மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


தமிழக - கர்நாடக எல்லையில் கொத்துக் கொத்தாய் நடந்த கொடூரமான சாராயச் சாவுகள் இதயம் படைத்த அனைவரையும் உலுக்கிய சம்பவமாகும். தமிழகத்தில் நடந்த சாராயச் சாவுகள் தொடர்கதை என்றாலும் இம்முறை மரணம் சில நூறுகளை எட்டியது மிகவும் அதிர்ச்சிகரமானது.
இதே கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாராயச் சாவுகளில் 50க்கும் மேற்பட்டோர் இறந்ததும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன் 40க்கும் மேற்பட்டோர் இறந்ததும் மக்கள் நினைவலைகளில் வந்து செல்லும் மறக்கமுடியாத சம்பவங்கள். சாராயச் சாவுகள் நடப்பதும் பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் எழுதுவதும், வார, மாத பத்திரிக்கைகள் கவர் ஸ்டோரி எழுதுவதும், அரசு சாராயத்தை ஒழிக்க சபதம் செய்வதும், காவல்துறை பாய்ந்து சென்று பலரைக் கைது செய்வதும், விசாரணைக் கமிஷன் அமைப்பதும் வழக்கமான நாடகத்தின் சுவரசியமான காட்சிகள்.
இம்முறை கூடுதலாய் ஆங்கிலம் மற்றும் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்து இடையிடையில் விளம்பரங்களை காட்டினர். சாராயச் சாவுகள் இரண்டு வகையில் தமிழகத்தில் நடந்து வருகிறது. ஒன்று சாராயம் குடிப்பதால் இறப்பது, மற்றொன்று சாராயம் விற்கக் கூடாது என்று சொல்வதால் கொலை செய்யப்படுவது.
மொத்த சாவுகள்: சமீபத்தில் தமிழக _ கர்நாடக எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல கிராமங்களில் சாராயம் குடித்த மக்கள் மரணமடைந்தனர். எப்போதும் போல இப்போதும் தமிழகக் காவல்துறை அதிகாரிகள் இந்தச் சாராயம் கர்நாடகாவிலிருந்து வந்தது என்றும், கர்நாடகக் காவல்துறை அதிகாரிகள் இது தமிழகத்திலிருந்து வந்தது என்றும் பேட்டி கொடுத்துள்ளனர். கிருஷ்ணகிரியில் விற்கப்பட்ட சாராயம் கர்நாடகத்திலிருந்து வந்தது எனில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களில் விற்கப்படும் சாராயம் எங்கிருந்து வந்தது என்று சொல்ல வேண்டாமா? நல்ல வேலை காவிரி தண்ணீரில் மிதந்து வந்தது என்று சொல்லாமல் விட்டார்களே.
வாழ்க்கை நடத்துவதற்கான சூழல் அருகிவரும் சூழலில் பிழைப்புக்கான லாபம் கொழிக்கும் தொழிலாக சாராயம் விற்பது தொடர்ந்துக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அரசியல்வாதிகள், காவல்துறை, சமூகவிரோதிகளின் கூட்டுத் தொழிலாக சாராய விற்பனை நடந்துவருகிறது. அதில் கிடைக்கும் கொள்ளை லாபம்தான் உண்மையான குற்றவாளிகள் தொடர்ந்து தப்பிக்க உதவிவருகிறது.
சாராய வியாபாரிகளிடம் சிறைச் சாலைக்கு செல்வதற்கென்றே கொஞ்சம் அப்பாவிகள் இருப்பார்கள். மாதா மாதம் காவல்துறையினர் வந்து கைது கணக்குக் காட்ட அவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளுவார்கள். 15 நாள் கழித்து கைது செய்யப்பட்டவர்கள் வெளியே வந்ததும், அடுத்த குழு தயாராக இருக்கும். இப்படிச் சாராய வியாபாரிகளுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் காவல்துறை செயல்படுவதால் மாதாமாதம் அவர்கள் “மாமூல்’’ வாழ்க்கை பாதிக்கப்படாமல் சென்று கொண்டுள்ளது.
மிக்கப் பணம் படைத்தவர்கள் பெரிய பெரிய கிளப்புகளிலும், கொஞ்சம் பணம் இருப்பவர்கள் டாஸ்மாக் கடைகளிலும் தஞ்சம் அடைகின்றனர். அன்றாடம் அல்லல்படும் சாதாரண கூலித் தொழிலாளிகள் நாடும் இடம், ஒவ்வொரு ஊரிலும் இருட்டுச் சந்துகளிலும், மூத்திரச் சந்துகளிலும் இருக்கும் இந்த சாராயக் கடைகளைத்தான். சாராயப் பாக்கெட்டுகள் குறைந்த விலை என்பதால், அதிக வாடிக்கையாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, எந்த தயாரிப்பு மிகவும் போதை நிறைந்தது என்ற போட்டியில், போதை தரும் பல பொருட்கள் மக்கள் உடல்மீது பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த புதிய பரிசோதனை தோல்வி அடையும் போது இப்படி கொத்துக் கொத்தாய் மரணங்கள் நிகழ்கின்றன.
இந்த அப்பாவி உழைக்கும் மக்களின் மரணத்திற்கு, எந்த சமூக அமைப்பு காரணம் என்று புரிந்து கொள்ளாத சில அறிவுஜீவிகள் “இவன் ஏன் போய் குடிக்கனும், குடிச்சதாலதான செத்துப் போயிட்டான், இதுக்கு யார் என்ன செய்வது’’ என்று குளிர்சாதன வசதி செய்யப்பட்ட மதுவிடுதியில் அமர்ந்து விவாதம் நடத்துகின்றனர். மக்களுக்காக வெளிநாடுகளில் வசூல் செய்து “பிராஜக்ட்’’ போட்டு வேலை செய்யும் அரசு சாரா அமைப்புகள் இப்பகுதி மக்களை சுத்தமாய் கண்டுகொள்ளவே இல்லை.
ஒரு வேலை மேலே சொன்ன மனநிலையில்தான் இவர்களும் உள்ளனரா என்று தெரியவில்லை.
குறிவைத்து தாக்குதல்: சாராயத்தால் பாதிக்கப்பட்டு ஏமாற்றமாய் மக்கள் மரணமடைவதைத் தடுக்க வேண்டும், இதனால் ஏற்படும் சமூக அவலங்களை தடுக்க வேண்டுமென்று செயல்படும் சமூக அக்கரை கொண்டவர்களை கள்ளச்சாராய சமூக விரோதிகள் காவல்துறை ஆசியுடன் படுகொலை செய்வது மற்றொரு வகை மரணங்களாகும்.
1999ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊழியர்கள் குமார் மற்றும் ஆனந்தன் கடலூர் புதுப்பாளையத்தில் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் கொலை செய்யப்படும் சில தினங்களுக்கு முன்பு பேசினார், “கள்ளச்சாராய வியாபாரிகள் மீது காவல்துறையின் தோட்டாக்கள் பாயும், கள்ளச் சாராயத்தை தடுப்பவர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டுவேன்’’ என்று. ஆனாலும், சாராயத்தைத் தடுக்க நினைப்பவர்கள், அதை காவல்துறைக்குக் காட்டிக் கொடுப்பவர்கள் கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. தொடர்ந்து இச்சம்பவங்கள் நடத்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் சேலம் சிவக்குமார் மற்றும் திருவாரூரில் இரண்டு பேர் கள்ளச் சாராயத்தை எதிர்த்த காரணத்தால் படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறையிடம் கள்ளச்சாராய வியாபாரிகள் குறித்து, கொடுக்கப்படும் மனு அடுத்த நொடி வியாபாரிகளின் கையில் இருக்கும் கேவலமான வேலையை காவல்துறையினர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் மாமூல் கொடுக்கும் முதலாளிகளைக் காட்டிக் கொடுக்கும் அல்லது கைது செய்யும் மனம் அவர்களுக்கு எப்படி வரும்.
இன்று தமிழகத்தில் எந்த ஊருக்குச் சென்றாலும் சாராய வியாபாரம் மிகவும் சுறுசுறுப்பாய் நடப்பதை காண முடியும். ஆனால், காவல்துறையினர் இல்லவே இல்லை என்று சாதிப்பார்கள்.
சாராய தொழிலை நம்பி இன்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். கல்வியைப் போல சாராய வியாபாரமும் இன்று லாபகரமாய் இருப்பதனால் அதைவிட மனம் இல்லாமல் அதிலேயே வட்டமிடுகின்றனர். சாராயச் சாவுகளையும், அதை எதிர்ப்பவர்கள் படுகொலை செய்யப்படுவதும் எப்போது நிற்கும்? சாராயத்தை ஒழிக்க அரசு தீவிர கவனம் செலுத்துவதும், காவல்துறையை ஒழுங்குபடுத்துவதும், குடிப்பவர்கள் மனநிலையை மாற்ற ஒருங்கிணைந்த தொடர் பிரச்சாரமும் அவசியம். இதற்றெல்லாம் முன்னதாக தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். வாழ்க்கைக்கான எவ்வித ஆதாரமும் இல்லாத இளைஞர்கள் பணம் சம்பாதிக்க எளிய வழியான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது எதிர்கால இந்தியாவைப் பாதுகாக்கும்.
தென் மாவட்டக் கலவரங்களை ஆராய்ந்து நீதிபதி மோகன் கூறியதை நினைவுபடுத்திக் கொள்வது அவசியம் “இந்தக் கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம் சாராயமும், வேலையின்மையும்’’ இந்த இரண்டையும் ஒழிப்பது அவசியம் அவசரக் கடமையும் கூட.
அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தாமல் ஒவ்வொரு முறை மரணங்கள் நிகழும்போதும், நாடகம் நடத்துவது மீண்டும் நடக்க இருக்கும் மரணங்களின் போது என்ன செய்வது என்பதற்கான ஒத்திகையாகவே இருக்கும். எனவே, கிருஷ்ணகிரி சாராய மரணங்களுக்கு இந்த அரசு உண்மையில் கவலைப்படும் என்றால், மீண்டும் நிகழாமல் தடுக்க ஆவல் கொண்டுள்ளது என்றால், தேவை அடிப்படை மாற்றம், நேர்மையான அர்ப்பணிப்பு என்பதை மறுக்கக் கூடாது!

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark