மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

கடலூர் மாவட்ட்டம் சிதமபரம் வட்டத்தின் மக்கள் கோரிக்கைக்கா நடந்த நடைபயண புகைப்படங்களும், 02.07.14 அன்று தீக்கதீர் நாளிதழில்  வெளியான என்னுடைய கட்டுரையும்       காவிரியின் கடைமடை பாசனப் பகுதி யான சிதம்பரம் வட்டத்தின் விவசாயம் பெரும் பகுதி காவிரியின் ஆற்றுப் பாசனத்தை நம்பியே இருக்கிறது. பக்கிம்காம் கால்வாய், பாசமுத்தான் ஓடை, கான்சாகிப் வாய்க்கால், பரவனாறு, வெள்ளாறு, கழுதவெட்டி வாய்க்கால், முரட்டு வாய்க்கால், புதிய முரட்டு வாய்க்கால், அரியகோஷ்டி வாய்க்கால் என பாசனத்திற்காக பல ஆறுகளூம் வாய்க்கால்களும் ஓடைகளும் உள்ளன. ஆனால் அவையெல்லாம் தண்ணீரை எப்போதாவதுதான் பார்க்கும்!

             இதில் முக்கியமாக சிதம்பரத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 25,000 ஏக்கர் நிலங்கள் நம்பி இருப்பது கான்சாகிப் வாய்க்காலைதான். இந்த வாய்க்காலில் எப்போதாவது தண்ணீர் வந்தால் சிதம்பரம் நகரை அடையும் போது நகரின் கழிவுகளை சுமந்து சாக்கடைக் கால்வாயாக மாறிவிடுகிறது. மற்றொருபுறம் சேத்தியாத்தோப்பு ஆயக்கட்டு பாசன நீர் சிதம்பரத்தின் வடக்கில் கடற்கரையோரம் வரை உள்ள கடைமடை பகுதியை வந்தடைவதில்லை. இதனால் பரங்கிப்பேட்டை வடக்கு பகுதியே பாலைவனமாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது. இது போதாதென கடல் நீர் புகுந்து சில ஏரிகளை உப்பு நீர் ஏரிகளாக மாற்றிவிடுகிறது.

           ஆட்சியாளர்கள் மாறி மாறி வந்தாலும் இந்தப் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் மட்டும் வர மறுக்கிறது. ஒவ்வொரு ஆட்சியிலும் திட்டங்கள் பல அறிவிக்கப்படுகின்றன. அறிவிக்கப்படும் திட்டங்களுக்காகவே ஆர்ப்பாட்டமான பாராட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. விழாக்கள் முடிந்ததும் அவை வெறும் அறிவிப்பாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. இந்நிலையை மாற்ற மாற்று திட்டங்களை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. களப்போராட்டங்கள் மட்டுமல்ல, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை மார்க்சிஸ்ட் கட்சி பெற்றதைத் தொடர்ந்து சட்டமன்றத்திலும் கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

             மேலும் இப்பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்காக நான்கு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இன்று (2014 ஜூலை 2) நீண்ட நடைபயண இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்கிறது. நடைப்பயணத்தில் எழுப்பப்படும் நான்கு அம்சக் கோரிக்கைகளும், அவற்றின் பின்புலங்களும் வருமாறு:

1. கொள்ளிடம் ஊற்று நீரை கான் சாகிப் வாய்க்காலுக்குத் திருப்பிவிடுக
     விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மிகமுக்கியமான இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் சிதம்பரம் கிழக்கு மற்றும் குமராட்சி பகுதியில் 25,000 ஏக்கர் சாகுபடிக்கு வாய்ப்பு ஏற்படும். ஒரு நாளுக்கு ஒருவேளை மட்டுமே, அதுவும் ஒரு மணிநேரம் மட்டுமே, குடிநீர் வினியோகிக்கப்படுகிற சிதம்பரம் நகரத்தின் தாகம் தணியும். கிராமப்புறங்களில் ஒரு ஊருக்கு ஒரே ஒரு குடிநீர்க் குழாய் உள்ளது என்ற அவலமும் மாறும். சிதம்பரம் வட்டத்தின் குடிநீர்ப் பற்றாக்குறைக்கு முடிவுகட்டப்படும். அத்தோடு நிலத்தடி நீர்வளம் பெருகும், வாய்க்காலின் நீர்வரத்து அதிகரித்தால் கடல்நீர் உட்புகுந்து நிலத்தின் நீர்நிலைகள் வீணாவது தடுக்கப்படும்.

         இத்திட்டத்தினை நிறைவேற்ற பலகட்ட போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பேற்றவுடனேயே 30.08.2011 அன்று முதலமைச்சருக்கு மனு அளித்ததுடன் சட்ட மன்றத்தில் கோரிக்கையினை வலியுறுத்தி பலமுறை பேசியுள்ளார். கவன ஈர்ப்பு மற்றும் வெட்டுத்தீர்மானங்கள் மூலமாகவும் வலியுறுத்தியுள்ளார். பல முறை பொதுப்பணித்துறை அமைச்சர், பல மட்டத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து வற்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் தொடர் முயற்சியால் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் - குமாரமங்களம் இடையில் ரூபாய் 252 கோடி செலவில் கதவணை கட்டும் திட்டம் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் வரப்பிரசாதமாக உள்ள இத்திட்டத்தினை அரசு இனியும் காலதாமத மின்றி நிறைவேற்ற நிதி ஒதுக்கி அமலாக்கிட வேண்டும். காலதாமதமாகிற ஒவ்வொரு நாளும் அப்பகுதி மக்கள் கடுமையான பிரச் சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கான்சாகிப் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்துக
     சிதம்பரம் நகரத்தையொட்டிச் செல்லும் கான்சாகிப் வாய்க்கால், சிதம்பரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் உள்ளிட்டு கால் நடைகள் பயன்பாட்டிற்கும், சுமார் 7500 ஏக்கருக்கு அதிகமான நிலங்களில் விவசாயம் நடைபெறவும் பயன்பட்டுவருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்காலில் நகரத்தின் சாக்கடை நீரும், அரசு மருத்துவ மனையின் மருத்துவ கழிவுகளும், நகரின் குப்பை கூளங்களும் கலந்து நாசப்படுத்தி வருகின்றன. புதிதாக உருவாகும் நகர்களில் வீடுகட்டுவோர் கழிப்பறைகளுக்கான ‘செப்டிக் டேங்க்’ அமைப்பது நிறுத்தப்பட்டு விட்டது.
             குழாய் மூலம் மனிதக் கழிவுகள் இந்த வாய்க்காலிலேயே கலக்கின்றன. இதனால் சிதம்பரம் நகரின் சுகாதாரமும் அடியோடு சீர்கெடும் நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.நகராட்சியின் சாக்கடை நீரும், மருத்துவமனை கழிவுகளும் கலப்பதால் கிராமங்களில் விவசாயத்திற்குப் பயன்படாத நிலை. அந்த நீரைப் பயன்படுத்தும் கிழக்குப் பகுதி மக்களுக்கு புதிய புதிய கடுமையான நோய்கள் தொற்றுகின்றன.

               கால்நடைகளும் நோய்களால் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாக்கடை மற்றும் மருத்துவ கழிவுகள் கலக்காமல் கான்சாகிப் வாய்க்கால் தண்ணீரை கிழக்குப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கிடைத்திட ஏற்பாடு செய்யவேண்டும் என 3.8.2011 அன்று உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஒரு பழமை வாய்ந்த நகராட்சியின் சுகாதாரமும், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையும், கால்நடைகளின் சுகாதாரமும், விவசாயமும் பாதுகாக்கப்பட இந்த கோரிக்கை உடனடியாக அமலாக வேண்டும்.

3. வெள்ளாற்றில் உப்பு நீர் உட்பு காமல் தடுப்பணை கட்டிக் கொடுத்திடுக
       சிதம்பரம் வட்டத்தில் உள்ள வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுந்து சேத்தியாத்தோப்பு வரையில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. வெள்ளாற்றில் இருபுறமும் உள்ள ஊராட்சிகள், சிதமபரம் நகராட்சி, பரங்கிப்பேட்டை, கிள்ளை புவனகிரி பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புநீராக மாறி விவசாயம் குடிநீர் உள்ளிட்ட அனைத்தும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் குடிநீருக்கே வழியற்ற நிலைமை எற்படும் ஆபத்து உள்ளது. எனவே வெள்ளாற்றின் குறுக்கே தீர்த்தாம்பாளையம், சி.முட்லூர் அருகில் கதவணை கட்டி கடல்நீர் உட்புகாமல் தடுத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4. வடக்கு பிச்சாவரம் - தெற்கு பிச்சாவரம் இணைப்புப் பாலம் அமைக்க ஏற்பாடு செய்திடுக!
    சிதம்பரம் வட்டத்தில் உள்ள சுற்றுலா மையமான கிள்ளை பிச்சாவரத்தையும் தெற்கு பிச்சாவரத்தையும் இணைக்கும் புதிய சாலையும், உப்பனாற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சாலை அமைந்தால் கடலூர் மற்றும் வடக்கு பகுதியிலிருந்து சுற்றுலா மையத் திற்கு வருபவர்கள் பரங்கிப்பேட்டை, கிள்ளை, பிச்சாவரம் வழியாக கொள்ளிடக் கரை - சீர்காழியை அடைந்துவிட முடியும்.
      இதே போன்று தெற்கு பக்கம் உள்ளவர்கள் சிதம்பரம் நகருக்குள் வராமலேயே கடலூர் மற்றும் சென்னையை அடைய முடியும். தெற்கு பிச்சாவரம், தாண்டவராயன் சோழகன்பேட்டை, கவரப்பட்டு, கீழத்திருக் கழிப்பாலை, வீரங்கோயில்திட்டு, நடராஜபுரம், கணக்கரப்பட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றி இரண்டு மணி நேரம் செலவழித்து சிதம்பரம் நகரம் வழியாக பரங்கிப்பேட்டை வரும் நிலைமை உள்ளது. மேற்கண்ட பாலமும் இணைப்புச் சாலையும் அமையுமானால் மக்கள் 30 முதல் 45 நிமிடங்களுக்குள் பரங்கிப்பேட்டையை அடைந்துவிட முடியும். சுனாமி போன்ற கடல் சீற்றங்கள் ஏற்படும்போது கடலோர மக்கள் எளிதில் வெளியேறி உயிர் பாதுகாப்பு பெற பேருதவியாக இருக்கும்.

          இக்கோரிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன் 2011-12 சட்டமனற கூட்டத் தொடரில் வெட்டுத் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். பலமுறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார். வெட்டுத் தீர்மானம் எண் 1938ன் மீது பதிலளித்த தமிழக அரசின் மானிய கோரிக்கை 21ல் இப்பணி நிறைவேற 1,600 லட்சம் செலவாகும் என அரசு தெரிவித்தது. இந்த பதில் மட்டும் போதுமானதல்ல, உடன் இத்திட்டத்தை அமலாக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களும் சட்டமன்ற உறுப்பினரின் தொடர் முயற்சியாலும் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து உரிய ஆய்வுகள் , மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அரசின் தாமதத்தால் நாளுக்கு நாள் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

    எனவே மேற்கண்ட கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்ற வலியுறுத்தியே இன்றைய நடைபயண இயக்கம். இயற்கை எழில் கொஞ்சும் அலையாத்தி காடுகள் நிறைந்த பிச்சாவரத்திற்கு அருகில் உள்ள பொன்னந்திட்டில் துவங்கி கோயில் நகரமான சிதம்பரம் நகரத்தில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற உள்ள இந்த பயணத்திற்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையேற்கிறார். உழைக்கும் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு கவனம் செலுத்தட்டும். இயற்கை வளம் பெருகட்டும். மக்கள் வாழ்க்கை சிறக்கட்டும்.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark