிந்தனைகளையும், பிற்போக்குதனங்களையும் இவர்கள் முழுமையாக உளபூர்வமாக நம்பினர். மேற்கண்ட மூவரும் ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகியவற்றுடன் கொண்டிருந்த நெருக்கத்தின் காரணமாகவும், தங்களுக்கே உரித்தானதொரு தினி சமூக கண்ணோட்டத்தின் காரணமாகவும் மற்றவர்களால் கூர்ந்து கவனிக்கத்தக்கவர்களாக இருந்தனர். 

காங்கிரசிலும் இந்துமகாசபையிலும் ஒரே நேரத்தில் அங்கம் வகித்து செயல்பட லாலா லஜ்பத் ராய்க்கு தடையேதும் இருந்ததில்லை. சிவாஜி பூஜைகளையும், வினாயகர் விழாக்களையும் விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக சித்தரித்து காட்டுவதில் திலகருக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை. ஆனால் 1920களுக்கு பின் காங்கிரசில் பிறந்த காந்தி யுகம் இந்த பாதைகளுக்கு நேர் எதிர் நிலைபாட்டை எடுத்தது. 1932 ஜூலை 13 தேதி  ""யங் இந்தியா""வில் காந்தி ''அரசியலில் திலகரின் கொள்கையைவிட கோகலே அவர்களின் கொள்கையைதான் நான் பெரிதும் ஆதரிப்பேன்"" என எழுதிய பின்னணியில் இதை புரிந்துக்கொள்ளலாம்.

மைய அரங்கிற்கு வர முயன்ற மதவாதம்:

இந்தியாவில் காங்கிரஸ்காரர்கள் - கம்யூனிஸ்டுகள் - சோசலிஸ்டுகள் - முஸ்லீம் லீக் அமைப்பினர் - பல்வேறு புரட்சிகர குழுக்கள் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து தீரத்துடன் போராடிக்கொண்டிருந்த போது இந்து மாகா சபையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் தன்னை ஒரு காலாச்சார அமைப்பு என்ற போர்வைக்குள் ஒளித்துக்கொண்டு ஒரு அகண்ட பாரதத்தை அமைக்கும் கனவில் இருந்தது. நானாஜி தேஷ்முக் வெளிபடையாகவே கூறினார் ""தங்களுக்கு அரசியல் ரீதியான கடைமைகளும் இல்லை, இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கின்ற இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான கலாச்சார கடமைகள் மட்டுமே இருக்கிறது""

ஆனால் அவர்களின் நோக்கம் வகுப்புக் கலவரங்கள் மூலம் இந்த நாட்டை ஒரு மதவாத நாடாக மாற்றுறுவதாகவே இருந்தது. ஆர்.எஸ்.எஸ் துவங்கிய இரண்டாம் ஆண்டில் (1927) நாக்பூரில் நடந்த முதல் ஷாகா முடிந்த இரண்டாம் வாரத்தில் நன்கு திட்டமிடப்பட்ட வன்முறை கலவரத்தை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக துவக்கியது. அதன் தொடர்ச்சி விடுதலைக்கு பின்னரும் தொடர்ந்தது. ஜபல்பூர், ராஞ்சி, அலிகர், பீவாண்டி, அகமதாபாத், ஹைதராபாத், பகல்பூர், பதௌன், மீரட், கரீம்கஞ்ச், சயிஸ்ப, நாசிக், பம்பாய், கன்னியாகுமரி, கோவை, தலைச்சேரி என தொடர்கிறது.

1970ல் பிவாண்டி, ஜல்கோன், மகத் ஆகிய இடங்களில் நடந்த வகுப்பு கலவரங்கள் குறித்து விசாரித்த மதன் கமிஷன் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது. ""வகுப்பு மோதல்கள் திடீரென எதிர்பாராமல் தோன்றுபவை அல்ல. ஒரு குறிபிட்ட கால திட்டமிட்ட செயல்களின் மூலமே அவை வெடிக்கின்றன. வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் பிரச்சாரங்கள், வகுப்புவாத சாயம் பூசப்படும் சின்னஞ்சிறு மோதல்கள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கதைகளையும், அவதூறுகளையும் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தல். இவற்றின் மூலமாக மனித மனங்களில் மாச்சர்யங்களையும், பகைமையையும் விதைத்து அவர்களின் சிந்தனைப் போக்கை வன்செயல்களில் ஈடுபடத் தூண்டுவது இவைதான் கலவரங்களுக்கான செயல் திட்டம்""

இதர சமூதாயங்களின் ஆச்சாரங்களை நையாண்டி செய்தல், குறிப்பக முஸ்லீம்களை தேச துரோகிகள் - பாக்கிஸ்தான் ஏஜெண்டுகள் என பிரச்சாரம் செய்தல், ஓட்டு பெருவதற்காக முஸ்லீம்களை இங்குள்ள அரசியல் கட்சிகள் ஆதரிப்பதாக பிரச்சரம் செய்தல், இந்துக்களின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் முஸ்லீம்கள் தட்டிப்பரிப்பதாக கூறுதல், பிரிவினையின் போது முஸ்லீம்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் கொடூரமான கற்பனை கதைகள், கடந்த கால முஸ்லீம் மன்னர்கள் கோவில்களை தகர்த்தார்கள் என தொடர்ந்து பிரச்சாரம் செய்தல் என சாதாரன மத நம்பிக்கை கொண்ட மக்களிடம் அவர்கள் செய்கின்ற பிரச்சாரம் சமூகத்தில் ஒருவிதமான ஆதரவை அவர்கள் பெற தளம் அமைக்கிறது.    

வினைக்கு எதிர்வினையாக:

இந்து மதவாதிகளில் இந்த திரட்டளுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் தங்களை ஒன்றினைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டன 1906 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட முஸ்லீம் லீக் விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றியது. ஆனால் 1925 ஆண்டுக்கு பின்னால் அதன் தலைவர்களில் ஒருசிலர் சிந்தனை மாறத்துவங்கியது. காரணம் 1925ல் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்துஸ்தான் என்ற கோஷத்தை முன்வைத்து வகுப்புவாத திரட்டலை மேற்கொள்ளத் துவங்கியதும் அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் என்ற கோஷம் உருவாக துவங்கியது. 

பெரும்பான்மை இந்துக்கள் கொண்ட நாட்டில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இருக்காது என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவது நடந்த வகுப்புக் கலவரங்கள் இந்த அச்ச உண்ர்வை மேலும் வலுவூட்டியது. இதைதான் ஆங்கில ஆட்சியாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இஸ்லாமியர்களுக்கான தனி தேசத்தின் தேவை வலியுறுத்தப்பட்டதை அவர்கள் மறைமுகமாக ஆதரித்தனர். ஏற்கனவே அவர்கள் 1.89 லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட, 8 கோடி மக்கள் வசித்து வந்த வங்காத்தை 1905ம் ஆண்டு மத அடிப்படையில் பிரித்தத்ற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பு அடங்கவேண்டுமாயின் இஸ்லமியர்கள் தனிநாடு கோரிக்கை அவர்களுக்கு அவசியமானதாக இருந்தது.

ஆனால் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து அரசியல் ரீதியாக ஒற்றுமையாக தொடர்ந்து போராடியதன் விளைவாக 1911ம் ஆண்டு கிழக்கு வங்கமும் மேற்கு வங்கமும் ஒரே வங்கமாக மீண்டும் இணைந்தன. இந்த ஆங்கிலேயர்களின் தோல்வி அவர்களுக்கு தீரா வடுவாக இருந்தது. எனவே ஒரு பிருமாண்டமான நிலப்பரப்பும், மக்கள் தொகையும் கொண்ட நாட்டை அப்படியே வைத்திருத்தல் நலமல்ல என உண்ர்ந்தனர். அதற்கு இந்திய நாட்டின் ஒற்றுமையான இயல்பை உடைக்க மதத்தை பயன்படுத்தினர்.

இரு மத அடிப்படைவாத சக்திகளும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உதவிகொண்டன, இரு அடிப்படைவாத அமைப்புகளையும் ஆங்கிலேய அரசாங்கம் தூபம் போட்டு வளர்த்தது. அதன் விளைவுகளை தேசம் அறுவடை செய்து 68 ஆண்டுகள் ஆகின்றது. பாக்கிஸ்தான் போல இந்துஸ்தான் படைக்கத்துடிக்கும் அமைப்புகள் மெல்ல மெல்ல தேசமெங்கும் பரவி வருகிறது. அந்த கொள்கையை கொண்ட ஒரு அமைப்பில் நச்சு பாம்பு ஆட்சியதிகாரத்தை கைபற்ற முடிந்திருக்கிறது.

மதம் அதன் இயல்பில் இல்லாதபோது:

இப்போது பிரச்சினை மதம் அல்ல. மதவாதம்தான். காந்தியை விட சிறந்த இந்து மதபற்றாளர் யாரும் இல்லை. ஆனால் அவர் மதத்தை தனக்கான தனிபட்ட பண்பாக வைத்திருந்தார். அதனால்தான் அவரது பிராத்தனை கூட்டங்களில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என முழுங்க முடிந்தது. அவரது பிராத்தனைகளில் இந்து - இஸ்லாம்- கிருத்துவ மத வாசகங்களை சொல்ல முடிந்தது. ஆனால் மத அடிப்படைவாதம் பிற மதங்களின் மீது துவேஷ்த்தையே அடிப்படையாக கொண்டு இயங்குவது. அதனால்தான் மாற்று மதத்தவர் மீது அவர்களால் அன்பு பாராட்ட முடியவில்லை. கொடூர கொலைகளையும், அரக்கத்தனமான தாக்குதலைகளையும் நடத்த முடிகிறது.

இந்திய விடுதலைப் போரட்டத்தின் தலைமை பொறுப்பில் இருந்த இந்திய முதலாளிகளுக்கு நீண்டகாலம் காங்கிரஸ் பேரியக்கம் தங்களின் வளங்களை பெருக்க சேவை செய்யும் கருவியாக இருந்தது. இந்திய தேசிய முதலாளிகள் இப்போது மாபெரும் சர்வதேச சந்தையில் போட்டியிரும் அளவு பன்னாட்டு பெருமுதாளிகளாக வளர்ச்சி பெற்றுள்ளனர். காங்கிரஸ் மீதான கவர்ச்சி நவீன பொருளாதர கொள்கை அமலாக்கத்தால் உதிரத்துவங்கியதும் அந்த இடத்தில் அதே கொள்கையை அதைவிட அதிகம் நேசிக்கும் ஒரு கட்சியை அமர வைத்துள்ளனர். ஆனால் இப்போது நடந்திருப்பது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல.

இந்திய அரசியல் கட்டமைப்பை, மக்களின் வாழ்க்கை, மதசார்பற்ற பண்புகளை, மதத்தின் பெயரால் சிதைத்து போடும் ஒரு தத்துவ மாற்றம். இந்து மதவாத அமைப்புகளின், சித்பவன பார்பனர்களின் கனவான இந்து ராஸ்டிரம் அமைப்பதற்கான முயற்சி. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் சேவகனான மோடியின் ஆட்சியில் நாள் ஒன்றுக்கு இரண்டு மதக் கலவரங்கள் நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். சமூக கட்டமைப்பில் மதம் அதன் இயல்பில் இல்லாமல் அரசியல் அரங்கில் நுழைகின்றபோது சமூக இயல்பை நாசப்படுத்தும் என்பதற்கான துவக்கம்தான் இது. இனிதான் அதன் முழு பரிமாணம் இனிதான் சமூகத்தின் பொதுபுத்தியை ஆட்கொள்ள இருக்கிறது.

இந்திய வரலாற்றின் வழிநெடுக மதம் தன் அடையாளத்தை தூவியபடியே வந்துள்ளது. மதம் மதவாதமாக மாறாமல் பாதுகாக்க அதை ஒட்டுமொத்தமாக புரக்கணிக்காமல், அதன் இயல்பை உள்வாங்கி செரிக்கவேண்டி இருக்கிறது, மார்க்ஸ் கூறுவது போல ""ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாக, இதயமற்றவர்களின் இதயமாக, துன்பங்களை மறக்கச் செய்யும் (அபின்) போதைபொருளாக"" வினையாற்றும் போது நாம் இன்னும் ஆழமான விவாதங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. விவாதங்களை துவக்குவோம்!   

-- ஆகஸ்ட் இளைஞர் முழக்கம் இதழில் வெளியான எனது கட்டுரை

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark