மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


விடுதலைப் போரில் பெண்கள் - 3 

போரிடு இல்லையேல் அழிந்திடு : கிட்டூர் ராணி சென்னம்மா



ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜகம்பீர, ராஜகுலதிலக, ராஜபராக்கிரம என நீண்ட ராஜபாட்டைகளில் வாழ்த்தொலி எழும்ப ராஜாக்கள் வரும் திரைப்பட காட்சிகளும், அந்த நேரத்தில் எழும் முரசின் ஓசையும் பிருமாண்டமான சிந்தனைகளை நமக்குள் விதைக்கும். ஆனால் ஒருசில மன்னர்களை தவிர நமது வரலாற்றில் மன்னர்களின் ஆட்சி என்பது தேசம் முழுமைக்கும் உடையது அல்ல. பல சிற்றூராட்சிகளை இணைத்து ஒரு நாடாக ஆட்சி நடத்தினர். அதற்குள்தான் இத்தனை போட்டிகளும், கொலைக்களங்களும், இலக்கியங்களும், இலட்சியங்களும், காப்பியங்களும், தியாகங்களும் நடந்துள்ளது. 

உற்பத்திக் கருவிகளின் பெருக்கத்தின் தவிர்க்க முடியாத வளர்ச்சியில் தோன்றிய முடியாட்சியின் அழிவில் உதித்தெழுந்த, தொழில் புரட்சி சந்தைக்காக நாடுகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்தபோது அந்த வட்டத்திற்குள் நமது இந்தியாவும் தப்பமுடியவில்லை. போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கத்தோலிக்க மன்னனின் பிரதிநிதியாக வாஸ்கோடகாமா இந்தியா வந்த பிறகு சிறிது காலத்துக்குள்லேயே கத்தோலிக்கர் அல்லாத ஹாலந்து வணிகர் குழு வந்தது. அதன் பின் பிரான்ஸ், கடைசியில் இங்கிலாந்து வணிகக்குழுக்கள் இந்தியாவுக்குள் வந்தனர். தங்களுடைய வர்த்தக மையங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஒரு ரணுவப் படைப்பிரிவை வணிக நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொண்டன. 

ஆனால் இரண்டு நூறாண்டுகளுக்கு மேலாக இப்படைகள் உள்நாட்டில் தொலைதூரத்தில் இருந்த கிராமப்புறங்களுக்குள் நுழையவில்லை. ஏனெனில் அதற்கானா தேவைகளும் அவர்களுக்கு எழவில்லை. நமது சிற்றரசர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையாலும், நாடாளும் ஆசையாலும் இந்த மண்ணில் அந்நியர்களை நுழையவிட்டதும், அவர்களுடைய நவீன ஆயுதங்களுக்கும், படைபலத்திற்கும் ஆசைப்பட்டு தங்கள் மண்ணையே இழந்ததும் இந்திய வராற்றில் அழிக்க முடியாத தழும்புகளாகும். ஆனால் எல்லா சிற்றரசர்களும் அப்படி அல்ல. அந்நியனை இம்மண்ணிலிருந்து விரட்ட தங்கள் உயிரையே அர்ப்பனம் செய்தவர்கள் பலர் உள்ளனர். அந்நியர்களை எதிர்த்த போரட்டத்தில் ஆண், பெண் என பேதமில்லாமல் போரடியதுதான் நமது  வரலாற்றின் சிறப்பம்சமாகும். 

கர்நாடக மாநிலம் பெங்களூர் பூனா இடையே அமைந்துள்ள பகுதி கிட்டூர் சிற்றரசாகும். சுமார் நானூறு கிராமங்களைக் கொண்டது கிட்டூர். கிட்டூரின் 12-வது அரசராகப் பதவியேற்றவர் மல்லசராஜா என்பவர். மல்லசராஜா சிறந்த நிர்வாகிமட்டுமல்ல, மாபெரும் வீரராகவும் இருந்ததால் அருகில் உள்ள எந்த சிற்றரசும் இவரை எதிர்க்கத் துணியவில்லை. இவரைப் போலவே இவருடைய மனைவி ருத்திரம்மாவும் சிறந்த வீராங்கனைதான்.      

இந்தக் காலத்தில்தான் வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்த்தான் தன் ஆட்சி அதிகாரத்தைப் பலமாக்குவதற்காக மற்ற பல நாடுகள் மீது போர் தொடுத்துவந்தார். கிட்டூரின் வளத்தையும், அதன் வலிமை மிக்க கோட்டைகளையும் கேள்விப்பட்டு அதைக் கைப்பற்றிக் கொள்ள படையன்றை அனுப்பி வைத்தார். கிட்டூரை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்பது அவரது கணக்கு. ஆனால் கிட்டூர் வீரர்களின் அதிரடியான ஆவேசத் தாக்குதல்களால் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தது அவரது படை. ராணி ருத்திரம்மா தலைமியிலான கிட்டூர் படை திப்புசுல்த்தானின் படைகளைத் துவம்சம் செய்தது. நூறுக்கணக்கான திப்புவின் வீரர்கள் கொல்லப்பட்டனர். திப்பு என்ற மாவீரனுக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்தியானது.       

பல்வேறு பணிகளில் இருந்த திப்பு சில மாதங்கள் காத்திருந்து பெரும் படையைத் திரட்டி மீண்டும் கிட்டூரைக் கைப்பற்ற படை அனுப்பினார். இம்முறை மல்லசராஜாவே தாமே படைக்குத் தலைமை தாங்கிப் போரில் ஆவேசமாகப் போர்புரிந்தார். ஆனாலும் திப்பு சுல்த்தானின் அசாத்திய திறமைகொண்ட பெரும்படைகளுக்கு முன் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் மன்னர் கைது செய்யப்பட்டு கபாலதுர்க்கா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.       

கிட்டூரைத் திப்பு சுல்த்தான் கைப்பற்றியிருந்தாலும் தொடர்ந்து அந்தப் பகுதியை அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் திப்புவின் படை அந்நியர்களை எதிர்த்து போராட்டத்தை நடத்திவந்தது. இதற்குள் நாடுபிடிக்கும் உள்நாட்டு போரினால் சத்ரபதி சிவாஜிக்கு பின்னர் வந்த பேஷ்வாக்கள் சில மாதங்களில் கிட்டூர் மீது படையெடுத்து மிகக்குறைந்த அளவில் இருந்த திப்புவின் படைகளைச் சிதறடித்து கிட்டூரைக் கைப்பற்றி ஆட்சி நடத்திவந்தனர்.  இதனிடையே சிறையில் அடைக்கப்பட்ட மல்லசராஜா சிறைக் காவலையும் மீறி சில மாதங்களுக்குப் பின் தப்பி தன் நாட்டிற்கு வந்த போது, நாடு பேஷ்வாக்களிடமிருந்த்து. ஒரு உடன்படிக்கையில் பேஷ்வாக்களுக்கு கப்பம் கட்ட மல்லசராஜா ஒப்புக் கொள்ளவே  மீண்டும் கிட்டூர் மன்னரானார்.     

இந்தக் காலக் கடட்த்தில் ஆங்கிலேயர்கள் நாட்டின் பலபகுதிகளைத் தனது சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் கைப்பற்றி ஆட்சி செய்துவந்தனர். பேஷ்வாக்கள் மீது ஆங்கிலேயர் படையெடுத்துச் சென்றபோது கிட்டூரும் தாக்குதலுக்கு உள்ளானது. ஆங்கிலேயர்களை பல இடங்களில் தோற்கடித்த திப்புவைத் தோற்கடிக்க பேஷ்வாக்களின் படை தேவை என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள்  போரில் கைப்பற்றிய பகுதிகளை பேஷ்வாக்களிடமே மீண்டும் ஒப்படைத்தனர். ஒருபுறம் திப்புவின் படைகள் மீண்டும் தன்னை தாக்கலாம் என்ற அச்சமும், மறுபுறம் ஆங்கிலேயர்களின் தாக்குதல்களை முறியடிக்கவும் நாட்டின் பல சிற்றரசர்களின் ஆதரவையும் நாடினார் மல்லசராஜா. அப்போது காகட்டி என்ற சிற்றரசன் ஆதரவு கிட்டியது மட்டுமல்ல, காகட்டி,  மன்னரின் மகள் சென்னம்மாவைத் தன்னுடைய இரண்டாவது மனைவியாக மணந்துகொண்டார்.      

34 ஆண்டுகள் கிட்டூரை ஆட்சிபுரிந்த மல்லசராஜா 1816ல் மரணமடையவே அவருடைய முதல் மனைவி ருத்ரம்மா ஆன்மீக ஈடுபாடு கொண்டு ஆசிரமம் ஒன்றை அமைத்து அங்கேயே வாழத்தொடங்கினார். இவருடைய மகனும்  1824ல்  நோய்வாய்ப்பட்டு  சில ஆண்டுகளில் காலமாகிவிட்டார். எனவே வேறுவழி இல்லாமல் நேரடியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்று நிர்வகிக்கத் தொடங்கினார் ராணி சென்னம்மா. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத முத்திரையை பதித்த சென்னம்மா 1778 ஆம் வருடம் பிறந்தார். தனது சிறு வயதிலேயே சென்னம்மா குதிரையேற்றம், வாள் வீச்சு, வில்வித்தை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவராவார். தனது கனவனும் அவருக்கு பிறந்த குழந்தையும் தொடர்ந்து மரணமடையவே தனக்குப் பின்னால் ஒரு வாரிசு தேவை என்பதால் சிவலிங்கப்பா என்ற சிறுவனைத் தத்தெடுத்து அவனுக்கு முடி சூட்டினார். அப்போது பரவலாக ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்றி இருந்தது. எந்த மன்னருக்கு வாரிசு இல்லையோ அந்த மன்னருக்கு பின் அந்த நிலப்பரப்பு ஆங்கில அரசின்பகுதியாக ஆக்கப்படும்.     

இந்த சதியை முறியடிக்க ராணி சென்னம்மா சிவலிங்கப்பாவை சுவீகாரம் எடுத்துக் கொண்டதைக் கண்ட ஆங்கிலேயர் பெரும்படை ஒன்றை அனுப்பி கோட்டையை முற்றுகையிட்டு கோட்டையிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு காவலுக்கு ஆங்கிலேயச் சிப்பாய்களை நிறுத்திவைத்திருந்தனர்.      நாட்டை அபகரிக்கும் திட்டத்துடன் கிட்டூர் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு விட்டதையும் கோட்டை முற்றுகை இடப்பட்டிருப்பதையும் சென்னம்மாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படியும் தாய் மண்ணை மீட்கவேண்டும் என உறுதி பூண்டார். படைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். ஆலோசனை செய்தார். தனது நம்பிக்கைக்குறிய படைவீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். தனது தேசத்தை தியாகபூர்வ யுத்தத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சத்தமில்லாமல் கோட்டைக்கு உள்ளேயே செய்தார். இருப்பினும் கோட்டைக்குள்ளே ஏதோ நடக்கிறது என்ற சந்தேகம் காவலுக்கு நின்ற ஆங்க்கிலேய சிப்பாய்களுக்கு ஏற்பட்ட்து. உடனடியாக கலெக்டர் தாக்ரேவிற்கு தகவல் சொல்லப்பட்ட்து.      

கணவனை இழந்து கடுந்துயரில் உள்ள ஒரு விதவைப் பெண்ணின் சோகத்தை எதிர்பார்த்த ஆங்கிலேயர்கள் இவ்வளவு தீரமான போராளியை கனவிலும் நினைக்கவில்லை. உள்ளே ஏதோ ஆலோசனை என்ற செய்தியை கேள்விப்பட்ட கலெக்டர் தாக்ரே உடனடியாக  நான்கு பீரங்கிகளை கொண்ட பெரும்படையுடன் கிட்டூர் கோட்டைக்கு வந்து சேர்ந்தான். தனது பெரும்படையை பார்த்தும் அஞ்சி நடுங்கி ராணி சென்னம்மா சரணடைந்து விடுவார் என்பது அவனது எண்ணமாய் இருந்தது. அதனால் மிகவும் அலட்சியமாய் ஆணைகளை பிறப்பித்தான். அந்த கோட்டையை கைபற்றி ராணி சென்னம்மாவை கைது செய்து அழைத்துவர குதிரைப் படையினர் நூறு பேரை அனுப்பிட உத்திரவிட்டான். ஆனால் நடந்தது வேறு, அது வரலாற்றில் செதுக்கப்பட வேண்டிய சம்பவமாய் அமைந்தது.

நூறுபேர் கொண்ட குதிரைப்படை கோட்டையை நோக்கி சென்றபோது கோட்டைக் கதவுகள் இவர்களை எதிர்பார்த்து திறந்தே இருந்தன. அலட்சிய சிரிப்புடன், வென்றுவிட்ட இறுமாப்புடன் கலெக்டர் தாக்ரே  படையை சார்ந்த நூறு பேர் உள்ளே போனதும் அவர்கள் எதிர்பார்க்காத தருணத்தில் திடீரென பிருமாண்டமான கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. அதிர்ச்சியில் மிரண்டு நின்ற ஆங்கிலப் படையை கிட்டூர் வீர்ரகள் மின்னல் வேகத்தில் வெட்டிச் சாய்த்தனர். மொத்தம் வந்த நூறு பேரில் 98 பேர் கொல்லப்பட்டனர் இரண்டு ஆங்கில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.      ஆங்கிலேயப் படைமுகாமில் நடந்தது எதுவும் யாருக்கும் புரியவில்லை. இந்த அதிரடித் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத கலெக்டர் உயிர்பலியைத் தவிர்க்க சமாதானத் தூதனுப்பினான். கிட்டூரின் பத்து கிராமங்களை உங்களுக்கு தானமாக விட்டுக் கொடுக்கிறோம், எஞ்சியதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என எழுதிக்கொடுத்து அனுப்பிய கடித்த்திற்குப் பதிலே இல்லை. 

கிட்டூர் ராணி சென்னமாவின் ராஜியத்தில் சில கிராமங்களை விட்டுக்கொடுக்க இவன் யார்? அதனால் பதில் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கலெக்டர் நான்கு பீரங்கிகளில் இரண்டைக் கோட்டைக்கு மிக அருகில் நிறுத்தி வைத்தான். நாளை காலைக்குள் சென்னம்மா சரணடையாவிட்டால் கோட்டையைத் தகர்த்துவிடுமாறு உத்திரவிட்டான். ஆனால் நடந்தது வேறு மறுநாள் காலை அந்த இரண்டு பீரங்கிகளையும் காணவில்லை.அதாவது அந்த இரண்டும் கிட்டூர் வீர்ர்கள் தந்திரத்தால் அவர்களது கோட்டைக்குள் சென்றுவிட்டது.      

இது கலெக்டரின் இரண்டாவது அவமாணம். ஆத்திரம் உச்சந்தலைக்கு ஏற எஞ்சியிருந்த இரண்டு பீரங்கிகளைக் கோட்டைக்கு முன் நிறுத்தி கோட்டையைத் தகர்க்க ஆணையிட்டான். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக கோட்டைக்குள் இருந்த பீரங்கியிலிருந்து குண்டுகள் கோட்டைக் கதவைப் பிளந்துவிட்டு ஆங்கிலேயர்கள் மீது பாய்ந்த்து. அந்த நேரத்திலேயே கோட்டை மதில் சுவற்றின் மேலிருந்த வீரர்கள் அம்புகளால் ஆங்கிலேயர் உடல்களைத் துளைத்தனர். போர்களம் சூடானது. இருபக்கமும் இரத்தம் வழிந்தோடியது.       


தனது வீரர்களுக்கு கட்டளைகளை மட்டும் அல்ல களத்திலும் நின்று வழிகாட்டினார் ராணி சென்னம்மா. அவர் கவசமணிந்த குதிரையில் கம்பீரமாக அமர்ந்து வீர்ர்களுக்கு உத்த்திரவிட்டுக் கொண்டிருந்தாள். மாவீரம் காட்டிய கிட்டூர் ராணியைக் கொல்லத் தன் கைத்துப்பாக்கியால் குறிபார்த்த கலெக்டரை ராணியின் மெய்க்காப்பாளன்  பாலப்பா சுட்டுக் கொன்றான். அவனது மரணம் ஆங்கிலப் படைகள் சிதறி ஓடச் செய்தது.  அதுவரை மக்களுக்கு அறிமுகமில்லாத நவீனப் போர்கருவிகள் கொண்ட ஆங்கிலேயரைத் தனது வீரத்தாலும், தந்திரத்தாலும் தோற்கடித்த ராணி சென்னம்மாவின் புகழ் எங்கும் போற்றப்பட்டது.

அத்தோடு நின்றுவிடாமல் தென்பகுதியில் உள்ள எல்லா சமஸ்த்தானங்களையும் ஒன்றிணைத்து விரிவடைந்த ஒரு தேசிய மேடையமைத்து ஆதிக்கம் செய்ய வந்த ஆங்கிலேயரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். பல அரசர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால் சென்னம்மாவின் முயற்சிக்கு பெரும்பாண்மையான சிற்றரசர்கள் ஒத்துழைக்கவில்லை. ஒருவேலை இது நடந்திருந்தால் வரலாறு வேறோர் தளத்தில் பயணித்திருக்கும். கிட்டூர் ராணி சென்னம்மாவால்அவமானப்பட்ட வெள்ளையர்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தங்களது ஆயிரக்கணக்கான படை வீரர்களை ஒருங்கிணைத்து மூன்று படைப் பிரிவுகளாகப் பிரிந்து கிட்டூர் கோட்டையை சாப்ளின் என்பவர் தலைமையில் முற்றுகையிட்டனர். ராணி சென்னம்மா சரணடையாவிட்டால் கோட்டை தகர்க்கப்படும் எனச் செய்தி அனுப்பப்பட்டது. சரணடைவதைவிட சாவதே மேல் எனக் கருதிய சென்னம்மா கடுமையான யுத்தத்தை எதிர்கொண்டார். பலநாட்கள் நடந்த கடுமையான போரில் இரு தரப்பிலும் எண்னற்ற வீரர்கள் உயிர் இழந்தனர்.  பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் வேல் அம்பினால் ஈடு கொடுக்க முடியாத கிட்டூர் வீர்ர்கள் கடைசிவரை போராடி மாண்டனர். கடைசியில் வீரப் போர்புரிந்த  கிட்டூர் கோட்டை தகர்க்கப்பட்டது. அந்நியர்களை எதிர்த்து வீர சமர் புரிந்த கிட்டூர் ராணி சென்னம்மாள் உயிருடன் பிடிக்கப்பட்டாள். 

ஆட்சி, அதிகாரம், இன்ப வாழ்க்கை போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு பல ஆட்சியாளர்களைப்போல  வெள்ளையருக்குப் அடிபணிந்திருந்தால் அவரது ஆட்சி அதிகாரம் அவருக்கே கிடைத்திருக்கும். ஆனால், தன்மானத்திற்கும், தேச விடுதலைக்கும் போராடிய காரணத்திற்காக கிடைத்த பரிசு கடுமையான சிறைச்சாலை. கொடுமை நிறைந்த தனிமைச் சிறையிலேயே ஐந்தாண்டுகள் இருந்து 1829 பிப்ரவரி 2ல் மரணமடைந்தார். இந்த வீரத்திற்க்காக, போராட்ட உணர்விற்காக, எழுச்சிமிகு உதாரணத்திற்காக அவர் இறந்து 183 ஆண்டுகள் கடந்து இன்னும் வாழ்கிறார். இவர் மட்டும் அல்ல இன்னும் நாம் சந்திக்கவிருக்கும் வீராங்கனைகளும் இப்படியே வாழ்கிறார்கள்... 

___மகளிர் சிந்தனை   அக்டோபர், நவம்பர்  இதழ்களில்  வெளிவந்தது_____

(தொடரும் இந்த வீர வரலாறு)

1 Responses to

  1. மிகவும் நல்லதொரு படைப்பு... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    G Plus-ல் பகிர்ந்ததால் உங்கள் தளம் அறிந்தேன்... என் dashboard-ல் உங்கள் தளம் ஏன் வரவில்லை என்று பார்க்க வேண்டும்... நன்றி...

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark