மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!விடுதலைப்போரில் பெண்கள் - 12ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய நிர்வாகத்தை மொத்தமாக கைக்கொண்டதும் இந்தியாவின் நிர்வாக அமைபில் பல மாறுதல்களை செய்தனர். குறிப்பாக தங்களுக்கு ஏற்ற ஒரு வர்க்கத்தை உருவாக்க கல்வி அமைப்பில் பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்தனர். இதன் பயனாக இந்தியாவில் குறிப்பிட்ட வர்க்கத்தினர் கல்வி பெறும் வாய்ப்பை அடைந்தனர். ஆனால் அவர்கள் கொடுத்த கல்வி அவர்களுக்கு எதிராக திரும்பியது மட்டுமல்ல மற்றொரு உபவிளைவாக இந்திய நாட்டின் பெண்களையும் போராட்ட களத்திற்கு அழைத்து வந்ததுதான் சுவராசியம்.

அன்னி பெசண்ட் அம்மையார் அன்னிய நாட்டில் பிறந்து இந்திய நாட்டு விடுதலைக்கு போராடினார். ஆனால், இந்திய மண்ணில் ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்மணி தந்த கல்வியை பயன்படுத்தி தனது தேசத்திற்காக மட்டுமல்லாது பெண் விடுதலை, பெண் சுதந்திரத்திற்காகவும் போராடினார். சென்ற நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் இவரது செயல்பாடுகள் அசாத்தியமானது.

1879 பிப்ரவரி 13-ம் தேதி பிறந்த சரோஜினி பிறப்பால் நாயுடு அல்ல.அவரது தந்தை ஒரு வங்காளி பிராமணர். அவர் பெயர் டாக்டர் அகோரநாத் சட்டோபாத்தியாயா. பெரிய கல்வியாளர். விஞ்ஞானத்திலும் உயர் கல்வி கற்றவர்.அன்றைய நிஜாம் சமஸ்தானத்துக்கு வந்து (ஹைதராபாத்) ஒரு கல்லூரியை நிறுவியவர். இதனால் சரோஜினியின் இளம் பருவம் ஹைதராபாத்தில் சுற்றித் திரிந்தது.
 
இவருடன் பிறந்தவர்கள் மூன்று  பெண்கள், மூன்று ஆண் குழந்தைகள், வசதியான குடும்பம். படிப்பில் எப்போதும் சரோஜினி முதல் இடத்தில் இருந்தார். சிறு வயதிலேயே  கவிதை எழுதும் ஆர்வம் இருந்தது. இது அவரை மற்றவர்கள் மத்தியில் வேறுபடுத்தி காட்டியது. கொஞ்ச நாள்தான் ஹைதராபாத் படிப்பு தொடர்ந்தது. அவரது தந்தை சிறந்த கல்வியை அளித்துவந்த சென்னைக்கு சென்றால் சரோஜினி படிப்பில் மேலும் சிறக்கலாமென அவரை சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தார். 

அந்த இளம் வயதிலேயே தனியாக ரயிலேற்றி சென்னைக்கு அனுப்பி விட்டார். சிறப்பாக படித்து பன்னிரெண்டாம் வயதிலேயே மெட்ரிகுலேஷன் தேர்வெழுதி வெற்றிகண்டார். மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்தார். ஆகவே அவரை மேல் படிப்புக்கு இங்கிலாந்துக்கு அனுப்பினார் அவரது தந்தை.

1895-ம் வருடம் லண்டனில் கிங்ஸ் கல்லூரியில் கணிதம் படிக்கச் சேர்ந்தார்.தந்தையின் விருப்பம் அது. ஆனால் கணிதத்தைவிட கவிதைகளில் அவரது கவனம் சென்றது.கவிதைகளில் சமூக கருத்துக்கள் மேலோங்கி நின்றன. எனவே அவரது நண்பர்களான ஆங்கில எழுத்தாளர்களும், கவிஞர்களும் அவரது கவிதைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வர உதவி செய்தார்கள்.அவரது எழுத்து திறமை கொட்டும் அருவியைப்போல மடைதிறந்து வந்தது.  
 1898-ல் சரோஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் தனது படிப்பை தொடர முடியாமல் ஹைதராபாத்துக்கு திரும்பினார்.சரோஜினியின் தந்தைக்கு மகளின் விருப்பம் புரிந்தது.அவரது கவிதைகளை ஆதரித்தார். அச்சமயம் ஹைதராபாத்தில் வசித்து வந்த மேஜர் கோவிந்தசாமி நாயுடு என்பவரின் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. நாயுடு, பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே திருமணமாகி, மிக இளம் வயதில் மனைவியை இழந்தவர். தொழில் முறையில் அவர் ஒரு டாக்டர். 

உயர்சாதியினரான சரோஜினி குடும்பம் இக்காதலை ஏற்கவில்லை.அன்றைய தேதியில் இதனைத் தன் தனியொருவரின் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த சமூகப் பிரச்சனை ஒன்றின் ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டார் சரோஜினி. கேவலம், சாதியை முன்னிட்டு காதலை நிராகரிப்பதா என அடங்க மறுத்தார். சாதி மறுப்பு திருமணத்தில் உறுதியாக நின்றார். அவரது தந்தை அவரது விருப்பத்துக்குக் குறுக்கே நிற்கவில்லை.எனவே அந்த சாதி மறுப்பு திருமணம் அவரது தந்தையின் ஒப்புதலுடன் நடந்தது

1885ல் மேல்தட்டு வர்க்கத்தினர் நலனுக்காகவும், எழுந்து வந்த சுதந்திர தாகத்தை தனிய வைக்கவும் மனு கொடுக்கும் இயக்கமாக துவங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர் கொடுத்த கல்வியினாலும், விடுதலை தேசம் குறித்த கனவுகளாலும் விழிப்புணர்வு கொண்ட இளைஞர்கள் கையில் வந்திருந்தது.இதன் விளைவாக   தேசம், சுதந்திர தாகம் கொண்டு தவித்த தருணமாய் இருந்தது. பெண்களும் களத்தில் இறங்க வாய்ப்புகள் அழைத்தது. அன்னிபெசண்ட் அதற்கு வழிகாட்டியாக இருந்தார். 

ஆக அத்தகைய சூழலில் தனது மக்களுக்கும் நாட்டுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உணர்ச்சி மேலோங்கியது. இதன் காரணமாய் கணவரையும், பிறந்த இரு குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு தன்னை புரிந்துக்கொண்ட கணவனை விடுத்து, குழந்தையை பிரிந்து பம்பாய்க்கு ரயிலேறினார். தேசம் அழைத்தபோது தனது குடும்பத்தையும், கைக்குழந்தையையும் பிரியும் தியாக உள்ளம் அவருக்கு வாய்த்திருந்தது. பொழுதெல்லாம் எம் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ என விடுதலை கீதம் இசைத்த எட்டையபுரத்தானைப் போல தமது எழுச்சிமிக்கக் கவிதைகளின் மூலம் மக்கள் மத்தியில் சுதந்திரக் கனவை ஊதி வளர்த்தார். பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, முகமதலி ஜின்னா போன்ற தலைவர்களுடன் பழக வாய்ப்பு கிடைத்தது. அன்னிபெசண்ட் இந்தியா வந்து அப்போதுதான் ஹோம்ரூல் இயக்க பணிகளை துவக்கியிருந்ததும் சரோஜினிக்கு உற்சாகத்தை கொடுத்தது. தில்லையாடி வள்ளியம்மையின் தீரமிக்க போராட்டத்தால் கவரப்பட்ட காந்தியடிகள் தென்னாப்ரிக்கா, இந்தியர் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று இந்தியா திரும்பிய சமயம் அது. மீண்டும் அங்கே பிரச்சனைகள் எழுந்த போது தனது சார்பாக சரோஜினியைதான் அங்கு அனுப்பி வைத்தார். 

மீண்டும் இந்தியா வந்த சரோஜினி காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் பணியை மேற்கொண்டார். தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அவர் மேற்கொண்ட அயராத சுற்றுப் பயணங்களும், எழுச்சியுடன் அவர் ஆற்றிய உரைகளும் சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் மிக முக்கியமான அத்தியாயங்கள். அதுமட்டுமல்ல காங்கிரசின் செயற்குழு உறுப்பினராக, அக்கட்சியின் தலைவராக ஒவ்வொரு காலக் கட்டத்தில் ஒவ்வொரு பொறுப்பை ஏற்று திறம்பட செயலாற்றினார். அவர் பொதுவாழ்வில் இறங்கிய பின்பு நடந்த போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றது மட்டுமல்ல, அன்றைய பெண்களின் மனசாட்சியை தட்டி எழுப்பினார். விடுதலைபோரில் சுடர் விடும் ஒளியாக, இந்திய பெண்களின் போராட்ட கலங்கரை விளக்காக உத்வேகம் ஊட்டினார். 

பல பத்தாண்டு போராட்டத்தில் ஆயிரமாயிரம் மக்களின் உதிரத்தில் விடுதலைப் பிறந்தது. இந்திய தேசம் சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவின் முதல் பெண் கவர்னராக சரோஜினி நியமிக்கப்பட்டார். அதுவும் அன்று மாபெரும் மாநிலமாக இருந்த ஐக்கிய மாகாணத்துக்கு (இன்றைய உத்தரபிரதேசம்) நியமிக்கப்பட்டது அவரது நிர்வாக திறமைக்கு ஒரு சிறந்த உதாராணமாக இருந்தது. அவர் பலவிதங்களில் ஒரு முன்னோடிப் பெண்மணி. தமது சுய வாழ்வில், சமூக வெளியில் உறுதியுடன் போரிட்டு சாதித்தவர். பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று பேசுவதுமட்டும் விடுதலைக்கு மார்க்கமில்லை, நமது சுதந்திரம் நம்மிடம்தான் இருக்கிறது. அதுவும் வீதியில் போராடமல் கிடைக்காது என்று தனது வாழ்வால் நிருபித்தவர் சரோஜினி. வாழ்க்கை முழுவதும் போராட்ட களத்தில் இருந்த சரோஜினி தமது 70அம் வயதில் 1949 மார்ச் 2-ம் தேதி காலமானார். விடுதலைப்போரில் ஈடுபட்ட பெண் போராளிகளின் வரிசையில் எப்போதும் மறக்க முடியாத இடத்தில் நிறைந்திருப்பார் சரோஜினி.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark