மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!
கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி சிதம்பரம் நகரில் உள்ள தமிழ் சுவிஷேச லூர்தன் திருச்சபை பாபநாசர் பேராலயத்தில் ஒரு விவாதத்தில் பங்கேற்றேன். மதுரை அரசரடி தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் இளம்தேவியர் இளம்நிலை பட்டப்படிப்பில்  படிப்பில் நான்காம் ஆண்டு படிக்கும் 43 மாணவ மாணவிகள் இறையியல் சுற்றுலா வந்திருந்தனர். இவர்கள் வருகின்ற நாட்களில் அருள்பணி ஆயர்களாக தமிழகம் முழுவதும் பணியாற்ற போகிறவர்கள்.  
         அவர்களுடன் மதங்கள் குறித்து கலந்துறையாட அழைக்கப்பட்டிருந்தேன். "பட்டினியால் மாண்டுபோகும் மனிதனின் பசியை போக்க வழி சொல்லாத, பெண்களை எப்போதும் இரண்டாம் பட்சமாக வைக்கும், இந்தியச் சூழலில் சாதி மயமான மதங்களால் சமூகத்தில் எந்த மாற்றமும் எழாது மாறாக சச்சரவுகளே எழும்" என்ற எனது உரையினூடாக விவாதம் துவங்கியது. 

பல நண்பர்கள் வாழ்வியல் யதார்த்தத்திலிருந்து மொளனம் காத்தனர். சில நண்பர்கள் தங்களது எரிச்சலை மிக அழகான வார்த்தைகளை பயன்படுத்தி கோபத்தின் உச்சிக்கு சென்றனர். இரண்டு மணிநேரம் விவதம் நடந்தது. விவாதத்தின் இறுதிக்கட்டத்தில் வெளிவந்த இரண்டு கருத்துக்கள் இக்காட்டுரைக்கு தேவையானது. ஒரு நண்பர் சொன்னார் 
"ஏசு தேவனை எவனோடும் ஒப்பிடாதீர்கள் அவர் நிறைவேற்ற வந்த பணிக்காக தனது உயிரையே கொடுத்தவர்." 
சில நிமிட இடைவேளைக்கு பிறகு அடுத்த நண்பர்  சொன்னார் 
"பொலிவிய காட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தான் படுகொலை செய்யப்பட்ட சே குவேராவின் உடல் விழுந்த அடுத்த சில நொடிகளில் அங்கு சென்ற செவிலியரின் வாக்கு மூலம் பதியப்பட்டிருக்கிறது. அவள் சொல்கிறாள் 
"நான் அங்கு சென்ற போது ஒரு இளைஞனின் பிணம் கிடந்தது. அதை பார்க்கும் போது எனக்கு ஏசுதேவன போல காட்சியளித்தது.  
பாத்தீர்களா சே குவேரா மரணம் தேவ குமாரனைதரன் நினைவூட்டி உள்ளது என்றார்."

இந்த கருத்தை நான் மறுப்பேன் என அந்த இளம் பாதிரிகளில் பலர் நினைத்திருக்கூடும். நான் அந்த நண்பருக்கு பதில் சொன்னேன். "உண்மைதான் தனது வாழ்க்கையை மக்களுக்காக, அதன்முதற்கொண்டு தான் ஏற்றுக்கொண்ட பணிக்காக தங்களது உயிரையே தியாகம் செய்வபர்கள் ஏசு தேவன் என்றும்,  ஓரிடத்தில் மாமேதை லெனின் என்றும், மற்றோரிடத்தில் சே குவேரா என்றும், பிரிதோர் இடத்தில் காந்தி என்றும், இன்னுமோர் இடத்தில் பகத்சிங் என்றும் அறியப்படுகின்றனர். 
   ஆயிரம் பேரால் அவர்கள் அறியப்பட்டாலும் இந்த சரித்திரத்தில் அவர்கள் எப்போது நிலைத்திருப்பார்கள். உயர்ந்த மலைகளைப்போல, எங்கும் நிறைந்திருக்கும் விரிந்த கடலைப்போல அவர்கள் எப்போதும் வாழ்வார்கள் ஏனெனில் மரணமில்லா பெருவாழ்வு அவர்களது." 

ஒரு மரபுசார்ந்த கிருஸ்தவ குடும்பத்திலிருந்த வந்தவன் சே. ஆனால் சேவின் வாக்குமூலம் வேறுமாதிரியாக இருக்கிறது. 1956ல் மெக்ஸிகோலிருந்து தனது தாயாருக்கு எழுதிய கடித்தத்தில் ..............
" அம்மா, நான் கிருஸ்துவனல்ல; இரக்கப்பட்டு பிறருக்கு உதவுபவனும் அல்ல. நான் கிருஸ்துவுக்கு நேரெதிரானவன். இரக்கப்பட்டு பிறருக்கு உதவுவது எனக்கு சரியென தோன்றவில்லை. நான் நம்புகிற விஷயங்களுக்காக, எனக்கு கிடைக்கும் ஆயுதங்களோடு நான் போர் புரிகிறேன். நான் சிலுவையில் அறையப்படுவதற்கு அனுமதிப்பதற்கு மாறாக, மற்றவர்களை வீழ்த்துவதற்கே நான் முயல்கிறேன்."  

சே மீதான விவாதங்களும் அவனது வாழ்வு குறித்த அறிதல்களும், அவனது போராட்ட பாதை குறித்த விவாதங்களும் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறது. நம்பிக்கைகள் சிதைகிற காலத்தில் வாழ்கிற பெரும் இளம் தலைமுறைக்கு, நம்பிக்கைகள் பிழன்ற காலத்தில்கூட நம்பிகையுடன் வாழந்த சேகுவேராவை பற்றி அதிகம் தெரியாது. கியூப புரட்சியில் பிடலுடன் அச்சாணியாய் இருந்த போதும், பொலிவிய காடுகளில் ஆயுதங்களை இழந்த பின்பும் நம்பிகையை மட்டும் இறுதிவரை இழக்காத சே குவேராவின் வாழ்க்கை இன்றைய அரசியல் சூழலில் பாடமாய் அமைகிறது. அவனது நம்பிக்கைகள் ஆயுதங்களால் மட்டும் நிறப்பப்படவிலை. ஆனால் அப்படிதான் கதைகள் சொல்லப்படுகிறது. 

இங்குள்ள அரசியல் சூழலில் சில அறைவேக்காட்டு புரட்சியாளர்கள் மாவோ-வையும், லெனினையும், ஃபிடலையும், சேகுவேராவையும், பகத்சிங்கையும் ஆயுதங்களோடு மட்டும் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். இந்த ஆளுமைகளின் வார்த்தைகளை பொறுக்கி பொறுக்கி எடுத்து எழுதுகின்றனர். மம்தாவும் மோடியும், டாடாவும் அம்பானியும் இவர்களுக்கு நேசப்படைதான். இவர்களுக்கு வர்க்க எதிரி உழைக்கும் மக்களின் குரலை மக்கள் மன்றங்களில் ஒலிக்கும் இடதுசாரிகள்தான். லவாகமாக துப்பாக்கியை பயன்படுத்திய சேகுவேரா புரட்சியை ஆயுதங்களோடு மட்டும் சாதித்ததாக அல்லது ஆயுதங்களோடு தொடர்புகொண்டு பார்க்கப்பட வேண்டியவனாக சித்தரிக்கப்படுவது உண்மையா?  

உண்மை அதுவல்ல அவனது நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு மனிதநேய தத்துவம் இருந்தது. ஆயுதங்களை இயக்க அடிப்படையான அந்த தத்துவம்தான் மானுட விடுதலையின் மாமருந்து என அவன் ஆழ்மனதில் நம்பினான். எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என எதிரியே தீர்மானிக்கின்றான் என சொல்லி அந்த ஆயுதத்தால் எதிரியை வென்று ஆஹாவென எழுந்த யுகபுரட்சியை, குருதிக்காட்டின் வழி நெடும்பயணத்தில் பட்டினி மக்களின் எழுச்சியாய் எழுந்த சீன விடுதலையை, கிராம் எடையுள்ள ஆயுதங்களுடன் கிராண்மா கப்பலை வழி நடத்தி கியூப புரட்சியை சாதித்த அந்த தத்துவம்,  மக்கள் விடுதலை பாதைகாட்டும் மார்க்சிய தத்துவம். அதுதான் சேகுவேராவின் நம்பிக்கையின் ஆணிவேராய் இருந்தது.

மாநகர் வீதிகளில், மாடன் டீ சர்ட்டுகளில், தேநீர் கோப்பைகளில், பெருநகர் பேருந்துகளில், கம்மல் காது இளைஞர்களிடம், ஃபேஷனாக மட்டும் நிறைந்திருப்பவனல்ல சேகுவேரா, நிறம்மாறா சாலைகளில், உயர்ந்த கை கோபங்களில், மக்கள் இயங்கங்களில், பேராண்மை நெஞ்சுயர்த்தி புன்னைகைக்கும் சேகுவேராவை ஆழப்பற்றி இருக்கும் இளைஞர் கூட்டமும் இங்குதான் வீதிகளில் போராடிக்கொண்டிருக்கிறது. 

ஆகவே நண்பர்களே!  

கொடூரமான மதவெறி பிடித்த, ஆயுதமில்லா அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் கொன்றொழித்த நரேந்திர மோடியை பிஜேபி என்ற மதவாத கட்சி வருங்கால பிரதமருக்கான வேட்பாளர் என்று வெட்கமின்றி அறிவிக்க முடிகிறது. அதையும் ஊடகங்கள் கொண்டாட்டத்துடன் ஊதி பெரிதாக்கி விற்பனை செய்கின்றன எனும் போது இந்த நாட்டின் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் திகைத்துதான் போகின்றனர். சேகுவேராவை நினைப்பதென்பது அவனதுமதம் சார்ந்த பார்வையுடன் இந்த மதவாத அபாயத்தை எதிர்ப்பதுடன் இணைந்துள்ளது.

விவசாயத்தை முதன்மையாக கொண்ட இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 33 லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாய பயன்பாட்டிலிருந்து வெளியேறப்பட்டிருக்கிறது. மாணியங்கள் மடைமாற்றம் செய்யப்பட்டு விவசாயத்தொழில் முற்றிலும் சீரழிக்கப்பட்ட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதும், பல லட்சம் குடும்பங்கள் கிராமங்களிலிருந்து நகர்புறங்களுக்கு புலம் பெயர்ந்ததும், பெருநகரங்களில் கணக்கில் வராதவர்களாக வாழ்வது பெரும் வலிமிகுந்தது. தனது பயணத்தினூடாக மக்களில் வாழ்வியல் பிரச்சினைகளை புரிந்து கொண்ட சேகுவேராவை போல இம்மக்களுடன் கலந்து அவர்களுக்கான போர்களங்களை அமைப்பதுதான் அவனை புரிந்துக்கொண்டவர்கள் செயல்பாடாய் இருக்கமுடியும்.

கிடைக்கிற பத்விகளை வாய்ப்புகளை பயன்படுத்தி ஊழல், மேலும் ஊழல், இன்னும் ஊழல், மேலும் நிறைய ஊழல், இன்னும் அதிக ஊழல் செய்வதே இந்திய ஆட்சியரளர்களின் தலையாய பணியாய் உள்ளது. எங்கும் எதிலும் நிறைந்துள்ள உழலை எதிர்ப்பது அல்லது எதிர்ப்பவர்களை கொச்சைபடுத்தும் சமூக மனநிலை வளர்க்கப்படும் காலத்தில் நாம் இருக்கிறோம். தனக்கு கிடைத்து உட்சபட்ச அதிகாரம் கொண்ட பதவியை  ஒரு புன்னகை, சில கடித வரிகளால் நிராகரித்துவிட்டு முதுகில் சுமந்த ஒரு தோல்பையுடன் அடுத்த போர்களத்திற்கு சென்றவனை நீங்கள் நம்புவது உண்மையெனில் ஊழலை எதிர்த்து வீரசமர் புரிவதுதான் அவனுக்காக அஞ்சலியாக இருக்க முடியும். 

தமிழகத்தில் கிட்டதட்ட ஒருகோடி இளைஞர்களும், இந்திய நாடு முழுவதும் பலகோடி இளைஞர்களும் வேலையில்லாத பட்டாளமாய் வீதிகளில் உழன்று திரிகிறபோது அவர்களை ஒன்றுசேர விடாமல் சாதியும், இனமும், மொழியும் எப்படி மிகவும் நுட்பமாய் ஊடாடுகிறது எனன்பதையும், இந்திய முதலாளிகளும் பண்ணாட்டு முதலாளிகளும் எப்படி இந்த நெருக்கடியை தங்களுக்கு சாதகமாய பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. லத்தின் அமெரிக்க பயணத்தில் பெருவின் தொழுநோயாளிகளிடம் பணியாற்றிய போது கிருமிகள் மட்டும் தொழுநோய்க்கு காரணமல்ல அமெரிக்க ஏகாதிபத்தியமும்தான் என்ற உண்மையை கண்டறிந்த சேகுவேராவை போல சமூக உண்மைகளை கண்டு கோபத்துடன் இளைஞர் படை எழவேண்டிய தருனம்இது. 

உலக இளைஞர்களின் ஆதர்சமான சேகுவேராவின் இயங்கும் தன்மை ஆச்சரியம் நிறைந்தது. அர்ஜெண்டினவில் பிறந்து, லத்தின் அமெரிக்க நாடுகளில் நண்பனுடன் மேற்கொண்ட மோட்டார் சைக்கில் பயணம் துவங்கி  கியூப புரட்சியில் தன்னை அர்பணித்தது, காங்கோ காடுகளில் அலைந்தது, பொலியிய காட்டில் மாண்டுபோனது வரை அவன் இயங்கிக்கொண்டே இருந்தான். ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு உடலளவில் கொடுந்துயர் அனுபவித்தாலும் அவன் துவண்டுவிடவில்லை. சகமனிதர்கள் மீதான அன்பும் உலகமே மேன்மையுற வேண்டும் என்ற துடிப்பும் அவனை இயங்க வைத்தது. அந்த புரட்சியாளனிடமிருந்து கற்கவேண்டிய பல்வேறு அனுபவங்களில் ஒருசிலது இதுவே. மக்களை நோக்கிச்சென்று நாமும் உரையாடல்களை தொடரலாம் அனுபவங்களின் பலத்துடன் நீண்டதூரம் பயணிக்கலாம் தோழர்களே!

-----2013 அக்டோபர் இளைஞர் முழக்கம் இதழில் வெளியான கட்டுரை--------

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark