மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

வரலாற்றுப் பின்புலத்தில் ஒரு நட்பின் கதை
பட்ட விரட்டி - நூல் அறிமுகம்

                              

நான் திரும்பி ஓடினேன். அது ஒரு புன்னகை மட்டுமே. அதற்கு மேல் ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் நான் சரி செய்துவிடவில்லை. அந்த புன்னகை எல்லாவற்றையும் சரி என்றும் ஆக்கிவிடவில்லை. ஒரு புன்னகை மட்டுமே. மிகச் சிறிய ஒன்று. இலையுதிர்ந்து போன மரத்தில் ஒரு புதுத்துளிர். பறக்க எத்தனிக்கும் பறவையின் சிறகு உதறல். வசந்தகாலம் வருகையில் பனிப்படர்வின் முதல் அடுக்கையே முதலில் உருக வைக்கும். அந்த முதல் உருகுதலை அந்த புன்னகையில் நான் பார்த்திருக்கலாம்.
நான் ஓடினேன். குழந்தைகளுடன் சேர்ந்து ஒடும் ஒரு வளர்ந்துவிட்ட மனிதன். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என் முகத்தில் காற்றடிக்க பஞ்ச்ஷேர் சமவெளி அளவுக்கு விரிந்த புன்னகையுடன் நான் ஓடினேன். நான் ஓடினேன்.

   
இதுதான் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேல் நியூயார்க் டைம்ஸ் - இன் சிறந்த விற்பனையாகும் நூல்களின் வரிசையில் உள்ள, உலகெங்கிலும் 55 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு, 2 கோடிக்கும் மேல் விற்பனையான பட்ட விரட்டி (ஜிலீமீ ரிவீtமீ ஸிuஸீஸீமீக்ஷீ) நாவலின் இறுதி வரிகள்.

   
குழுந்தைகளுடன் ஓடியவன் அமீர்ஜான் என மரியாதையுடன் அழைகப்பட்ட ஒரு எழுத்தாளன். இளம் வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் மிக்கவன். அமெரிக்காவில் வளர்ந்த புகழ்மிக்க மனிதன். ஒரு பட்டத்தை விரட்டி குழந்தைகளுடன் ஓடக்காரணம் ஹசன்.  யார் இந்த ஹசன்? சனோபர் - அலி தம்பதியின் குழந்தை.

   
தாய் சனோபர்..? ஹசன் குழந்தையாய் இருக்கும் போதே அவனது தந்தை அலியை விடுத்து மாற்றானுடன் சென்றுவிட்ட ஒரு தாய். அதுமட்டுமல்ல சனோபர் ஹசனுக்கு மட்டுமல்ல அமீர்ஜானுக்கும் பாலூட்டிய செவிலித் தாயும்கூட. அது சரி இப்போது அமீர்ஜான் ஹசனுக்காவா ஓடுகிறான்? இல்லை. பிறகு யாருக்காக? அமீர்ஜான் தந்தையின் நெருங்கிய நண்பன் ரஹீம்கானின் தொலைபேசியின் மூலம் பின்நோக்கி பயணிக்கும் நாவல் இது.

   
இரு நண்பர்களின் கதைதான் ஆனால் இதன் பின்னணியில் ஒரு வரலாறு மாற்றம் மிகவும் நுட்பமாக பதிவு செய்யப்படுள்ளது. இந்திய சைவ வைணவ மதங்களைப் போல இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவுகள் கடுமையாக மோதிய, மாற்று அடையாளத்தினரை, வன்செயல் மூலம் அழித்தொழிக்கும் காலத்திலும், நேரடியாக மோதிய காலத்திலும், அதற்கிடையில் புரட்சிகர கம்யூனிச கருத்துக்கள் நஜிபுல்லா எனும் அடையாளத்துடன் நுழைந்த காலகட்டத்தில், அதை ஒழிக்க அமெரிக்காவின் ஆயுத தளவாட மற்றும் நிதியுதவியுடன் மதவெறியர்களான தாலிபான்கள் கொடூரமாய் மக்களை வேட்டையாடிய காலகட்டத்திலும் பயணிக்கும்  நாவல் இது.

   
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் செல்வவளம் மிக்க குடும்பம் அது. அக்குடுமபத்தின் எண்ணிக்கை நான்கு மட்டுமே. நால்வரும் ஆண்களே. அமீர்ஜான் அவனது தந்தை, அவர்களுக்கு பணிவிடை செய்யும் ஹசன் அவனது தந்தை. இவர்களின் வாழ்க்கையினூடாக சம்பவங்கள் விரிந்து செல்கிறது.  ஆப்கானிஸ்தானின் புகழ்பெற்ற பட்டம் விடும் போட்டியில் அமிர்ஜான் புகழ்பெறுகிறான். ஆனால் வெற்றி பெரும் பட்டம் இறுதியாக வெட்டிவிடும் பட்டத்தை விரட்டும் கலையில் நிபுணன் அமீர் அல்ல ஹசன். இவர்கள் நட்பு அதீதமானது. அன்பானது. அமீர்ஜானுக்காக ஹசன் எதையும் செய்வான். ஆனால் ஆப்கானில் இருந்த பெரும்பான்மையான இஸ்லாமிய மதவெறியர்கள் வெறுக்கும் ஹசாரா இனத்தை சேர்ந்தவன் ஹசன். இதனாலேயே அமீர்ஜான் அவனது நண்பர்களால் மிரட்டபடுகிறான்.

   
ஆனாலும் இவர்களது நட்பு தொடர்கிறது.  ஒருநாள் அமீர்ஜானுக்காக பட்டத்தை விரட்டிச் செல்லும் ஹசனை, ஆஸிப் என்பவன் அவனது நண்பர்கள் உதவியுடன் வன்புணர்சி செய்கிறான். மறைவிலிருந்து இதை பார்க்கும் அமீர்ஜான் பயத்தின் காரணமாக உதவி செய்ய முடியாமல் ஓடி விடுகிறான். இதன் பின்னால் வரும் நாட்களில் அமீர்ஜானின் குற்ற உணர்ச்சி ஹசனை பார்க்கும் போதெல்லாம் வாட்டுகிறது. இந்த குற்ற உணர்ச்சியின் இயலாமை ஹசன் மீதான வெறுப்பாய் கவிழ்கிறது. எனவே பொய் குற்றச்சாட்டை சுமத்தி ஹசனையும் அவனது தந்தை அலியையும் வீட்டைவிட்டு வெளியேற்றுகிறான். நாட்கள் நகர்கிறது.

   
ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுக்கும் சோவியத் படைகளுக்கும் சண்டை வலுவடையத் தொடங்கியது.  பல பகுதிகளில் தாலிபான்களின் கொடூரத்தை தாங்க முடியாமல் பலபேர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். அமீர்ஜானும் அவனது தந்தையும் கடுமையான பயணத்திற்குப் பிறகு அமெரிக்கா வந்தடைகின்றனர். அமீரின் தந்தை ஒரு பெட்ரோல் பங்கில் வேலைதெடிக்கொண்டு அமீரை அங்கே படிக்கவைக்கிறார். அமிர் இலக்கியத்தில் பட்டம் பெறுகிறான். காலங்கள் உருண்டோடினாலும்  அவனது மனதில் ஹசனின் நினைவுகள்  நெருடிக்கொண்டே இருக்கிறது.

   
அமெரிக்காவில் வந்து குடியேறிய காபூலில் ராணுவ ஜெனரலாக இருந்த தஹாரியின் மகள் சுரையா ஜானை காதலித்து மணம் முடிக்கிறான் அமீர்ஜான். இதற்கிடையில் புற்றுநோயில் அமீரின் தந்தை மரணமடைகிறார். இந்த பின்னணியில் அவரது தந்தையின் உற்ற நண்பனான ரஹீம்கானிடமிருந்த தொலைபேசி வருகிறது. அவரை சந்திக்க அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் செல்கிறான். பெஷாவரில் உடல்நலக் குறைவால் மெலிந்து பொயிருந்த ரஹீம்கானை சந்திக்கிறான். அவர் மூலமாக ஹசன் குறித்து அறிந்துகொள்கிறான். ஹசனும் அவனது மனைவி ஃபர்ஸானாவும் தாலிபான்களால் கொடூரமாக கொல்லப்பட்டதை அறிந்து கண்ணீர் சிந்துகிறான். அதைவிட அதிர்ச்சியான தகவல் அவனுக்கு அப்போதுதான் கிடைக்கிறது. ஹசன் அவர்கள் வீட்டு வேலைகாரன் அலியின் பிள்ளை அல்ல, அமீரின் தந்தைக்கு பிறந்தவன் என்பது. ஆக ஹசன் அமீர்ஜானின் தம்பி.

   
என்றாவது ஒரு நாள் அமீர்ஜான் வந்தால் கொடுக்க வேண்டும் என ஹசன் கொடுத்த கடிதத்தை ரஹீம்கான் கொடுக்கிறார். அதில் தாலிபான்களால் ஆப்கானில் நடக்கும் கொடூரத்தையும் தனது மனைவி ஃபர்ஸாசானா மற்றும் மகன் ஷெஹ்ராப் குறித்தும் ஹசன் எழுதியதை படித்து கண்ணீர் வடிக்கிறான். கடிதத்தை படித்து முடித்ததும், ரஹீம்கான் அமீர்ஜானிடம் ஆப்கானிஸ்தான் சென்று ஹசன் மகன் ஷெஹரப்பை மீட்டு அவனுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என சொல்கிறான். முதலில் மறுக்கும் அமீர்ஜான் பின்பு சம்மதித்து  ஆப்கானிஸ்தான் செல்கிறான்.

   
ஆப்கானிஸ்தானில் போலியான மீசை தாடியுடன் ஷெஹரப்பை தேடி அலைகின்றனர். உடைந்த வீடுகளும், தோட்டாக்களினால் சல்லடையாக்கப்பட்ட  சுவர்களும், பயந்த கண்களுடன் முகங்களை மூடிய பெண்களும் இனம் புரியாத பயத்தை ஏற்படுத்துகின்றனர். அங்கு ஒரு அனாதை விடுதியில் ஷெஹரப் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறான். ஆனால் சில தினங்களுக்கு முன் ஷெஹரப்பை தாலிபான் தலைவர்களில் ஒருவன் கொண்டு சென்றது தெரிகிறது. அந்த தாலிபான் இருக்குமிடத்தை தேடிச்செல்லும் போது ஒரு கால்பந்து விளையாட்டு மைதானத்தில் நடக்கும் ஒரு கொடூர காட்சியை பார்க்க நேர்கிறது. மதவிரோதமாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆணையும் பெண்ணையும் கால்பந்து விளையட்டு மைதானத்தில் கழுத்தளவு புதைத்து கல்லாள் அடித்து கொள்கின்றனர். அதை நிறைவேற்றும் கொடூரன்தான் அமீர்ஜான் தேடிவந்தவன்.

   
நேரில் சந்திக்கும் போதுதான் தெரிகிறது அந்த கொடூரன் சிறுவயதில் ஹசனை பாலியல் வண்புனர்வு செய்த ஆஸீப் என. அவனும் அமீர்ஜானை அடையாளம் கண்டுகொள்கிறான். ஆஸிப்பினால் துன்புறுத்த பட்ட ஹசன் மகன் ஷெஹரப்பை கடுமையான மோதலுக்கு பிறகு மீட்டு வருகிறான் அமீர். எப்படியும் தன்னை அமீர் மீட்டு வெளிநாடு அழைத்துச் செல்வான், இந்த நரகத்திலிருந்து வெளியேறலாம் என மகிழ்ச்சியடைகிறான் ஷெஹரப். ஆனால் விசா கிடைக்காமல் சில தினங்கள் பாகிஸ்தானில் தங்கும் சூழல்  எற்படுகிறது. மீண்டும் விடுதியில் சேர்க்கப்படலாம் என்ற பயத்தில் ஷெஹரப் தற்கொலைக்கு முயல்கிறான். இளம் வயதிலேயே வாழ்கையின் அனைத்து துன்பங்களையும்   அனுபவித்த ஷெஹரப் பிழைத்துவிடுகிறான். அமீர்ஜான் அவனை தன்னோடு அமெரிக்கா அழைத்துச் சென்று விடுகிறான்.
   
ஆனால் ஷெஹரப் மீது அன்பை பொழியும் அமீர்ஜான் சுரையா குடும்பத்தினருடன் அவனால் இணையமுடியவில்லை. மெல்ல மெல்ல அவனை மீட்க நினைக்கிறான் அமீர்ஜான். அப்படியான ஒரு முயற்சியாகத்தான் பட்டம் விட அவனை அழைத்து செல்கிறான். மற்றொரு பட்டத்தை அமீர் வெட்டிவிட பட்டவிரட்டியான ஹசனின் மகனான ஷெஹரப் இதழிலிருந்து ஒரு மெல்லிய புன்னகை வருகிறது. அதற்காக.. அந்த ஒரு துவக்க புன்னைக்காக அமீர்ஜான் வெட்டிய பட்டத்தை விரட்டி ஓடினான்.
   
அத்துடன் நாவல் நிறைவு பெருகிறது.

   
ஆனால் படித்து முடிக்கும் வாசகனின் சிந்தனையில் காலித் ஹ§சைனியின் இந்த நாவல் தொடர் சலனத்தை துவக்கி வைக்கிறது. முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களம். ஒரு தேசத்தின் சோகத்தை நாவலின் பின்னணியாக இணைத்தது, நட்பின் ஆழம், வலி மிகுந்த துரோகம், புலம்பெயர் வாழ்க்கை, மதவெறியின் கோரதாண்டவம் அனைத்தும் ஒரு புது வாசிப்பு அனுபவத்தை வாசகனுக்கு கொடுக்கிறது. மொழி பெயர்ப்பு நாவல் என தெரியாமல் உயிரோட்டமுடன் தமிழில் மொழி பெயர்த்த எம்.யூசுப் ராஜா வாழ்த்துக்குரியவர். அவசியம் நமது வாசிப்பு பட்டியலில் இருக்க வேண்டிய புத்தகம் இது. படியுங்கள்.
(24.03.13 அன்று தீக்கதிரில் வெளிவந்தது. இடம் கருதி சுருக்கி வெளியிட்டிருந்தனர். அத்ன் முழு வடிவம் இது)

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark