மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


இந்திய நாட்டின் 69 வது சுதந்திர தினம் வழக்கமான சடங்குகள் நடந்து முடிந்துள்ளது. 282 உறுப்பினர்களுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள அதிகார போதையில் தேர்தல் பிரச்சார நினைவிலேயே 90 நிமிட சுதந்திர தின உரையை நிகழ்த்தியுள்ளார் நரேந்திர மோடி. 

பூடான், பிரேசில், நேபால் (இருமுறை), ஜப்பான், அமெரிக்கா, பிஜி, மியான்மார், ஆஸ்திரேலியா, சிசெல்ஸ், மொரிசியஸ், இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சீனா, மங்கோலியா, கொரியா, வங்கதேசம், உஸ்பெஸ்கித்தான், கஜகஸ்தான் (இருமுறை), ரஷ்யா, துர்க்மேனிஸ்தான், ஐக்கிய அமீரக நாடுகள் என 15 மாதங்களில் 25 முறை வெளிநாடுகளுக்கு சென்று அவ்வப்போது இந்திய வருவதுபோல, சமீபத்தில் இந்தியா வந்த அவர் சுதந்திர தினத்தில் பேசிய பேச்சுக்களை புதிதாக யார் கேட்டாலும் உடல் சிலிர்த்து போவார்கள். ஆனால் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 

கைகளை அகளமாக இருபக்கமும் விரித்து, நேர்த்தியான உடைதரித்து, எல்லாப் பக்கமும் திரும்பி, ஊடகங்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஏற்ற இரக்க பாவங்களுடன் அவர் ஆற்றிய சுதந்திரதின உரையில் அவரை அறியாமலேயே ஒரு பதட்டம் நிலவியது. அது தார்மீக பதட்டம். சுஸ்மாவையும், வசுதராவையும், சௌகனையும், அதானியையும் நினைத்ததால் வந்த பதட்டம். ஆனால் நமது பிரதமர் ஆகச்சிறந்த நடிகர் என்ற காரணத்தாலும், ஏற்கனவே இத்தகைய சூழல்களை சமாளித்தவர் என்பதாலும் மிக அழகாக உரையை முடித்தார். 

ஒரு பைசா கதை பாரீர்:
அவரது உரையின் மிகசிறந்த அங்கதம் கீழ்கண்ட அவரது பேச்சுதான் ""தேசிய கொடியேற்றி வைத்து சொல்கிறேன். இந்திய தேசிய கொடியை சாட்சியாக வைத்து சொல்கிறேன். கடந்த 15 மாத கால ஆட்சியில் ஒரு ஊழல் கூட நடைபெறவில்லை. ஒரு பைசா கூட மக்களின் பணம் ஊழலில் வீனாகவில்லை என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்."" இதுதான் மோடியின் சிறப்பு. அவரது தாய்வீடான ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அவர் பெற்ற பயிற்சியை மிக நேர்தியாக, தொழில் முறையில் கற்று தேர்ந்திருக்கிரார். பொய் சொல்லும்போது கொஞ்சமும் கூச்சநாச்சம் காட்டமல் உண்மையைவிட மிக அழகாக சொன்னால், அதையும் மீண்டும் மீண்டும் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்பது இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இன் பாலபாடம். இதில் முனைவர் பட்டம் பெற்ற காரணத்தால்தான் அத்வானியை மிதித்து அவரால் மேலே வரமுடிந்தது. போகட்டும் அது ஏன் நமக்கு? அவரது உரையின் நேர்மைக்கு வருவோம்!

இறக்குமதி பொருட்களின் மதிப்பைக்கூட்டி பலாயிரம் கோடி மோசடி செய்த அதானியின் மீதான வழக்குகள் நிதியமைச்சகத்தில் மவுனமாய் உள்ளது. 7 ஆண்டுகள் சிறை தண்டனை வித்திக்கதக்க கருப்பபண வழக்கில் உள்ள பாபா ராம்தேவ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2ஜி வழக்கில் உள்ள இடைதரகர்கள் சுதந்திரமாய் சுற்றித்திரிகின்றனர். பொதுத்துறை வங்கிகளுக்கு வரவேண்டிய 5 லட்சம் கோடி வாராக்கடனில் பெரும்பகுதி தரவேண்டிய இந்தியநாட்டை சேர்ந்த 12 பெரும் முதலாளிகள் பிரதமரோடு உண்டு களிக்கின்றனர். ""பொதுப்பணத்த நானும் களவாட மாட்டேன், பிறறையும் களவாட விடமாட்டேன்"" என்று தேர்தல் பிரச்சாரத்தில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் ஆக்ரோஷமாக முழங்கிய மோடியின் லட்சனம் இதுதான்.

சுஷ்மா - லலித் மோடி கூட்டு:
கிரிகெட் சூதாட்டத்தின் ஸ்தாபகர், அந்நிய செலாவணி மோசடி உள்ளிட்டு 16 பொருளாதார குற்றங்கள் விசாரணையில் உள்ள குற்றவாளி, 1680 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிமினல் லலித் மோடியின் பாஸ்போட்டை இந்திய அரசாங்கம் கடந்த ஆட்சியின் போது முடக்கி வைத்தது. ஆனால் இந்த துறையை கையில் வைத்துள்ள மோடி அமைச்சரவையின் பிரபலமான சுஷ்மா சுவராஜ் அவரது துறைக்கு எதிராகவும், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங்கிற்கு தெரியாமலும், பிரிடிஷ் அரசாங்கத்திடம் பாஸ்போர்ட்டுக்காக பரிந்துறை செய்துள்ளார். இந்தியாவுக்கான பிரிடிஷ் தூதரை தனிபட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து லலித் மோடிக்கு உதவ சொல்லியுள்ளார். இது பொருளாதார குற்றம் இழைத்த குற்றவாளியை கண்காணிக்கும் அமைச்சகத்தின் தலைவரான நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குக்கூட தெரியாது. 

ஓராண்டுக்கு பிறகு லலித் மோடிக்கு சுஷ்மா உதவி செய்த தகவல் வெளியே வந்தவுடன், போர்ச்சுகல் மருத்துவமணையில் மோடியின் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மனிதாபிமான அடிப்படையில் உதவினேன் என கதையை திருப்பிப்போட்டுள்ளார். ஆனல் இந்த மனிதாபிமானத்தின் பின்புலம் என்ன தெரியுமா? சுஷ்மாவின் கனவர் சுவராஜ் மோடியின் 22 வழக்கறிஞர். அவரது மகள் பான்சூரி சுவராஜ் பாஸ்போட் முடக்க வழக்கில் லலித் மோடிக்க்காக ஆஜரானவர். இன்டோபில் என்ற லலித் மோடியின் நிறுவன இயக்குனராக பதவியேற்க சுவராஜுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அழைப்பு வந்தது. இந்த விபரமெல்லாம் கனவான் நரேந்திரமோடிக்கு தெரியாது என நம்பச்சொல்கிறார்.

ரஜேவின் ராசியான கதை:
பாஜகவின் ராஜஸ்தான் முதலவர் வசுந்தரா ரஜே லலித் மோடியின் வளர்ச்சியின் வேர் என சொன்னால் மிகையாகாது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநில முதலவராக இருந்த வசுந்தரா ரஜே ஒரு அவசர சட்டத்தின் மூலம் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தின் தேர்தல் விதிகளை மாற்றி லலித் மோடியை அதன் தலைவராக்கினார். அங்குதான் துவங்கியது லலித் மோடியின் அசுர வளர்ச்சி பின் இந்திய கிரிக்கெட் அமைப்பின் துணை தலைவராக மாறியதும். ஐபிஎல் அமைப்பை துவக்கியதும், அதில் கோடிகோடியாய் கொள்ளையடித்ததும் பின் நடந்த எல்லோரும் அறிந்த கதை. 

போர்ச்சுகல்லில் லலித் மோடியின் மனைவிக்கு சிகிச்சை அளித்த மர்ருத்துவமனை உரிமையாளருக்கு ராஜஸ்தானில் மருத்துவமணை துவங்க 96,000 சதுர மீட்டர் நிலத்தை அளித்துள்ளார். சிகிரெட் மீது முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் விரித்த வரியை 20% குறைத்து மோடியின் சிகிரெட் கம்பெனிக்கு கோடிக்கணக்கில் லாபத்தை சேர்த்துள்ளார். இதற்கு கைமாறாக லலித் மோடி ரஜேவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் தனது மனைவி பெயரில் நடத்திவரும் நிகந்த் ஹெரிடேஜ் என்ற டுபாக்கூர் நிறுவனத்தின் 10 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை 96000 கொடுத்து வாங்கி அந்த நிறுவனத்தில் 11 கோடி முதலீடு (அதாவது அன்பளிப்பு) செய்துள்ளார். இதுவும் சுத்த சுயபிரகாசம் நரேந்திர மோடிக்கு தெரியாது என நம்பவேண்டும்.

வியாபாம் குண்டு: 
மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வி மற்றும் அரசுத்துறை வேலைகளுக்கான ""மத்திய பிரதேச தொழில்முறைத் தேர்வணையம்"" சார்ந்து நடந்துள்ள ஊழல்கள் துவங்கியது பாஜக ஆட்சியில்தான். பணம் இருந்தால் எந்த தேர்வையும் எழுதி, எந்த வேலையும் பெறலாம் என்ற கேவலமான ஊழல் வழியை துவங்கியது பாஜகதான். ஒருவருக்கு பதிலாக மற்றொருவர் தேர்வெழுதி கொடுக்க அதை சமபந்தபட்ட துறையின் தேர்வாணைய அதிகாரிகளை, தேர்வு நிலைய கண்காணிப்பாளர்களை கவனிப்பது, விடை திருத்துபவர்களை கவனிப்பது மட்டுமல்லாமல் சமபந்தபட்ட துறையின் அதிகாரிகள் துவங்கி அமைச்சர்கள் வரை பணத்தை கொடுக்க எங்கும் தரகர்கள் நிறைந்திருந்தனர்.

இதுவரை சுமார் 2000 பேர் கைதுசெய்யப்படுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகியுள்ளனர். இதில் தொடர்புடைய 40க்கும் மேற்பட்டோர் கொலை செய்யபட்டுள்ளனர். மத்திய பிரதேச ஆளுனர் ராம் நரேஷ் யாதவ், பாரதிய ஜனதா கட்சி தலைவரும், முதல்வருமான சிவராஜ் சவுகான், அவரது மநைவி சாதனா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே.சி.சுதர்சனன், பாஜகவின் முன்னால் கல்வி அமைச்சர் லட்சுமிகாந் சர்மா, ஆர்.எஸ்.எஸ் புரோக்கரும் சுரங்க அதிபருமான சுதிர் ஷர்மா, சுரேஷ் சோனி, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான தர்மேந்திர பிரதான், பிரமோத் ஜா, விக்ரம் பட்  உள்ளிட்டோர் குற்றவாளி கூண்டில் இருப்பதை பற்றி கள்ள மவுனம் காக்கும் நமோ நல்லவர் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஆப் கி பார் அதானி சர்கார் :
2002ல் குஜராத்தில் மோடி அரசாங்கம் துவங்கியபோது அதானி குழுமம் நடத்திய வணிகத்தின் பங்கு 3741 கோடி, அதே மோடி 2014 அங்கிருந்து பிரதமாராக வந்தபோது அதானி குழுமத்தின் வணிகத்தின் பங்கு 75,559 கோடி அதாவது 20 மடங்கு வளர்ச்சி! தேர்தல் பிரச்சாரத்திற்கு அதானி விமானத்தில் பறந்த மோடி, தேர்தலுக்கு பிறகு அராசாங்க விமானத்தில் அதானியை அழைத்துச்செல்கிறார். அவருக்குத்தான் பறக்கும் விமானத்தில் பாரத் ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாசார்யா மோடியின் முந்நிலையில் 6200 கோடி கடன் கொடுக்கிறார். அதாவது 81 ஆயிரம் கோடி கடன் உள்ள ஒரு நிறுவன தலைவருக்கு எந்த கேள்வியும் இல்லாமல் கடன் கொடுக்கிறார்.

இதன் அர்த்தம் என்ன? அதாவது குஜராத்தை 12 ஆண்டுகளில் கொள்ளையடித்த  அதானி -  மோடி கூட்டம் இப்போது வாக்காளர்கள் ஆசியோடு 5 ஆண்டுகளில் இந்தியாவை திருட வந்துள்ளனர் என்பதுதான். ஆனால் இதுவெல்லாம் வெளியிடப்படாத ரகசியம் என நமது பிரதமர் மோடி அறியார் என்பதை நாம் நம்பத்தான் வேண்டும். ஏனெனில் அவர் இப்போது மான்புமிகு பிரதமர் ஆயிற்றே..!    

இன்னும் நீண்ட பேச்சு:
""ஊழல் ஒரு அமைப்பாக மாறியுள்ளது, ஒப்பந்ததாரர்களே நாட்டை வழிநடத்தும் நிலை உள்ளது."" என்ற அவரது பேச்சின் அர்த்தம் அதானியையும், அம்பானி சகோதரர்களையும் நோக்கியது என  புரிந்துக்கொள்ளலாம். "ஒப்பந்தகாரர்களை வளர்த்துக்கொண்டே அவர்களால் நாடு ஊழல் அமைப்பாக மாறுகிறது என்று கம்பீரமாக பேச மோடியை தவிர யாராலும் முடியாது.

"15 ஆயிரம் கோடி எரிவாயு மானியம் நிறுத்தப்பட்டு, 20 லட்சம் இந்தியர்களிடம் சிலிண்டர்கள் பிடுங்கப்பட்டுள்ளதை"" ஏதோ மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் மானியங்களை வேண்டாம் என்றது போலவும் இன்னும் இது ஒரு கோடியை உடனடியாக தாண்டும் என்பதுபோலவும் அவர் பேசியது. அடுத்து ஊதியுள்ள அபாயச்சங்கு.

""ஜி 20 மாநாட்டில் கருப்பு பணத்தை மீட்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடியுள்ளேன்."" என்று அவர் பேசியதுபோது அவராலே அடக்க முடியாத சிரிப்பு இதழோரம் வந்திருக்கும்.  கருப்பு பணத்தை மீட்டு 100 நாளில் உங்கள் வங்கி கணக்கில் 15 லட்சம் பணம் போடுவேன் என்று சொன்னதை நம்பிய நாடல்லவா இது. இதையும் நம்பத்தான் போகிறது என்ற நினைபால் பூத்த புன்னகை அது.

அவரது 300 நாள் ஆட்சியில் நூற்றுகனக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல், அதுகுறித்து ஒரு வார்த்தைக்கூட உதிர்க்கமல் கூச்சமில்லாமல் மேடையில் முழுங்குகிறர் மோடி ""ஒவ்வொரு விவசாபியும் நாட்டுக்கு போர் வீரனைப்போன்று முக்கியமானவர்கள்."" என்று. டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி அவர் முழங்கும் நேரத்தில்தான் 18,500 கிராமங்களில் இன்னும் மின்சார வசதி இல்லை. என்ற உண்மையை வேறு வார்த்தைகளில் கூறுகிறார்.

அவரது 300 நாள் ஆட்சியில் 600 கலவரங்கள் நடந்துள்ளது ""இந்தியாவில் சாதியவாதம், மதவாதம் போன்றவற்றிற்கு ஒருபோதும் இடமில்லை."" என வெட்கம்மில்லாமல் அவரால் பேசமுடிகிறது. தமிழகத்துல் ஏற்கனவே உள்ள சாதிய சிக்கல்கள் போதாதென அமித்ஷா ஒரு புதிய கணக்கை துவக்கி உள்ளார். பாசிச சக்திகளின் சதுரங்க விளையாட்டில் எத்தனை காய்கள் வெட்டுபட்டாளும் அதிகாரம் அவர்களிடம் இருக்க வேண்டும். பிணங்கள் விழ விழ அவர்களுக்கு அது ஏணிப் படியாய்தான் மாறி இருக்கிறது.

ஊழல்வாதிகளை, இடைதரகர்களை, மதவெறியர்களை, சாதி ஆதிகவாதிகளை தன்னுடன் வைத்துக்கொண்டே சுதந்திர தின உரையில் அவர்களை கண்டிப்பதுபோல, அவர்களை எதிர்ப்பது போல மோடியால் பேசமுடியும் எனில்.. மகாத்மா காந்தியை படுகொலை செய்துவிட்டு, பாபர் மசூதியை இடித்துவிட்டு இல்லவே இல்லை என்று சாதித்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிகச்சரியான வார்ப்பு அவர்தான் என்பதை நிருபித்துக்கொண்டிருக்கிறார்.
(பின் குறிப்பு: சோர் என்ற ஹிந்தி வார்த்தைக்கு திருடன் என பொருள்)   

---- செப்டம்பர் இளைஞர் முழக்கம் இதழில் வெளியான எனது கட்டுரை

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark