மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

“டேஞ்சர் ஸ்கூல்” - நூல்அறிமுகம்

நிசப்தம் நிலவும் சூழல், மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் பறக்கும் வண்ணத்துப் பூச்சியை ஜன்னல் கம்பிகளின் வழியே பார்க்கலாம், அதை பிடிக்க வேண்டு என்று மனம் பரபரத்தாலும் ஓடிப் பிடிக்க முடியாது. சுற்றிலும் சுவர்கள், சுவர்களுக்கு அப்பால் கூவும் இனிமையான குயில்களின் ஓசையை கேட்க மட்டுமே முடியும்.
யாரோடும் கருத்துப் பரிமாற முடியாது. சுவற்றின் மூலையில் மீண்டும், மீண்டும் முயற்சி எடுத்து வலைப் பின்னும் சிலந்தியை வாழ்க்கையில் முதன் முதலாக பார்க்க நேரிட்டாலும் அதை கவனிக்க முடியாது.
பேச அனுமதியற்ற நிலை, கண்காணிப்பாளர்கள் உண்டு. சிறுநீர் கழிக்க வேண்டுமெனில் அனுமதி அவசியம், மணியடித்தால் மட்டுமே மதிய உணவு உண்ணமுடியும். கட்டமைக்கப்பட்ட விதிப்படிதான் எல்லாம் நடக்கும். விதிமுறைகளை மீறினால் தனிமைப்படுத்தப் படுவீர், தண்டனைகளும் உண்டு. இதைப்படிக்கும் போது சிறைச்சாலை நினைவுக்கு வந்தால் தவறு உங்களுடையது அல்ல..
கல்விநிலையம் குறித்தே எழுதப்பட்டுள்ளது என்று சொல்லும் போது கோபப்பட முடியவில்லை என்றாலும் அப்படியே.. ஒருவேலை சிறைச்சாலையுடன் ஒப்பிட்டு பேசுவது கொஞ்சம் அதீதமாய் தெரியலாம். கீழ்க்காணும் ஆராய்ச்சி முடிவுகள் உங்களை வேறெந்த முடிவுகளையும் எடுக்க வைக்காது என்பது நிச்சயம்.
“குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மனதின் சமநிலை பாதிக்கப்படுவதற்கும், மூளைக்குழப்ப நோய் ஏற்படுவதற்கும் பள்ளிக்கூடங்களே முக்கியக் காரணமாக உள்ளன. பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் எப்போதும் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர், அல்லது பதில் எழுதிக்கொண்டிருக்கின்றனர், அல்லது தேர்வு எழுதிக்கொண்டிருக்கின்றனர், அல்லது கௌரவமான ஆசிரியர்கள் ஒழுக்கத்தைப் போதித்துக்கொண்டிருக்கிறார்கள், அங்கு உடல் உறுப்புகளுக்கு வேலை கிடையாது, அங்கு சுத்தமான காற்று கிடையாது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் வாங்குவதையே எதிர்பார்க்கிறார்கள், மாணவர்களுக்குள்ளும் தாம் முதல் மாணவனாக வருவதில்தான் போட்டி.
இவை எல்லாமும் சேர்ந்து குழந்தைகளிடம் நரம்புத்தளர்ச்சியை உருவாக்குகிறது. உள் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்கிறது. அவர்களை நிரந்தர பதற்றத்தில் வைத்திருக்கிறது. தலைவலி, செரிமானக் கோளாறு, குடல் அழற்சி, நெஞ்செரிச்சல் மற்றும் தோல் நோய்கள் போன்றவை மீண்டும், மீண்டும் ஏற்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் விடுமுறைக் காலத்தில் மாயமாய் மறைந்து விடுகின்றன.
எனவே குழந்தைகளுக்கு பதற்றநிலை நீடிக்கும் ஒவ்வொரு நாளும் நரம்பு மண்டலம் மேலும் பாதிப்படைகிறது. தொடந்து உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை, மந்த நிலைமை, சவலைநோய், உள் உறுப்புகள் சிதைவு போன்றவை ஏற்படலாம். புதிய சவால்களை சமாளிக்கும் திறனும் குறையும். இத்தகைய மோசமான நிலைமை ஒவ்வொரு மாணவ - மாணவிக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.”
இத்தகைய சூழலில் வளரும் ஒரு குழந்தையை கைதியுடன் ஒப்பிடாமல் வேறு எப்படி உருவகம் செய்வது. இத்தகைய கல்வி நிலைய சூழலை மாற்றுவது எப்படி என்று, சிந்தனை முகாமில் விவாதங்கள் நடக்கட்டும். ஆனால், மாணவர்களுக்கும் தங்களுக்கும் மத்தியில் இருக்கும் இடைவெளியை ஆசிரியர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அந்த இடைவெளியை அகற்ற ஆசிரியர் உணர்வுப் பூர்வமாக செயல்பட வேண்டும். அதேபொழுது மாணவர்களின் பண்பாட்டு நிலவரத்தை உயர்த்தவும் ஆசிரியர் உணர்வுப் பூர்வமாக முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாண்வர்களுக்கு புத்தறிவைப் போதிக்கும் ஆசிரியரால் மாணவர்களை சொந்தக் காலில் நிற்கக்கூடிய முழு மனிதர்களாக அவர்களை வளர்த்தெடுக்க முடியும். அதாவது மாணவர்களுக்கு தற்போதில்லா அறிவைப் புகட்டும் ஆசிரியர்கள் அவர்களைச் சொந்தக் காலில் நின்று, சிந்தித்து, விஷயங்களைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் மிக்கவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும்.
உலகப் புகழ் பெற்ற சிந்தனையாளர் கிராம்ஷியின் சிந்தனை தொகுப்பின் சாரம்தான் மேலே சொல்லப்பட்ட ஆசிரியர்கள் குறித்த சிந்தனைகள். இந்த சிந்தனைகளுக்கும் தற்போதைய ஆசிரியர்கள் பயிற்றுவிப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
“வள்ளலார் கல்விசேவை மையம்” என்ற பெயரில் கடலூரில் இயங்கி வரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்ற அமைப்பின் இரவு பாடசாலை ஆசிரியர்கள் பயிற்சி முகாமில் இப்படி ஒரு கேள்வி எழுப்பப் பட்டது.
நமது கல்வி நிலையத்தின் தோல்வி எங்கு துவங்குகிறது?
பலரும் (அதாவது, பயிற்சிமுகாமின் பயிற்ச்சிக்கு வந்த பயிற்சியாளர்கள் உட்பட) பலவிதமான பதில்களை சொன்னார்கள். ஆனால் குறிஞ்சிப்பாடிக்கு அருகே உள்ள கல்குனம் என்ற கிராமத்தை சார்ந்த, தன்னார்வ தொண்டராய் உள்ள (இவர் தொழில் கூலி விவசாயம்) 10ம் வகுப்பு மட்டுமே படித்த ஜான்சி சொன்னார்
“மாலையில் பள்ளியின் கடைசி மணியோசை கேட்டதும், மாணவர்கள் விடுதலை உணர்வுடன் ஓடி வருகிறார்களே, அதுவே கல்விநிலையத்தின் தோல்வி” என்று.
ஒரு வேலை இந்த கேள்வியும், அதற்கான பதிலும் அர்த்தம் பொதிந்ததா அல்லது அர்த்தமற்றதா என்று கல்வியாளர் விவாதிக்ககூடும். ஆனால் இப்படி விவாதத்திற்கு உரிய கேள்விகளை, எல்லாம் விபரமும் தெரிந்த, அறிவு நிறைந்த, கல்வியாளர்களும், பண்டிதர்களும் புறக்கணிக்க முடியாது. ஆனால் இன்று பெரும்பான்மையான பள்ளிகளில் உழைப்பாளி மக்களின் பிள்ளைகள் மட்டுமே தோல்வி அடைந்து வெளியேறுவது ஏன் என்ற கேள்வியுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி இது.
நமது தேசத்தின் கல்வி குறித்தும், கல்வி நிலையம் குறித்தும் இதுவரை ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளது. ஆனால் கல்வியும், கல்வி நிலையமும் உலகம் முழுவதும் ஒரேவித அரசியலையும், ஒரேவித வர்க்கச் சார்புடனுமே செயல்படுகின்றன அல்லது செயல்படுத்தப் படுகின்றன. அதனால் தான் இத்தகைய அமைப்பு முறை தோல்வியை ஏற்படுத்துகிறது. என்று விவாதிக்கின்ற புத்தகம் இது.
“டேஞ்சர் ஸ்கூல்”. ஏன் இந்த பெயர் என்றால், நீங்கள் கோபப்பட வேண்டும் என்றே திட்டமிட்டு சூட்டப்பட பெயர் இது. இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழுவின் சார்பில், பாரதி புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ளது, தமிழக கல்விச் சூழலில் அவசியமாக விவாத்திற்கு உட்படுத்த வேண்டிய நூல் இது.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark