மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

கயர்லாஞ்சி கொடூரம்

Posted by நட்புடன் ரமேஷ் Tuesday, February 26, 2008ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஓரளவாவது துயர் துடைக்கப்பட்டு, கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தும் காலம் போராட்டங்களினூடாக இப்போதுதான் கொஞ்சம் வந்துள்ளதாக நம்பப்படும் நேரத்தில், மனித இனம் வெட்கி தலைக்குனியும் கேவலமான சம்பவம் கயர்லாஞ்சியில் நடந்துள்ளது.
மாமேதை அம்பேத்கர் பிறந்த மண்ணில்தான் இந்த சம்பவம். சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாமேதையை கேலிக்குள்ளாக்கி அவரது மண்ணிலேயே அவமானப்படுதியது ஆதிக்க சாதியினருக்கு அற்ப சந்தோசத்தை கொடுத்திருக்கும். அரசியல் சட்டத்தை கேள்விக்குள்ளாக்கும் திமிர் இது.

இடஒதுக்கீட்டு பிரச்சனையில் நமது நீதிமன்றம் துவங்கி ஊடகங்கள் வரை ஒடுக்கப்பட்டவர்களுக்கு அநீதி ஏன் இழைத்தனர்? அநீதி இழைக்க ஏன் அலைந்தனர்? அநீதி இழைக்க ஏன் அலைகின்றனர்? தங்களுக்கு எதிரில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடாது என்ற மநு வழங்கிய வர்ணாசிரம ஆதிக்க மனோபாவம் தான் இதற்கு அடிப்படை என்பதை கயர்லாஞ்சி மீண்டும் நிரூபணம் செய்துள்ளது


காலம் காலமாக பண்டாரா மாவட்ட கயர்லாஞ்சியில் ஆதிக்க சாதியினரிடம் தான் நிலங்கள் இருந்து வந்தது. ஆனால் சுயமரியாதை வேண்டி பவுத்த மதத்தை தழுவிய பய்யாலால் - சுரேகா தம்பதியினர் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருந்ததும், அவர்களது மூத்த மகன் ரோஷன் (23) கல்லூரியில் படித்ததும், (இரண்டாம் மகன் சுதீருக்கு (21) கண்பார்வை கிடையாது.) கடைசி மகள் பிரியங்கா (19) உயர்நிலைப் பள்ளியில் படித்ததும், செல் போன், தொலைகாட்சிப் பெட்டி வைத்திருப்பதும் பொறுத்துக்கொள்ள முடியாத செய்தியாய் ஆதிக்க சாதியினரை வதைத்தது.இவர்களது ஐந்து ஏக்கரில் இரண்டு ஏக்கர் நிலம் உயர் சாதியினரால் பிடுங்கப்படும் போது பய்யாலலின் தம்பி சித்தார்த்தால் எதிர்குரல் எழுப்பப்படுகிறது.

அவர் தாக்கப்படுகிறார். தாக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவன் அடிப்பட்டாலும் புகார் செய்வது எவ்வுளவு பெரிய குற்றம் என்பது அப்போது அவர்களுக்கு தெரியாது.

இதன் எதிர் வினையாக ஊர் உயர்சாதியினர் பய்யாலாலின் தம்பி சித்தார்த் ஊருக்குள் வர தடை விதித்தனர். பய்யாலாலின் குடும்பத்தை பூண்டோடு அழித்திட முடிவு செய்தனர். அனைவரும் ஆயுதங்களுடன் திரண்டு சென்று அவரது வீட்டில் இருந்த அவரது மனைவி, மூன்று மக்களையும் ஊரின் நடுவுக்கு இழுத்து வந்தனர். தங்கையை அண்ணன்களை விட்டு உடலுறவு கொள்ள வற்புறுத்திய பேடிமைத்தனமும், மகன்களை தாயுடன் உடலுறவு கொள்ள சொன்ன ஓநாய்களின் குணமும், மறுத்த மகன்களின் உயிர்க்குறியை வெட்டி வீழ்த்திய வக்கிர கொழுப்பும், தாயையும் மகளையும் கூட்டமாய் வன்புணர்ந்த கொடூரமும், அவர்களின் உயிர்க்குறியில் கம்பிகளை சொருகிய அழுகிய இதயங்களும், இறுதியாய் அந்த நால்வரையும் அடித்தே கொன்ற ஆதிக்க வெறியும், இந்த தேசத்தின் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.


கேட்பவர்களை விம்மியழச் செய்யும் சம்பவம் நடந்துள்ளது. இத்தனை தைரியம் உயர்சாதியினருக்கு எப்படி வந்தது? சம்பவம் நடந்து பல தினங்களைக் கடந்தும் யாரையும் கைது செய்யாமல் இருந்த காவல்துறையினர் யாருக்காக? காவல்துறையினரை கட்டுப்படுத்தும் அரசு எவர் பக்கம்? மருத்துவப் பரிசோதனை நடத்திய மருத்துவர் உண்மை மறைத்தது ஏன்?இரண்டு மணிநேரம் மாறி மாறி அடிபட்ட அந்த ஜீவன்கள் எப்படி கதறி இருப்பார்கள், என்னென்ன நினைத்திருப்பார்கள்? கல்வி கற்ற பாவத்திற்காக, நிலம் வைத்திருந்த காரணத்திற்காக, கௌரவமாய் வாழ நினைத்ததிற்காக இந்த தண்டனையா?

கேள்விகள் காற்றில் கரைந்து கொண்டே இருக்கிறது. அங்கு மட்டும் அல்ல.. தமிழகத்திலும் திண்ணியத்தில் மலம் தின்னச் சொன்னதும், மேலவளவு முருகேசனின் தலையை காவு வாங்கியதும் இதே ஆதிக்க வெறிதான். சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் நக்கலந்தங்குடியில் ஜக்கையன் என தொடர்கிறது.சமூக பொது வெளியை நோக்கி இவர்களின் மரணம் ஏராளமான கேள்வியெழுப்புகிறது.....என்ன செய்யப்போகிறோம்?

பொருளாதாரமும், சூழ்ச்சிஅரசியலும், மதமும், சாதியும் புறந்தள்ளி வைக்கும் நம்முடைய உழைப்பாளி மக்களின் விடுதலைக்காக போராட்டக்களம் காணப் போகிறோமா, அல்லது தொலைக்காட்சியில் தொலைந்து நெருக்கடி வாழ்வில் ஓடி ஒளிந்து கொள்ளப் போகிறோமா? அச்சமும் அடிமைச் சிறுமதியும் கொண்டவர்களாய் அமைதி காக்கப் போகிறோமா?

மனிதர்கள் போராளிகள். நாம்...?
---------------------------------------------------------------------------------டிசம்பர் 2006

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark