மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!    வரலாறு எப்போதும் மனிதர்களின் விருப்பமாகவே இருந்துள்ளது. தங்களது முன்னோர்கள் வாழ்ந்த முறையை கற்றுணர விருப்பமற்ற மனிதனை கானுதல் அறிது. கடந்த கலங்களின் நாகரீகங்களை, வாழ்வியல் முறையை அறிந்துக்கொள்வதிலும் தங்களை அத்துடன் அடையாளப் படுத்திக்கொள்வதிலும் மனித சமூகம் ஒருவித பெருமிதம் கொள்கிறது. இந்த பெருமிதம் ஒருவகையில் மக்கள் திரட்சிக்கும் வழிவகை செய்கிறது. அந்நியர்கள் தங்கள் தேசத்தை அடிமைப்படுத்திய காலங்களில் அடிமைப்படுத்தப்பட்ட நாட்டினர் தங்களது முன்னோர்களின் பெருமைகளை உயர்த்திப்பிடித்தே மக்களை திரட்டி போராடி உள்ளார்கள். நினைவில் வையுங்கள்; உண்மைக்கு புறம்பான அடிப்படைகளற்ற வரலாறு மக்களை பிளவுபடுத்துவதிலும் அவர்களுக்குள் மோதல்களை உருவாக்குவதிலும் வெற்றி அடைந்துள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டச் சம்பவம். உண்மைகள் மீது மத நம்பிக்கைகள் சார்ந்த புனைவை கட்டமைத்து பல்லாயிரம் மக்களின் உயிரைக்குடிக்க வரலாறு பயன்பட்டத்தை யாரும் மறுக்க முடியாது. 1528 முதல் 1914 க்குள் 77 முறை அந்நியர்கள் அயோத்தி மீது படையெடுத்ததாகவும் இந்த சமயங்களில் ராமர் பிறந்த இடத்தை காக்க 3.5 லட்சம் இந்துக்கள் மடிந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளின் பாடதிட்டத்தில் எழுதியுள்னர். இதற்கு அறிவியல் ரீதியான வரலற்று சான்றுகள் எதுவும் கிடையாது. ஆகவே வரலாற்றை மிகவும் கவனத்துடன் அனுக வேண்டியுள்ளது.

    இந்திய வரலாற்றில் வியாபாரத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சியை அமைக்க ராபட் கிளைவ் பிளாச்சி யுத்தத்தில் வெற்றியை ஈட்டிய பின்பும் 100 ஆண்டுகளுக்கு மேல் பிடித்தது. காரணம் அவர்கள் வால் முனையில் நம்மை அடிமைப் படுத்த துவங்கவில்லை. இங்கிருந்த குறுநில மன்னரக்ள், மன்னர்கள், மொகலாய பேரரசின் அனுகூலங்களை பெற்று மெல்ல மெல்ல வளர்ந்து வந்தனர். பின்பு 1835 ஆம் ஆண்டு வாக்கில் பேரரசரின் பெயரை நீக்கிவிட்டு கிழக்கிந்திய கம்பெனி நாணயங்களை அச்சிடத் துவங்கிய பின்புதான் இந்திய மக்களுக்கு அது ஒரு அந்நிய ஆட்சியின் ஆதிக்கம் என முழுமையாக பிடிபடத்துவங்கியது. அதே ஆண்டில் பாரசீகத்தை நீக்கிவிட்டு ஆங்கிலத்தை அரசவை மொழியாக மாற்றினர். அதன் பிரகு இங்கிருந்த மன்னர்களை செல்வாக்கு இழக்கச்செய்து மொத்த ஆட்சியையும் கைப்பற்றினர். இவர்களின் அதிகார பசியை எதிர்த்து நடந்ததுதான் 1857 கிளர்ச்சி.

    முதல் இந்தியச் சுதந்திரப்போர் என வர்ணிக்கப்படுகின்ற 1857 ஆம் ஆண்டு நடந்த இந்திய பெருங்கிளர்ச்சி பல வகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் அனைத்தும் பெரும்பாலும் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களாள் பதிவு செய்யப்பட்டதாகவே உள்ளது. அவர்களின் பெரும்பாலான ஆவனங்களை வைத்து இந்திய வரலாற்று ஆய்வு மையத்திற்கு சுரேந்திரநாத் சென் எழுதிய புத்தகம்தான் 1857. இந்த கிளர்ச்சியில் பங்கு கொண்ட ஒரு இந்தியர் கூட இதுகுறித்து பதியவில்லை என்பது ஆச்சரியமனாதுதான். கிட்டத்தட்ட 700 பக்கங்களுக்கு மேல் விரிந்து படர்ந்துள்ள இப்புத்தகம் பல அசைக்கமுடியாத ஆதரங்களை கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆதாரங்கள் முன்பே சொல்லப்பட்டது போல கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கை பற்றிய அறிக்கைகள், மாவட்ட ஆட்சியராளர்களுக்கிடையே நடந்த அலுவளவிலான உடையாடல்கள், அரசை மறு கட்டமைப்பதற்கு அலுவளவிளான கடிதப் பதிவுகள், தன்வரலாற்றுக் குறிப்புகள், அல்லது ஆங்கிலேயர்கள் தங்கள் விசாரனைக்காக தயாரித்த சான்றுகளும் குற்றச்சாட்டு அறிவிப்புகளும், உளவாளிகளின் அறிக்கைகள், ஆள்பவரிடம் பலனடைய விசுவாசமிக்க சுதேசிகள் எழுதிய குறிப்புகள் போன்ற ஆங்கிலேயர்களின் படைப்புகளிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கிளர்ச்சிக்கும் கொழுப்புத் தடவப்பட்ட தோட்டாக்களை ஆங்கிலேயர்கள் படுத்தியதுதான் காரணம் என பலரால் சொல்லப்படுகிறது. இது அப்போராட்டத்தை பற்றவைக்க ஒடு சிறு பொறியாய் பயன்பட்டிருக்கலாமே அல்லாது இதுவே காரணம் இல்லை என்பதை இந்நூல் படித்து முடிக்கும் போது உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. வெளித்தோற்றத்தைவிட மேலும் வலிமை படைத்த பல காரணங்கள் இருந்தது என்பதை காரணங்கள் மற்றும் முன்விளக்கம் என்ற பகுதிகளில் விரிவாக அலசப்பட்டுள்ளது. ஆனால் அவைகள் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஆங்கில அரசு தலையிட்ட பல சம்பவங்களை பட்டியலிட்டுள்ளது. இந்து கோயில்களை கிருத்துவர்களான அந்நியர்கள் மேலாண்மை செய்யத் துவங்கியது, தலைமுடி, மீசையை ஒழுங்கமைக்கச் சொன்னது, சதி என்ற உடன்கட்டை பழக்கத்தை தடுத்தது போன்ற நடவடிக்கைகளால் இந்திய மக்கள் கிளர்ந்தனர் என்று சென் குறிப்பிடுகிறார். ஆனால் இந்திய சமூகத்தில் உள்ள மேல்தட்டு வர்க்க மக்களின் பழக்கங்களே இவைகள். இந்திய நாட்டின் பெரும்பாண்மையான மக்கள் சதி என்ற பழகத்தை கைகொள்ளவில்லை. இது உயர்சாதியினரின் பழக்கமாகவே இருந்தது. ஆக இந்திய நாட்டின் உயர்குல மக்களின் கோபம் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் தூண்டியது எனக்கொள்ளலாம்.

    அடுத்து ட்ல்ஹவுசியின் கோட்பாடு இந்த கிளர்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது. அவரது கோட்பாட்டின்படி இந்தியாவில் இருந்த ஒவ்வொரு தனி அரசையும் ஆங்கிலேய நிலப்பகுதியுடன் இனைத்தார். வாரிசு இல்லாத அரசுகள் அவர்களுக்கு தானாய் வந்து சேர உதவியது இந்த கோட்பாடு உதவியது. இதனால் கோபம் அடைந்த மன்னர்கள் தங்களின் மணிமுடியை மீண்டும் கைப்பற்ற இந்த கிளர்ச்சியில் பங்கெடுத்தனர். ஆனால் ஒரு கட்டுக்கோப்பாந போராட்டமாக இதை இந்திய கிளர்ச்சியாளர்களால் நடத்த முடியவில்லை. இந்திய நாட்டின் பல பகுதிகளில் எப்படி போராட்டம் ஒருங்கினைக்கப்பட்டது என்பதை முழுமையாக இந்நூல் விலக்கவில்லை.

    மீரட், டெல்லி, கான்பூர், அயோத்தி, பீஹார், ஜான்சி, ராஜபுதானமும் மத்திய இந்தியாவும், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் அந்த கிளர்ச்சியின் போது நடந்த சம்பவங்களை சென் ஆங்கில அதிகாரிகளின் குறிப்புகளின் வழி நின்று விளக்குகிறார். அதனாலோ என்னவோ நம்மை துரோகம் செய்து அடக்கியாள வந்தவர்களை மிகவும் மேன்மையாக குறிப்பிடுவதும், இந்தியர்களை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் குறிப்பிடுவதும் இந்த புத்தகம் முழுவதும் விரவிக்கிடக்கிறது. உதாரணத்திற்கு ஜான் நிக்கல்சன் என்ற அதிகாரியை கீழ்வருமாறு அறிமுகம் செய்கிறார் சென். "அவர் வீரகாவியங்களில் வரும் வீரர்களின் வரிசையில் வைக்கத் தகுந்தவர். காவிய வீரர்களின் வீரத்தையும், கொடுமையையும் அவரிடத்தில் கானலாம். பாய்ந்துவரும் வேங்கையையே தன் கைவாளால் வெட்டி வீழ்ந்தும் தீரன். அஞ்சா நெஞ்சன். கொடுமையான வெயிலிலும் ஓயாது போர் செய்யும் உடலுரம் பெற்றவர்" இப்படி ஆங்கிலேயர்களை பாராட்டும் சென், இப்புதகம் முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய இந்திய சிப்பாய்களை கீழ்மக்கள், தாழ்ந்த சாதியினர், கட்டுபாடட்றவர்கள், கொலைபாதகம் செய்பவரக்ள் என்ற ஆங்கிலேயர் குறிப்புகளில் உள்ள வார்த்தைகளாலே எழுதியுள்ளார்.

    இந்திய சிபாய்கள் ஆங்கிலேயர்களையும் அவர்களது குடும்பங்களையும் கொலை செய்யும்போது ஆங்கிலேயர்கள் மீது இருக்கும் அனுதபம் லட்சக்கனக்கான இந்திய சிப்பாய்களின் குடும்பங்கள் சிதைக்கப்படும் போது நூல் ஆசிரியருக்கும் எழுந்திடாமல் இருப்பது வியப்பாக உள்ளது. ஆவண பதிவுகளில் உள்ள விபரங்களை வைத்து நேர்மையாக எழுதியதைப் போல நூல் தோற்றம் அளித்தாலும் இந்திய வரலற்று ஆய்வு மையத்தின் நூலாக உள்ள இதை இன்னும் ஆழமாய் ஆய்வு செய்ய வேண்டும் என்ற உணர்வு படிக்கும் போது எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    ஆனால் ஒன்றை நாம் மறந்துவிட முடியாது. இன்று முதல் சுந்தந்திரப் போர் குறித்து நம்மிடம் உள்ள மாயைகளை புரட்டிபோட இப்புத்தகம் மிகவும் உதவும். ஜான்சிராணியும், பகதூர்ஷாவும், மங்கள் பாண்டேவும் ஏதோ ஆங்கிலேயர்களை எதிர்க்க அவதாரம் எடுத்ததைப் போல எழுதிவருவது மறுவாசிப்புக்குறியதுதான். கிளர்ச்சி நடைபெறும் காலங்களில் ஜான்சி ராணி ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதங்கள் இணைபபுகள் பகுதியில் உள்ளது. தன்னுடைய அதிகாரம் மீண்டும் கிடைத்தால் கிளர்ச்சியை நிறுத்த பல மன்னர்கள் மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்களை வேண்டிக்கொண்டிருந்தனர்.
    மீள்பார்வை பகுதியில் இக்கிளர்ச்சி திருப்தியடையாத சிப்பாய்களின் தன்னிச்சையான போராட்ட வெளிப்பாடா? அல்லது திறமையான அரசியல்வாதிகளால் புத்திசாலித்தனத்துடன் வடிவமைக்கப்பட்டதா? இராணுவத்தினர் மட்டுமே பங்கு கொண்ட ஒரு கலகமா? அல்லது பெருபாண்மையான மக்களின் ஆதரவை பெற முயற்ச்சித்ததா? கிருத்துவர்களுக்கு எதிரான ஒரு மத ரீதியான போரா? அல்லது கருப்பர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையில் யார் உயர்ந்தவர்கள் என்று காண இன ரீதியில் நடந்த போரா? இந்த போர் நெறிமுறைகள் சார்ந்த விசயங்களை உள்ளடக்கியதா? போரில் ஈடுபட்ட அனைவரும் தமது நாகரீகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஆதரவாக போராடினார்களா? போன்ர கேள்விகளை எழுப்பி அதற்கான விடையை தேட முயன்றுள்ளார்.
    எப்படி பார்த்தாலும் இந்த புத்தகம் ஒரு முக்கியமான புத்தகம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவசியம் படித்து விவாதிக்க வேண்டிய நூல் இது.

(1857 ஆசிரியர்:சுரேந்திரநாத் சென் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் விலை : 350 )

 

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark