மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

விடுதலைப் போரில் பெண்கள் - 11


                முதல் இந்திய விடுதலைப் போராட்டம் இரத்தத்தால் மூழ்கடிக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே நிசப்தங்கள் நிலவின. ஆனாலும் போரட்ட வடிவங்கள் மாறி மாறி எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்தன. இந்திய மக்களின் விடுதலை ஆவேசத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில்தான் அவர்களது குறைகளை பிரிட்டிஷ் அரசுக்கு எடுத்துரைக்க, விண்ணப்பம் கொடுக்க 1885ல் காங்கிரஸ் இயக்கம் துவக்கப்பட்டது. துவக்கத்தில் இவர்கள் மனுக்களை கொடுத்து வந்தாலும் இந்த இயக்கத்தில் மேலும் மேலும் மக்கள் இணையத் துவங்கியதும் அந்த அளவு மாற்றம் குண மாற்றத்தை கொண்டு வந்தது. அப்படி இணைந்தவர்களில் லண்டனில் பிறந்த ஒரு பெண் இந்த இயக்கத்தின் அகில இந்திய தலைவராக உயர்ந்த கதையும் நடந்தது. அவர்தான் அன்னிபெஸன்ட் அம்மையார் ஆவார். அவரது கருத்துக்களில் நமக்கு நிறைய முரண்பாடு இருந்தாலும் அவரது தியாக உழைப்பை, போரட்ட குணத்தை போற்றாமல் இருக்க முடியாது. 

                முதல் விடுதலைப் போராட்டத்திற்கு 10 ஆண்டுகள் முன்பு இந்தியாவுடன் புவியியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில், ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும் போது தந்தையை இழந்தார். அன்னை ஹரோ நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். அன்னி தனது 19வது வயதில் 1867 ஆம் ஆண்டில் பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது மத குருவை மணந்தார். டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. கனவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவருடன் இணைந்து வாழ்வதை சிக்கலாக்கியது. பெண்ணுக்கு ஏற்பட்ட நோயும் அவரது வாழ்வியல் சூழலும் அன்னிக்கு கடவுள் மீதான அவநம்பிக்கையை விதைத்தது. கணவர் பெசண்ட், மனைவியை கோயிலுக்குச் செல்லும் படியும், கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். இதற்கு உடன்பட முடியாமல் சிக்கல்கள் அதிகமாக, 1873 இல் பிரிந்து வாழ முடிவெடுத்தார்.

                கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் எழுதுவதிலும் சமூகப்பணிகளிலும் நிறைய கவனம் செலுத்தினார். இந்த சமயத்தில் அவருக்கு மார்க்சிய அறிஞர்களின் நட்பு கிடைத்தது. துவக்கத்தில் சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். அவரது அரசியல் செயல்பாடு அதிகரிக்கத் துவங்கியது. குடும்பத்தில் இனி இணைய முடியாத சூழல் முற்றியது இறுதியாக கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். அதிகாரபூர்வமாகப் பிரிவினை கிடைக்கவில்லை. இரண்டு குழந்தைகளும் பிராங்கின் பொறுப்பிலேயே இருந்தனர்.

                இதற்கிடையில் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரப் படிப்பைத் தொடர்ந்தார். மூடப் பழக்க வழக்கங்களுக்கெதிராகப் பிரச்சாரங்களை துவக்கினார். இது அவரது மத சமூகத்தினரின் மத்தியில் நிறைய எதிர்ப்புகளை உருவாக்கியது. "நியூமால் தூசியன் அமைப்பு" என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார் அன்னி பெசண்ட். நாடாளுமன்ற அங்கத்தினர்கள் கடவுளின் பெயரால் சத்தியம் செய்யத் தேவையில்லை என்று வற்புறுத்தி கூட்டங்களில் பேசினார். "லிங்க்" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

                இப்போதுதான் அவருக்கு பிரும்மஞான சங்கம் என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் 1889 ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் ஆன்மீகம் சார்ந்த மாறுதலை ஏற்படுத்தியது. பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். 1891 இல் பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து பிரும்மஞானத்தில் ஒரு முக்கிய புள்ளியானார் அன்னி பெசண்ட். அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் இடம் பெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார்.

1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். சபையின் அமெரிக்கக் கிளையின் தலைவரான வில்லியம் ஜட்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மீதமிருந்த சபை ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் என்பவராலும் அன்னி பெசண்டினாலும் தலைமை வகிக்கப்பட்டது.

                இந்தியா வந்த அன்னி பெசண்ட், சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து மதம் சார்ந்த பல நூட்களை ஆழ்ந்து படித்துப் பல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். காசியில் சில காலம் வசித்த அன்னி பெசண்ட். இந்திய உடை தரித்து வாழலானார்.

                இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடந்த பல போராட்டங்களை படித்தும், நேரில் பார்த்தும் வளர்ந்ததால் ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக 'காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலில் களம் இறங்கினார்.

                1907 ஆம் ஆண்டில் சூரத் நகரில் நடைபெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் பிளவு ஏற்படும் அபாயம் வந்தது. அதைத் தவிர்க்க முயன்றவர்களில் இவரும் முக்கிய பங்கு வகித்தார். இந்தியர்களின் தன்மானத்தை தட்டி எழுப்ப ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கினார். அதுவரை இந்தியாவில் யாரும் பூரண சுதந்திரம் என்ற கோஷத்தை முன்வைக்கவில்லை. இவரும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட சுயாட்சியே கோரினார். நாடு முழூவதிலும் அதன் கிளைகள் உருவாயின. விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்ய நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

                மக்கள் திரண்டபோது ஆட்சியாளர்கள் இவரது இயக்கத்தை உற்று கவனிக்கத் துவங்கினர். அன்னி பெசண்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917, ஜூன் 15 ஆம் நாள் ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசண்டையும் கைது செய்தது. இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியன சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக அறிவித்தன. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.

                டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார். வெளிநாட்டில் பிறந்து இந்திய மக்களின் விடுதலைக்காக போராடிய அந்த பெண்மணிக்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரம் இது. இதற்கிடையில் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் ஆங்காங்கே வளர்ந்து வந்தனர். தொழிற்சங்க இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வந்தன. 1885ம் ஆண்டு துவக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி வைக்க யோசிக்காகத் ஒரு கோரிக்கையை கம்யூனிஸ்டுகள் முதன்முதலில் முன் வைத்தார்கள். அந்த கோரிக்கை இந்தியாவிற்கு பூரண விடுதலை என்பதாகும். வேறு வழி இல்லாமல் காங்கிரசும் இக்கோரிக்கைக்கு வந்தது.

                1929 இல் லாகூரில் ஜவகர்லால் நேருவின் தலைமையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது. எழுந்து வந்த சோசலிஸ சிந்தனைகள் காங்கிரசையும் விட்டு வைக்கவில்லை. சோசலிச சார்பாக கருத்துக்களை காங்கிரஸ் வெளியிட்டமை அன்னி பெசண்டின் கொள்கைகளுக்கு உரியதாக இருக்கவில்லை. இதனால் அவர் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரவில்லை. காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முன்போலவே ஈடுபாடு காட்டி வந்தார். இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் நாட்டிற்கும் பயணம் மேற்கொண்டு அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாக பொது மேடைகளில் உரையாற்றினார். தனது நாடு அடிமைப்படுத்திய மற்றொரு நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களில் அன்னிபெஸன்ட் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

                தனது 81வது வயதில் தீவிர அரசியலில் இருந்து விலகினார். 1937 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சென்னையில் உள்ள அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். அன்னி பெசண்ட் அமைத்த பிரும்மஞான சபை சென்னை அடையாறில் உள்ளது.


0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark