மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

ராஜஸ்தானில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பிடித்த பாரதீய ஜனதா, தான் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொன்டிருக்கிறது. சாலைவசதி, குடிநீர், இலவச அரிசி போன்ற வாக்குறுதிகள் என்றால் கூட சமாளித்துக்கொள்ளலாம். ஆனால், ஆட்சியதிகார வெறியை மட்டுமே கொள்கையாக கொண்டு செயல்படும் இவர்கள், தேர்தல் லாபம் ஒன்றை மட்டுமே குறிவைத்து குஜ்ஜார் இன மக்களிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது அதை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.பாரதீய ஜனதா கடந்த தேர்தலின் போது குஜ்ஜார் இன மக்களிடம் “உங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றி சலுகைகளை அள்ளி தரவேண்டுமெனில் எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று முழக்கமிட்டு அவர்களின் வாக்குகளை அள்ளி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் அந்த வாக்குறுதி குறித்து மவுனம் சாதித்ததால் கடந்த ஆண்டு அம்மக்கள் போராடத் துவங்கினர். அந்த மக்களிடம் பேச்சுவார்த்தையில் முடிக்க வேண்டிய இப்பிரச்சினையை பெரும் கலவரமாக மாற்றியது பாரதீய ஜனதா அரசு. அந்தக் கலவரத்தில் பல துப்பாக்கிச் சூடுகளை நடத்தி பலரின் உயிரை பறித்தது பாரதீய ஜனதா.

தற்போது மீண்டும் ராஜஸ்தான் பற்றி எரிகிறது. தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே பாதைகள் பெரும் போர்களம் போல காட்சியளிக்கின்றன. தினம் தினம் அங்கிருந்து வரும் செய்திகள் ஆழ்ந்த அதிர்ச்சியை உருவாக்குகிறது. இம்முறை இரண்டு நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். சுயலாபத்திற்காக குறுகிய உணர்வுகளை தூண்டிவிட்டால் என்ன விளைவு உண்டாகுமோ, அதை இன்று ராஜஸ்தான் சந்தித்து வருகிறது. ராமரைப் பயன்படுத்தி கலவரம் செய்பவர்களுக்கு எந்த கலவரம் நடந்தாலும் உவகைதான். ஆனால் அது அவர்களுக்கு எதிராக போகாமல் இருக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைப்பார்கள். அம்மாநில முதல்வர் வசுந்தரா எதைப் பற்றியும் கவலைப்படாமல் புன்முறுவலுடன் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பேட்டியளிக்கிறார்.

பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் தீர்வு மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்துள்ளது. நான்கரை ஆண்டுகால ஆட்சியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை துப்பாக்கிச்சூடுகளை நடத்தி, அதில் 80 பேரைக் கொன்ற பொறுப்பு முதல்வர் வசுந்தராவையே சாரும். இந்த கொடுமைகளுக்குப் பிறகும் முதல்வர் நாற்காலியில் அவர் அமர்ந்திருப்பது நாகரீகமல்ல. ஆனால் நாகரீகத்திற்கும் பாரதீய ஜனதாவிற்கும் என்றுமே தொடர்பில்லை என்பதை நாடு அறியும்.

இந்த நேரத்தில் ஒன்றை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். மேற்கு வங்கத்தில் மம்தா நக்சல் கூட்டனி நடத்திய வெறியாட்டங்களை அந்த அரசுக்கு எதிராக திசைத்திருப்பி, அந்த அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் வசைபாடிய, தொடர்ந்து பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்ட பத்திரிக்கைகளும், அறிவு ஜீவிகளும், மேதாபட்கர் வகையறாக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் வாய்மூடி மௌனிகளாக இருப்பது திட்டமிட்ட செயல் என்பதை மக்களுக்கு புரிய வைப்பது இடதுசாரி இளைஞர் இயக்கத்தின் கடமை என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். அங்கு நடப்பது ஏதோ சாதிக்கலவரம் போலவும் அதற்கும் பாரதீய ஜனதாவுக்கும், அந்த முதல்வருக்கும் தொடர்பு இல்லாமல் தானாய் நடப்பது போலவும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும் நிலையில் அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுவது அவசியம்

1 Responses to பாரதீய ஜனதாவின் 50 துப்பாக்கிச் சூடும் 80 கொலையும்

  1. Anonymous Says:
  2. http://vinavu.wordpress.com

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark