மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

என்று தணியும் ..

Posted by நட்புடன் ரமேஷ் Tuesday, October 7, 2008

சிறுபான்மையினர் தவறு செய்தால் அவர்களை எளிதில், அதிக சிரமம் இல்லாமல் நேர்வழிபடுத்த முடியும். ஆனால் பெரும்பான்மையினர் தவறு செய்தால் அவர்களை நேர்வழிக்கு கொண்டுவர இயலாது. ஏனெனில் (பெரும்பான்மையின் மூலமாக வரும்) அதிகார போதை அவர்களைத் தவறிலிருந்து மீளவிடாது. - மகாத்மா காந்தி

அலைந்து திரியும் அந்தத் தீயின் பசி இன்னும் அடங்கிய வழியாய் இல்லை. இந்து மதவெறிக்கு பெரும் சவாலாய் நின்ற மகாத்மா என்ற மாமனிதனை தோட்டாக்கள் மூலம் அஸ்தியாக்கிய அந்த நெருப்பு, தன் ஆட்சியதிகார இறையைத் தேடி பதற்றத்தையும், நம்பிக்கையின்மையையும் அணையாமல் எரியவைத்துக்கொண்டே அலைகிறது. இப்போது கோத்ராவில் உத்வேகம் அடைந்து மீண்டும் ஒரிசாவிலும், காஷ்மீரிலும் தனது கோரவடிவத்தை உலகிற்கு காட்டி உள்ளது.மதங்கள், மனிதர்களை நேர்வழிப்படுத்த உருவாக்கப்பட்டது. எந்த மதமும் மனிதனை ஆயுதம் தரித்து சகமனிதனை கொலை செய்யச் சொல்லவில்லை. ஆனால் மதத்தை தனது சுய லாபத்திற்காக இழிதனமாகப் பயன் படுத்திக்கொள்ளும் கூட்டம்தான், மதவெறியைத் தூண்டி அந்த ஊழிப் பெரும் தீயில் குளிர்காய்கின்றனர். இந்தியாவில் இந்துத்துவா சக்திகள் காலகாலமாய் இதனையே செய்து வருகின்றனர்.

சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குவதும், அவர்களை ஆயுதம் ஏந்தவைப்பதும், அவர்கள் ஆயுதம் ஏந்தியதைக் காட்டி அவர்கள் தீவிரவாதிகள் என்று சமூக பொதுபுத்திக்குள் பதிய வைப்பதும், அதையே பயன்படுத்தி வெறுப்பை விதைப்பதும் இவர்களின் சித்தாந்த வழியாக இருக்கிறது.இந்த இந்துத்துவ மதவெறியர்களுக்கு தங்கள் நரவேட்டையை நடத்திட ஒரே ஒரு காரணம் தேவை. அது பசுமாட்டின் (செத்த மாடாக இருந்தாலும்) மூலமாகவோ, புகைவண்டி மூலமாகவோ, நிலத்தின் மூலமாகவோ, ரதத்தின் மூலமாகவோ, மாற்று மதத்தின் மூலமாகவோ எப்படியோ வந்து சேர்ந்து விடுகிறது. தற்போது ஒரிசாவில் ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மரணத்தின் மூலம் கலவரம் துவங்கியது. ஏற்கனவே கிரகாம் ஸ்டெயில் என்ற பாதிரியாரை அவரது குழந்தைகளுடன் உயிரோடு எரித்தவர்களுக்கு மீண்டும் ஒரு பயிற்சிக் களமாய் தற்போது மாறி உள்ளது. கிருத்துவ மக்கள் தாக்கப்படுவதும், கன்னியாஸ்திரிகள் மானபங்கம் செய்யப்படுவதும், கிருத்துவ தேவாலயங்கள் இடித்து எரிக்கப்படுவதும் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கிறது. கொலைகளை தடுக்க ஒரிசா அரசு வக்கில்லாமல் இருக்கிறது.

கொலைகாரர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பிடிப்பதும், அவர்களையும் அவர்கள் சார்ந்த இயக்கத்தை தனிமைப் படுத்துவதும் அவசியம். ஆனால் சந்தேகங்களை மூலதனமாக வைத்து கோத்ராவுக்கு பின் சங்பரிவாரங்கள் நடத்திய இன அழிப்பு செயலைப் போல தொடர்ந்து நடக்க அனுமதிப்பது, பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்க உதவாது.சுதந்திரம் அடைந்த உடன் சோமநாத் ஆலயத்தை அரசின் செலவில் புதுப்பிக்க வேண்டும் என்று பல அமைச்சர்கள் சொன்ன போது அன்றையப் பிரதமர் நேரு கடுமையாக எதிர்த்தார், காந்தி வெளிப்படையாக கூட்டங்களில் அம்முடிவை தாக்கிப் பேசினார். ஒரு மதத்திற்கு அரசு இப்படி சலுகை காட்டுவதை மற்ற மதங்களும் எதிர்பார்க்கும். ஒரு அரசின் வேலை இதுவல்ல என்று கண்டனம் முழங்கினார். இதன் அர்த்தம் இவர்கள் மோமநாத் ஆலயத்திற்கோ அல்லது இந்து கடவுளுக்கோ எதிரானவர்கள் என்பதல்ல. அரசும் மதமும் பிரிந்து இருக்க வேண்டியதன் அர்த்தத்தை உணர்ந்தததுதான். சொல்லப்போனால் கடவுளிடமும், இந்து மதத்தின் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டவர்தான் காந்தி.ஒரு குறிப்பிட்ட மதத்திடம் அரசு மண்டியிடக்கூடாது, உலகில் எப்பக்கமும் சாயாமல் மூன்றாம் உலக நாடுகளை திரட்டி அணிசேரா கொள்கையை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று முழங்கிய காங்கிரஸ் கட்சி தனது பிந்தைய நாட்களில் அந்த கொள்கையிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்துவிட்டதன் விளைவுதான், இன்றைய நிகழ்வுகளை தடுக்க தயாரில்லாதத் தன்மை. வாக்கு வங்கியை மட்டுமே குறிவைத்த இவர்களின் செயல்பாடும், சில இடங்களில் கிடைத்த இந்துத்துவத்தின் வெற்றியும் மிதமான மதவாதத்தை கடைபிடிக்க வைத்துள்ளது. அதனால் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதம் மட்டுமே உள்ள ஒரிசா கிருத்துவர்களை கைவிட்டதாகும்.

இந்தக் கலவரச்சூழல் தடுத்து நிறுத்தப்பட இரண்டு செயல்கள் அவசியம் ஒன்று உறுதியான நடவடிக்கை. மற்றொன்று மக்கள் கருத்துக்களை மதச்சார்பின்மை பக்கம் திரட்டுவது. இவைகளே மதக் கலவரங்களையும், இனப் படுகொலைகளையும் தடுத்து நிறுத்தும். முதலில் சொன்னதை காங்கிரஸ் அரசு செய்யத் தயாராக இல்லை என்பது தெரிந்து விட்டது. இரண்டாவது வழியை நடைமுறை படுத்த மக்கள் இயக்கங்கள் களத்தில் இறங்க வேண்டியது வருமுன் காப்பது போல அர்த்தம் பொதிந்ததாகும்.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark