மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


                       

1930ல் சென்னையில் மறியல் போராட்டத்திற்கு  புறப்படும் பெண்கள் 


எங்கும் நிறைந்துள்ள பெண் போராளிகள் - ஒரு அறிமுகம்               

 1498 மே மாதம் 17 ஆம் நாள். அன்றுதான் பார்த்தலோமிய டயஸ் காட்டியிருந்த வழியைப் பயன்படுத்திக் கொண்டு, நன்னம்பிக்கை முனையைத்தாண்டி, இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரம், கேரளப் பகுதியின், கள்ளிக்கோட்டைக்கு (கோழிக்கோடு)வாஸ்கோடகாமா எனும் போர்த்துக்கீசியர் முதன் முதலில்  வியாபாரப் படையெடுத்து வந்து சேர்ந்த தினம். 1471ல் தனது பயணத்தை துவக்கி 27 வருட கடும் முயற்சிக்குப் பின்னர் இந்தியாவை வந்தடைந்த போர்ச்சிகீசியன் அவர். பின்பு பல நாடுகளை சார்ந்த வெள்ளையர்கள் இங்கு வந்தனர்.

வெள்ளையர்களுக்கு முன்பு இந்தியாவை நோக்கி முகலாயர்கள் வந்தார்கள். தங்கள் ஆட்சியை நிறுவினர். ஆனால் அவர்கள் இங்கேயே நிறந்தரமாய் தங்கினர், தங்கள் தலைமுறையை இங்கே நிறுவினர். அவர்களது பரம்பரையினர் இந்திய மக்களாகவே வாழ்கின்றனர். இதுதான் அவர்களது தாய்நாடானது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக இன்னுயிர் இழந்த இஸ்லாமியர்கள் ஆயிரமாயிரமாய் இருக்கின்றனர். ஆனால் நமது வரலாறு ஏதோ இஸ்லாமியர்கள் மட்டுமே படையெடுத்து வந்ததாக நமக்கு போதிக்கிறது. இந்திய வரலாற்றில் எழுதப்பட்ட வரலாற்றுச் சோகம் இது.                

வரலாறு எப்போதும் வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவதாகவே இருக்கிறது. இந்தியாவின் வராலாற்றையும், விடுதலைப் போராட்ட பதிவு களையும் எழுதியவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலேயர்களே!  அதனால்தான் 1857 ஆம் ஆண்டு நடந்த மகத்தான ஒருங்கி னைக்கப்பட்ட மாபெரும் விடுதலைப் போராட்டத்தை சிப்பாய் கலகம் என அவர்களால் மலினமாக எழுதமுடிந்தது. உழுபடை நிலங்கள் உழுபவனுக்கே சொந்தம் என்ற அந்த போராட்டத்தின் அச்சாணியான கோரிக்கையை மறைக்க முடிந்தது. 1946 ஆம் ஆண்டு நடந்த தொழிலாளர்களின் ஆதரவு நிறைந்த, வீர காவியமான கப்பற்படை எழுச்சியை ஏதோ சம்பள கோரிக்கை போராட்டம் போல குறுக்க முடிந்தது. ஆனால் இந்திய விடுதலைப் போராட்டம் என்பது பலநூறு ஆண்டுகள் நடந்தது. 

கத்தியின்றி இரத்தமின்றி நடந்த யுத்தமல்ல, மென்மையாய் மயிலிறகால் வருடிக்கொடுத்து பெறப்பட்டதல்ல. இலட்சக்கணக்கான ஆண், பெண்களின் உயிர்களை விலையாய் பெற்றது, பல்வேறு வடிவங்களில் பல தன்மைகளில் மக்கள் திரட்டப்பட்ட ஒரு மகா சம்பவம் அது. அகிம்சை போராட்டங்கள், ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் என இரு வழிகளும் விடுதலை பாதையை நோக்கி நடைப்போட்டது. தேசவிடுதலையே முதன்மையாய் இருந்தது. ஆனால் வெறும் விடுதலை முழக்கம் மட்டும் அப்போது எழவில்லை. அந்த காலகட்டத்தில் விடுதலை போராட்டத்தின் இணை கோடுகளாக, விடுதலைக்கு பின்பு இந்த நாடு சந்திக்கும் சவால்களை சமாளிக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.                

அகிம்சை போராட்டங்கள், ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் இவற்றுடன் சமூக சீர்திருத்த  போராட்டங்கள், தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள், நிலம் சார்ந்த போராட்டங்கள், தொழிலாளர்கள் பிரச்னை சார்ந்த போராட்டங்களும் இணைந்தே நடந்தது. இத்தகைய போராட்டங்களில் எல்லாம் ஆண்களும் பெண்களும் இணைந்தே வீரம் மிக்க தேசம் காக்கும் போராட்ட களத்தில் நின்றனர். விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து நமக்கு கிடைக்கும் குறிப்புகள் மிகவும் குறைவானதாகும் . பதிவு செய்யப்படாமல் விடப்பட்ட அல்லது மறைக்கபட்டவைகள்தான் மிக அதிகமாக இருக்கும். கிடைக்கும் தரவுகள் நம்மை உற்சாகம் அடைய செய்கிறது. உத்வேகம் கொள்ளச்செய்கிறது. அன்றைய சமூகத்தில் பெண்க ளின் நிலை, அவர்கள் வாழ்க்கை சுழல், அவர்களின் கல்வி விகிதம், மூட நம்பிக்கை, மதம், சாதி சார்ந்த கருத்துக்கள் போன்ற ஒட்டுமொத்த சமூக சூழலையும் கணக்கில் கொண்டு பார்த்தால்தான் அவர்களின் வரலாற்று பணியை கணக்கிட முடியும். அவர்களின் தேசபக்த உணர்வை புரிந்துகொள்ள முடியும்.                

அக்காலத்தில் விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித் துக்கொண்ட  ஹெலனாதத் என்ற வங்க போரளி 1975 ல் கொடுத்த பத்திரிக்கை பேட்டியில் "நாங்கள் கூட்டில் அடைக்கப்பட்ட புலிகளாக இருந்தோம், எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்த போது அதை நாங்கள் பயன்படுத்தினோம்." மிகவும் ஆச்சாரமான குடும்பப் பெண்களிடம் "வீடு பற்றி எரிகிறது, வெளியே வந்து தடுத்திட உதவுங்கள்" என பிரச்சாரம் செய்யப்பட்டது. அவர்களை அந்த கோஷம் கவ்விப்பிடித்தது. வீதியில் இறக்கியது.                

1930ல் விடுதலைப் போரில் பங்கெடுத்த போராளிகளை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அப்படி கைதுசெய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப் பட்டவர் மன்மோகினி சுஸ்தி சேகல் என்பவர். அவர் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதான தகவல் அவரது கனவனுக்கு தெரியாது. பின்பு அவரது கனவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனது மனைவி தேசத்திற்க்காக சிறை சென்றது எனக்கு மிகவும் மகிழ்சியான செய்திதான் ஆனால் வீட்டில் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம் என்றார்.                

தென்னாப்ரிக்காவிலிருந்து 1919 ஆம் ஆண்டு வாக்கில்தான் காந்தி இந்தியா வருகிறார். அவரது வருகை இங்கிருந்த போராட்டக்காரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. இந்தியா வந்த காந்தி பெண்களை தலைமையேற்க அழைத்தார் "சுத்தமான உறுதியும், சுயக்கட்டுப்பாடும் உடையவர்கள் பெண்கள்" என்றார். தேசியம் என்ற சொல் கல்விப் பிரச்சனைகள், சமுதாய மாற்றம், பெண்கள் உரிமைகள், தீண்டாமை போன்ற பிரச்சனை களையெல்லாம் தாண்டி ஆங்கிலேயரை விரட்டுவதில் ஒன்றினைத்தது. விடுதலைப் போராட்டம் நடந்த அதே காலகட்டத்தில்தான் உழைப்பாளி மக்கள் தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு கடுமையான போராட்டம் நடத்தினர். தெலுங்கானா பகுதியில் கம்யூனிஸ்டுகள் தலைமையில் 10 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 30 லட்சம் மக்களுக்கு பகிர்ந்தளிக் கப்பட்டது. இந்த போராட்டத்தில் பெண்கள் தீரத்துடன் போராடினர். புன்னபுரா வயலார், வார்லி, தோபாக போன்ற போராட்டங்களிலும் பெண்கள் வீரமுடன் நின்றனர், போராடினர், தலைமையேற்றனர். தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களிலும், சமூக சீர்த்திருத்த இயக்கங்களிலும் முன் நின்ற ஆயிரக் கணக்கான பெண்கள் குறித்து எந்தப் பதிவும் இல்லை என்பதுதான் சோகம்.                

1857 க்கு முன்னும் பின்னும் போர்களத்தில் நின்றவர்கள்:
வீரமங்கை சிவகங்கை இராணி வேலு நாச்சியார் துவங்கி தன்னையே வெடிகுண்டாக மாற்றிக்கொண்ட தியாகத்தின் உருவான அவரது பணிப்பெண் குயிலி, கிட்டூர் ராணி சென்னம்மா, வேங்கையாய் மாறிய ஜான்சி ராணி லட்சுமிபாய், அயோத்தியின் தியாக சின்னமான பேகம் ஹசரத் மஹல், விசுவாசத்தின் மறுவடிவமான அதனாலேயே வெள்ளையர்களாலும் போற்றப்பட்ட ஜல்காரி பாய், நான்காயிரம் படை வீரர்களை திரட்டி ஆங்கிலேயர்களை பந்தாடிய ராம்காட் ராணி அவந்திபாய் போன்றோர் சிலரே வரலாற்றுப் பக்கங்களில் கிடைக்கின்றனர்.                

1900 க்கு பிறகு போர்க்களத்தில் நின்றவர்கள்: 
1907 அதாவது ஹோம்ரூல் (சுயாட்சி) இயக்கம் அதாவது பூரண சுதந்திரம் என்ற
முழக்கத்தை முதன்முதலில் அன்னிபெஸன்டஅம்மையார்தான் முழங்கினார். ஆங்கிலேய வியாபாரிகளை அச்சமுறச் செய்யும் அளவு கதர் விற்பனையில் சி.ஆர்.தாஸின் மனைவி பசந்தி தேவி தங்கை ஊர்மிளா மற்றும் அக்கா மகள் செல்வி சுனிதி தேவி  ஆகியோர் சாதனை படைத்தனர். ஊர்மிளா, இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சிராணி படைபிரிவின் கேப்டன் லட்சுமி, துணை கேப்டன் ஜானகி ஆதி நாகப்பன், கவிக்குயில் சரோஜினி நாயுடு, ருக்மிணி லட்சுமிபதி, மகாத்மா என்ற பிம்பத்தை தன் வாழ்க்கையால் இட்டு நிறப்பிய கஸ்தூரிபாய்காந்தி. விஜயலட்சுமி பண்டிட், சுசேதாகிருபளானி, மீராபென், ஸலைஹா பேகம், பீனா தாஸ், கல்யாணி, சுமார மித்ரா, கமலா தாஸ், கல்பனாதத், துர்காதேவி போன்றோர் நமது வரலாற்று உதாரணங்கள்.                

தமிழக மண்ணில்.. தனது மருத்துவ படிப்பை உதறி தள்ளி போர்களத்தில் குதித்த சிவகாமு அம்மா, கள்ளுக்கடை மறியலால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த  நாகம்மாள் மற்றும் கண்ணம்மாள், கதர் விற்பனையை அதிகப்படுத்த வேண்டுமென அதையே ஒரு ஆயுதமாய் மாற்றிட  "சகோதரிகள் சங்கத்தை" துவக்கிய பத்மாசனி அம்மாள், தாயம்மாள், திருமதி. ஜோஸப், திருமதி. சுந்தரமையங்கார், சுப்புலட்சுமி அம்மாள், டி.வி.எஸ். சௌந்தரம், தாயாரம்மாள், சீதையம்மாள், முனியம்மாள், டாக்டர் பிச்சைமுத்து அம்மாள் ஆகியோர் இதில் கிடைத்த வருவாயை விடுதலை போராட்டத்திற்கு அர்பணித்தனர்.                

1927 ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள கர்னல் நீலின் சிலையை அகற்றுவதற்காகத் தொடங்கப்பட்ட சத்தியாகிரகத்தில் பங்கெடுத்த சேலம் அங்கச்சி அம்மாள், இதற்காக கடலூரிலிருந்து தனது 12 வயது மகள் அம்மாகண்ணுவுடன் வந்த அஞ்சலையம்மாள். 1927-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையில், சைமன் குழுவை எதிர்க்கும் பணிக்காக உருவான பெண்கள் அடங்கிய குழுவில் தலைமைதாங்கிய யாமினி பூர்ண திலகம்மா, திருமதி. மாசிலாமணி, திருமதி. ருக்மணி லட்சுமிபதி ஆகியோரும், அந்நிய துணிக்கடை முன்பு மறியல் செய்த எஸ்.அம்புஜம்மாள், பத்து நாட்கள் தொடர் மறியல் செய்த ஞானம்மாள போன்றோரும் வராற்றின் அடையாளங்கள்.                

மறியல் களம்கண்ட பி.லீலாவதி, லலிதா பிரபு, பத்மாவதி அம்மா ஆகியோர் யாவருக்கும் தேசபக்தி கனலை மூட்டினர். தங்களது கம்பீரமான குரல் வளத்தால் தேசபக்திப் பாடல்களை பாடிய  கோதை நாயகி, கே.பி.சுந்தராம்பாள், டிகே.பட்டம்மாளும், எஸ்ஆர்.ரமாமணிபாய் ஆகியோரும், காந்திபுராணம் மற்றும் திலகர் புராணம் எழுதிய பண்டிதை அசலாம்பிகை அம்மையாரும். ஆண்களே பெண்கள் வேடமிட்ட காலத்தில் துணிச்சலுடன் மேடையேறிய கே.பி.சானகிஅம்மாள், உலகப்போருக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால் கைது செய்யப்பட்ட பட்டியலில் இருந்த  சொர்ணம்மாள், செல்லம்மாள், அகிலாண்டத்தம்மாள், லட்சுமிபாரதி, திருமதி.சௌந்தரம் ராமசந்திரன், திருமதி.கிருஷ்ணசாமி, திருமதி.ராமசாமி, சமீந்தாரினி இராதாபாய், சி.ஆர். சாரதாம்பாள் அம்மாள், பியாரி பீபி, ரஸ்வதி பாண்டுரங்கம், சொர்னம்மாள், லட்சுமி பாய், எம்.ஆர்.கமலவேணி, கோவிந்தம்மாள் ஆகியோர் ஒற்றை வார்த்தையில் வெறும் பட்டியலில் மட்டுமே நமது வரலாற்று  பக்கங்களில் கடந்து செல்கின்றனர்.

இவர்கள் குறித்து பேச ஆயிரம் கதைகள் இருக்கிறது. இது சொல்ல துடிக்கும்
வீரம் நிறைந்த கதை, பகை வெல்ல போர்களத்தில் பலர் உதிரம் சொரிந்த கதை. இந்தியாவின் வரலாற்றை உருவாக்கிய ஆயிரக்கணக்கான பெண்களின்  நினைவுகளை அடைகாக்காத சமூகமாய் நமது இந்திய சமூகம் மாறியது எப்படி? இயல்பாக நடந்ததா அல்லது அறியாமல் நடந்ததா? அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்டதா என்பதை ஆராய்வதில்தான் இருக்கிறது நாளைய மாற்றத்திற்கான விதை.

-----------மகளிர் சிந்தனை -- ஆகஸ்ட் இதழில் வெளிவந்தது-----

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark