மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


டாக்டர் அம்பேத்கர் குறித்து நிறைய புத்தகங்கள் வெளிவருவதும், நிறைய விவாதங்கள் நடப்பதும் கடந்த காலங்களைவிட தற்போது அதிகமாகவே நிகழ்ந்து வருகின்றன. இந்த விவாதங்கள் அவரின் பன்முக ஆளுமை குறித்த தரவு களையும், இன்றைய அரசியலில் அவரின் பொருத் தப்பாட்டையும் விவாதம் நடத்துவதற்கு பதிலாக, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வேதங்களின் அருளுரையாகச் சுட்டப்படுவதற்கே முன்னுரிமை அளிக்கின்றன.
சில தலித் இயக்கங்கள் கூறுவது போல அவர் தலித் மக்களுக்கான தலைவர் மட்டுமல்ல, அவர் உழைப்பாளி மக்களின் தலைவர். பெண்கள் குறித்தும், கருத்தடை குறித்தும் அவரிடம் முற்போக்கான பார்வை இருந்தது. கல்வி குறித்து அவரிடம் உலகம் தழுவிய பார்வை இருந்தது, பாக்கிஸ்தான் பிரச்சினையில் அவர் நிலை காங்கிரசை யோசிக்க வைத்தது.
சாதிய முறையின் கொடுமையை அவர் ஒப்பாரி மூலம் முன்வைக்கவில்லை. உலகின் பலநாடுகளில் அடிமைமுறையை ஒப்பிட்டு அவைகளைவிட இந்த சாதிமுறை எத்துனை கொடுமையானது என்று அறிவியல் பூர்வமாய் வாதிட்டார். அவர் அடிப் படையில் ஒரு பொருளாதார அறிஞர். அவரின் முழு ஆளுமையை வாசித்திட வேண்டியுள்ளது. ஆனால், ஆளும் வர்க்கங்கள் அவரை ஒரு சாதியத் தலைவராகவே பல்லாண்டுகளாக ஒரு எல்லைக்குள் நிறுத்தி, அவரின் பிறந்த, நினைவு தினங்களுக்கு ஒருபக்க விளம்பரமும் சிலசடங்கு நிகழ்வுகளை செய்து தலித் மக்களை தாஜா செய்வது தொடர்கிறது.
இதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவரை ஆதரிப்பவர்களும் அவர் எழுதிய, பேசிய மேற்கோள்களை முன்நிறுத்தி அது முடிவடைந்த கருத்தாக்கம், அது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அறிவிப்பு என்று மற்ற நேசசக்திகளை தூர நிறுத்தும் போக்கும் உள்ளது.முடிவடைந்த கருத்தாக்கம் என்றால் ஒருவர் சொன்ன வார்த்தைகள் மாற்றம் காணமுடியாத இயக்கவியலுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடுவதை குறிக்கும்.
தமிழகத்தில் சில அமைப்புகள் தங்களை “ஒரிஜினல் புரட்சிகர கம்யூனிஸ்டுகள்” என்று அறிவித்துக்கொண்டு இடதுசாரிகளையும் மற்ற அரசியல் இயக்கங்களையும் ஓட்டு பொறுக்கிகள் என்றும், மார்க்ஸ், லெனின், மாவோ சொன்ன வார்த்தைகளை அல்லது எழுதிய வரிகளின் முன்னும் பின்னும் வெட்டி எறிந்துவிட்டு அந்த குறிப்பிட்ட வார்த்தைகள் அல்லது வரிகள் “முக்காலங்களையும்” கடந்து நிற்பவை என்று கூறி வியாக்கியானம் செய்வதுபோல, அம்பேத்கரையும் சில தலித் இயக்கங்கள் கட்டமைக்க விரும்புகின்றனர். அம்பேத்கர் விவாதத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லது அவர் கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்துபவர்கள் தலித் விரோதிகள் என்று அறிவித்து விடுகின்றனர்.
இதனால் வர்க்கப்போராட்டத்தில் தலித் மக்களை திரட்டும் பணி மந்தப்படுவதை அவர்கள் திட்டமிட்டே செய்கின்றனர்.இது இப்போது நடப்பதல்ல, அவர் மறைவுக்குப் பிறகு துவங்கி விட்டது. மகத் போராட்டம் நடந்த காலத்திலிருந்தே அனைத்து போராட்டங்களிலும் முன்னணியில் நின்றதன் மூலம் அம்பேத்கரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்த கெய்க்வாட் அவருக்கு பின் அவரது இயக்கத்திற்கு தலைமை ஏற்றார். அம்பேத்கர் இயக்கத்தின் நம்பிக்கைக்குரிய செயல் வீரர் அவர்.
இப்போதும் ஏராளமான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதைப்போல் நிலப்பகிர்வு என்பதுதான் தலித் மக்களின் பிரச்சினைகளில் முக்கியமானது என்று தெரிந்து கெய்க்வாட் அந்த பிரச்சினையில் கவனம் செலுத்தினார்.அம்பேத்கர் காலத்தில் கூட அவரது இயக்கம் நிலத்திற்காக இத்துனை பெரிய இயக்கம் நடத்தியது இல்லை. மகாராஷ்டிராவின் கொங்கண் பகுதியில் “கோட்டி” என்ற பெயரிலிருந்த நிலபிரபுத்துவ முறையை ஒழிப்பதற்கு போராட்டத்தை கெய்க்வாட் துவக்கினார்.
தலித் மக்களின் சமூக ஒடுக்கு முறையுடன் பொருளாதாரப் பிரச்சினையும் அம்பேத்கர் இயக்கம் சார்பில் முதன் முறையாக வலுவாக இப்போராட்டத்தில் தான் இணைக்கப்பட்டது. எண்ணற்ற தலித் மக்கள் சிறைக்குச் சென்றனர், அவர்கள் வாழ்ந்த தெருக்கள் வெறிச்சோடி சென்றாலும் பெருந்திரளான மக்கள் இதில் ஈடுபட்டனர். ஆனால் மற்ற பல தலித் தலைவர்கள் இந்த போராட்டம் கம்யூனிஸ்ட் வழிப்பட்டது என்று கூறி கெய்க்வாடின் போராட்டத்தை சிறுமைபடுத்தினர்.அம்பேத்கரின் செயல் திட்டத்தில் இத்தகைய போராட்டத்திற்கு இடமில்லை என்று அறிவித்தனர். அரசியல் சட்டப்படியான ஆட்சியில், பொதுமக்கள் போராட்டம் என்பது அராஜக வழி, எனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதற்கு இடமளிக்கக் கூடாது என்று அம்பேத்கர் முன்னர் கூறியதை உயர்த்திப் பிடித்தனர். நிலப்பிரச்சினை தான் முக்கிமானது என்றால் சட்டப் பூர்வமாக உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றனர். அதாவது இந்த அரசியல் சட்டம் அம்பேத்கர் முழுமையாக இயற்றியது என்ற அர்த்ததில் நம்பச் சொன்னார்கள்.
ஆனால் இந்திய நிலப் பிரப்புத்துவம் என்ற ஆலமரத்தின் விழுதுகளான முதலாளித்துவ வர்க்கம் அம்பேத்கரை வைத்தே தனக்கு சாதகமான சட்டங்களை இயற்றிக் கொண்டது. அதனால்தான் அம்பேத்கர் பிறகு மனம் வருந்திச் சொன்ன “இந்த அரசியல் சட்டத்தை கொளுத்தும் முதல் நபராக நான் இருப்பேன்” என்பதை மறந்தார்கள்.
இடதுசாரிகள், நிலம் என்பது இந்த ஆட்சியாளர்கள் மகிழ்ந்து கொடுக்கும் விஷயமல்ல என்று வரலாற்றுப் பூர்வமாக போராட்ட படிப்பினையில் கற்றுணர்ந்தவர்கள். தெலுங்கானாவிலும், தெபாகாவிலும், வெண்மணியிலும், வார்லியிலும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும் நிலபகிர்வுக்காகவும் இரத்தம் சிந்தி போராடியவர்கள். சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக அணைத்துத் தரப்பு மக்களையும் திரட்டிட தொடர்ந்துப் போராடிக் கொண்டிருப்பவர்கள்.இவர்களுடன் தலித் மக்கள் அணிதிரளாமல் இருக்க கெய்க்வாட்டை எதிர்த்தவர்களின் வாரிசுகள் இப்போதும் பணியாற்றி வருகின்றனர்.
அதன் மைய்ய வாதம் தான் தலித்துகளுக்காக தலித்துகள் மட்டும் போராட வேண்டும் என்பது. ஒற்றுமையை உருவாக்கும் வெகுஜன மக்கள் போராட்டங்களை கட்டமைக்க பல இடங்களில் அம்பேத்கர் வலிந்து பேசினாலும் அவருக்கு பின் வந்து அவரது பெயரைச் சொல்லி இயக்கம் நடத் தியவர்கள் அவர் பெயரை பிழப்புக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர்.அவரது நடை உடை பாவனைகளை நகல் எடுத்துக் கொண்டனர், அவரது கருத்துக்கு எதிராகவே தேர்தல் அரசியலை கையாண்டனர். இன்னும் கீழிறங்கி தங்களது உப சாதிகளின் தலைவர்களாக சுருங்கிப் போனார்கள். சமீபத்தில் அருந்ததிய மக்களுக்கு மறுபங்கீடு கேட்டு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியை பல தலித் தலைவர்கள் அவதூறு செய்தது இந்தப் பின்னணியில் தான்.
தலித் மக்கள் விடுதலை அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதில் மட்டும் தான் உள்ளது என்று கற்பிதம் செய்தனர். வால் கைமாறும் போதுதான் வரலாறு கைமாறும் என்று உணர்வு முழக்கமிட்டு தேர்தலை சந்திக்க புறப்பட்டனர். தலித் மக்களின் இயற்கை கூட்டாளிகளான கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக அவர்களை திருப்பினர்.
இதற்கு சிறந்த உதாரணம் கன்ஷிராம் அரசியல்.பாபாசாகேப் அம்பேத்கர் இயக்கத்தின் அடித்தளமாக இருந்தவை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். ஆனால் கன்ஷிராம் அரசியல் மற்றும் பண பலத்தைத் தவிர வேறெதுக்கும் மதிப்புக் கொடுத்ததில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய ஆதங்கமும், ஒடுக்கப்பட்டோருக்கு எதிராகக் குற்றமிழைப்போர் மீதான கோபமும் அம்பேத்கர் பேச்சுகளில் கொப்பளிக்கும். ஆனால் கன்ஷிராம், தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் இந்த விஷ யங்களில் வரம்பு மீறாமல் பார்த்துக் கொண்டார்.ஒரு மாற்றுக் கருத்தாகக் கருதினாலும் மார்க்ஸ் பற்றியும் மார்க்சியம் பற்றியும் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் கூட்டங்களில் குறிப்பிடாமல் இருந்ததில்லை. கன்ஷிராம் மொத்தமாக மார்க்சியத்தை ஒதுக்கித் தள்ளினார். தலித் பிரச்சினைகளுக்கு வடிவம் கொடுக்க அம்பேத்கர் போராடினார். கன்ஷிராம் அவற்றை ஏற்கவுமில்லை, அவை குறித்து தனது இறுதி நாள் வரை கவலைப்படவுமில்லை.
கன்ஷிராமின் நகலாகவே தமிழகத்தில் சில தலித் தலைவர்கள் வலம் வருகின்றனர்.அம்பேத்கரின் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் அல்லது அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்க அமைப்பாளர்கள் அவரை இப்படிதான் சித்தரித்தன.
அவர் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர், இந்தியாவின் தற்போதைய நிலைக்குக் காரணமானவர், போதிசமத்துவர், அரசியலமைப்பு ஆய்வாளர், அடிமை மக்களின் மீட்பர், பாதுகாவலர், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர், தாராள ஜனநாயகவாதி, கம்யூனிச எதிர்ப்பாளர், சமூக நிர்மாணி, சீர்திருத்தங்களில் நம்பிக்கை கொண்டவர், புரட்சிகளை விரும்பாதவர்.குட்டி முதலாளித்துவ பார்வையில் உருவாக்கப்பட்டதால் தலித் இயக்கம் முழுக்க முழுக்க தலைமை சார்ந்ததாகி விட்டது. சுரண்டலற்ற, அநீதியற்ற, மோசடியில்லாத மனித சமூகத்தை உருவாக்குவதற்கு வழியைக் காண வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவு தலித் இயக்கங்களில் அபூர்வமாகவே பிரதிபலிக்கிறது.
சமீபத்தில் ஒரு புத்தக வெலியீட்டு விழாவில் பேசிய அம்பேத்காரிஸ்டு ஒருவர் சாதியை ஒழிக்க ஒரே வழி அனைவரும் புத்தமதத்திற்கு வாருங்கள், இதுதான் இறுதி தீர்வு என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார். இவர் மட்டுமல்ல அமபேத்கரை பின்பற்றும் பலரும் இதையே கூறுகின்றனர். இந்து மதம் இருப்பதால் தான் தீண்டாமையும், ஒடுக்கு முறையும் இருப்பதாகவும் அந்த மதத்திலிருந்து அனைவரும் வெளியேறி விட்டால் இவைகளுக்கு முற்றுபுள்ளி வைத்து விடலாம் என்பதுதான் இவர்கள் வாதத்தின் சாரம். இந்துமதம் தீண்டாமையை தனது உயிர் மூச்சாக கொண்டுள்ளது என்பது உண்மையே இதை ஒழிக்க மற்றொரு மதம் தீர்வாகுமா என்பதுதான் கேள்வி.
மற்ற மதங்களைப் போல் புத்தமதத்தில் சடங்குகள் இல்லை, கடவுள்கள் இல்லை, உயிர் போன்ற நிலை பொருள் எதுவும் இல்லை, வாழ்க்கைக்கு நடைமுறை சார்ந்த நெறிகளை மட்டுமே கூறுவது இது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும் நடைமுறையில் எல்லா சடங்குகளும் உள்ளன. சொல்லப்போனால் சில நேரங்களில் இந்து மதத்தையும் மிஞ்சும் அளவில் கூட இவை சென்றுவிடுகின்றன. புத்தரை மட்டுமல்ல டாக்டர் அம்பேத்கரையும் கடவுள் நிலையிலிருந்து விட்டு வைக்கவில்லை. பீம் பகவான் என்றனர்.புத்த மதம் அது தோன்றிய காலத்தில் முற்போக்கானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பார்க்க மறுப்பது, மதம் கடவுள் என்ற கருத்தாக்கங்கள் வந்து விட்டாலே, அதனுடன் நம்பிக்கை நம்பிக்கையின்மை, கீழ்படிதல், கேள்வி கேட்காமல் பின்தொடர்தல் போன்ற கருத்து முதல்வாத கருத்துக்களும் இணைந்தே வருவது தவிர்க்கமுடியாது என்பதுதான்.
ஆன்மீகவாதியான அம்பேத்கர் உலகில் உள்ள பிரச்சினைகளுக்குரிய மூல காரணங்கள் மனிதர்களுக்கு உள்ளேதான் இருக்கின்றன என்றும் இதற்கு தீர்வுகாண அகத்தூய்மை வேண்டும் என்றும் கண்டறிந்தார். போதுமென்ற மன நிறைவை அடையும் நிர்வாண நிலைதான் இதன் சாரம், பொருளாதாரச் சுரண்டலுக்கெதிரான தலித் மக்களின் போராட்டங்கள்தான் உண்மையான தீர்வு என்றாலும் இவையெல்லாம் பயனற்றவை என்ற கருத்தை அது போதித்தது.
மார்க்சியத்தை எதிப்பவர்கள் அம்பேத்கரின் இந்த பகுதிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். புத்தமதத்துக்கு மறு விளக்கம் தரவும் சீர்திருத்தவும் அம்பேத்கர் செய்த முயற்சிகளை முழுவதும் மறந்து விட்டனர். அதனால்தான் தன்னை நாத்திகனாக அறிவித்துக் கொண்ட, மதம் என்பது சமூக, பொருளாதார சுரண்டலுக்கு எதிராக மக்களை போராட அழைக்காது என்று பிரகடனம் செய்த மாவீரன் பகத்சிங்கை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.
ஆனால் இன்றையச் சூழலில் அம்பேத்கரை முற்போக்கு இடதுசாரி அரசியலுடன் அடையாளம் காண வேண்டியது அவசியம். அவரையும் அவரது கருத்துக்களையும் அவர் வாழ்ந்த காலத்தின் பின்னணியுடன் புரிந்துக் கொள்வது அவசியம்.
- சீர்திருத்தவாதிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் மேற்கத்திய பாணியில் வளர்ச்சி காண விரும்பினார்கள்.
- இந்திய முதலாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய செல்வாக்கின் கீழ் சுயாட்சி கோரியது.
- தீவிர தேசியவாதிகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்துக்கு எதிரான விடுதலைக்கு ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.
- இந்தியாவில் தொழிலாளி வர்க்க புரட்சியை நடத்த கம்யூனிஸ்டுகள் முயற்சி செய்தார்கள்.
- முஸ்லீம் லீக் முஸ்லீம்களுக்குகென்று தனியாக ஒரு முன்னணியை துவக்கியது.
இந்த புரிதல்களின் பின்னணியில்தான், மற்ற இயக்கங்கள் தேசப்பிரச்சினையை பன்முகத்தன்மையுடன் அணுக முயற்சித்தபோது, மற்றவர்களால் குறிப்பிட்டு கவனம் செலுத்தமுடியாத ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமான சாதிய பிரச்சினைகளுக்கு அம்பேத்கர் முன்னுரிமை கொடுத்தார்.
அன்றைய சூழலில் அவர் செய்தது மகத்தான பணியாகும்.அவருக்கு ஒரு கனவு இருந்தது. சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் என்ற லட்சியம் அவர் முழக்கமாக இருந்தது. அரசியல் நிர்ணய சபையில் அவர் இணைவதற்கு முன்னால் அனுப்பிய மனுவின் சாரம் இப்படி கூறுகிறது, அரசுகளும் சிறுபான்மையினரும் என்ற அவர் நூலில் இது பதிப்பிக்கப்பட்டுள்ளது.
- முக்கியமான பணிகளும், தொழிற்சாலைகளும் தேசம் சார்ந்ததாய் இருக்க வேண்டும்.
- காப்பீட்டுத்துறை அரசுடைமையாக இருக்க வேண்டும், அனைத்து மக்களுக்கும் காப்பீட்டு திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- தனியார் துறையும் தொழிற்சாலைகளும் பொருளாதாரத்தில் பங்குவகிக்க வேண்டும். ஆனால் அது ஆதிக்கம் செலுத்தக்கூடாது.
- நிலம் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும், கூட்டுறவுக் கொள்கை அடிப்படையில் பயிர்ச் சாகுபடி கூட்டுறவு முறையில் நடத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும்.
இந்த சாரம்சங்களுக்கு எதிராக இன்று ஏகாதிபத்தியம் பல தளங்களில் பணியாற்றி வருகிறது. ஏகாதிபத்தியம் தனக்கு எதிரான போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய, தனது அதிகாரங்களை கேள்விக்குள்ளாக்கும் சக்திகளை பலமிழக்கச் செய்ய, எதிர்ப்புச் சக்திகளை தனித்தனி பின்னங்களாக பிரிக்க நினைக்கிறது, அதன் ஒரு பகுதிதான் தனக்காக தான் மட்டுமே போராட வேண்டும் என்ற சிந்தனை.
சாதிப் பிரச்சினைகளை முதலில் எடுக்க வேண்டும் என்பதும், இல்லையில்லை வர்க்கப் போராட்டம் நடந்தால் தானே சரியாகும் என்பதும் அதன் சாயல்தான். ஆனால் இந்தியாவில் இடதுசாரிகள் இவ்விரண்டையும் இணைத்து நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சியாளர்களையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து நடத்தும் போராட்டமே சாத்தியம் என்ற பாதையில் செல்லுகின்றனர். அதற்கான விவாதங்களை நடத்துகின்றனர். அவர்களுடன் தலித் மக்கள் கைகோர்த்து நடப்பதுதான் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு விளக்கமளிப்பதாகும்.
(“அம்பேத்கருக்கு பிந்தைய தலித் இயக்கங்கள்” நூலைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது.)
----------------------- ஏப்ரல் ௨00௮

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark