மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!1978ல் திருவண்ணாமலையில் ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்த ராஜசேகரன் என்கிற நித்தியானந்தம் அரசு பள்ளியிலும் பின் அருணை பொறியியல் கல்லூரியிலும் படித்தவர். சரியான பிழைப்பு கிடைக்காமல் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் இணைந்து பின் இமயமலை சென்று "ஞான அனுபூதி முக்தி"!? அடைந்ததாக அவர் குறித்த செய்திகள் உலா வருகிறது. 

2000 ஆண்டில் தியான பீடம் என்ற அமைப்பை துவக்கி இன்று 800 கிளைகளுடன் 21 நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் ஒரு ராஜ்ஜி யத்தை விஸ்தரித்துள்ளார். பெங்களூர், மைசூர் சாலையில் பிடதியில்தான் தியான பீடம், ஆஸ்ரமம் 52 ஏக்கர் பரப்பளவில் குளிரூட்டப்பட்ட அடுக்கு மாடிகளை கொண்டுள்ளது. இதுவே நித்தியானந்தனின் தலைமையிடம். தற்சமயம் காவல்துறையின் கடுமையான கண்காணிப்பிலும் சோதனையிலும்  உள்ளது. 

பல்வேறு நுணுக்கங்களை பயன்படுத்தி பரபரவென தன்னுடைய தொழிலில் முன்னேற்றம் கண்ட ராஜசேகரன் என்கிற நித்தியானந்தம் கையைதூக்கி, தலையைத்தொட்டு, கட்டிப்பிடித்து ஆசி வழங்க பலவிதமான கட்டணங்கள் உள்ளது. பல சாமியார்களிடம் இருக்கும் வழக்கம் போலவே இவரிடமும் கோடீஸ்வர, அதிகாரவர்க்க பக்த வாடிக்கையாளர்கள் நிறைந்துள்ளனர். அவரிடம் சிக்கும் பக்தர்களை மீட்டெடுக்க காவல்துறையில் மனுகொடுக்கும் அளவுக்கு பக்தர்களை வசியம் செய்யும் வித்தைக்காரராய் மாறியுள்ளார். தொழில் போட்டியில் நிலைக்க இவையெல்லாம் அவசியம்தானே!?

குண்டலினி யாகம் இவரது சிறப்பு அம்சம் (ஸ்பெஷல் மசாலா)  அமைதியான நிலையை அடைய வானத்தைப் பார்க்கிறேன்! நிலவைப் பார்க்கிறேன்! நட்சத்திரங்களைப் பார்க்கிறேன் என யாகத்தின் போது பேசிய நித்தியானந்தம் தனது படுக்கை அறையில் இருந்த கேமிராவைப் பார்க்காமல் அகப்பட்டது சோகமான தனிக்கதை. இதெல்லாம் இருக்க தற்சமயம் மீண்டும் ஊடகங்களின் பரபரப்பு செய்திகளுக்கு மையப் புள்ளியாய் மாறியுள்ளார். அதற்குக் காரணம் மிகப்பழமையான மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக நித்தியானந்தா நியமிக்கப் பட்டிருக்கிறார். நியிமித்தது அருணகிரி எனப்படும் 292வது நடப்பு ஆதீனம். 

இதுதான் தற்சமயப் பிரச்சனையின் மையப்புள்ளி. திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், குன்னக்குடி உள்ளிட்ட பெரும் ஆதீனங்களும், லோக்கல் அளவில் கல்லாக் கட்டும் சிறிய  மடங்களும் ஒன்று கூடித் தங்களது  எதிர்ப்பை ஓரளவு தெரிவித்திருக்கிறார்கள். (ஆதீனம் என்பதற்கும் சிறிய மடங்கள் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அவர்களது சொத்துப் பட்டியலை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது என்பது கிளைக் கதை.)

தற்போது 292வது நடப்பு மதுரை ஆதினமாக இருக்கும் அருணகிரி, முரசொலியில் நிருபராகப் பணியாற்றி பின்னர் சொத்துக்கு ஆசைப்பட்டு எதிர்பாராமல் ஆதீனமானர். இவர் ஆடாத ஆட்டம் இல்லை, இவர் மீதும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்ததுண்டு. ஆனால் இவர் ஆதீனமான போது இத்தனை எதிர்ப்பில்லை. ஆனால் நித்தியனந்தா மீது ஏன் இத்தனை பிரச்சனைகள்? நித்தியானந்தம் மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட்டதில் எழுந்துள்ள மரபு மீறல்கள், சாதி துவேஷங்கள், ஒழுக்கம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஊடகங்கள் விவாதித்து வருவது கிரைம் நாவல்களை மிஞ்சும் திருப்பங்களைக் கொண்டதாய் இருக்கிறது! 

  மடங்களின் பின்னணி....

உழைப்பாளி மக்களை ஏமாற்றிப் பிழைக்க வருணாசிரமத்தை  கட்டிக்காக்கும் இந்து மதத்தில் ஆரம்பத்தில் வேள்வி வழிபாடே பிரதானம். உருவ வழிபாடும், கோவில்களும் இந்து மதத்திற்கான பழக்கங்கள் இல்லை. மடங்களும், பள்ளிகளும்  புத்த, சமண மதத்திற்குரியவை. பார்ப்பனியம் நிலைபெறத் துவங்கியவுடன் பரவலான மக்களிடம் சென்றடைந்த இவற்றை திருடிக் கொண்டது. தமிழகத்தில் பிற்கால சோழர்கள் காலத்தில் மன்னர்களின் ஆதரவுடன் இந்துமதம் நிறுவனமயமானது அதன் ஒருபகுதியாக மடங்களும், ஆதீனங்களும் எழுந்தன. ஜோடிக்கப்பட்ட புராண புரட்டுக்கதைகளால் இவர்களது வரலாற்றுக் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்தள்ளப்பட்டன. பழமையானவை என கதையளக்கப்பட்டது.

இந்தியாவில் கோயில்களே அரசியல், பொருளாதார மையங்களாய் இருந்து வந்தன. பொக்கிஷங்கள் இருக்குமிடம் கோயில்களே. இன்று கோயில்களுக்குள் பூக்கட்டி வியாபாரம் செய்யும் பண்டாரம் என்ற சமூகப் பிரிவினர் ஒரு காலத்தில் பண்டகசாலையை பாதுகாத்தவர்கள். எல்லா மன்னர்களுமே எதிரி நாட்டுக் கோயில்களின் பண்டகசாலையைக் கொள்ளையடித்து பொக்கிஷங்களைக் கைப்பற்றுவதை செய்துள்ளனர். இந்துமதம் தன்னை விஸ்தரித்த போது கோயில்களின் துணை நிறுவனமாக ஆதீனங்கள் தோன்றியது. ஏராளமான மக்களும், கிராமங்களும், இலவச சமூக உழைப்பும் தானமாக இந்த மடங்களுக்கு கொடுக்கப்பட்டன.  இந்தப் பின்னணியில்தான் ஆதீனங்களின் உறவினர்களும், சாதிக்காரர்களும், மறைமுக வாரிசுகளும், பினாமிகளும் இத்தகைய மக்கள் சொத்துக்களை பல்லாண்டு காலமாக அனுபவித்து வருகின்றனர்.

1930களில் தமிழகத்தில் உள்ள கோயில்களை நீதிக்கட்சி அரசுடைமை ஆக்கியது ஆனால் ஆதீனங்களின் சொத்துக்களில்  யாராளும் கைவைக்க முடியவில்லை. திராவிட இயக்கங்கள் நீண்ட காலம் ஆளும் தமிழகத்தின் நிலை இதுதான். கோடி கோடியாய் அசையா, அசையும் சொத்துக்கள் மீது இயங்கும் ஆதீனங்களின் இருப்பும், பிறப்பும், நிறைய மர்மங்களையும், வன்முறைகளையும் கொண்டிருக்கின்றன. முற்றும் துறந்த சாமியார்கள், மடாதிபதிகளின் வன்முறைகளும் ஆபாச வக்கிரங்களும் பேட்டை ரவுடிகளையும் கொலைகாரர்களையும் மிஞ்சும் வன்மம் கொண்டவை. புட்டபர்த்தியில் நடக்காத கொலைகள் இல்லை. பாலியல் வக்கிரங்களில் சாயி பாபா,  ரஜ்னீஷ் உள்ளிட்டோர் சிக்கினர். சங்கராச்சாரியின் யோக்கியதையை இறந்து போன எழுத்தாளர் அனுராதா ரமணன் விலாவாரியாக எழுதவில்லையா? பாபா ராம் தேவ் செய்யாத வருமான வரி ஏய்ப்பா ஆனால் அவரை பா.ஜ.க பாதுகாக்கிறது, ஆர்.எஸ்.எஸ் ன் ராமஜென்ம பூமி முக்தி மோர்ச்சா தலைவர்கள் நடத்திய ஹவாலா மோசடியா அனைவரும் அறிந்ததுதான். 

ஜெயேந்திரர் என்ற சங்கராச்சாரியும், அமிர்தானந்தா மாயி ஆகியோரும் கொலை வழக்கில் சிக்கவில்லையா? ஆனால் பிரேமானந்தா, நித்தியானந்தம் போன்றவர்களின் தவறுகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் ஊடகங்கள் மேற்கண்டவர்கள் அயோக்கியத்தனத்தை மூடிமறைப்பது ஏன்? நாம் அனைத்து ஊடகங்களையும், மடங்களையும் குற்றம்சாட்டவில்லை எல்லாவற்றையும் விமர்சனம் செய்யும் ஊடகங்களும், குன்னங்குடி போன்ற நியாயமான மடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

சாதி, மரபு மீறல்கள்...?

தி.மு.க ஆதரவு, ஈழ ஆதரவு என்று அரசியல் ஆதரவும் தடாலடி இமேஜும் தற்போதைய சன்னிதானம் அருணகிரி ஆட்டம் போட உதவியிருக்கிறது. அவரைப் போலவே அனைத்து வகையிலும் வளர்ந்துவரும் நித்தியானந்தம் அருணகிரி கண்ணில் பட்டிருக்கலாம் அதனால் தனது வாரிசை சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

சன்னிதானம் தனது வாரிசாக, இளைய சன்னிதானமாக நித்தியானந்தத்தை நியமித்தார் என்றதும் மற்ற ஆதீனங்களால் அதை  அதாவது வெளிப்படையாக எதிர் கலகம் செய்யாமல் "மதுரை ஆதீனம் மரபை மாற்றிவிட்டார்" என்று ஈனக்குரலில் பேசுகின்றனர். நித்தியானந்தா சைவப்பிள்ளை இல்லை, தீட்சை பெறவில்லை, திருமேனியில் 16 இடங்களில் திருநீறு பூசவில்லை, மொட்டையடிக்கவில்லை, தனியாக மடம் வைத்திருக்கிறார் மேலும் பாலியல் குற்றச்சாட்டு உடையவர் என்கிறார்கள்.

சைவ ஆதீன  சன்னிதானங்கள் கண்டு பிடித்த மரபு மீறல்கள் இவைகள்தான் எனில்  எது மரபு என்பதும் எவை மரபு மீறல் என்பதும் விவாதத்திற்குறியதாகும்? சங்கர மடத்திலிருந்து  தனது காதலியுடன் ஓடிப்போன ஜெயேந்திரர் போகும் போது தண்டத்தை கொண்டு செல்லவில்லை. எனவே அவரது சங்கரமட பதவி இதனால் தானாகவே இல்லாமல் போகும் என்றார்கள். இது கடுமையான மரபு மீறல் என்றனர். சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்த ஜெயேந்திரர் மீண்டும்  பட்டத்தை பெற்றார். இந்த மரபு மீறல்களெல்லாம் எந்த கணக்கில் வரும்?.

பிறகு சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ செட்டியார் சாதிகளைச் சேர்ந்தோர்தான் ஆதினமாக வரமுடியும். நித்தியானந்தம் ஆற்காடு முதலியார் என்பதால் சந்நிதானமாகத் தகுதி இல்லை என்கிறது ஒரு தரப்பு வாதம் செய்கிறது. ஆனால் நித்தியானந்தா "சுத்த அக்மார்க்" தொண்டை மண்டல முதலியார்தான், தகுதியுள்ளவர்தான் என்று  மதுரை ஆதீனம் அருணகிரி எதிர்வாதம் செய்கிறார். ஆமாம் நானும் சைவ வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்தான் என்று உறவினர்களை பட்டியலிட்டு நித்யானந்தம் "ஐ.எஸ்.ஓ" தரச்சான்று காட்டுகிறார். பறையரும் சன்னிதானமாக மகுடம் சூட்டலாம், சக்கிலியரும் சங்கராச்சாரியாக பட்டமேற்கலாம் என்ற நிலையை நோக்கி போகவேண்டிய காலத்தில் சாதி, மரபு என உழைக்கும் மக்களை இந்த விவாதத்திற்கு வெளியே நிறுத்தி மடாதிபதிகளும், நித்தியானந்தம் போன்ற அயோக்கியர்களும் சண்டையிடுவது யாரை ஏமாற்ற? 

ஒழுக்கம் சார்ந்த விவாதங்கள்..

துறவிகளின் ஒழுக்கத்தை தீர்மானிக்கும் விசயங்கள் குறித்து ஆதீனங்கள் யாரும் வாயைத் திறக்க முடியாமல் தவிப்பது புரிகிறது. நித்தியானந்தாவே மிகவும் நக்கலாக சவால் விடுகிறார். தனது படுக்கையறையை 24 மணிநேரமும் கேமரா கண்காணிப்பிற்குள் வைத்திருக்க முடியும், ஆனால் மற்ற ஆதீனங்கள் இந்த சவாலுக்கு தயாரா? என்கிறார். கையில் ஒரு கோடி, ஆர் யூ ரெடி என அவர் சவால் விடாததுதான் மிச்சம். தனது படுக்கையறை காட்சிகள் ஹவுஸ்புல் காட்சியாக ஓடியதால் முடி தவிர மானம், மரியாதை என எதுவுமில்லாத காரணத்தால் தைரியமாக சவால் விட்டிருக்கலாம்.

 காஞ்சி மடம் இது குறித்து தெரியாமல் வாயை திறந்தது அவ்வுளவுதான், உடனே நடிகை ரஞ்சிதா ஜெயேந்திரர் மீது வழக்கு போட்டிருக்கிறார். இப்போது ரஞ்சிதாவிடம் ஜெகத்குரு சார்பில் பலர் தூது சென்றுகொண்டிருக்கின்றனர். பொதுவாகவே தமிழகத்தின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் பல்லாண்டு காலமாய் ஆயிரக்கணக்கான சாமியார்கள் மாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கோயில் கருவறைக்குள் பெண்ணிடம் சல்லாபம் கொள்ளும் தேவநாதன் துவங்கி, பீடி சாமியார், கோட்டர் சாமியார், மொட்டை சாமியார், சாக்கடை சாமியார் என புதுப்புது டிஸைன்களில் சாமியார்கள் வருகிறார்கள். சாமியார்கள் எத்துணை முறை அம்பலப்பட்டாலும் புதிது புதிதாய் வந்துகொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியுமென வருகின்ற புதிய சாமியாரை நம்பி மோசம் போகின்றனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் ஆசிரமம் நடத்திவந்த சுருட்டு சாமியார் என்கிற பழனிசாமி  பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததால் கைது செய்யப்பட்டது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது சென்னைக்குள் 50 க்கும் மேற்பட்ட குறிசொல்லும் சாமியார்கள் இருப்பதாகவும் இவர்களது நடவடிக்கைகளை காவல் துறையினர் ரகசியமாக கவனிப்பதாகவும் சொல்லப்பட்டது.  அதன் பிறகு இது குறித்து எந்த செய்தியும் இல்லை. இன்னும் காவல்துறை ரகசியமாய் என்ன செய்கிறது என தெரியவில்லை. ஒழுக்கக்கேடான சாமியார்களுக்கு ஒரே மாதிரியான தண்டனையும், ஊடக விமர்சனங்களும் இருப்பதில்லை. தற்போது நடப்பதையே எடுத்துக்கொள்ளலாம் நித்தியானந்தத்தின் ஒழுக்கம் குறித்து பேசும் தமிழக அறிவு ஜீவிகளும் ஊடகங்களும் ஜெயேந்திரரின் ஒழுக்கம் குறித்து பேசாமல் கள்ள மவுனம் சாதிப்பதற்கு பின் எந்தவிதமான அரசியலும் இல்லை என்பதை நம்ப இயலுமா? சாதி, மதம், இனம், நபர் குறித்து மாறும் அளவுகோளுள்ள ஒழுக்கம் குறித்து விவாதிக்காமல் இருக்க முடியுமா?

இந்துத்துவம் என்பது பார்ப்பனியத்தின் அடிப்படையை காக்க கட்டமைக்கப்பட்டது. இந்துத்துவத்தின் வலிமை இன்றும் குறையாமல் இருப்பதற்கு நல்ல உதாரணம் சைவ ஆதீனங்கள் அனைத்தும் இதன் அடிப்படையை பாதுகாப்பதுதான்.  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கும், கருவறையில் தமிழ் மொழி கூடாது என்றுரைக்கும் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு இவர்கள்தான் ஆதரவு கொடுத்தனர். இம்மடங்களின் கோயில்களில் உள்ள புரோகிதர்கள் யார் என்பதைப் பார்த்தால் உண்மை தெரியும். குன்னக்குடி போன்ற ஒரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்துத்துவத்தின் அடிப்படையை அனைத்து ஆதீனங்களும் தாங்கிப்பிடிக்கின்றன. ஆனால்  இங்கும் கூட சைவ வேளாளர் சாதிகளைச் சேர்ந்தோர் மட்டும்தான் தம்பிரான்களாகவும், ஆதீனமாகவும் வர முடியும். தற்போது நித்தியானந்தா விவகாரத்தில் மரபு என்ற பெயரில் இதைத்தான் எழுப்புகிறார்கள். ஆயிரத்து எட்டு சாதிகளை தன்னுள் வைத்து தன்னை இன்னும் உயிரோடு வைத்திருக்க இந்து மதம் வரலாற்றில் செய்த சாகசங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

சமூக அவலங்களை கேள்வி கேட்ட சமண புத்த மதங்கள் இரத்தத்தால் அழிக்கப்பட்டது. இதில் ஆதீனங்களுக்கும் மிகமுக்கிய இடமுண்டு. சமணத் துறவிகளை கழுவிலேற்றிக் கொன்ற திருஞான சம்பந்தர்தான் மதுரை ஆதீனத்தின் நிறுவனர் என்பது ஒரு வரலாற்று செய்தி மட்டுமல்ல! புத்த, சமண, சாருவாகன, சித்தர்களின் சிந்தனைகள் இந்துத்துவத்தின் எதிர் மரபாய் இருந்தது, இந்துத்துவத்தின் அடிப்படை மீது கேள்விகளை எழுப்பினார்கள். அதனால்தான் மன்னர்களின் ஆயுத பலத்தால் ஒழிக்கப்பட்டார்கள். அவர்களது இலக்கியங்களும் அழிக்கப்பட்டன

இந்துத்துவம் மாற்று சிந்தனையை மட்டுமல்ல தன் இருப்புக்கு தேவையெனில் தன்னிடம் உள்ள சில உறுப்புகளையும் இழக்க எப்போதும் தயாராகவே இருக்கும். இந்துத்துவத்திற்கு பீடி சாமியாரும் வேண்டும் கோடி சாமியாரும் வேண்டும், மடங்களும் வேண்டும் கிராமக் கோயில்களும் வேண்டும், சங்கர மடமும் வேண்டும் தியான பீடமும் வேண்டும். பிரச்சனை எனில் கண்டிப்பாக சங்கரமடத்தின் பக்கமே உறுதியாய் நிற்கும் என்பதற்கு ஆயிரம் சாட்சிகள் உண்டு. இப்போதைய சாட்சி நித்தியானந்தம். ஏனெனில் இந்துத்துவத்தின் அடிப்படை பிராமணியத்தின் மீது எழுந்து நிற்கிறது. தனது அஸ்திரவாரத்தை பாதுகாப்பது அதன் கடமை.

-------------------ஜூலை 2012 - இளைஞர்முழக்கத்தில் எழுதியது--------------

2 comments

  1. Anonymous Says:
  2. மிகவும் அருமையான ஒரு கட்டுரை .. மதங்களுக்கு சாதியங்கள் தேவைப்படுகின்றன என்பதி அலசி உள்ளீர்கள் .. நியாயமான கேள்வி தான் .. காஞ்சி மடம் குறித்து எவனும் பேசுவதில்லை .. பார்ப்பனியம் என்பது கேள்விக் கேட்கக் கூடாத ஒன்று என்ற நிலை மக்களிடம் இருக்கின்றது ... அதற்காக நித்தியானந்த செய்வது எல்லாம் ஒழுக்கம் என்றில்லை.. பார்ப்பனியம் என்றால் இவர்கள் ஆதிக்க இந்துக்கள் அவ்வளவே வித்தியாசம் .. !!

    தொடருங்கள் சகோ .. !!!

     
  3. thanks for yuor comment selven

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark