மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

விடுதலைப் போரில் பெண்கள் - 15


சரோஜினி நாயுடுவின் சகோதரியான சுஹாசினி லட்சுமிக்கு எட்கர் ஸ்னோவின் சீன வானில் சிவப்பு நட்சத்திரம் என்ற புத்தகத்தை கொடுத்தார். அதுமுதல் லட்சுமியின் சிந்தனையின் நிறம் மாறத்து வங்கியது, வாழ்வின் பாதையும்தான். அந்த பாதை தேசம், மக்கள், உண்மையான மாற்று கொள்கை, போராட்டம் என்ற சிந்தனைகளை உள்வாங்கியதாக இருந்தது. ஆனால் அதற்கு முன் அவர் பல தடைகளை கடக்கவேண்டி இருந்தது. 

1938 ஆம் ஆண்டு லட்சுமி மருத்துவ படிப்பின் இறுதியாண்டு படித்த போது ஒரு விமான ஓட்டியை காதலித்து திருமணம் செய்தார். அன்பை சுமக்கவேண்டிய வயதில் பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வந்தது. முரண்பாடுகளின் குவியலாக, கருத்துக்கள் ஒத்துப்போகாத திருமணமாய் அது முடிந்தது. அவர்களால் இணைந்து வாழ முடியவில்லை. கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. விடுபட விரும்பிய நிமிடங்களை தேடிய வாழ்வு அது. பிரிடிஷ் இராணுவ பணிக்கு மருத்துவர்களை தேடிக்கொண்டிருந்த அந்த சமயத்தை தனது சுய வாழ்வின் விடுதலைக்காக மாற்றிக்கொண்டார். இரண்டாண்டுகள் மட்டுமே தொடர்ந்த அந்த வாழ்வு 1940ல் லட்சுமி இராணுவ மருத்துவராய் சிங்கப்பூர் செல்லும் வரைதான் தொடந்தது.

தனது 26வது வயதில் சிங்கப்பூர் வந்தடைந்தார் லட்சுமி. அங்கு கேரளத்து நண்பர் ஒருவரின் மருத்துவமணையில் மருத்துவராய் பணிபுரிய துவங்கினார். இதற்கிடையாக பல சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்தேறியது. பாசிச சக்திகள் கை மேலோங்கி உலகை அச்சுறுத்திக்கொண்டிருந்தது. இந்தியாவில் விடுதலை போராட்டம் தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்தது. லட்சுமி சிங்கப்பூர் வந்த சில மாதங்களில் ஒரு பரபரப்பான செய்தி வந்தது, கல்கத்தாவில் கப்பல் மூலம் சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனிக்கு தப்பிவிட்டார் என்ற செய்திதான் அது.

1941 ஆம் ஆண்டு ஜப்பான் சிங்கப்பூரை தாக்கியது. குண்டுகளுடன் துண்டு பிரசுரங்களையும் ஜப்பானியர்கள் வீசினர். அதில் ""நேசபடைகள் சரணடைய வேண்டும் என இருந்தது. பிரிடிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போர் இதுவெனவும், ஒத்துழைத்தால் இந்திய விடுதலைக்கு உதவப்படும்"" எனவும் அதில் எழுதியிருந்தது. ஜபானின் ராணுவர் அதிக அளவு சூழ்ந்ததால் பிரிடிஷ் இந்தியப்படைக்கு சரணடைவதைதவிர வேறுவழியில்லை. சரணடைந்த படையணிகளில் மோஹன்சிங் தலைமை வகித்த பஞ்சாப் ரெஜிமெண்டும் ஒன்று. அதன் ஜப்பானியர் தலைமையகத்தில் ராஷ்பிஹாரி போஸை சந்தித்தார். இருவரும் ஜப்பானிய அதிகாரி ஃபியூஜிராவை சந்திக்க அனுப்பப்பட்டனர். பின் ஜப்பானியர்கள் உதவியுடன் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. இதில்தான் நேதாஜி பின்னர் இணைந்தார். அதன் தலைமை பொறுப்பேற்றார். 

1943ல் ஜப்பான் பிரதமர் டோஜோவை சந்தித்து 6 மணி நேரம் விவாத்தித்து இந்திய விடுதலையை வேண்டிய உதவிகளை இந்திய தேசிய இராணுவத்திற்கு பெற்று வந்தார். இரணுவ படையணிகள் அமைக்கப்பட்டது. இதன் பிறகான சந்திப்புதான் நேதாஜியுடனான லட்சுமியின் சந்திப்பு. அவர் வாழ்க்கையை மாற்றிப்போட்ட சந்திப்பு. ""அந்நிய ஒடுக்குமுறையுடன் பெண்கள் சமூக  ஒடுக்குமுறையையும் அல்லவா சேர்ந்து சுமக்கவேண்டியுள்ளது? பெண்கள் ஆண்களுக்கு இணையான உரிமைகள் கிடைக்காதவரை, நாடு முன்னேறாது. விடுதலை பெற்ற ஒரு நாட்டில் சாதி, மத, பாலின அடிப்படையிலான பாரபட்சமோ, ஒடுகுமுறையோ இருக்கக்கூடாது"" இவைகளைதான் நேதாஜி லட்சுமியிடம் பேசிய சாரம்.

அடுத்த நாள் லட்சுமி தான் புதிதாக துவங்கியிருந்த கிளினிக்கை மூடிவிட்டு களத்தில் இறங்கினார். பெண்களை ராணுவத்தில் சேர்த்தக கடுமையாக உழைத்தார். மூன்று நான்கு தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த குடும்பத்து பெண்கள்தான் அப்படையணியின் முதுகெலும்பாக விளங்கினர். அந்த கல்விகற்ற சுந்தந்திட உணர்வு மிக்க பெண்களை அதிகாரிகளாக கொண்டு இந்திய வரலாற்றில் முதல் பெண்கள் படை பிரிவான ஜான்சிராணி படைபிரிவு உருவாக்கப்பட்டது. அதன் கேப்டன் லட்சுமி, அவருக்கு அடுத்த கமாண்டெண்ட் ஜானகி தேவர்.

1943 அக்டோபருக்குள் 1500 பெண்களை வைத்து பயிற்சியளிக்க முகாம் ஏற்பாடு செய்யும் அளவும் இப்படை விரிவானது. பர்மா, ரங்கூனிலிருந்து இன்னொரு ரெஜிமென்ட் தயாரானது. அதிலிருந்த பெண்கள் அனைவரும் வங்க மொழி பேசுவோர். படையணியில் தினசரி கடைபிடிக்கபட்ட அட்டவணையும், கட்டுபாடும், உணவு பழக்கமும் பெண்கள் மீது பிரமிக்கதக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பெண் வீரர்கள் பயிற்சியும், பொது நிர்வாகத்தையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கேப்டன் லட்சுமியுடையது. அனைத்து திட்டங்களையும் விவாதிப்பது, நேதாஜி வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் போது உடனிருப்பது ஆகியவை அவரது முக்கிய பணிகளாக இருந்தது.

ஆனால் பாசிசபடைகளின் ஆதரவுடன் இந்திய தேசிய இராணுவம் செயலாற்றியதை பற்றி கேப்டன் லட்சுமிக்குள் கடுமையான விவாதங்கள் நடந்துதான் வந்தது. யூதர்களை ஹிட்லர் நடத்திய விதம் குறித்தும், அவரது உதவி இல்லாமல் பிரிடிஷ்காரர்களை நம்மை மட்டுமே நம்பி தோற்கடிக்க வெண்டும் எனவும், பாசிச கோட்பாடுகளை உதறிதள்ளி நமக்கான கோட்பாட்டை நாமே உருவாக்க வேண்டுமெனவும் நினத்தார். இந்திய விடுதலைக்கு ஜப்பான் உதவி புரிவதாக மனதார நம்பி இ.தே.இராணுவம் செயலபட்ட காலம் அது.

1944 மார்ச் மாதம் இந்த இராணுவப்படை முதலில் ரயிலிலும் பின்னர் மோட்டர் படகிலும் பர்மாவை நோக்கிச்சென்றது. சாகசம் நிறைந்த பயணம் அது. பிரிடிஷ் இந்தியாவின் வடகிழக்கு  பகுதியில் ஐ.என்.ஏவும் ஜப்பானின் படையும் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு நடந்த பயணம் அது. தினமும் 10 முதல் 15 கிலோமீட்டர் நடந்து காட்டில் பயணம். ஆங்காங்கே குண்டுகள் விழும், பலர் காயம்படுவர் இருப்பினும் பயணம் தொடரும். 1944 மார்ச் முதல் ஜூன் வரை இராணுவம் பர்மாவில் இருந்தது. அப்போது நிறைய பேர் குண்டுகளால் தாக்கப்பட்டனர். ஜான்சிராணி படையணியை சேர்ந்த பெண்கள் நர்சுகளாக பணிபுரிந்தனர். 1945 மார்ச் மாதம் இம்பாலாவுக்குள் படை நுழையும் தருணத்தில் படை பின்வாங்குவது என முடிவெடுக்கப்பட்டது. காரணம் உலகப்போர் சோவியத் யூனியனின் தீரம் மிகுந்த மகத்தான செம்படையால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பின்வாங்கப்பட்ட படையில் இருந்த பர்மாகாரர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் முதலில் தாய்லாந்திற்கும் பின்னர் மலேசியாவுக்கும் அழைத்துச் சென்றார் நேதாஜி. சிங்கப்பூர் பெண்கள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். நேதாஜி சைகோன் சென்றுவிட்டார். 1945 ஆகஸ்ட் மாதம் அவர் டோக்கியோ சென்ற போது விமாணம் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். 

பர்மாவின் காடுகளில் இருந்த கேப்டன் லட்சுமி பிரிடிஷ் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு ரங்கூனில் ஒருமாதம் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அவரை காண ஐ.என்.ஏ முன்னால் வீரர்கள் வருவார்கள். இவர்கள் ஒன்று திரண்டு 1945 அக்டோபரில் ரங்கூனில் ஒரு மாநாடு நடத்தினர். இச்செய்தியை கேள்விபட்ட பிரிடிஷ் இந்திய அரசு கேப்டன் லட்சுமியை 1945 அக்டோபர் முதல் 1946 மார்ச் வரை மலையில் சிறைகைதியாய் வைத்திருந்து பின்னர் இந்தியாவுக்கு அனுப்பியது.

1947ல் இந்தியா விடுதலை அடைந்தது. கேப்டன் லட்சுமி போன்றவர்களுக்கு இது மகிழ்வும் துக்கமும் கலந்த ஒரு சம்பவமாய்தான் இருந்தது. ஏனெனில் நாட்டின் பிரிவினை அவரக்ளை துக்கமுற செய்தது. இதற்கு காரணம் காங்கிரஸ் என அவர்கள் உறுதியாக நம்பினார்கள். லட்சுமி கம்யூனிஸ்டுகளுடன் இனைந்து செயலாற்ற விருப்பம் கொண்டார். ஆனால் அக்கடிசியில் ஒரு சிலர் இவர்களை பாசிச சக்தியின் கையாட்களாக பார்தனர். 1947ல் கேப்டன் லட்சுமி கர்னல் பிரேம் குமார் சைகலை மணந்தார். 1946ல் ஐ.என்.ஏவின் குற்றம்சாட்டப்பட்ட மூன்று முக்கிய நபர்களில் அவரும் ஒருவர். லாகூரிலிருந்து இவர்கள் கான்பூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு கேப்டன் லட்சுமி தனது மருத்துவ பணியை முழுவீச்சில் துவங்கினார். பாகிதானிலிருந்து அகதிகள் வந்தவண்ணமிருந்தனர். இந்து முலிம் என வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் அவர் சேவை செய்தார். இத்தம்பதிக்கு சுபாஷினி, அனிசா என்ற இரு மகள்கள் பிறந்தனர். 

அவரது நோயாளிகள் பெரும்பாலும் உழைக்கும் மக்கள், பஞ்சாலை தொழிலாளிகள், அகதிகளாகவே இருந்தனர். வங்கதேச போரின் போது மெற்குவங்கத்தில் குவிந்த அகதிகள் மீண்டும் கேப்டனை அரசியல் வாழ்வுக்கு அழைந்து வந்தனர். மார்க்சிய இயக்கத்தின் மகத்தான தலைவர் ஜோதிபாசு அழைப்பை ஏற்று அங்குள்ள அகதிகளுக்கு மருத்துவ உதவி செய்ய மெற்குவங்க விரைந்தார் கேப்டன். அங்கு மக்கள் நிவாரண குழுக்களுடன் பொகாய்காவ் என்ற இடத்தில் ஐந்து வாரங்கள் தங்கி உதவினார். எல்லை தாண்டி முக்தி வாஹினி தொண்டர்களுக்கு உதவினார். அப்போதுதான் அவர் தன்னை மக்களுக்கு அளப்பறிய தியாகங்களை செய்து போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டார். 

தனது 57வது வயதில் ஒரு சரியான இயக்கத்தில் தன்னை இனைத்துக்கொண்ட மனநிறைவு அவருக்கு வந்தது. 1981ல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அமைப்பு மாநாட்டில் அகில இந்திய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ல் இந்திராகாந்தி படுகொலையை தொடர்ந்து நடந்த சீக்கிய மக்கள் மீதான படுகொலைகளின் போது வீதியில் இறங்கி அவர்களை பாதுகாக்க நின்றார். அவர் இருந்த பகுதியில் ஒரு சீக்கியரும் தாக்கப்படவில்லை என்பதிலிருந்து அவரது தீவிர போராட்டத்தை அறியமுடியும். 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷ வாயு கசிவால் பாதிகப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவரது மருத்துவ குழு அங்கு சென்று பணியாற்றியது. எனது அவரது போராட்ட வாழ்க்கை நெடியது. 

2002 ஆம் ஆண்டு இந்திய நாட்டு ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்து போட்டியிட்டார். முதுமையை வென்ற போராளியாய் ஜொலித்தார். அதுதான் கேப்டன் லட்சுமி. 
காலம் அவரையும் நம்மிடமிருந்து பிரித்து அழைந்துச்சென்றது. அவரின் வாழ்வில் நாம் கற்க வேண்டிய ஏராளமான பாடங்களை விட்டுச்சென்றார். அவர் மரணமடைந்த போது ஒரு மாதப்பத்திரிக்கை அவருக்கு கீழ்கண்டவாறு அஞ்சலி செலுத்தியது.

""23.07.2012 அன்று கேப்டன் லட்சுமி சேஹல் காலமானபோது இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அதன் பிறகான இந்திய அரசியல் களத்திலும் பெண்கள் பங்கேற்பின் ஒளிமிக்க அத்தியாயம் ஒன்று முடிவுபெற்றது. லட்சியத்தின் மீதான அரசியல் பணியையும் தொழில் சார்ந்த மருத்துவப் பணியையும் தன் சமூகத்தின் மேம்பாட்டிற்காக அர்ப் பணித்து வாழ்ந்த அவரது பூதவுடல் மருத்துவம் பயிலும் மாணவர்களின் ஆய்வுக்காக வழங்கப்பட்டது சாலப் பொருத்தமே.""  
(இன்னும் போராளிகளை சந்திகலாம்)
         
விடுதலைப் போரில் பெண்கள் - 14

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark