மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

விடுதலைப் போரில் பெண்கள் - 16


கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!

கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட!

காந்தி யென்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்த ருக்குள் தீமை குன்ற 
வாய்ந்த தெய்வ மார்க்கமே.

நாமக்கல் கவிஞரின் இக்கருத்தை கொண்ட பாடகள் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வார்த்தகளில் தேசம் எங்கும் எதிரொலிந்த நேரம் அது. சக்திவாந்த, சம்பிரதாயமற்ற எதிர்ப்பு போராட்டமான சத்தியாகிரகம் மாணவர்களை, இளய பட்டாளத்தை வசீகரித்த உலைக்களமாய் தேசம் இருந்தது. 

14 வயதில் சிறையை நோக்கி...
காந்தி என்ற எளிய மனிதன் தேசத்தின் ஆன்மாவை அகிம்சை வழியில் போராட தூண்டி அதில் வெற்றியும் அடைந்திருந்தார். அவரிச்சுற்றி எப்போது நூற்றுக்கணக்கில் அண்களும் பெண்களுமாய் எளிய மனிதர்கள் குழுமிருந்தனர். அவர் போராட்டத்திற்கு நிதி கேட்டால் தங்கள் உடம்பில் இருந்த குண்டுமணி தங்கத்தையும் அவரிடம் தாரைவார்த்தனர். அன்று அவரைச்சுற்றி இருந்த கூட்டத்தில் 14 வயது நிறம்பிய விமல் என்ற மாணவியும் ஒருவர். காந்தியை சந்தித்த அந்த தருனம் அவளது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தன்னுடைய குடும்ப சூழல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்கும் என்பதால் அந்த இளம் மாணவி காங்கிரசின் சேவை அமைப்பான சேவதளத்தில் காந்தியை சந்தித்த அன்றே தன்னை இணைத்துக்கொன்டார். 

அச்சமயத்தில்தான் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட்டத்தை துவங்கி இருந்தது. அப்போது காதராடை உடுத்துவது தங்களின் உணர்வின் வெளிப்பாடு என தேசபக்தர்கள் உணர்வுப்பூர்வமாக நம்பினர். எனவே விமலும் அவரது தோழிகளும் பள்ளிக்கு வெள்ளை நிறத்திலான கதர் ஆடைகளையே உடுத்திச் சென்றனர். 

   சேவாதளத் தொண்டரான விமலுக்கும் அவரது தோழர்களுக்கும் வெளிநாட்டு துணிகளை விற்கும் கடைகளுக்கு முன்பு மறியல் செய்யும் பணித் தரப்பட்டது. இவர்கள் செல்லும போது கடைக்காரர்கள் கடையை மூடிவிடுவார்கள். காவல்துறையினர் போராட்டகரர்களை அப்புறப்படுத்தியதும் மீண்டும் திறப்பார்கள். இவர்களுக்கு பாடம் நடத்திட எண்ணிய விமல் தனது நண்பர்களுடன் திடீரென அறிவிப்பு இல்லாமல் காரில் சென்று கடைகளை மறித்தார். காவல்துறை இவர்களை வளைத்து பிடித்து கைது செய்தது. சுற்றிலும் மக்கள் திரண்டு இவர்கள் செல்லும் காவல்துறை வாகணத்தின் மீது மலர்த்தூவி வாழ்த்தினர். நீதிமன்றத்தில்  ஆங்கில நீதிபதி இவர்களை சிறுமிகள்தானே என்று ஏளனதுடன் மன்னிப்பு கேட்டால் விட்டுவிடுவதாக கூறினார். ஆனால் விமல் சொன்னார் "நாங்கள் செய்தது பெருமைக்குரிய செயல், நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார். கோபமடைந்த நீதிபதி இவரையும் இவரது சகோதரி குசும் உள்ளிட்ட பலரையும் பூனாவில் உள்ள எரவாடா சிறையில் அடைத்தார். அங்கு எற்கனவே சரோஜினி நாயுடு, கமலாதேவி சட்டோபாத்யாயா போன்றவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். ஆறு மாத சிறைவாசத்திற்கு பின்பு 1931ல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் போடப்பட்ட பின்பு ஆறுமாத சிரைவாசத்துடன் விமல் வெளியே வந்தார்.

விமல் கைதானபோது செய்தித்தாள்களில் அது முக்கிய செய்தியாக வந்திருந்தது. பொதுவாக அனைத்து செய்திதாள்களும் இப்படி செய்தியை வெளியிட்டன "கைதான சேவாதள தொண்டர்களில் மிகவும் சிறிய வயதுடையவர் 14 வயதான விமல் சர்தேசாய். அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது." 14 வயதில் தேசத்தின் மீது அக்கறைக் கொண்ட, ஆங்கிலேயனிடம் மன்னிப்பை கேட்டு சுதந்திரமாய் திரிவதைவிட சிறைச்சாலையே மேல் என முடிவெடுத்த அந்த 14 வயது மாணவியின் பின்னணி என்ன...

மாற்றத்தை நோக்கிய பின்னணி...
மகாராஸ்டிர மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள பிரதானவல்லி என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அனந்த சர்தேசாய் - மாலதி தம்பதியினருக்கு 1915 ஆம் ஆண்டு மூத்த குழந்தையாக விமல் பிறந்தார். இவருக்கு பின் இரண்டு தம்பிகளும் ஒரு தங்கையும் பிறந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அதேசமயம் சமூக சீர்திருத்த முற்போக்கமான குடும்பமாய் அது திகழ்ந்தது. விமலுக்கு 10 வயதாகும் போது அவரது தந்தை மரணமடைந்தார். குடும்பததை பராமரித்து குழந்தைகளை படிக்கவைக்கும் பொறுப்பை விமலின் மாமா கணேஷ் சர்தேசாய் ஏற்றுக்கொண்டார். விமல் தனது மாமாவுடன் பம்பாய் சென்றுவிட்டார். மெட்ரிகுலேஷன் படிக்கும் போது பூனா அருகிலுள்ள ஹிங்கானி என்ற இடத்திலுள்ள கார்வே ஆசிரமத்திற்கு விமலை அவரது மாமா அனுப்பி வைத்தார்.
     இந்த சூழலில்தான் அவர் சத்தியாகிரக போராளியாக உருமாறினார்.  ஆனால் தான் அறிவிக்கும் போராட்டத்தின் உச்சத்தில் அதை வாபஸ் வாங்கும் பழக்கம் கொண்ட காந்தி சத்தியாகிரக போராட்டத்தையும் வாபஸ் வாங்கினார். இதனால் தேசபக்தர்கள் கடுமையான சோர்வை அடைந்தனர். விமல் கடுமையான ஏமாற்றத்துடன் போராட்டத்திற்கான மாற்று வழிகளை தேடினார். அவருக்கு தாமோதர் சாவர்கரை சந்திக்கும் வாய்ப்பு அப்படிதான் கிடைத்தது. வீட்டுச்சிறையில் இருந்த சாவர்கர் 16 வயதுடைய விமலையும் அவரது தோழியையும் பார்த்து பாராட்டியவர் முதலில் கல்வியை முடித்துவிட்டு பிறகு போராட வாருங்கள் எனச்சொன்னார். ஆனாலும் விமலின் மனதில் போரடட உத்வேகம் அலையடித்துக்கொண்டே இருந்தது. தான் கற்ற கல்வியின் பயனாக அவரது உள்ளத்தில் கேள்விகள் எழுதுக்கொண்டே இருந்தது.

காங்கிரஸ் பாதை சரியனதா? உழைக்கும் மக்களின் விடுதலை எந்த அளவு சாத்தியம்? வறுமை, பசி, கல்லாமை, நிலபிரபுத்துவம், சாதியம், மத ரீதியான திரட்டல் இவைகளையெல்லாம் எதித்தும்தானே விடுதலைப்போராட்டம் நடைபெற வேண்டும். ஆனால் காங்கிரஸின் பார்வையில் இவைகள் குறித்தெல்லாம்   தெளிவான பார்வை இல்லையே என்று கருதினார். தேசச்சுதந்திரம் என்பது வெறும் விடுதலை என்ற வார்த்தையோடு மட்டும் இணைக்கப்பட்டதல்ல, அதையும் தாண்டி உழைப்பாளி மக்கள் விடுதலையோடு பின்னிப்பினைந்தது என்று கருதினார். இந்த சிந்தனை அவரை இயல்பாகவே மார்க்சியத்தின்பால் ஈர்த்தது.

அதன் பிறகான அவர் வாழ்க்கையில் சிறந்த கல்வியாளராக, புகழ்பெற்ற திரைப்பட நடிகையாக, உழைப்பாளி மக்களின் போராளியாக, விடுதலைக்கான முழு அர்த்தத்தை புரிந்த விடுதலை வீரராக பரிணமித்தது ஆச்சரியமான பக்கங்கள்தான்.
(பயணம் தொடரும்) 

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark