மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

விடுதலைப் போரில் பெண்கள் - 9போரில் பின்வாங்கும் முடிவை அவர்கள் யாரும் யோசிக்கக்கூட இல்லை. ஆனால் என்ன செய்வது என்ற குழப்பம் அவர்களிடம் மிச்சம் இருந்தது. அப்போது ராணியின் உடையாள் படைத் தளபதியும், சக்கிலிய சமூகத்தை சார்ந்தவள் என பலரால் ஏளனம் செய்யப்பட்ட குயிலி தயக்கத்துடன் மெல்ல முன் வந்து சொன்னாள் "மகாராணி என்னிடம் ஒரு யோசனை உண்டு சொல்லலாமா?" வீரத்திற்குப் பெயர் போன பெரிய மருது, சின்ன மருது இருந்த சபை அது, வேலுநாச்சியின் அபிமானம் பெற்றிருந்த காரணத்தாலும், எப்படியும் முறுக்கையை உடைக்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததாலும் அவள் துணிச்சலுடன் சொல்லிவிட்டாள். 

நெருக்கடி அப்போது கிடைத்த எந்த ஆலோசனையையும் இழக்க விரும்பவில்லை. எல்லோரும் அவளையே பார்த்தனர். புன்னகையுடன் வேலுநாச்சி குயிலியின் ஆலோசனை என்னவென்று கேட்டார். "நாளை விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலில் பெண்கள் மட்டும் வழிபாட்டிற்காக அழைக்கப்படுவர். இதை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது?

"மகாரணி, ஆங்கிலேயர்கள் நம்மைவிட நவீன ஆயுதங்களை வைத்திருப்பதுதான் அவர்களது பலம், அந்த பலம்தான் நமது பலவீனமாகவும் இருக்கிறது. எனவே அவர்களது ஆயுத கிடங்கை நாம் எப்படியேனும் அழித்துவிட்டால் நாளை வெற்றி நம் வசப்படும்" என்றாள். அவளது ஆலோசனையை அந்த சபை உற்சாகத்துடன் வரவேற்றது. எல்லோர் முகத்திலும் பரவசம். மிகவும் அற்புதமான ஆலோசனைதான், வெற்றி கண்களில் பனிக்க அனைவரும் ஆமோதித்தனர். ஆனால் எப்படி செய்வது? யார் செய்வது? எப்போது செய்வது? என்ற கேள்விகள் அலைமோதியது அந்த ஆலோசனைகூடத்தில்.

தீரம் மிகுந்த வீராங்கனையான குயிலிக்கு எந்த குழப்பமும் இல்லை. அந்த பணியை மிகவும் பெருமையுடன் ஏற்றுக்கொண்டாள். இவள் செய்வாளா? எப்படி செய்வாள்? எப்போது செய்வாள்? என்ற குழப்பம் நிலவிய நேரத்தில் வேலுநாச்சி அவளை நம்பி அந்த மகத்தான பணியை ஒப்படைத்தாள். 

குயிலியின் தலைமையிலான பெண்கள் படையோடு வேலு நாச்சியாரும் மறுநாள் இராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார். ஆயிரக்கணக்கான உடையாள் பெண்கள் படையினர் கைகளில் ஆயுதங்களோடும், உள்ளத்தில் உறுதியோடும் வேலுநாச்சியாருடன் கோவில் புகுந்தனர். கடுமையான போர் மூண்டது. அரண்மனைக்கு வெளியிலிருந்து மருது சகோதரர்கள் தாக்குதலைத் தொடங்க உள்ளிருந்து வேலுநாச்சியாரும் குயிலியும் தாக்குதல் தொடுக்க ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் நிலைகுலைந்து நின்றான். ஆனால் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்களுக்கு முன்பு வேலுநாச்சியாரின் படை தாக்குப் பிடிக்க முடியவில்லை. இழப்பு அதிகமானது. நாச்சியாரின் வீரர்கள் எண்ணிக்கை குறைய அரண்மனையின் ஆயுதக் கிட்டங்கியிலிருந்து மேலும் மேலும் ஆயுதங்கள் ஆங்கிலப் படைகளுக்குச் சென்றதுதான் காரணம்.

தோல்வியின் அருகில் சுதேசப்படை, என்ன செய்வதென சிந்திக்கக் கூட முடியாத சூழலில் அந்த சம்பவம் நிகழந்தது. ஓர் உருவம் தன் உடலில் நிறைய சேலைகளை சுற்றிக்கொண்டு எரிநெய்யை தன் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு அரண்மனை ஆயுதக் கிட்டங்கியில் தீப்பிழம்பாய் குதித்தது. நொடிக்கூட தாமதம் இல்லாமல் ஆயுதக் கிட்டங்கி வெடித்துச் சிதறியது. விழுந்த உடலின் சாம்பல்கூட மிஞ்சவில்லை. வேலுநாச்சியாரின் வெற்றிக்கு இந்த ஆயுதக்கிடங்கின் அழிப்பே அடிப்படையானது. பல்லாயிரக்கணக்கானோர் மண்ணில் வீழ்ந்தார்கள். ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் வேலுநாச்சியாரிடம் மன்னிப்புக் கேட்டு புதுக்கோட்டைக்கு ஓடினான்.
வேலுநாச்சியார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வெற்றியின் கொண்டாட்டத்தில் எல்லோரும் இருந்தனர் அந்த ஒருத்தியைத் தவிர. தன் தளபதிகளெல்லாம் நெருங்கிக் கொண்டிருந்தபொழுது குயிலியைத் தேடினார் வேலுநாச்சியார். அவள் அங்கு மட்டுமல்ல இந்த மண்ணிலும் இல்லை. ஆம், அந்த ஆயுதகிடங்கில் குதித்தது, இந்திய வரலாற்றில் முதல் மனித வெடிகுண்டாய் இருந்தது வீரப்புதல்வி குயிலிதான். தனது உதிரம் சுண்டிய உணர்வுடன் அந்த தியாகிக்கு வீரவணக்கம் செய்தார் நாச்சியாள். இந்த மண்ணின் வாசனையை முகர்ந்தால் இப்போதும் அவளது சாம்பல் உங்கள் நாசிகளை தழுவலாம்.

இவள் இப்படியெனில் வீராங்கனை ராணி அவந்திபாய் வேறு ஒரு வீர சரித்திரம். ராம்கட் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங் உடல் நலம் குன்றி, தனது மதிப்புமிக்க மனைவியான  அவந்திபாயை நிர்கதியாக விட்டுவிட்டு இறந்தார். மாடமாளிகையும், கூட கோபுரமும், பணிபுரிய ஆயிரமாயிரம் சேவகர்கள் இருந்தும், அவரது உடல் நலக்குறைவிலிருந்து அவரது உயிரை பாதுகாக்க முடியவில்லை. அவர் ஆட்சியின் போது ஆங்கிலேயர்கள் பலமுறை அவரது நாட்டை தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முயற்சி செய்தனர். பல்வேறு தந்திரங்களையும் கடைப்பிடித்தனர். மிரட்டியும், நயந்து பேசியும் அவரை திசைதிருப்ப முயன்றனர். ஆனால் அவர் எதற்கும் அடிபணிய மறுத்தார்.

காலம் கனியும் நேரம் பார்த்திருந்தனர் ஆங்கிலேயர்கள். மன்னனின் ஆட்சியில் அடுத்து அமர்வதற்கு அவருக்கு பிள்ளை வாரிசு இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். அவர் மரணமடைந்த இந்த நிலையில், ஆங்கிலேய அரசு அவர்களது நாட்டை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வைத்தது. ஆட்சியை முழுமையாக எடுத்துக்கொள்ள திட்டமிட்டது. இதை அவந்திபாய் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படி பிரதேசங்களை கொள்ளையடிக்கும் ஆங்கிலேயர்களின்  கொட்டத்தை அடக்கி ஒரு மாற்றத்தை எற்படுத்த விரும்பினார். தனது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். எதற்கும் துணிந்த, தேசத்தை நேசிக்கும், நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் வருடம், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார் அவந்திபாய்.

மிகவும் தைரியமாகப் போர் புரிந்தும், தீரத்துடன் எதிர்த்து நின்றும் கூட ஆங்கிலேயர்களின் பெரும் படைக்கு முன் அவந்திபாயால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியைத் தெரிந்து கொண்ட ராணி அவந்திபாய், 1858 ஆம் வருடம், மார்ச் மாதம் 20 ஆம் தேதி தனது வாளைக் கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். வீரமரணம் இது. தனது நாட்டிற்காக தனது உயிரை போர்களத்தில் முன் வைத்த தியாகம் இது.

இப்படி பதிவு செய்யப்பட்ட வரலாறுகளைவிட பதிவு செய்யப்படாத வரலாறுகளே அதிகம். இன்னும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த காலகட்டத்தில் விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்ததும் அவர்களது வீர காவியமும் பதிவுசெய்யப்பட்டாத வரலாகளாகும்.  இந்த பின்ணனியில் பகதூர்ஷா கைதுடன் முதல் விடுதலை போராட்டம் ஒடுக்கப்பட்டது. இதன் பின்பு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய ஆட்சி நிர்வாகத்தை நேரடியாக ஏற்றுக்கொண்டது.

இந்திய வரலாற்றில் ஒரு மயான அமைதி சூழ்ந்த காலமாய் பின் வந்த சில ஆண்டுகள் கழிந்தன. ஆனால் பெரும் வெடியோசை எதிரில் காத்திருந்தது...

(போர்களம் ஓயாது)  

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark