மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!




கடலுர் மாவட்ட மக்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் சந்தித்த இரண்டாவது பெரிய பேரழிவு இது. ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவம் உயிர்களை பறித்து, கடல் சார்ந்த நெய்தல் நிலத்தை மொத்தமாய் உலுக்கிச் சென்றது. இப்போது அடித்த தானே புயல் இன்னும் பல பத்தாண்டுக்கு பிறகும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஒப்பீட்டளவில் சொல்ல வேண்டுமெனில் இது பல ஆழிப்பேரலைகளின் தாக்கத்தை ஒரே சூறைக்காற்று ஏற்படுத்திய பேரழிவு. பறவைகள் அற்ற உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியாதுதானே. ஆனால் மூன்று தினங்கள் கடலூரை சுற்றி எங்கும் காக்கைகள் உள்ளிட்ட பறவைகள் இல்லாத நிசப்தம் நிலவியது. சாய்ந்த மின்கம்பங்கள், அலைபேசி கோபுரங்கள், ஆயிரமாயிரமாய் வேரோடு சாய்க்கப்பட்ட மரங்கள், ஒரு இலைகூட இல்லாமல் குச்சிகளாய் நிற்கும் மரங்கள், அலைக்கழிக்கப்பட்டு வீசியெறியப்பட்ட ஐந்து லட்சம் குடிசை வீடுகள், அறுத்தெறியப்பட்ட வலைகள், தொலைந்து போன படகுகள், 50 ஆயிரம் ஏக்கர் வேரோடு பிடுங்கப்பட்ட முந்திரி மரங்கள், பல்லாயிரம் வீழ்ந்த கணக்கில் மா, பலா, தென்னை மரங்கள், பலவகையான காய்கறிகள், பல்லாயிரம் ஏக்கர் கரும்புத் தோட்டங்கள், துடைத்தெறி யப்பட்ட நெற்வயல்கள், நிவாரணம் கிடைக்காத மக்கள் என தனது உருவத்தை தொலைத்து நிற்கிறது கடலூர் மாவட்டம்.

தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத ஒரு சிறப்பு தென்னார்காடு மாவட்டத்திற்கு உண்டு. இங்குதான் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்ற நான்கு திணைக்குரிய நிலங்களும் உள்ளன. பாலை மட்டும் இல்லாமல் இருந்தது. அதையும் இந்த சூறைக்காற்று உண்டாக்கிவிட்டது. முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து, நல்லியல்பு இழந்து நடும்பு துயர் உறுத்து, பாலை என்பதோர் படிமம் கொள்ளும் என்ற சிலப்பதிகார வரிகளுக்கு ஏற்ப பல இடங்கள் இப்போது பாலை நிலங்களாக காட்சியளிக்கின்றன.

சூறைக்காற்று கடந்து சென்று கிட்டத்தட்ட 25 நாட்களை கடந்து இன்னும் சீர்செய்யப்படாத மின்வசதியும், குடிநீர் இல்லாமல் பல கிராமங்களில் மக்கள் அலைவது தானே புயலின் தீவிரத்தை காட்டும். தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாய் மறியல் செய்து வருகின்றனர். அரசு தினமும் 80 சதவீத நிவாரண பணிகள் முடிந்துவிட்டதாக ஊடகங்கள் மூலமாக உடுக்கை அடித்து வருகிறது. உண்மை அதுவல்ல. வீடுகளுக்கு கொடுக்கும் நிவாரண தொகைகளில் ஆளும் கட்சியினர் அடிக்கும் கொள்ளையை கண்டித்தும் போராட்டங்கள் நடக்கிறது. அறிவித்துள்ள சொற்பதொகைக் கூட மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. வீடுகளை மறுசீரமைப் புச்செய்ய ஆகும் கூலிக்கு கூட போதாத தொகைக்கே இந்த நிலை. 100 சதவீதம் மின்சாரம் சீர்செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த தினத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் போராட்டம் நடத்தின.

அரசு முறையான கணக்கெடுப்பைக்கூட இன்னும் சரியாக செய்து முடிக்கவில்லை. மிக எளிதாக கணக்கிடக்கூடிய, கடற்கரை ஓரத்தில் வாழும் மீனவ மக்களின் பாதிப்பைக் கூட இன்னும் கணக்கிடவில்லை. கடலூர் மாவட்டத்தில் த.சோ.பேட்டை துவங்கி நல்லவாடு வரை உள்ள 49 மீனவ கிராமங்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. இங்குள்ள சுமார் ஒரு லட்சம் மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான குடிசைகள், வீடுகள், மரங்கள், சமுதாயக் கூடங்கள், வலைகள், கட்டுமரங்கள், விசைப்படகுகள், கண்ணாடி இழை படகுகள் போன்றவை கடுமையான சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான கட்டுமரங்களும், கண்ணாடி இழைபடகுகளும் தொலைந்து விட்டன. ஆனால் அரசாங்கம் 82 விசைபடகுகள், 270 கண்ணாடி இழை படகுகளும், 729 கட்டுமரங்கள் மட்டுமே சேதமடைந்ததாக அறிவித்துள்ளது. இந்த கணக்கு முழுமையானது அல்ல. உண்மைக்கும் அரசின் கணக்கிற்கும் தூரம் அதிகம் உள்ளது.

இன்னும் நிலம் சார்ந்த அழிவு குறித்த கணக்கெடுப்பு முழுமையாக நடைபெறவில்லை. கிராம நிர்வாக அதிகாரிகள் பற்றாக்குறை பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்ட மீட்பு பணிகள் நடைபெறு வதில், மக்களுக்கு எவையெவை உடனடி தேவைகள் என்பதைக்கூட அரசால் திட்டமிடமுடியவில்லை என்பதுதான் பெரும் சோகம். அனேகமாக 70 சதமான குடிசைகளில் மாணவர்களின் நோட்டு புத்தகங்கள், சான்றிதழ்கள், ரேசன் அட்டை, சமையல் எரிவாயு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இல்லை.

ஒரே மாதிரியான பாதிப்புகளை சந்தித்த புதுச்சேரியை பேரிடர் பகுதியாக அறிவிக்கும் மத்திய அரசு, கடலூர் மாவட்டத்தை புறக்கணிக்கிறது. தமிழக அரசும் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மறுக்கிறது.பேரிடர் மாவட்டமாக அறிவித்தால் வரிச்சலுகைகள், கல்விச்சலுகைகள், விவசாயக் கடன் தள்ளுபடிகள், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, மீண்டும் பேரிடர் வரும் முன் காக்கும் நடவடிக்கைகள், அதுசார்ந்த கட்டுமானங்கள் என அரசிற்கு செலவாகும் என அஞ்சுவதால் இந்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார்கள் போலும். மத்திய அரசு இந்திய பெருமுதலாளிகளுக்கு ஒதுக்கும் வரிச் சலுகையில் ஒரு பருக்கைதான் இதற்கு தேவை. மத்திய அரசின் பேரிடர் நிதியில் ஒரு சிறு பகுதி போதும், மாநில அரசு, கடந்த அரசு கட்டிய ஒரே காரணத்திற்காக கைவிடும் கட்டிடங்களின் மொத்த தொகையின் அளவு போதும் மாவட்டத்தை புனரமைக்க. இவையெல்லாம் நடக்க வேண்டுமெனில் இம்மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

மற்றெரு பக்கம் இப்புயல் சார்ந்த வேறுவிவாதங்களும் உள்ளன. ஆழிப்பேரலையின் தாக்கம் நிகழ்ந்த போது அம்மக்களுக்கு என்ன தேவை என தெரியாமலே பல தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் கிடைத் ததையெல்லாம் கொடுத்தன. அரசும் அதை முறைப்படுத்த முயலவில்லை. அப்போது வந்த விமர்சனங்களை எதையும் அரசு கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இப்போதும் அப்படியே நடந்தது. புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தும் ஆர்வத்தில், என்ன கிடைக்கிறதோ அதையெல்லாம் கொடுப்பது நடந்தது. பலகிராமங்களில் முதல் ஐந்து தினங்கள் மெழுகுவர்த்தி, குழந்தை களுக்கான பால்பவுடர், உணவு, குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவைதான் அவசியத் தேவையாக இருந்தது. இவைகளை சரிசெய்ய அரசு எந்திரத்தால் மிக எளிதாக முடிந்திருக்கும். ஆனால் புயல் அடித்த ஐந்தாம் நாள் 80 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இதன் மூலம் ஏதாவது கிடைக்குமா என ஆட்சியாளர்கள் விரும்பி யிருக்கலாம்.

அதே நேரம் மக்கள் பிரதிநிதிகள், அனைத்துக்கட்சியினரை அழைத்து நிவாரணப் பணிகளை நேர்மையாக நடத்திட என்ன செய்வது என ஆலேசனை செய்திருக்கலாம். ஆனால் மாவட்ட நிர்வாகம் இவைகளில் அக்கறை செலுத்தவில்லை. இப்போது தமிழக அரசு, மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்றியுள்ளது. ஆட்சியாளர்களின் கொள்கையில் மாற்றம் இல்லாமல் ஆட்சியர்களை மாற்றி என்ன பயன் எனத் தெரியவில்லை. இப்போது வந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் நூற்றுக்கணக்கான கிராமங்களிலும், 90 சதமானம் விவசாயத்திற்கு மின்சாரமே கிடைக்காத போது கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் மின்சாரம் வழங் கப்பட்டுவிட்டது என்று அறிக்கைவிட்டவர்.

நடந்திருக்கும் சேதத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரே நாளில் சூ மந்திர காளி! ஜெய் ஜக்கம்மா! மந்திரம் போட்டு மாற்றிவிட முடியாது என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சேதத்தை குறைத்துக் காட்டுவதும், நிவாரணப் பணிகள் முழுமையாக நடந்ததைப்போல கதையளப்பதும், கொடுக்கும் நிவாரணங்களில் கொள்ளையடிப்பதும், இருக்கும் அரசு எந்திரத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்தாததும்தான் மக்களை கோபப்படுத்துகிறது.

புயல் அடித்த அன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாநாடு துவங்கவிருந்தது. பேரணியுடன் மாநாட்டை தள்ளிவைத்து வந்திருந்த பிரதிநிதிகள், தங்கள் பகுதியில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற் கொள்ள அனுப்பப்பட்டனர். கட்சியின் மாநிலத் தலைவர்கள் உடனடியாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டனர். வாலிபர் சங்கம், அறிவியல் இயக்கம், மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், குடியிருப்போர் கூட்டமைப்பு, அரசு ஊழியர் சங்கம் போன்ற அமைப்புகளின் தலைவர்கள் வந்து பார்வையிட்டு பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். இவ் வமைப்புகளின் சார்பில் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அப்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுகாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதும் நடக்கிறது.

மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமாக ஆய்வுத்தாள் மூலம் கட்சியின் தோழர்கள் சர்வே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். வட்ட தலைநகர்களில் முதல் கட்ட போராட்டம் நடந்துள்ளது. மாவட்ட நிலைமையை முழுமையாக ஆய்வு செய்து, மாவட்டம் தழுவிய போராட்டத்திற்கு திட்டமிடப்படுகிறது. காரணம், ஒரு லட்சம் பம்பு செட்டுகள் மற்றும் காவிரிப் பாசனம், வெல்லிங்டன் ஏரி, பெருமாள் ஏரி உள்ளிட்ட வாய்ப்புகளை பயன் படுத்தியும் ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் வேளாண்மையில் செழித்த மாவட்டம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது நிவாரணம், நிலத்தில் சாகுபடி செய்தவருக்கா அல்லது நில உடமையாளருக்கா என்றும் பிரச்சனை எழுந்துள்ளது. மற்றென்று கடற்கரையோரத்தில் பகாசுர அனல் மின்நிலைய, எண்ணெய் சுத்திகரிப்பு கம்பெனிகள் வாங்கியுள்ள விவசாய விளைநிலங்களில் மக்கள் செய்த பயிர்கள் அழிந்துள்ளது. இங்கும் நட்டஈடு கொடுக்க முடியாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆக மக்கள் களத்தில் இறங்கி போராடினால்தான் தீர்வு என்பதை தானே புயலும் நிரூபணம் செய்துள்ளது.


0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark