மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!




கேரள காங்கிரஸ் அரசு மக்களிடமிருந்து முற்றிலும் தனிமைப்பட்டிருந்த  சூழ்நிலைமையில் டி.பி.சந்திர சேகரன் என்கிற முன்னால் சிபிஐ(எம்) உறுப்பினர் படுகொலை செய்யப்பட்ட அந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள், தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு  காங்கிரஸ் அரசு நடந்த கொலைச் சம்பவத்தை கார்ப்பரேட் ஊடகங்களின் உதவியோடு திட்டமிட்டு பயன் படுத்திக் கொள்ள அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற் கொண்டது. சுருக்கமான உண்மை என்னவென்றால், டி.பி.சந்திரசேகரனின் கொடூரமான கொலைச் சம்பவத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தனது குறுகிய அரசியல் லாபத்திற்காக அப் பட்டமாக பயன்படுத்திக் கொண்டது என்பதே.

இந்தக் கொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்தது; தனது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. கொலைக்கு காரணமானவர்களை கண்டறிய உறுதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கட்சி வலியுறுத்தியது. அதுமட்டுமல்ல, கட்சியின் எதிரிகளால் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுவது போல இந்தக் கொலையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எந்தவெரு சந்தேகத்திற்கும் இடமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபட அறிவித்தது.

ஆனால் காங்கிரஸ் தலைமை, இந்தக் கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது பழி சுமத்தி அரசியல் நெருக்கடியிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ள மிகக்கடுமையாக முயற்சித்தது. கொலைச் சம்பவம் நடந்த உடனே, இந்தக் கொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் செய்தது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அப்பட்டமாக பழி சுமத்தினார். கொலை நடந்த மறுநாள் மே 5ம்தேதி மாநிலந் தழுவிய கடையடைப்பிற்கு காங்கிரஸ் அழைப்பும் விடுத்தது.

இச்சம்பவம் நடந்த உடனே காங்கிரஸ் தலைவர்களால் வெளியிடப்பட்ட சில அறிக்கைகள், அவர்கள் ஒரு போதும் சந்திரசேகரனின் உயிரைப் பாதுகாப்பது குறித்து கவலைப்படவில்லை என்பதை பளிச்செனக் காட்டின. சந்திரசேகரனுக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து தனக்கு தெரியும் என்று ஊடகங்களிடம் அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறுகிறார்; தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்திர சேகரனே தன்னிடம் தெரிவித் திருப்பதாகவும் அமைச்சர் கூறுகிறார். காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்று சந்திர சேகரன் வேண்டுகோள் விடுத்தபோதிலும் கூட, அத்தகைய ஏற்பாடு செய்வதற்கு உம்மன்சாண்டி அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்தது. இது, அரசுத்தரப்பில் நிகழ்த்தப்பட்ட ஒரு அப்பட்டமான அலட்சியப் போக்கு என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் பின்நாட்களில், காவல்துறை பாதுகாப்பு அளிக்க முன்வந் ததாகவும் அதை ஏற்றுக்கொள்ள சந்திரசேகரனிடம் நிர்ப்பந்தித்ததாகவும், ஆனால் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள சந்திரசேகரன் மறுத்து விட்டதாகவும் முதலமைச்சர் கூறுகிறார். காவல்துறை ஒருவருக்கு பாதுகாப்பு அளிப்பது என்று முடிவுசெய்துவிட்டால் அதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு பிறப்பிக்கும்; அதே உத்தரவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ள நபருக்கும் கொடுக்கப்படும். இது தான் அரசுத்துறையின் வழக்கமான நடைமுறை. சம்பந்தப்பட்ட நபர் தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை வேண்டாம் என்று மறுத்தால், அதற்கான மறுப்புக்கடிதத்தை அவர் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சந்திரசேகரனுக்கு உண்மையிலேயே காவல்துறை பாதுகாப்பு அளிக்க முன்வந்திருந்தால், அதை ஏற்றுக்கொள்ள சந்திர சேகரன் மறுத்திருந்தால், இப்போது முதலமைச்சர் கூறுவது போல நடந்திருந்தால், பாதுகாப்பு அளிப்பதற்காக அரசு போட்ட உத்தரவை காண்பிக்கத் தயாரா? சந்திரசேகரன் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் எனக்கூறி அரசுக்கு எழுதியுள்ள மறுப்புக் கடிதத்தை வெளியிடத் தயாரா? இரண்டு கடிதங்களையும் வெளியிட்டு நிரூபிக்க முடியுமா?

இந்த இரண்டு ஆவணங்களையும் அரசு வெளியிடத் தவறினால், பொருத்தமான நேரத்தில் அரசு தலையிட்டு இருக்குமானால் மேற்கண்ட துயரமான கொலைச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதே மிகத் தெளிவான முறையில் நிரூபிக்கப்படும்.

இத்தகைய மிக முக்கியமான உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை இப்போது கொஞ்சமும் வெட்கமில்லாமல் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஊடகங்களின் துணையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஒரு திட்டமிட்ட சதிராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள். இந்தக் கொலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எப்படியேனும் குற்றவாளி ஆக்குவது என்பதே இவர்கள் நோக்கம். இப்படிச் செய்வதன் மூலம் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கடுமையான அரசியல் நெருக்கடியை தீர்த்துக்கொள்ள முடியும் என்று காங்கிரஸ் கூட்டணி அரசு நம்புகிறது. இதற்கு ஏற்றாற்போல கார்ப்பரேட் ஊடகங்கள், திரிக்கப்பட்ட கதைகளையும், திட்ட மிட்ட பொய்ச் செய்திகளையும் புலனாய்வு இதழியல் என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக உற்பத்தி செய்த வண்ணம் இருக்கின்றன. 
இந்த சம்பவம் நடந்த முதல் நாளிலிருந்தே, எந்தவெரு ஆதாரமும் இல்லாமல், மேற்கண்ட கொலை கண்ணூரில் இருந்துவந்த ஒரு கும்பலால் நடத்தப்பட்டது என்று தொடர்ந்து ஊடகங்களின் ஒரு பகுதியினர் பிரச்சாரம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தங்களது பொய்ப் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் விதமாக ஏராளமான கட்டுக்கதைகளையும் திட்டமிட்டே அவிழ்த்துவிடுகிறார்கள். உண்மையில் மேற்கண்ட கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளால் பயன் படுத்தப்பட்ட இன்னோவா கார் கண்ணூரில் உள்ள சோக்லி என்னுமிடத்தில் இருந்ததை கண்டுபிடித்து காவல்துறையிடம் கூறியதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்தான். ஆனால் இந்த உண்மையை மறைத்து விட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது பழிபோட இந்த ஊடகங்கள் தீவிரமாக முயல் கின்றன. 

துவக்கத்தில், சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் நவீன் தாஸ் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் என்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. டி.வி. சேனல்கள், பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் கட்டவிழ்த்துவிட்ட இந்த அப்பட்டமான பொய்ச்செய்தியையே அச்சு ஊடகங்களும் தொடர்ந்து பல நாட்களுக்கு விடாமல் கூறிவந்தன. பின்னர், அந்த காரின் உரிமையாளருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த கார் ஒரு காங்கிரஸ் காரருக்கு சொந்தமானது என்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த உண்மைகள் தெளிவாக தெரியவந்த நிலையிலும் கூட மேற்கண்ட ஊடக நிறுவனங்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை; மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக தவறான செய்தி வெளியிட்டதை திருத்திக் கொள்ளவும் தயாராகயில்லை. 

இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த இரவு-பகலாக பாடுபட்டுக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொள்ளும் மலையாள நாளேடான மாத்ருபூமி, மே 6ம் தேதியன்று முதல் பக்கத்தில் போனில் அழைத்தது யார்? என்ற தலைப்பில் கட்டம் கட்டி ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தி, சந்திரசேகரன் கொலைசெய்யப் படுவதற்கு சற்றுமுன்பு அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது என்றும், அவரது மோட்டார் வாகனம் வள்ளிக்காடு லீக் ஹவுஸ் அருகில் விபத்தில் சிக்கிவிட்டதாகவும் அவர் உடனே அங்கு செல்லுமாறு தொலைபேசியில் பேசியவர் கூறியதாகவும் தெரிவிக்கிறது. மேலும், சந்திர சேகரனை தொலைபேசியில் அழைத்தது யார் என்பது குறித்து மிகத் தெளிவான தகவல் காவல் துறையிடம் சிக்கியிருக்கிறது என்றும் ஆதாரப்பூர்வமாக தங்களுக்கு தெரியும் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மறுநாள், அதே நாளேடு அச்செய்தி முற்றிலும் தவறானது என்று பல்டி அடித்தது. முதல் நாள் ஆதாரப்பூர்வமானது என்று கூறி வெளியிட்ட செய்தியை மறுநாளே பொய்யானது என்று எழுதியது. ஒரு தொலைபேசி அழைப்பின் அடிப்படையி லேயே சந்திரசேகரன் வள்ளிக்காடு பகுதிக்கு சென்றார் என்ற தகவல் பொய்யானது என்று மறுநாள் வெளியான செய்தியில் மாத்ருபூமி எழுதியது.

உண்மையில் சந்திரசேகரனுக்கு கடைசியாக வந்த தொலைபேசி அழைப்பு, அவரது சொந்த கட்சியான ஆர்.எம்.பி.கட்சியின் ஆதரவாளர் ஒருவரிடமிருந்தே வந்தது; இந்தத் தகவல், மேற்கண்ட செய்தி வெளியான மறுநாள் முதல் ஊடகங்களில் காணாமலே போய்விட்டது. மாறாக, குறிப்பிட்ட சில உள்ளூர் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காகவே அந்த தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்ததாக போலீஸ் தகவல் கூறுவதாக குறிப்பிட்டு ஊடகங்கள் முடித்துக் கொண்டன.

இப்படியாக இந்த விவகாரத்தின் துவக்க நாட்கள் முதலே மாத்ருபூமி நாளேட்டின் புலனாய்வின் உண்மை முகம் அப்பட்டமாக அம்பலமாகிக் கொண்டே இருக்கிறது; ஆனால் இத்தகைய ஊடகங்களால் உற்பத்தி செய்யப் பட்ட, முற்றிலும் திரிக்கப்பட்ட கதைகளின் அடிப்படை யிலேயே காவல்துறை நகர்ந்து கொண்டிருக்கிறது.

திரிக்கப்பட்ட கதைகள்

மற்றெரு மலையாள நாளேடான மத்யமம், மே 6ம்தேதி ஒரு செய்தி வெளியிட்டது. சந்திரசேகரனை கொலைசெய்வது என்ற சதித்திட்டம் வாளயம் எனும் இடத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு பகுதிக் குழுக்களுக்கு தொடர்பு உள்ளது என்பதுமே அச்செய்தி. இந்த செய்திக்கு வலுசேர்ப் பதற்காக, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒஞ்சியம் பகுதிச்செயலாளரும் அவரது குடும்பத்தி னரும் தங்களது வீட்டைவிட்டு வெளியேறி ஓடிவிட்டதாகவும் எழுதப்பட்டது. ஆனால் உண்மையில் கட்சியின் ஒஞ்சியம் பகுதிச் செயலாளர் சி.எச்.அசோகன், என்ஜிஓ யூனி யன் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே சென்றார் என்பது நிரூபிக்கப்பட்டது. எனவே இந்தக் கதையும் பொய் என்பது நிரூபணமானது.

பின்னர், சந்திரசேகரனை கொல்வதற்கான சதித்திட்டம் வாளயத்தில் ஒரு திருமண மண்டபத்தில் வைத்து உருவாக்கப் பட்டது என்று பொய்ச்செய்தி உலா வந்தது. இதை பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் டி.வி. சேனல்கள் இடைவிடாமல் ஒளிபரப்பின. இந்த சதியை உருவாக்கியதற்காக நாடபுரம் காவல்துறையினரிடம் மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் சிலர் பிடிபட்டிருப்பதாகவும் அந்த பிரேக்கிங் நியூஸ் கூறியது. ஆனால் அது உண்மையில்லை என்பது நிரூபணமாகி, சம்பந்தப்பட்ட தோழர்கள் சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டனர். ஆனால் அந்தத் தகவலை மட்டும் ஊடகங்கள் வெளியிடாமல் முற்றிலுமாக மறைத்தன.

அடுத்து இதே ஊடகங்கள், இந்தக் கொலை வழக்கில் வாளயம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் குறிப்பிட்ட சில ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டன. ஆனால் உண்மையில் டி.வி. சேனல்கள் பிளாஷ் நியூஸ் என்ற பெயரில் குறிப்பிட்ட அந்த சில தோழர்கள் கைது செய்யப்பட்டதாக செய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்ட அவர்கள் அனைவரும் தங்களது வேலைத் தளங்களில் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

அவர்கள் எந்தவிதத்திலும் கைது செய்யப்படவில்லை என்பது அப்பட்ட மாக தெரிந்தபோதிலும் கூட தவறான செய்தி வெளியிட்டுவிட்டோம் என்று மேற்படி ஊடகங்கள் ஒரு சிறு கவலையைக் கூட வெளிப்படுத்தவில்லை; தவறான செய்தியை திருத்திக்கொள்ளவும் இல்லை; இத்தகைய திரிக்கப்பட்ட கதைகளால் ஏதுமறியாத அப்பாவி மக்களின் கவுரவம் சிதைக்கப்பட்டதை பற்றி இந்த ஊடகங்கள் கவலைப்படவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட கொலை விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்தி வெளியானது. அப்படி வெளியான உடனேயே, ஊடகங்கள் எவ்விதத் தயக்கமுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நபர்களையும் கூட இந்தக் கொலைக்காக திட்டமிட்டு பயன்படுத்தியுள்ளது என்று கொஞ்சம் கூட கூசாமல் செய்தி வெளியிட்டன.

சந்திரசேகரன் கொல்லப்பட்ட உடனேயே வேறெரு கதையையும் ஊடகங்கள் உலவவிட்டன. கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்பு சந்திரசேகரனுக்கு வள்ளிக்காடு பகுதியிலிருந்து வந்த தொலைபேசி அழைப் பிற்கான சிக்னல், கண்ணூர் மத்திய சிறைக்கு அருகில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து சென்றிருக்கிறது; எனவே அவரை கொல்வதற்கான சதி கண்ணூர் மத்திய சிறையில் உருவானது என்பதே அந்தக் கதை. பின்னர், கொலைக்கான சதி மாஹேயில் ஒரு மதுக்கூடத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் உருவாக்கப் பட்டதாகவும் ஒரு கதையை ஊடகங்கள் உலவவிட்டன.

சந்திரசேகரன் கொல்லப்பட்ட நாள் முதல் ஊடகங்கள் கட்டவிழ்த்துவிட்ட இத்தகைய ஏராளமான கதைகள் அனைத்துமே முற்றிலும் பொய்யானவை; திரிக்கப்பட்டவை; ஜோடிக்கப்பட்டவை; திட்டமிட்டு விஷம் கக்குபவை என்பது அப்பட்டமாக அம்பலமானது.

இந்தச் செய்திகளை வெளியிட்ட அனைத்து ஊடகங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைத்து தாக்குவதில் ஒன்று பட்டு நிற்கின்றன; இந்தக் கொலை வழக்கில் கட்சி மீது பழி சுமத்துவதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு இவை தயாராக இருக்கின்றன என்பதையே இந்த பொய்க்கதைகள் தெளிவுபடுத்துகின்றன.

மே 10ம்தேதி மத்யமம் நாளேடு ஒரு செய்தி வெளியிட்டது. சந்திரசேகரன் கொலைக்கு காரணமாக சந்தேகிக்கப்படும் பின்னணி குறித்த செய்தி அது. சந்திரசேகரனுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் இடையே பகைமை இருந்து வந்ததாகவும் இதுவே அவரது கொலைக்கு காரணமாக இருக்கக் கூடும் என்று அச்செய்தி கூறியது. ஆழியூரில் ஒரு நீர் பூங்கா திட்டம் மற்றும் குடிநீர் பாட்டிலிங் ஆலை போன்றவற்றை அமைப்பதற்கு எதிராக சந்திரசேகரன் தலைமையில் ஒரு இயக்கம் நடந்தது என்பதை இதற்கு பின்புலமாக அச்செய்தி தெரிவிக்கிறது. இந்தத் தகவல் உண்மையில் உயர்நீதிமன்றத்தின் முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்த போது மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் சி.எச். அசோகனால் முன்பு ஒருமுறை குறிப்பிடப்பட்ட தகவலே. எனவே இதில் புதிதாக இந்த ஏடு கண்டு பிடித்துச் சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை. எனினும் கூட இந்தச் செய்தியிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதே பழிசுமத்தப்பட்டது.

சம்பவம் நடந்த நாள் முதலே ரபீக் என் பவர்தான் இந்த கொலையைச் செய்த முக்கிய குற்றவாளி என காவல்துறை தெரிவிப்பதாக மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. அந்தச் சமயத்தில் ரபீக்கை பற்றி ஏராளமான செய்திகள் இடம்பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றம்சாட்டப்படும் பல வழக்குகளில் ரபீக்கிற்கு தொடர்பு இருக்கிறது என்றெல்லாம் கூட கதைகள் பரப்பப்பட்டன. மே 7ம்தேதி வெளி யான மலையாள மனோரமா நாளேடு உட்பட பல ஊடக நிறுவனங்கள், ரபீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஆதரவாளர் என்றே அறிவித்துவிட்டன. அதுமட்டுமல்லாமல் கொலையாளிகளால் பயன்படுத் தப்பட்ட இன்னோவா காரில் ரபீக்கின் கைரேகைகள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகளை அள்ளித்தெளித்தன. 

ஆனால், ரபீக்கிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பது உடனடியாக நிரூபிக்கப்பட்டது. உடனே ஊடகங்கள் ரபீக் என்பவரின் உண்மை முகத்தை மறைக்கத் துவங்கிவிட்டன. அவரை முதலில் குற்றவாளி என்று சொன்ன அதே ஊடகங்கள், இன்னோவா கார் ஒன்றை ஒரு சுற்றுப்பயணத்திற்காக அமர்த்தித் தருமாறு ரபீக்கிடம் கேட்கப்பட்டதாகவும், அவர் கார் அமர்த்தித் தந்துவிட்டு வெளிநாடு சென்று விட்டதாகவும் ஆதாரப்பூர்வமாக தெரியவந்திருப்பதாக புதிய கதையை அவிழ்த்துவிட்டன. ஆனால் சில நாட்களில் ரபீக் வடகரா நீதிமன் றத்தில் சரணடைந்தார்; நீதிமன்றத்திலிருந்து காவல்துறையினர் அவரை வெளியே அழைத்து வந்தனர்.

கோயபல்ஸ் பாணி பிரச்சாரம்

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையிடம் அளித்த தகவல்களை திரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்து தாக்கும் விதமாக மேற்கண்ட ஊடகங்கள் எண்ணற்ற கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்ட வண்ணம் இருந்தன. ஆனால், கைது செய்யப் பட்டவர்கள் பின்னர் கூறும்போது, காவல்துறையிடம் தாங்கள் அளித்த உண்மையான தகவல்கள் அனைத்தும் ஊடகச் செய்திகளில் வெளியான போது முற்றிலும் மாறு பட்டவையாக இருக்கின்றன என்பதை அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறி வைத்து தாக்கும் இவர்களது மிகக்கொடூரமான ஊடக ராஜ்யத்தில் உண்மை பலமுறை படுகொலை செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் இதுதான் உண்மையோ என்று நம்பவைக்கிற கோயபல்ஸ் பாணி பிரச்சாரம், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் செல்வாக்கை சிதைக்கும் நோக்கத்தோடு அரங்கேற்றப்பட்டு வருகிறது. ஊடக நிறுவனங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கை குறைக்கும் தங்களது நோக்கத்திற்கு உதவாத எந்தவெரு செய்தியையும் திட்டமிட்டே, தெரிந்தே அப்பட்டமாக நிராகரிக்கின்றன.

------- நன்றி தீக்கதிர்------------------------------------------------------------------

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark