மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

மருத்துவ மாணவர் போராட்டம்

Posted by நட்புடன் ரமேஷ் Sunday, December 30, 2007

மருத்துவ மாண்வர்கள் போராட்டம் பலநாட்களாக நடந்து வருகிறது, மருத்துவ பட்டப்படிப்பு ஐந்தரை ஆண்டுகளாக இருப்பதை ஆறரை ஆண்டுகளாக மாற்றி அதில் ஒரு ஆண்டு கிராமப் புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்றிட வேண்டுமென்று மத்திய அமைச்சரின் ஆலோசனையை கண்டித்து வேலைநிறுத்தம் செய்து உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம், தர்ணா என்ற வடிவங்களிலும், மொட்டை அடிப்பதுது, பிச்சை எடுப்பது, கடற்கரையில் கோலம் போடுவது, கோமாளி வேடம் அணிவது, அடிப்பிரதட்சணம் செல்வது என்ற நூதன வடிவங்களிலும் அவர்கள் போராடி வருகின்றனர். டாக்டர் சாம்பசிவராவ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தன் ஆய்வரிக்கையை கொடுத்த பின்புதான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும், இன்னும் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப் படவில்லை என, மார்க்ஸிட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மோகன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அன்புமணி எழுத்து பூர்வ பதில் அளித்துள்ளார். மருத்துவ படிப்பை ஓராண்டு கூடுதலாக நீடித்து, அப்படி பணியாற்றினால்தான் சான்றிதழ் பெறமுடியும் என கூறுவது மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏர்படுத்தியுள்ளது. அதுவே போராட்டமாக வெடித்துள்ளது.


இப்பிரச்சினை மீண்டும் மீண்டும் கிளறுவது மேலும் போராட்டத்தை வலுப்படுத்தவே உதவும். ஐந்தரை ஆண்டு காலம் மருத்துவ படிப்பு முடித்தபின்னர் உரிய விதிமுறைகளின்படி நியமன ஆணை வழங்கப்பட்டால் கிராமப்புறங்களில் பணிபுரிய தயாராக உள்ளதாக மாண்வர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மருத்துவ பட்டப்படிப்பை ஐந்தரை ஆண்டுகளாக இருப்பதை ஆறரை ஆண்டுகளாக மாற்ற வேண்டிய அவசியம் உண்டா இல்லையா என்று டாக்டர் சாம்பசிவராவ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தன் ஆய்வரிக்கையை கொடுத்த பின்புதான் தனது கருத்துக்களை மத்திய அமைச்சர் கூறி இருக்காலாம். கிராமப்புறத்தில் மருத்துவர்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற ஆலோசனையை யாரும் புறக்கணிக்க முடியாது. இதனை வரவேற்கும் அதே நேரத்தில் அதை கல்வியாண்டு அதிகரிப்பதோடு இணைக்கக் கூடாது என்பதையும் சுட்டிகாட்ட வேண்டியுள்ளது.


அரசு தன்னிடம் அதிகாரம் இருப்பதால் எதையும் செய்யலாம் என்று அர்த்தமாகிவிடாது. ஆனால் கிராமப்புற மக்களின் சுகாதார பிரச்சினையில் ஆக்கப்பூர்வமானா விவாதத்திற்கு அடிப்படையான இந்த பிரச்சினை தேவையற்ற சர்ச்சைகளால் திசைமாறி செல்கிறது. இப்போராட்டம் தமிழகத்தின் அரசியல் களத்தில் முக்கிய பிரச்சினையரக உருவம் கொண்டுள்ளது. பா.ம.க தலைவர் ராமதாஸ் இப்போராட்டத்தை ஆதரிப்பவர்களும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களும் கிராமப்புற மக்களுக்கு எதிரானவர்கள் என்றும், கட்டாய கிராமப்புற சேவையை இரண்டு ஆண்டுகளாககூட அதிகப்படுத்தலாம் என்றும், தானும் தன் மகனான அமைச்சர் அன்புமணியும் மருத்துவ மாணவர்களுடன் பேச எப்போதும் தயார் என்றும், அறிக்கை மூலமாக தினம் அரிய ஆலோசனைகளை தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார்.


தமிழக ஏழை மக்கள் மீது தனக்குள்ள அலவில்லா பாசத்தை காட்ட கல்விநிலையங்களில் அரசியல் தலையீடு கூடாது என்று சொல்லும் அளவுக்கு அவரது அறிக்கை சென்றுள்ளது. தமிழகத்தில் 15 ஆயிரம் டாக்டர்கள் தலையில் வழுக்கை விழுந்து வேலைக்காக காத்திருப்பதாக திருவாய் மலர்ந்தருளியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை கிராமப்புற மக்களின் மீது அளவற்ற அக்கறை கொண்டு இத்திட்டத்தை கொண்டு வருவது உண்மையானால், அவர்கள் இந்த வேலைவாய்ப்பற்ற டாக்டர்களுக்கு வேலைக்கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் இன்னும் புதிதாக எட்டாயிரம் துணை சுகாதார நிலையங்களை உருவாக்க முடியும். அதைவிடுத்து புதிய பணியிடங்களில் பூர்த்திச் செய்யாமல் பயிற்சி மாணவர்களை வைத்தே ஒவ்வொரு ஆண்டும் துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை நடத்தி விடலாம் என்று திட்டமிடுவது மக்களுக்கு இழைக்கும் துரோகம் அல்லவா? பத்தாயிரம் முதல் இருபதாயிரம் மக்கள் தொகைக்கு எழுபத்தி ஐந்து படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதர நிலையம் என்ற போர் கமிட்டி பரிந்துறை இலக்கை நோக்கி செல்ல இந்த வேலை வாய்ப்பு பயன் படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் அரியாதவரா? ஏன் காலி பணியிடங்களை பூர்த்தி செய்வது குறித்தும், பணி நியமனத்துடன் கிராமப்புற சேவைக்கு மாணவர்கள் அனுப்புவது குறித்தும் பேச மறுக்கிறார்? இதனால் தான் மாண்வர்கள் பணி நியமனத்துடன் கூடிய கிராமப்புற சேவை என்ற கோரிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆதரிக்கிறது..


இன்று கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணைசுகாதார நிலையங்கள் போன்றவை தரமான பராமறிப்பு இல்லாமல் உள்ளன. பல இடங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.


அடிப்படை சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அனைத்து கிராமப்புறங்களிலும் தரமான அரசு மருத்துவமனைகள், அதில் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வது, போதுமான மருந்துகள் இருப்பு வைக்க உத்தரவாதம் செய்வது போன்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய சுகாதாரதுறை அதை விடுத்து மருத்துவ மாணவர்களை கிராமப்புர மக்களுக்கு எதிரானவர்களாக சித்தரிப்பது முறையல்ல. இந்தியாவின் பல பகுதிகளில் அடிப்படி சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது தனியார் மருத்துவ மணைகள் அடுக்கும் கொள்ளைக்கு அளவு இல்லாமல் இருக்கிறது. இப்போது ஒரே அரசு மருத்துவ மணையில் இரட்டை மருத்துவமுறை உள்ளது. பணத்துடன் கூடிய சேவையும், இலவச சேவையும் உள்ளது.


பணம் இருப்பவர்கள் மட்டுமே தரமான மருத்துவ வசதியை பெறமுடியும் என்ற நிலை சுதந்திர நாட்டின் அவலமான சின்னமல்லவா? பாதுகாப்பற்ற குடிநீர், திறந்த வெளியில் மலம் கழித்தல், சுகாதாரமற்ற சுற்று சூழல், தரமான ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்காமை போன்றவைகள் மலிந்த இந்தியாவில் நோய்கள் வரும் முன்காப்பது அரசின் கடமை இல்லையா? நோய் தடுப்பு நடவடிக்கைக்கு இன்னும் முக்கியத்துவம் இல்லாமல் இருப்பது, சுகாதாரத்துறையை மத்திய அரசு லாப வெறியில் அலையும் தனியாரிடமும், பண்ணாட்டு மருந்து கம்பெனிகளிடமும் அடகு வைப்பதற்கு சமம் அல்லவா? மருத்துவர்கள் கிராமப்புறங்களுக்கு செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டால்தான் செல்வார்கள் என்றால் அவர்களுக்கு கிராமப்புற ஏழை மக்கள் குறித்து மருத்துவ கல்வி போதித்தது என்ன? உயர் வர்கத்திலிருந்தும், உயர் நடுத்தர வர்கத்திலிருந்தும், நடுத்தர வர்கத்திலிருந்தும் வருகிற மாணவர்கள் இன்றைய உலகமய நுகர்வு கலாச்சார வெறிக்கு ஆட்படுவது தவிர்க்க முடியாது. ஏனெனில் சுயநலம் ஒன்றை மட்டுமே போதிக்கின்ற சூழலில்தான் வளர்கின்றனர். மற்றொன்று அவர்களின் வர்க குணமும் அதுதான். இவர்களுக்கு எத்தகைய கல்வி தேவை; “உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி என்பது ஆரோக்கியமற்ற தன்மையை உருவாக்கும் பொருளாதார அமைப்பை மாற்றி அமைப்பதுதான்; அறியாமை, வறுமை, வேலையின்மை போன்றவற்றை ஒழித்துக்கட்டுவது போன்றவைகள்தான்; ஒவ்வொரு தனிபட்ட மனிதனும் தானே தனது மருத்துவ சேவைகளை வாங்கிக்கொள்வது என்ற வழக்கம் இனியும் இங்கே தொடர்ந்து நடக்கக்கூடாது. தனிநபர் விலைகொடுத்து வாங்கும் மருத்துவம் என்பது நியாயமற்றது, திறனற்றது, ஊதாரித்தனமானது, முழுக்க முழுக்க நடைமுறைச் சாத்தியமற்ற வழகொழிந்த ஒன்று.


நாம் மருத்துவத்தின் அறவியலை மறுபடியும் மாற்றி அமைப்போம், மருத்துவம் என்பது மருத்துவர்களுக்கிடையே உள்ள அடிப்படிடை நன்நடத்தைக் கோட்பாடு அல்ல; அது மருத்துவத்திற்கும் மக்களுக்கும் இடையேயுள்ள அடிப்படை நன்நடத்தை மற்றும் நியாயம் ஆகும். நமது மருத்துவச் சமூகத்தில், யார் ரொம்பச் சுவரசியமான நோயாளியை எதிர்கொண்டது என்று பேசுவதை நிறுத்திவிட்டு, நமது காலகட்டத்தில் மருத்துவம் எதிர்கொண்ட முக்கிய சவால் எதுவென்று பேசுவோம்; மருத்துவத்திற்கும் அரசுக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பு என்னவென்று பேசுவோம்; இந்த தொழிலைச் செய்பவர்களின் கடமை என்னவென்று பேசுவோம்; நாம் இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தின் பொருளாதாரம் மற்றும் சமூகவியலின் கருவறை எதுவென்று பேசுவோம்;


நமது சமகாலத்தில் நிகழ்கிற முக்கிய மருத்துவ பிரச்சினைகள் என்பது பொருளாதாரம் மற்றும் சமூகம் சார்ந்தது என்றும், அதை வெறும் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞானப் பிரச்சினையாக மட்டும் சுருக்கிப் பார்ப்பதுகூடாது என்பதையும் நாம் புரிந்து கொள்வோம்.” இது 70 ஆண்டுகளுக்கு முன் (1936ம் ஆண்டு) டாக்டர் நார்மன் பெத்யூன் என்ற மகத்தான மருத்துவர் கூறிய வார்த்தைகள், இன்று நம் முன் பேசுவது போல் ஒளிக்கிறது. (இத்தனைக்கும் இந்த உரைக்குப் பின்தான் அவர் கம்யூனில்ஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆகிறார். சீனப்புரட்சியில் சேவைசெய்து போர்களத்தில் உயிர் துறக்கிறார்) இப்படி மக்களை நேசிக்கின்ற கல்வியும், அதன் அடிப்படையில் தேசத்தில் ஒருங்கினைந்த மருத்துவமும், அணைத்து கிராமப்புறங்களில் அடிப்படி வசதிகளுடன் கூடிய மருத்துவ சேவையும், அதனை அமுலாக்க கிராமப்புறங்களை நோக்கி மருத்துவர்களும் திட்டமிட வேண்டியது அவசர அவசியம்.


1946ம் ஆண்டு இந்திய அரசு சர்ஜோசப் போர் என்பவர் தலைமையில் சுகாதார மதிப்பீடு மற்றும் வளர்ச்சி குழுவை அமைத்த போது அக்குழு சொன்ன எந்த பரிந்துறையும் 60 ஆண்டுகளாக நிரைவேற்றப்படவில்லை என்பது விவாதத்திற்கு இப்போதாவது வருவது நலம். இதைவிடுத்து மக்களுக்காக நான்தான் உழைக்கிறேன் என்பதும் மற்றவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதும் 2011 கனவுக்கு போகும் பாதையாக தெரியலாம், ஆனால் மருத்துவருக்கும், மருத்துவர்களுக்கும் இது அழகல்ல.
------------------------------------------------- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark