மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


விதையென விழுந்து.. விருட்சமாய் எழுந்தவர்கள்!1931 மார்ச் 23 பெரோஸ்பூர் நகரின் அழகிய சட்லெஜ் நதிக்கரை பிணவாடையால் அவதியுற்றிருந்தது. நதிக்கரை மரங்கள் தங்களது சுவாசங்களை நிறுத்தி இருந்தன. மிகவும் அவசரமாக அந்த மூன்று உடல்களும் எரிக்கப்பட்டது. எரித்தவர்கள் காக்கியுடையணிந்த காவல் துறையினர். முழுவதும் எரிந்து முடிக்கக்கூட பொறுத்திருக்காமல் மிச்சமிருந்த சதை பிண்டங்களை ஆற்றில் வீசி எரிந்தனர். மக்களை நேசித்த, தேசத்திற்காக இறுதி மூச்சுவரை போராடிய, கடற்கரையில் காற்று வாங்கப்போகும் குதூகலத்துடன் சாவு வாங்கிக்கொண்ட அந்த மகத்தானவர்களின் உடல்கள் சட்லெஜ் நதியின் நீர்சுழிகளால் உள்வாங்கப்பட்டது. நதிக்கரையில் அம்மூவரின் சாம்பலும் மிச்சமிருந்தது. செய்தி பரவி அலறி துடித்து மக்கள் கூட்டம் அங்கே கூடியது. இளம் பெண்களும், கர்ப்பிணி பெண்களும் அங்கிருந்த சாம்பலை தங்கள் வயிற்றில் பூசிக்கொண்டே கண்ணீருடன் கதறிக் கூறினார்கள்  " எங்கள் வயிற்றில் உங்களைப்போல பிள்ளைகளை நாங்கள் சுமக்க வேண்டும்" அந்த பிள்ளைகள் விடுதலைப் போரில் அழியாப்புகழை சுமந்த பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆவார்கள். மூவரின் வர்க்கமும், பிறப்பிடமும், வாழ்க்கை பின்னணியும் வேறுவேறாயினும் தேசப்பின்னணி அவர்களை ஒன்றாய் இணைத்தது.

 அவர்கள்..     

விடுதலைப் போராட்டம் எனும் சூரைக்காற்று வீசியடித்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்ற குடும்பம் அது. வங்கப் பிரிவினைக்கு எதிராக போராடியதால் அந்த குடும்பத்திலிருந்த மூன்று சகோதரர்கள் கைது செய்யப்பட்டு பர்மாவின் மாண்டேலா சிறையில் அடைக்கப்பட்டனர்.  மூத்த சகோதரன் ஸ்வரன் சிங் சிறைக்கொடுமைகளால் அங்கேயே மாண்டுபோனார். இளையவர்கள் அஜீத் சிங், கிஷன் சிங் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அஜித் சிங் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட ரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறினார். வீட்டிற்காக எஞ்சிய கிஷன் சிங் சிறையிலிருந்து வீடு திரும்பிய 27.19.1907 அன்று அவரது மனைவி வித்யாவதி இரண்டாவது ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். தந்தை விடுதலையாகி வந்த தினத்தில் பிறந்ததால் அக்குழந்தைக்கு பஞ்சாபி மொழியில் அதிர்ஷ்டமென்ற அர்த்தம் கொண்ட பகத் என பெயரிட்டனர்.

பகத்சிங்கினுடைய 12 வது வயதில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் அவனை மிகவும் பாதித்தது. வாலாபாக் மைதானத்தின் இரத்தம் தோய்ந்த மண்ணோடு அந்த கோபத்தையும் அவன் அடைகாத்தான். லாகூரில் லாலா லஜபதிராய் துவக்கிய தேசியக் கல்லூரியில் இணைந்தான். காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் சௌரி சௌரா நிகழ்வினால் நிறுத்தப்பட்டது பகத்தின் சிந்தனையை வேறுபக்கம் திருப்பியது. வெள்ளையர்கள் ஆயுதம் கொண்டு தாக்கும் போது அவர்களுடன் அந்த மொழியில்தான் பேசவேண்டும், ஆக ஆயுதப் பாதையே சரி என நம்பத்துவங்கினான். நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை துவக்கியது இந்த நோக்கத்தை செயலாக்கத்தான். அந்த நேரத்தில்தான் இந்தியர்களின் சுய கௌரவத்தை சோதிக்கவந்தது சைமன் கமிஷன். அதன் எதிர்ப்புப் போரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். போராட்ட களத்திலேயே லாகூரில்  லாலா லஜபதிராய் காவல்துறை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். பகத்சிங் அவர் மரணத்திற்கு பழிவாங்க முடிவுசெய்து தனது தோழர்கள் சந்திரசேகரஆசாத் மற்றும் ராஜகுருவுடன் காவல்துறை அதிகாரி சாண்டர்சை சுட்டுவீழ்த்தினான். அந்த அதிகாரி மீது பட்ட முதல் குண்டு ராஜகுருவுடையது. யார் இந்த ராஜகுரு?

சத்ரபதி சிவாஜியின் கொள்ளுப் பேரன் சாகூஜி பட்டத்து இளவரசனாய் பட்டம் கட்டிய போது அவருக்கு குருவாக இருந்த கஜேஸ்வர். அவருக்கு ராஜகுரு என்ற பட்டம் சாகூஜியால் சூட்டப்பட்டது. அப்போது முதல் அவரது பரம்பரையினர் ராஜகுரு என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டனர்.  கஜேஸ்வர் பேரன் அரிநாராயண ராஜகுருவுக்கு 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்த சிவராம். இந்த சிவராம்தான் இந்திய விடுதலைப்போரில் அழியாப் புகழைப் பெற்ற ராஜகுரு ஆவார். இளம் வயதில் தன் தந்தையை இழந்த ராஜகுரு தனது அண்ணன் வீட்டில் வளர்ந்தார். அவரது அண்ணனுடன் எழுந்த கருத்து வேறுபாட்டால் வீட்டைவிட்டு வெளியேறி பூனா, காசி என பல இடங்களில் அலைந்துவிட்டு கான்பூரில் இருக்கும் போது அரசியல் தொடர்பு ஏற்பட்டது. தீவிர விவாதங்களும் கூரிய அரசியல் அறிவும் அவரை இந்துஸ்த்தான் சோஷலிஸ்ட் குடியரசு படையில் கொண்டு சேர்த்தது. சோசலிசம் குறித்த நம்பிக்கையும் அதுவே இந்திய விடியலின் தீர்வு என்பதில் உறுதியாக இருந்தார். பல்வேறு வழக்குகளில் பின்னப்பட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அரசியல் கைதிகள் உரிமைகளுக்காக தனது சுவாசத்தின் இறுதிக் காற்றுவரை பகத்சிங் சுகதேவுடன் அங்கும் போராடினார். யார் இந்த சுகதேவ்?

பஞ்சாப்பில் லாயல்பூரில் 1907 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி தனது தந்தை ராம்லால் இறந்த மூன்று மாதம் கழிந்த்து பிறந்தான் சுகதேவ். அவனது சித்தப்பா லாலா அரிசந்தராம் அவரை வளர்த்தார். அவரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான். அதனால் சிறையில் வாடியவர். சிறு வயதில் மேல்நாட்டு உடைகளில் நாட்டம் கொண்ட சுகதேவ் ஒத்துழையாமை இயக்கம் வந்ததிலிருந்து கதர் ஆடைகளுக்கு மாறினார். ஆரிய சமாஜ கொள்கையில் நாட்டம் கொண்டிருந்தவர். லாகூர் நேஷனல் கல்லூரியில் பகத்சிங் தோழனாக மாறிய சுகதேவ் இறுதி மூச்சுவரை அவருடன் இருந்தது மட்டுமில்லை மூச்சு நின்ற பின்னும் அவருடனே எரிந்தார். இந்துஸ்த்தான் சோஷலிஸ்ட் குடியரசு படை அடக்குமுறை கருப்புச் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீச முடிவெடுத்தது. பகத்சிங் பி.கே. தத் இருவரும் அதற்கென நியமிக்கப்பட்டனர். காந்தி இந்த நடவடிக்கைகை கடுமையாக விமர்சனம் செய்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து சுகதேவ் வெடிகுண்டின் தத்துவம் என்ற வரலாற்று சிறப்புமிக்க கடிதத்தை எழுதினார்.
"புரட்சிக்காரர்கள் போராட்ட முறை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக உருக்கொள்கிறது. சில நேரங்களில் அது ரகசியமாகவும் உருக்கொள்கிறது. சில சமயம் வெறும் கிளர்ச்சி மட்டுமே நடக்கிறது. சில சமயம் ஜீவமரணப் போராட்டமாக நடக்கிறது. புரட்சிக்காரர்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் தங்களைச் சுற்றியுள்ள எல்லாச் சூழ்நிலைகளையும் ஆராய்ந்தே செயலபடுகின்றனர். தங்கள் பொறுப்பைப் பற்றிய அறிவு அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது"

அவர்கள் ஒன்றினைந்த பின்னணி..

ஏகாதிபத்தியம் இந்த நாட்டை அடிமைப்படுத்தியதை எதிர்த்து ஆயிரமாயிரமாய் மக்கள் உதிரம் சிந்தி போராடியிருக்கின்றனர். சுக்கா மிளகா சுதந்திரம் அக்கா வந்து வாங்கித்தர என பாவேந்தன் கேட்டது போல ஏதோ ஒரு சிலர் மட்டும் தலைமை தாங்கி வாங்கிக்கொடுத்ததல்ல இந்த சுதந்திரம். பல்வேறு தத்துவ பின்னணி கொண்ட அமைப்புகள் அவரவர் வழிகளில் போராடினர். அகிம்சையை காந்தி கையில் எடுத்தார், அன்னிய நாடுகளின் ஆதரவுடன் இந்திய தேசிய ராணுவ படையை திரட்டி நேதாஜி போராடினார். டொமினியன் அந்தஸ்த்து போதும் என கேட்டு காங்கிரஸ் போராடிய போது முதன் முதலாக பூரண சுதந்திரம் வேண்டும், அந்நியனே வெளியேறு என கம்யூனிஸ்டுகள் போராடினார்கள். ஆயுதம் தாங்கி மக்களை திரட்டி போராட பல குழுக்கள் ஆங்காங்கே தோன்றியது. இப்படி பல வழிகளில் போராட்டம் தொடர்ந்தது. இப்பின்னணியில் நவ ஜவான் பாரத் சபாவை பகத்சிங் உள்ளிட்ட சில இளைஞர்கள் உருவாக்கினர். இந்தியா விடுதலை அடைந்தால் இன்றைய சமூக அமைப்பில் உழைக்கும் மக்களுக்கு பொருளியல் விடுதலை கிடைக்காது என்பதை உணர்ந்து சோசலிஸமே சரியான தீர்வு என்று உணர்ந்து தனது அமைப்பின் பெயரை இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு படை என மாற்றினர். சமதர்ம சிந்தனைதான் உண்மையான சுதந்திரத்தை உருவாக்கும். ஆக சுரண்டலை ஒழிப்பதுதான் உண்மையான தேசபக்தி என்ற தெளிவான அறிவிப்புடன் பிறந்தது இந்த அமைப்பு. சாதி ஒழிப்புக்கென ஒரு அமைப்பையும் துவக்கினார்கள். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடுமையான தாக்குதலை தொடுத்தனர். இந்த அமைப்பின் கருவாக இயங்கியவர்கள் துர்கா தேவி, சுசீலா அக்கா, பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத், பகவதி சரண் போன்றோர் ஆவார்கள்.  பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அடக்குமுறை செய்வதற்காக கொண்டுவந்த பொதுப் பாதுகாப்பு மற்றும் தொழில் தகராறுகள் மசோதா (1929) வை எதிர்த்து அந்த சட்டம் கொண்டு வரப்படும் தினத்தில் பாராளுமன்றத்தில் குண்டு வீசுவது என இந்துஸ்த்தான் சோஷலிஸ்ட் குடியரசு படை முடிவெடுத்தது. பாராளுமன்றத்தில் எந்த உயிருக்கும் சேதம் ஏற்படுத்தாத குண்டுகளை வீசி பகத்சிங்கும் பி.கே.தத்து கைதாகினர். லாகூர் சதிவழக்கில் சுகதேவ், ராஜகுரு போன்றோர் கைது செய்யப்பட்டனர். ஒரு தலைபட்சமான விசாரனையும் தீர்ப்பும் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூன்று மாவீரர்களுக்கும் தூக்கு தண்டனையை கொடுத்தது. திட்டமிடப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பாக அவ்வீரர்கள் தூக்கிலிடப்பட்டு, சட்லெஜ் நதிக்கரையில் எரிக்கப்பட்டனர்.

அந்த மகத்தான தேசபக்தர்கள் மரணத்தை கண்டு அஞ்சவில்லை.. அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. நாம் விழுவது பலர் எழுவதற்கு, நாம் விதையாய் விழுந்தால் நம்மிலிருந்து விருட்சமாய் பல்லாயிரம் இளைஞர்கள் எழுவார்கள். இந்த சமூகத்தின் சகல சீரழிவும் ஒருநாள் முடிவுக்கு வரும் என அவர்கள் நம்பினார்கள். ஏற்றதாழ்வற்ற சமூகமே அவர்களது லட்சியமாய் இருந்தது. இதோ அவர்களின் வீரம் சொரிந்த தியாக மரணம் நிகழ்ந்து 81 ஆண்டுகள் ஆகிறது. இந்த தேசம் அவர்களது நினைவுகளை அடைகாத்து வருகிறது. ஆனால் அவரது கனவுகளை....

அவர்கள் மீண்டும் வருவார்கள்..

மக்கள் கேட்காமலேயே இலவசங்களை அள்ளிவீசும் ஆட்சியாளர்கள் மக்கள் வரிப்பணத்தில் ஆடு, கோழி, கிரைண்டர், மிக்சி என கொடுக்கிறார்கள். கரும்புக்கும், நெல்லுக்கும் அரசே விலை வைத்துவிட்டு சர்க்கரைக்கும், அரிசிக்கும் விலை வைக்கும் உரிமையை முதலாளிகள் கைகளில் கொடுத்துவிடுகின்றனர். விலைவாசி உயர்வதால் திணறித்தவிக்கும் மக்களுக்கு உபதேசங்களையே மாற்றாக கொடுக்கின்றனர்.  நமது நாட்டின் பெருமுதலாளிகளின் வரி கட்டாத கருப்பு பணம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கியுள்ளது. ஆனால் இவர்களுக்குதான் இந்திய அரசாங்கம் தனது பட்ஜெட்டில் ஐந்து லட்சம் கோடி வரிச்சலுகை தருகிறது, நூற்றுக்கணக்கான பன்னாட்டு  பகாசூர நிறுவனங்கள் இந்திய பெருநகரங்கள் துவங்கி கடற்கரையோரங்கள்வரை  முழுவதும் கபளீகரம் செய்கின்றனர். அவர்களுக்கு வரிச்சலுகை, இலவச நிலங்கள், தடையில்லா மின்சாரம் என அனைத்தும் வாரி வழங்கப்படுகிறது. அங்கே தொழிற்சங்கம் துவங்கக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது வளாகங்களில் ஒப்பந்த தொழிலாளிகள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை. வேலைதேடி புலம்பெயர்ந்து இந்திய நாட்டின் சாலைகள் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக எறும்புகளைப்போல ஆண்களும் பெண்களும் ஊர்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் பெண்கள் அதிகமாக புலம்பெயரும் காலமாய் இக்காலம் மாறியுள்ளது. சுமங்கலி திட்டம் என்ற தூண்டில் மிக இயல்பாய் அவர்களை வசீகரம் செய்து ஏமாற்றுகிறது.  வேலைவாய்ப்பு அறிதாக மாற மாற இருக்கும் வேலையில் நீடிக்கமுடியுமா என்ற பறிதவிப்பு பதட்டமாய் மாறுகிறது. இந்த பதட்டமே தான் என்கிற சுயநலத்தை விதைக்கிறது. இந்த சுயநலம் அன்பு,  மக்கள், நாடு, நாம் என்பைவைகளுக்கு தடையாக இருக்கிறது. இந்த தனிமனித நெருக்கடி சிந்தனையை மதமும், சாதியும் தனக்கான திரட்டலுக்கு பயன்படுத்துகிறது. ஆக இன்றைய முதலாளித்துவக் கொள்கை தேசத்தின் மக்களை அடிமைகளாக நீடிக்கச் செய்ய அனைத்தையும் பயன்படுத்துகிறது.

இந்த கொடூரங்களுக்கு எதிராக நம்பிக்கைகள் இல்லாமல் இல்லை. உலகம் முழுவதும் மனிதனை மனிதன் விழுங்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். துனிசியாவில் பற்றிய நெருப்பு எகிப்தை கடந்து அமெரிக்காவின் பங்குச் சந்தை தெருவை ஆட்டிப்படைத்தது. நாங்கள் 99 நீங்கள் 1 என்ற முழக்கம் நமக்கான முழக்கம் முன்நிற்கிறது. "நாம் இமயம் முதல் குமரிவரை உள்ள மக்களுக்காகச் சுதந்திரம் கேட்கிறோம். நாம் கேட்கும் சுதந்திரம் மனிதர்களின் பசியைப் போக்க வேண்டும். பட்டினியை நீக்க வேண்டும். அறியாமையை அகற்ற வேண்டும். இல்லையேல் சுதந்திரத்திற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். சமதர்ம சிந்தனைதான் உண்மையான சுதந்திரத்தை உருவாக்கும். ஆக சுரண்டலை ஒழிப்பதுதான் உண்மையான தேசபக்தி" என 81 ஆண்டுகளுக்கு முன் பகத்சிங்கும், சுகதேவும், ராஜகுருவும்  கண்ட கனவு இது. ஆக சகலவிதமான சுரண்டலையும் எதிர்த்து போராட இளைமை பட்டாளத்தை திரட்டுவதுதான் அவர்களுக்கும், இன்றைய தேச நெருக்கடிக்கும் நாம் கொடுக்கும் சரியான விடையாக இருக்கமுடியும்.

-------- மார்ச் மாத ”மகளிர் சிந்தனை’’ இதழில் வந்த என்னுடைய கட்டுரை-------

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark