மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!



----------------------------------------------------------------------
திருமண மண்டபங்களிலும்
உணவு விடுதிகளிலும்
சாலையோர கடைகளிலும் 
வேகிற பருப்பு வீடுகளில் மட்டும்
ஆண்களுக்கு வேவதே இல்லை..
பருப்பு என்பது உணவுப் பொருளே என்றறிக.

பொதுவெளியில் உலாவும்
அணைத்துப் பெண்களுமே
தன்னிடம் சிரித்துப்பழக
அலைகிற மனது தன்வீட்டுப் பெண்கள்
அடுத்தவனுடன் பேச பொறுப்பதில்லை..
பொறுப்புக்கும் பருப்புக்கும் சம்மந்தமில்லை அறிக.

ஆணாய் பிறந்தெழுந்து
திமிராக வளர்ந்திருந்து
மனிதம் மறந்து வாழங்கால்
ஆணாய் யோசிக்கும் மூளை விடுத்து
சமமாய் பார்க்கும் மனம் வந்தால்..
சமையல் குறித்து விவாதிக்க முடிமென்றறிக.
------------------------------------------------------------------------

1820ல் இங்கிலாந்தில் தையல் பணி செய்யும் பெண் தொழிலாளர்கள் தங்களின் கூலி உயர்வுக்காகவும், ஆண்களைவிட அதிக நேரம் வேலை வாங்கப்படுவதை எதிர்த்தும், அளவில்லாமல் செய்து வந்த வேலை நேரக் குறைப்பிற்காகவும், முதலாளிகளால் அவமானப் படுத்தப்படுவதற்கு எதிராகவும் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்தனர். காவல்துறையின் தாக்குதலுக்கும் அஞ்சாது தீரமுடன் போராடினர். இவர்களின் போராட்டம்  பல ஆலைகளுக்கும் பரவியது. அங்கெல்லாம் அடக்குமுறையும் தொடர்ந்தது.

1900 மாவது ஆண்டில் பெண்கள் ஆடைப் பணியாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1903ல் சர்வதேச பெண்கள் தொழிற்சங்கமும் உருவானது. இந்தக் காலத்தில் 20 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற மாபெரும் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமும் வழக்கம்போல அரசாங்கத்தின் காட்டுமிராண்டிதனமான அடக்குமுறையால் நசுக்கப்பட்டது. 1908ல் பஞ்சாலையில் வேலைசெய்த பெண் தொழிலாளர்களின் எழுச்சி பற்றி எழுந்தது.

1901ல் கோபன்கேஹன் நகரில் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர் பிரதிநிதிகள் கூட்டத்தில் தொழிலாளர் போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பை போற்றும் வகையில் ஜெர்மன் தலைவர் கிளாரா ஜெட்கின் மார்ச் 8 ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முன்மொழிந்தார். ரஷ்யாவில் கொடுங்கோலன் ஜாரின் ஆட்சியை வீழ்த்திய பிறகு 1917 மார்ச் 8ல் வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச பெண்கள் தினம் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடைபெற்றது. முதலாளிகள் கூட்டத்தின் தலைவன் கெரன்ஸ்கி என்பவனின் தற்காலிக ஆட்சி நடைபெற்ற ரஷ்யாவில் ரொட்டிக்காகவும் அமைதிக்காகவும் என்று ரஷ்யாவில் பெண்கள் மார்ச் 8 முதல் 5 தினங்கள் போராட்டம் நடத்தினர்.
1917 நவம்பர் சோஷலிஸப் புரட்சிக்குப் பின்னர் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக புதிய சோவியத் காலண்டர்களில் குறிக்கப்பட்டதுடன், 1921ல் சர்வதேசப் பெண்கள் தினம் அதிகாரப்பூர்வமாகவும் ஆனது. உலகத் தொழிலாளர்களின் மேதினம் போராட்டக் களத்தில் பிறந்தது போலவே சர்வதேச பெண்கள் தினமும் போராட்டக் களத்தில் பிறந்தது.

போராட்ட வரலாறு இப்படியாக மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தை குறித்தாலும் ஏகாதிபத்திய உலகமயம் உருவாக்கிவரும் புதிய பண்பாட்டு அடையாளம் பெண்களை போகப் பொருளாக, லாபம் கொழிக்கும் விளம்பர கருவாக, அழகுப் பதுமைகளாக, எதுவாகினும் ஆண்களுக்கு அடுத்தவர்களாக சித்தரித்தே வருகிறது. லாபம் ஒன்றே தனது உயிர்வாழ்தலின் அடிப்படையாகக் கொண்ட மூலதனம் குறைந்தக் கூலியில் கிடைக்கும் ஆற்றல்  மிக்க படையாக பெண்களை சக்கையாய் பிழிந்து வருகிறது. 

கல்வி, அறிவியல்-தொழில் நுட்பம், மருத்துவம், விளையாட்டு, ஆட்சி நிர்வாகம் போன்ற ஏராளமான துறைகளில் இன்னும் விண்வெளிப் பயணத்திலும் பெண்ணின் ஆற்றல் விளங்கிய போதிலும் பெண் சமத்துவம், பெண்ணுரிமை என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்டே வருகிறது. பெண்ணை இரண்டாம் நிலையில் வைக்கும் சமூகத்தின் மனோபாவம் காலங்காலமாய்த் தொடர்கிறது. பெண்ணுக்கு எதிரான கேலிவதை, பாலியல் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை, சம உழைப்பில் பெண்ணுக்கு குறைவான கூலியே கொடுக்கும் பாரபட்சம், ஆதிவாசிப் பெண்கள், தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் என்றால் மேலும் கூடுதலான கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய நிலையே தொடர்கிறது.

தேசத்தில் இருக்கிற ஜனநாயகம் என்பது சம உரிமை கொடுக்கும் குடும்ப ஜனநாயகமாய் மலர வேண்டும். அப்போதுதான் சர்வதேச பெண்கள் தினம் மனிதகுலத்தில் மகத்தான தினமாய் மலரும்.  

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark