மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


 
 தமிழக பண்பாட்டு தளத்தில் காதல் எப்போதும் தவிர்க்க முடியாத இடத்தில் அமர்ந்துள்ளது. இப்போது காதல் சார்ந்த விவாதம் காற்றைப்போல அரசியல் உட்பட எங்கும் வியாபித்துள்ளது. விழியில் நுழைந்து, இதயம் கலந்து, உயிரில் கலந்த உறவே என கவிஞர்கள் உருகும் காதல் இப்போது அரிவாள்களுக்கு பதில் சொல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சாதி மறுப்பு திருமணங்களை செய்துள்ள சாமிகளை வணங்கும் சாதியர்கூட அந்த சாமியின் பெயரால் காதலை எதிர்க்கின்றனர். மீனவப் பெண்னை திருமணம் செய்திட  மனித ரூபம் கொண்ட கடவுளை முதலாக கொண்ட மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் வீட்டு பெண் என வந்துவிட்டால் "போய்யா..போ.." என மத, கடவுள் ஆச்சாரங்களுக்கு டாட்டா காட்டிவிடுகின்றனர். தூய்மையான ரத்த கலப்பை கோரும் சாதி, மத வெறி எப்போதும் காதலுக்கு எதிரான நிலைபாட்டையே எடுத்துள்ளது.

 எவ்வுளவு எதிர்ப்புகள் வந்தாலும் காதல் தனது கடமையை தொடர்ந்து செய்துதான் வருகிறது. இனியும் அப்படியே செய்யும். காதல்.. வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் அனைத்து உயிர்களுடன் பயணித்தே வந்துள்ளது. இரு உயிர்களின் ஈர்ப்பின் அடிப்படை, உற்பத்தியும் மறுவுற்பத்தியும்தான். ஆனால் ஈர்ப்பெல்லாம் காதலென்றும், காதலெல்லாம் அன்பின் அடிப்படையென்றும் அர்த்தம் கொள்ள முடியாது.  அப்படியெனில் உயிரினங்களின் மேம்பட்ட கலாச்சாரத்தை அடைந்துள்ள மனிதனின் குடும்பம் காதலின் அடிப்படையை அலகாக கொள்ள முடியுமா? இதற்கும் முழுமையான பதில் இதுகாறும் இல்லை. ஜனநாயகம் இல்லாத, வன்முறை நிறைந்த குடும்பங்களை எப்படி காதலால் கசிந்துருகும் அமைப்பென சொல்ல முடியும். ஆக, காதல் என்ற ரசாயன உணர்வு இன்னும் மேம்பட்டு செல்லவேண்டிய இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்குள் இதை பூண்டோடு அழிக்க ஒரு கூட்டம் அலைகிறது.

 மற்றொரு பக்கம் இன்றைய உலகமய சூழலில் காதலை வணிக கண்ணோட்டத்துடன் அணுகும் போக்கும் வளர்ந்து வருகிறது. அதற்கு உதாரணம் காதலர் தினமாகும்.  'வேலண்டைன்ஸ் டே' என்று உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கி.பி 270-ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர். திருமணம் செய்து கொண்டு வாழ துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்தி வைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரண தண்டனையை பரிசளித்தார். இந்த நாள்தான் பிப்ரவரி 14 என்று பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள கதை இது. அன்றைய தலை வெட்டிகள் இன்றைய மரம் வெட்டிகளக உருவாகி உள்ளார்கள் என்பது தனிக்கதை.

 கி.பி 270 ம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி 14 என்கிற தேதி வரலாற்றின் பக்கங்களில் பல ஆண்டுகளை கடந்துள்ளது. ஆனால் 1990 களுக்கு பிறகு, இன்னும் குறிப்பாக இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பிறகு பிருமாண்ட தினமாய் கட்டமைக்கப்பட்டது. காதலே அழகு என்பதை அழகே காதல் என்ற உண்மைக்கு தொலைவில் இருக்கும் ஒரு மாற்று கலாச்சாரத்தை கட்டமைக்கின்றனர். இந்த கலாச்சாரத்தை ஊட்டி வளர்க்க முயல்கிற உலகமயம். அதுமட்டுமின்றி லாபக் கண்ணோட்டத்துடன் காதலையும் அணுகுகிறது.

 நிறம், அழகு, உயரம், எடை, உடை, அங்கங்களின் அளவு, அலங்காரப் பொருட்கள் எல்லாம் ஒவ்வொருவர் மன நிலையினை பொறுத்து மாறும். ஷாஜகானுக்கு அழகாய் தெரிந்த மும்தாஜ் இளங்கோவடிகளுக்கு அழகாய் தெரிய வேண்டிய அவசியமில்லை. இளங்கோவடிகளின் பேசும் பொற்சித்திரமான மாதவி கம்பனுக்கு பிடிக்கவேண்டும் என்ற அவசியமில்லை.  எதற்கு காவியமெல்லாம்? உலக அழகியாக பட்டம் சூட்டபட்ட லாராத்தாவைவிட, எங்கள் தெரு சூசைக்கு பக்கத்து தெரு மாரியம்மாள்தான் அழகு. இதுதான் காதலின் பன்மையான கலாச்சாரம். இதை ஒற்றைக் கலாச்சாரமாக மாற்ற வணிகமயம் துடிக்கிறது. சிகப்பழகு கிரீம் விற்பதற்காக கருப்பு நிறப்பெண்களை ஆண்கள் விரும்பமாட்டார்கள் என விளம்பரம் செய்கிறது. இந்தியாவில் நடந்த ஒரு உண்மை கதை இருக்கிறது.

 1964ல் ரீட்டா தாக்கூர் என்ற இந்தியப் பெண் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் 1990 வரை யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதன் பின் யாரும் இந்தியாவில் அழகாக பிறக்கவில்லையா? ஆனால் 1990 க்கு பிறகு ஐஸ்வரியா ராய், பிரியங்கா சோப்ரா, யுக்தா முகி, லாரா தத்தா என வரிசையாக உலக அழகிகள் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். திடீரென இந்திய பெண்கள் அழகான மாயம் என்ன? வேறொன்றும் இல்லை அப்போதுதான் உலகமயத்தை, தனியார்மயத்தை, தாளாரமயத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு அடிமை சாசனத்தில் கையப்பமிட்டது. அதன் விளைவாக பன்னாட்டு ஆடம்பர, அழகுசாதன பொருட்கள் நமது சந்தையில் வந்து குவியத் துவங்கியது. அதன் வியாபாரத்திற்கு தேவைப்பட்ட மாடல்கள் உலக அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 ஆக வியாபார சாம்ராஜியத்தை விஸ்தரிக்க அவர்களுக்கு அழகு வியாபாரம் தேவைப்படுகிறது. அதனால் எங்கள் நிறுவன பொருட்களை பயன்படுத்தினால்தான் உங்களை மங்கையர்கள் மனம் விரும்பும் நாயகனாக உருவாக்கமுடியும், அல்லது எங்கள் பொருட்கள்தான் உங்களை நோக்கி ஆண்களை திருப்பும் என ஊடகங்கள் அலறித் துடிக்கின்றன. இது ஏதோ விளையாட்டான செய்தியல்ல கீழ்வரும் வரிகள் அதை நிருபிக்கும். 

 கடந்த காதலர் தினத்தை கொன்டாட ரோஜா, வாழ்த்து மடல், தங்க & வைர நகை, செல்போன், கடிகாரம் என 4,000 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியர்கள் செலவிட்டு இருக்கிறார்கள். எஸ்.எம்.எஸ். மூலம் காதலர் தின வாழ்த்தை அனுப்புவது அண்மைக் காலத்தில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் மட்டுமே  செல்பேசி சேவை நிறுவனங்களுக்கு ஒரே நாளில் சுமார் 250 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது.

 இப்படியான வணிகமயமாக்கலில் வேறொரு அபாயமும் மறைந்திருக்கிறது. பணம் இருந்து கண்மூடித்தனமாக செலவு செய்தால்தான் தன் காதல் நிலைக்கும் என மனபோதை ஏற்றப்படும் இளைய சமூகம் எத்தகைய முடிவுகளுக்கு செல்லும்? காதலின் சமூக விழுமியங்கள் சிதைந்து போக இந்த காதல் வணிகமயமாக்கல் ஊடாடுவது எத்துனை பேருக்கு புரியும் என்ற கவலையும் சேர்ந்தே வருகிறது.

 சாதி, மதத்தின் கவுரவத்தின் பெயரால் காதலுக்கு வரும் சவால்களையும், எதிர்ப்புகளையும், வன்மைகளையும் எதிர்த்து வீதியில் இறங்கிப் போராட முடியும். ஏனெனில் எதிரிகள் கண்ணுக்கு தெரிந்தவர்கள். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் பண்பாட்டு ஊடகங்கள் மூலமாக நமது இளைய சமூக மனதில் படியும் இந்த வணிகமயமாக்கலுக்கு எதிராக எந்த ஆயுதத்தை உயர்த்திப் போராடுவது என்பதுதான் மக்கள் இயக்கங்களின் சிந்தனையோட்டமாய் இருக்கிறது. ஒரு நாளைக்கு இருபத்திநான்கு மணி நேரமும் ஊடகங்கள் மூலம் விதைக்கப்படும் இக்கொடிய வித்துக்களை அகற்ற புதிய யுக்திகளுடன் களமிறங்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் வென்று காதல் நிலைப்பதை போல இதையும் வெல்லும் என்ற நம்பிக்கையில் பயணிக்கலாம்.

2013 பிப்ரவரி மாதம் மகளிர் சிந்தனை இதழில் வெளியான கட்டுரை


 

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark