மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


மார்ச் 5 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம். 


கட்சியில் அறிக்கையும் அறைகூவலும் இதோ:-

இலங்கையில் ராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவத்தினரின் தாக்குதலால் இலங்கைத் தமிழர்களுக்கு கடுமையான பாதிப்புகளும் சொல்லெண்ணா துயரங்களும் ஏற்பட்டன. ராணுவத்தினரின் பரவலான குண்டுவீச்சினால் இலங்கையில் அப்பாவித் தமிழ்மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர்
. மருத்துவமனைகள்கூட ராணுவத்தினரின் வான்வழித்தாக்குதலில் தப்பவில்லை. செஞ்சிலுவைச் சங்கம் போன்ற மனிதநேய அமைப்புகள் காய மடைந்தவர்களுக்கு உதவி செய்ய முனைந்தபோது தடுக்கப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சித்தவர்கள் தாக்கப்பட்டார்கள்.உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே, அந்த நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, தமிழ்மக்களும் என் தேசத்து மக்கள்தான், அவர்களுடைய தேவை என்ன என்பதை நான் அறிவேன் என்றார். ஆனால் அவருடைய வார்த்தைகளுக்கு அவரே விசுவாசமாக இல்லை என்பதையே கடந்த மூன்றாண்டுகால அனுபவம் உணர்த்துகிறது.

இலங்கையில் இறுதிக்கட்டப்போர் 2009ம் ஆண்டு மே 19ம்தேதி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்குச் சென்று அரசு விமானத்தில் போர் நடந்த பகுதிகளை பர்வையிட்டார்.  கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பான் கி மூனும் ஒத்துக்கொண்டார். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக அந்நாட்டு அரசுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் 11 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ் மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை ஒரு சாசனமாக எழுதித்தருமாறு அரசு கேட்டுக்கொண்டது. இத்தகைய ஒரு விரிவான கோரிக்கை சாசனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசிடம் அளித்துள்ளது. ஆனால் இப்போது இலங்கை அரசு இந்தக் கோரிக்கை பட்டியலை தேர்வுக்குழு ஒன்றிடம் அளித்துள்ளதாக கூறுகிறார். இதனால் எந்தப்பலனும் ஏற்படப் போவதில்லை. காலம் கடத்தும் உத்தியாகவே இத்தகைய முயற்சிகள் செய்யப்படுகின்றன. 

இலங்கையில் போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆனபின்னும் தமிழர்கள் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதிலோ, போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலோ ஒரு அங்குல அளவுக்குக்கூட முன்னேற்றம் இல்லை. இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் தொடர்ந்து ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன.

 திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும், இறுதிச் சடங்குகளுக்கும் கூட ராணுவத்தின் அனுமதியைப் பெறவேண்டிய அவலநிலையில்தான் தமிழ் மக்கள் உள்ளனர். தமிழர்கள் ஏற்கெனவே வாழ்ந்த தங்களுடைய சொந்த வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்படுவதும், அவர்கள் தங்கள் வாழ்வை புனரமைத்துக்கொள்வதற்கு தேவையான வாழ்வாதாரத்தை வழங்குவதும் அவசியமாகும். அதற்கு முன் நிபந்தனையாக ராணுவ நிர்வாகம் விலக்கப்பட்டு, சிவில் நிர்வாகம் கொண்டுவரப்படுவது அவசியமாகும். ஆனால் அத்தகைய முயற்சிகள் நடைபெறவில்லை. புத்தலம், சிலாபம், வவுனியா போன்ற பகுதிகள் ஏற்கெனவே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகளாகும். இங்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னிப்பகுதிகளும் இந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற புகார் எழுந்துள்ளது.

தமிழ்மக்கள் தங்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு அடையாளங்களை இழந்து வருவதாக குமுறுகின்றனர். வழிபாட்டு உரிமை கூட இடையூறுக்கு உள்ளாகியுள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாலியல் தொல்லைகளுக்கு ஆட்படும் பெண்கள் புகார் கொடுக்கக்கூட முடியாத நிலை உள்ளது. போரினால் பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் சேதமடைந்த நிலையில், அவற்றை புதுப்பிப்பதில், அரசு ஆர்வமின்றி இருக்கிறது. இதனால் குழந்தைகளின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட செய்துதரப்படவில்லை. போர் முடிந்தபிறகும் உளவியல் ரீதியாக தமிழ் மக்கள் மீளவில்லை. ஒருவகையான அச்சுறுத்தல் மனநிலையிலேயே வாழ்கின்றனர். வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். ஏராளமான தமிழ் இளைஞர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டுமின்றி, விசாரணையுமின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசு அமைத்த குழு ”கற்ற பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம்” என்ற பெயரில் அறிக்கை ஒன்றை அரசுக்கு அளித்துள்ளது. அந்த அறிக்கை கூட முழுமையானது என்று கூற முடியாது. ஆனால் அந்த அறிக்கையும் கூட தவிர்க்க இயலாமல் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் சில குறைந்தபட்ச பரிந்துரைகளை செய்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். ராணுவ நிர்வாகம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பது அதனுடைய இடைக்கால பரிந்துரைகளில் சில. ஆனால் அவற்றைக்கூட நிறைவேற்ற அரசு தயாராக இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் ஏராளமான இலங்கைத் தமிழ்மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியில் உள்ளனர். பல்வேறு உலக நாடுகளில் அகதிகளாக தமிழ்மக்கள் குடியேறியுள்ளனர். போர் முடிந்தபிறகு அவர்களில் நாடு திரும்பியவர்கள் மிகவும் சொற்பமே. அவ்வாறு திரும்புபவர்கள் கூட கடுமையான இன்னலுக்கு உள்ளாவதாக தகவல்கள் கூறுகின்றன.

முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களில் 36 ஆயிரம் பேர் இன்னமும் மீள் குடியமர்த்தப்படவில்லை. போரின்போது உடல் உறுப்புகளை இழந்து படுகாயமடைந்தவர்களுக்குக் கூட மறுவாழ்வு அளிப்பதில் இலங்கை அரசு அக்கறை காட்டவில்லை என்பனவெல்லாம் அதிர்ச்சியளிக்கும் விஷயங்களாக உள்ளன.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு இந்தியாவைச்சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் இலங்கைக்கு சென்று வருகின்றனர். அங்கிருந்தும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்தியா வருகின்றனர், பேட்டியளிக்கின்றனர், அறிக்கை தருகின்றனர். ஆனால் இலங்கைத் தமிழ்மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதில் பெருமளவு முன்னேற்றம் இல்லை என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதுமாகும். இலங்கையில் ஒரு தலைமுறை போர் பாதிப்புகளை மட்டுமே சந்தித்துவந்துள்ளது. தங்கள் வாழ்வாதாரத்தை, வாழ்விடத்தை இழந்தது மட்டுமின்றி, உளவியல் பாதிப்புக்கும் ஆளாகி தவிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து மாநில சுயாட்சி வழங்குவது உள்ளிட்ட அரசியல் தீர்வை இலங்கை அரசு எடுத்திட இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள்கூட தமிழ்மக்களுக்கு முழுமையாக சென்று சேர்வதில்லை என்ற நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்துப்பகுதி மக்களுக்கும் நிவாரணம் கிடைப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். போரின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு மூடிமறைக்க முடியாது.

 எதுவுமே நடக்கவில்லை என்பதோ அல்லது பாதிப்பின் தன்மையை குறைத்துக்காட்டுவதோ தனது சொந்த மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும். இந்நிலையில், சுயேட்சையான, நம்பகத்தன்மையுள்ள, சர்வதேச தரத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டும். மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். முள்வேலி முகாம்களில் இன்னமும் முடக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் அவர்களது சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். தமிழர்கள் பாரம்பரியமாக வசித்து வந்த பகுதிகளில் பெரும்பான்மை சிங்கள மக்களை குடியமர்த்தக்கூடாது. அந்தப்பகுதிகளில் ராணுவ நிர்வாகம் முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டு சிவில் நிர்வாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சிங்கள மொழிக்கு நிகராக தமிழும், சிங்கள மக்களுக்கு நிகராக தமிழ்மக்களும் அனைத்து நிலைகளிலும் நடத்தப்பட வேண்டும். தமிழ்மக்களின் சமூக, பண்பாட்டு அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சமமான குடிமக்களாக வாழ்வதற்குரிய பொருளாதார அடித்தளம் அமைத்துத்தரப்பட வேண்டும். 

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 5ம் தேதி சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திட உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அழைக்கிறோம். 

2 comments

  1. nice reporting vaazththukkal
    tamilselvan

     
  2. Napoleon Says:
  3. உங்களுடைய கருத்துக்கள் இலங்கையில் நடந்த
    இனப்படுகொலை, தொடரும் மனித உரிமை மீறல்கள் பற்றி
    எதுவும் இந்தியாவுக்கு தெரியாது என்பது போலவும், இனிமேல் இதுபற்றி
    இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்பது போல இருக்கிறது.
    அப்படியா?

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark