மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

விடுதலைப் போரில் பெண்கள் - 14


கத்தியின்றி ரத்தமின்றி மயிலிறகு நீவ பெற்ற அகிம்சை சுந்ததிரம் இது, இப்படிதான் பலர் இப்போதும் பேசிக்கொன்டிருக்கிறார்கள். ஆனால், செய்! அல்லது செத்துமடி!! என காந்தியடிகளையே பேசவைத்த சூழலை தீவிர தேசபக்தர்கள் உருவாக்கினார்கள் என்ற வரலாற்றை புறம்தள்ளுகிறார்கள். 1942 ஆம் ஆண்டு உலக போரின் யதார்த்த நிலைமையையும், அது சோவியத் மீது பாசிச சக்திகள் கைவைத்தவுடன் மக்கள் யுத்தமாக மாறியதையும் கணக்கில் கொள்ளாமல் காங்கிரஸ் பேரியக்கம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கடுமையான அடக்கு முறைகளை தேசம் சந்தித்தது. அது விடுதலைப் போரில் நிசப்த சூழலை உருவாக்கிய தருனமாய் மாறிய உண்மை எங்கும் பதியப்படவில்லை. ஆனால் வரலாறு எனும் கால பெருநதி எப்போதும் தேங்கி நிற்பதில்லை. தேச விடுதலைப் போராட்டம் மற்றொரு திசை வழியை நோக்கி நடக்க துவக்கியது. அந்த திசைவழி வெற்றி அடையவில்லை எனினும் அந்த பாதையின் தியாகங்களை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதுதான் இந்திய தேசிய இராணுவம்.
1943 ஜூலை 5 தேதி அந்த மகத்தான இருவரின் சந்திப்பு நடந்தது. ஆறு மணி நேரம் நடந்த அந்த சந்திப்பு இந்திய வரலாற்றின் முக்கியமான சந்திப்பாக இருந்தது. சந்தித்த அந்த இருவரில் ஒருவர் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் மகத்தான ஆளுமையான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மற்றொருவர் 29 வயது நிறம்பிய மருத்துவ பட்டம் பெற்ற யுவதி. 



எப்போது இந்த சந்திப்பு நடந்தது?
இந்திய தேசிய ரணுவத் தலைமையை நேதாஜியிடம் ராஷ்பிஹாரி போஸ் ஒப்படைத்த (இவர் புரட்சிகரச் சிந்தனை கொண்ட சுதந்திரப் போராட்ட வீரர். 1911இல் வைசிராயாக இருந்த ஹார்டிங் பிரபுமீது வெடிகுண்டு வீசிவிட்டுத் தப்பி ஜப்பான் சென்று அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டவர்.)  அந்த பிருமாண்டமான கூட்டத்தில் சுபாஷ் பேசினார். "உங்கள் ரத்தத்தை எனக்கு தாருங்கள், நான் உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்" அந்த மந்திர உரையை கேட்ட கூட்டத்தில் ஒருத்தியார் அந்த யுவதி நின்றிருந்தார். மகத்தான தலைவன் பேசிய சில தினங்களில் இந்த சந்திப்பு நடந்தது. அந்த இளம் பெண் மருத்துவர் சுபாஷிடம் சொன்னார் "எனது இறுதிச்சொட்டு ரத்தம் இந்த பூமியை தழுவும் வரை போரிட நான் தயார். என்னைப்போன்ற இளம் பெண்கள் தேசத்திற்காக தியாகம் செய்ய முன்வரவேண்டும் என்றீர்களே நேதாஜி, நான் இந்த தேசத்திற்கு என்னையே தத்தம் செய்ய தயாராக வந்திருக்கிறேன். என்னை உங்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்வீர்களா? என்றார். 
நேதாஜியை புருவம் உயர்த்தி பார்க்க வைத்த அந்த இளம் பெண்ணின் பெயர் லட்சுமி. 


இந்திய வரலாற்றில் கேப்டன் லெட்சுமி என புகழ்பெற்ற, சாதாரண மக்கள் மீது அன்பும், அசாத்திய வீரமும், மதிநுட்ப அரசியல் அறிவும் பெற்ற உதாரண பெண் அவர். ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல்  பெண்கள் இராணுவப் படையாகக் கருதப்படும் ஜான்சிரணி லெஜிமென்டின் கேப்டன். இந்தியாவின் சுதந்திர அரசு 1943- & 1945 இல் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது. அதன் தலைநகர் அந்தமான் தீவில் உள்ள போர்ட்பிளேர் நகரம். வெளிநாட்டுத் தலைநகரங்கள் ரங்கூன், சிங்கப்பூர். நாடு கடந்த இந்திய அரசின் அமைச்சரவையில் சுபாஷ் சந்திரபோஸ்  பிரதமர், எஸ். ஏ. ஐயர் மத்திய ஒலிபரப்பு அமைச்சர், தளபதி ஏ.சி. சாட்டர்ஜி  மத்திய நிதி அமைச்சர், இதில் இருந்த ஒரே பெண் நிர்வாகி கேப்டன் லட்சுமி மட்டுமே. அத்தகைய மேன்மை மிகுந்த பெண்கள் பங்கேற்பின் ஒளிமிக்க அத்தியாயமான லட்சுமியின் பூர்வீகம் என்ன? இந்த தியக உணர்வும், வீரமும் உருவாகிய பின்னணி என்ன?


பின்னணி என்ன?  
கேப்டன் லட்சுமி 1914 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 அன்று சுவாமிநாதன்-அம்மு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தவர். மேலும் அமெரிக்காவில் வானியல்துறையில் முனைவர் பட்டமும், சிறந்த கணிதவியல் நிபுணர் என்ற தகுதியும் பெற்றவர். அத்துடன் குற்றவியல் வழக்கறிஞர் என்ற பெருமதிப்பும் பெற்றவர். தாய் அம்மு சுவாமிநாதன் கேரளா மாநிலம், பாலக்காட்டில் சமூக சேவகராக இருந்தவர். குட்டி மாலு அம்மா என்ற இவரது மற்றொரு குடும்ப உறுப்பினரும் விடுதலைப் போராட்டத் தியாகியாக இருந்தவர். இளம் வயதிலேயே நாட்டு விடுதலை, சமுதாய சமத்துவம் ஆகிய இலட்சியங்கள் லட்சுமியின் மனதில் இடம்பெற இந்த பின்னணி துவக்க விதைகளை விதைத்தது?



அவரது இளைமை பருவம் கேரளாவில் உள்ள அவரது பாட்டியின் வீட்டில்தான் அதிகம் கழிந்தது. அங்குதான் அவர் அவவரது வாழ்வில் தீண்டாமைக்கு எதிரான முதல் பாடத்தை கற்றார். கேரளாவில் அப்போது தலித்துகள் தீண்டதகாதவர்களாக மட்டுமல்ல, அணுகக் கூடாதவர்களாகவும் இருந்தனர். லட்சுமி வசித்த வீட்டின் அருகில் உள்ள காடுகளிலிருந்து தம்புரனே என்று குரல் மட்டும் கேட்கும். உடன் அங்கு யாரிடமாவது உப்பும் சாதமும் கொடுத்தனுப்பப்படும். பதிலாக அங்கிருந்து முடையும் கூடைகளில் நிறைய காட்டுப் பழங்களை அனுப்பி விடுவார்கள். தீண்டதகாதவர்கள் கொடுக்கும் அப்பழங்கள் மட்டும் தீண்டதக்கதக மாறுவது எப்படி எந்த சிந்தனை அந்த இளம் லட்சுமிக்கு எழுந்தது. அந்தக் குரலுக்கு உரியவர்களை லட்சுமி பார்த்ததில்லை ஆனால் அவர்களை பார்க்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது. தனது பாட்டியிடம் அவர்கள் யார்? அவர்களை ஏன் வீட்டிற்கு அருகில் பார்க்க முடியவில்லை என்று தனது பாட்டியிடம் லட்சுமி கேட்டார். அதற்கு அவர் பாட்டி அந்த ஆதிவாசிகளையும் அவர்களது குழந்தைகளையும் பார்த்தால் நீங்கள் குருடாகிவிடுவீர்கள் என்று பதிலளித்தார். 



ஆனால் இந்த பதில் லட்சுமிக்கு பிடித்தமானதாக இல்லை. ஒருநாள் மலையடிவாரத்திற்கு சென்று அங்கே மூடாத மார்பில் அழகிய மணிகளால் அலங்கரித்து நின்று கொண்டிருந்த ஆதிவாசி பெண்ணின் கையை பிடித்துக்கொண்டார். லட்சுமியின் பாட்டி தண்டனை தருவார் என்று பயந்த அந்தப் பெண் அழத்தொடங்கிவிட்டார். அவளை தன்னுடைய நட்பாக்கி தினமும் அவளை தனது வீட்டிற்கு அழைத்துச்செல்வதை வாடிக்கையாகினார். அவரது பாட்டி முதலில் கடுமையாக எதிர்த்தார். ஆனால் லட்சுமியின் மாமா ஒரு காந்தியவாதி. அவர் சொன்னார் "நாம் யாரையும் தீண்டாதவர்களாக கருதக்கூடாது, நமது வீட்டை அனைவருக்காகவும் திறந்துவைக்கும் காலம் வந்துவிட்டது". இது இளம் லட்சுமியின் மனதில் ஆழப்படிந்தது. தனது தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியும் பெற்றார்.
கல்வி நிலையத்தில்...



    சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் லட்சுமியின் கல்வி துவங்கியது. பின்னர் அரசு பள்ளிக்கு மாறினார். 1930ல் எஸ்.எஸ்.எல்.சி முடித்தார்ர். பள்ளியில் லட்சுமி உளிட்ட பல மாணவிகள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கையால் நூல் நூற்று தயாரித்த கதர் ஆடைகளையே அணியத்துவங்கினர். 


    தேசிய இயக்கம், சமூக சீர்திருத்தம், குழந்தை திருமணம் ஆகியவை குறித்தெல்லாம் தனது வீட்டில் நடக்கும் விவாதங்களையே  அவரது பள்ளியிலும் நடந்தது அவருக்கு மகிழ்ச்சியளித்தது. அவரது தேசிய உணர்வு கொண்ட வீட்டுச்சூழல் பெருமையை கொடுத்தது. அவரது தாயார் அம்மு சுவாமிநாதன் மாதர் அமைப்பில் ஈடுபட்டவர் மட்டுமல்ல அவரது வீட்டில் இருந்த அந்நிய துணிகளை ரோட்டில் எரித்த ஒரு தீவிர தேசபக்த தொண்டரும் ஆவார். லட்சுமியை கூட்டங்களுக்கு அழைத்துச்செல்வார். இப்படியாக இளம் லட்சுமி தேசம் குறித்த புரிதலுக்கு வந்து சேர்ந்தார்.


    லட்சுமியின் தந்தை சுவாமிநாதன் அன்று புகழ்பெற்ற வழக்க்றிஞராக இருந்தார். அச்சமயத்தில் இந்தியாவில் மைனராக இருந்த ஜமீன்தார்களை பிரிடிஷ் அரசு வார்டன்களை நியமித்து இருந்தது. கடம்பூர் ஜமீன் தனது ஆங்கில வார்டனை சுட்டுவிட்டார். அந்த வழக்கு சுவாமிநாதனிடம் வந்தது. அவர் அந்த வழக்கில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி அடைந்தார். இந்தனால் இவர்கள் குடும்பத்திற்கு நல்ல மரியாதை உயர்ந்தது. ஆனால் அவரது ஆங்கிலேய நண்பர்கள் இவருடன் பழகுவதில் வேறுபாட்டை காட்ட துவக்கினர். லட்சுமியின் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உனது தந்தை செய்தது சரியல்ல என வாதிட்டனர். இப்படியான சில நிகழ்வுகள் அவரது வாழ்வில் நடந்தது.



    1930ல் சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் உயர் படிப்புக்காக லட்சுமி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த கல்லூரியின் முதல்வர் ஜமீந்தார் சுட்டுக்கொன்ற ஆங்கிலேயரின் தங்கைதான். எனவே கண்டிபாக தனக்கு அக்கல்லூரியில் இடம் கிடைக்காது என நினைத்தார். ஆனால் லட்சுமியின் மதிப்பெண்கள் சிறப்பாக இருந்ததும், அந்த பெண்மணியின் நேர்மையான செயலபாடும் இவருக்கு அக்கல்லூரியில் இடத்தை உறுதி செய்தது.  



    அங்கும் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை தீவிர காங்கிர இளைஞர் அணியில் இணைந்தார்.  இவ்வணிக்கு பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிய பி. இராமமூர்த்தி தலைவராக இருந்தார். லட்சுமியின் பார்வை தேசம் முழுவதும் இருந்தது. அச்சமயத்தில் மாவீரன் பகத்சிங்க் கைது செய்யபட்டு அந்த வழக்கு உலகம் முழுவதும் பேசப்பட்டது. அந்த வீர இளைஞனுக்காக, அவனது வழக்குக்காக மக்களிடன் நிதி வசூல் செய்யப்பட்டது. கேப்டன் லட்சுமி பகத்சிங் வழக்குக்காக அவரது கல்லூரியில் மாணவர்களிடம் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். அதே 1930-ம் ஆண்டில் அறப்போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்தார்.   



    காங்கிரஸ் நிகழ்வுகளில் பங்கேற்றாலும் தன்னை ஒரு காங்கிரஸ்காரராக எப்போதும் லட்சுமி நினைத்ததில்லை. விடுதலைப் போராட்ட ஆதரவாளாராக மட்டுமே நினைத்துக்கொண்டார். அனைத்து அகிம்சை சத்தியாகிரகங்களும், போராட்டங்களும் தடியடியில் முடிவுற்றது அவருக்கு உவர்ப்பானதாக இல்லை. லட்சுமி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போதுதான் முதன் முதலாக கம்யூனிசக் கோட்பாடுகளை எதிர்க்கொண்டார். பல ஆண்டுகள் ஜெர்மனியில் வசித்துவந்த, புரட்சிச் சிந்தனைகொன்ட, சரோஜினி நாயுடுவின் சகோதரியான சுஹாசினி லட்சுமியை சந்தித்தார். அவர் லட்சுமிக்கு எட்கர் ஸ்னோவின் சீன வானில் சிவப்பு நட்சத்திரம் என்ற புத்தகத்தை கொடுத்தார். அதுமுதல் லட்சுமியின் சிந்தனையின் நிறம் மாறத்து வங்கியது, வாழ்வின் பாதையும்தான்...
    (புதிய பாதை தடத்தை சந்திக்கலாம்)

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark