மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

மன்மோகன் - அணு! அத்வானி - அமெரிக்கா

Posted by நட்புடன் ரமேஷ் Saturday, September 13, 2008

இப்போது இந்தியாவில் மின்சார உற்பத்தி 1.26.839 மெகாவாட். இதில் அனல் மின்சாரம் 66 சதம், நீர் மின்சாரம் 26 சதம், சூரிய சக்தி மற்றும் காற்றாலைகளால் 5 சதம், கிடைக்கிறது. ஆனால் அணு மின்சாரம் 3 சதம் மட்டுமே கிடைக்கிறது. இந்த 3 சதத்திற்கு ஆகும் செலவு 3,897 கோடி. ஆனால் 5 சதம் கிடைக்கும் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்திற்கு செலவிடும் தொகை வெறும் 600 கொடி மட்டுமே. இன்னும் 50,000 கோடி செலவு செய்தால் மட்டுமே அடுத்த 20 ஆண்டுகளில் 6 சதம் அணு மின்சாரம் தயாரிக்க முடியும். அடுத்த 40 ஆண்டுகளுக்கு அணுமின்சாரம் தயாரிக்க, அணுகுண்டுகள் (சுமார் 2228 குண்டுகள்) செய்யவும் தேவையான யுரேனியம் 25 ஆயிரம் மெட்ரிக்டன். ஆனால் நம்மிடம் இருப்பது 78 ஆயிரம் மெட்ரிக்டன். அதாவது 120 ஆண்டுகளுக்கு தேவையான யுரேனியம் நம்மிடம் உள்ளது.


யுரேனியத்தைவிட நம்மிடம் தோரியம் அதிகம் உள்ளது. உலகத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து நம்மிடம்தான் அதிகம் தோரியம் உள்ளது. நம்மிடம் மூன்று லட்சம் மெட்ரிக்டன் தோரியம் உள்ளது. இதை வைத்து 35 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். இதைத்தான் நமது அணுசக்தி துறை திட்டமிட்டது. இது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. எனவேதான் சீரழிவு வேலையில் இறங்கி உள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு நலனுக்கு ஏற்றவாறு இயற்றப்பட்டுள்ள ஹைடு சட்டப்படி, நமது ஆட்சியாளர்கள் மண்டியிட்டு ஏற்றுக்கொண்டுள்ள ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளில் 90 ஆயிரம் கோடி செலவு செய்தால்தான் 9 சதம் கூடுதல் அணுமின்சாரம் கிடைக்கும்.

மேற்கண்ட எளிமையான விபரங்களை படிப்பவர்கள் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். ஆனால் தனது ஆட்சி போனாலும் பரவாயில்லை எனும் மன்மோகன்சிங் வகையாறக்கள் அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்துவதில் கறாராக உள்ளனர். அமெரிக்காவின் உள்நாட்டு நலனுக்காக போடப்பட்ட ஹைடு சட்டத்தின் மூலம் ஒப்பந்ததை அமல்படுத்தி உள் நாட்டு நலன்களை காவு கொடுக்கின்றனர். நாசகர உடன்பாட்டை எதிர்த்தும், பண வீக்கத்தைக்கட்டுப்படுத்தத் தவறிய, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர். நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் நடத்திய தேசபக்த போராட்டம் மற்ற கட்சிகளை அம்பலப்படுத்தியது. அமெரிக்கா கோபப்படக் கூடாது என்ற எண்ணத்தில் அத்வானி “நாங்கள் உடன்பாட்டை காங்கிரஸை விட அதிகம் ஆதரித்தாலும் இன்னும் கொஞ்சம் எல்லோரிடமும் பேசி செய்திருக்கலாம்” என்றார். மதவெறியர்களுக்கு எப்போதும் அமெரிக்கா நட்பு என்பதை மீண்டுமொருமுறை நாடாளுமன்றத்தில் உறுதிபடுத்தினார்.

பிஜேபியினர் ஒரு சிறிய அறைக்குள் வீடியோ கேமிரா முன் லஞ்சம் வாங்கினார்கள், காங்கிரஸ்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொலைகாட்சி கேமிரா முன்பு கொடுத்த பணத்தினை, லஞ்சம் வாங்கியவர்கள் எடுத்துக்காட்ட அம்பலப்பட்டனர். நேற்றுவரை யோக்கிதாம்சம் பேசிய முலாயம் சிங்யாதவ் மறைமுக பேரத்தால் இடம் மாறிப்போனார். வெளிப்படையாக பேரம் பேசிய சிபு சோரன் காங்கிரஸை ஆதரித்து வாக்களித்தார். இந்தியாவின் பெருமுதலாளிகளின் ஆதரவோடு அணு ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் வெற்றி அடைந்துள்ளது. அதன் கைமாறாக தொழிலாளர்களின் வைப்பு நிதித் தொகையை நிதிமூலதன சூதாட்டத்தில் ஈடுபடுத்த அம்பானிக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மக்களை வாட்டிவதைக்கும் பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அன்றாடம் மக்களை அனல் மீதிட்ட உயிராய் தவிக்க வைத்துள்ளது. மதவெறியர்கள் கைகளில் மீண்டும் இந்தியா சென்றுவிடக்கூடாது என்று இடதுசாரிகள் நினைக்கும் அதே நேரத்தில், காங்கிரஸ் இந்த நாட்டு நலன்களை காவு கொடுப்பதையும் அனுமதிக்க முடியாது என்று போராடுவது இந்த நாட்டு நலன் சார்ந்தது. எனவே இடதுசாரி பாதையில் நமது இளைஞர்களை அணிதிரட்டுவது காலத்தின் கட்டாயமாய் நம்முன் உள்ளது.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark