மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!



சுந்தரம் (45)
சரோஜா(12)
மாதாம்பாள்(25)
தங்கையன் (5)
பாப்பா (35)
சந்திரா (12)
ஆசைத் தம்பி (10)
வாசுகி (3)
சின்னப்பிள்ளை(28)
கருணாநிதி(12)
வாசுகி (5)
குஞ்சம்பாள் (35)
பூமயில் (16)
கருப்பாயி (35)
ராஞ்சியம்மாள் (16)
தாமோதரன் (1)
ஜெயம் (10)
கனகம்மாள் (25)
ராஜேந்திரன் (7)
சுப்பன் (70)
குப்பம்மாள் (35)
பாக்கியம் (35)
ஜோதி (10)
ரத்தினம் (35)
குருசாமி (15)
நடராசன் (5)
வீரம்மாள் (25)
பட்டு (46)
சண்முகம் (13)
முருகன் (40)
ஆச்சியம்மாள் (30)  
நடராஜன் (10)
ஜெயம் (6)
செல்வி (3)
கருப்பாயி (50)
சேது (26)
நடராசன் (6)
அஞ்சலை (45)
ஆண்டாள் (20)
சீனிவாசன் (40)
காவிரி (50)
வேதவள்ளி (10)
குணசேகரன் (1)
ராணி (4) 

1968 டிசம்பர் 25 இரவு 12 மணிக்கு கீழத்தஞ்சை வெண்மணியில் விவசாயக் கூலி தொழிலாளி இராமய்யாவின் குடிசையில் நிலப்பிரபுக்களால் வைக்கப்பட்ட தீ எரித்த மனிதர்களின் பட்டியல்தான் இது. 

ஒரு பண்ணைத் தொழிலாளியின் வாழ்க்கை சகிக்கமுடியாத கொடூரங்களை கொண்டதாக இருந்த காலம் அது. ஒரு பண்ணை அடிமை அடித்துக் கொல்லப்பட்டால் கொலை செய்த ஆண்டையின் மீது சட்டம் எந்த நடவடிக்கையையும் எடுக்காது. பல நூறு ஆண்டுகள் இருந்த இந்த நடைமுறை இறுக்கத்திற்கு ஒரு தளர்ச்சி ஏற்படத்துவங்கியது 1935க்கும் 1945க்கும் இடைபட்ட காலத்தில்தான்.

குத்தகை வாரம், மரக்கால் மாற்றம் எனத்துவங்கி வேலை நேர நிர்ணயம், கூலி நிர்ணயம், கூலி உயர்வு என பல்வேறு முழக்கங்களேடு விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகளின் போராட்டம் உசுப்பிவிடப்பட்டது. செங்கொடி இயக்கம் மூலம் பொருளாதார பிரச்சனைகளை முன்னிறுத்தி துவக்கப்பட்ட போராட்டங்கள், காலப்போக்கில் தலித்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் பண்ணை அடிமை முறைக்கு எதிராகவும் கிளம்பியது. ஒரு தலித்திடம் "உன்னை அடித்தால் திருப்பி அடி" என்ற தைரியத்தை கொடுத்த தலைவன், செங்கொடி இயக்கத்தலைவன் தோழர் பி.சீனிவாசராவ்தான். (இப்போது சிலர் அடங்க மறு அத்துமீறு என குரல் கொடுப்பதின் தார்மீகம் எங்கிருந்து வந்தது என்பதை அறிய முடிகிறதா?)

இந்த முழக்கம் ஆண்டைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த போராட்டம் விவசாயத் தலித் தொழிலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்குமான வர்க்கப்போராட்டமாக மாறியது. தலித்துகளை சாட்டையால் அடிக்கக்கூடாது. சாணிப்பால் குடிக்க சொல்லக்கூடாது என்று 1964ல் மன்னார் குடியில் ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் பண்ணை முதலாளிகள் தங்களது அதிகாரமே போகிறதே என்ற ஆவேசத்தில் நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற போர்வையில் இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் மாவட்டம் முழுவதும் ஒன்று திரண்டார்கள். கூலித்தொழிலாளிகளுக்கும் தலித் தொழிலாளிகளுக்கும் எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

சிவப்புக்கொடியை இறக்கு, பச்சைக் கொடியை ஏற்று என்று விவசாயத் தொழிலாளிகளையும் குத்தகை விவசாயிகளையும் மிரட்டினர். மீறியவர்களின் மீதெல்லாம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இக்காலத்தில்தான் 1968ல் அரைப்படி நெல் அறுவடைக்கூலியை உயர்த்தித்தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. 

நெல் உற்பத்தியாளர்கள் இப்போராட்டத்தை உடைப்பதற்காக எதையும் செய்யத் தயாரானார்கள். இந்த ஆத்திரத்தின் உச்சகட்டம்தான் வெண்மணி தீ வைப்பு சம்பவம். இன்று நிலப்பிரபுக்களின் நெல் உற்பத்தியாளர் சங்கம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. பண்ணை அடிமை முறை முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சாணிப்பால், சாட்டையடி பழைய கதையாக மாறியது. கீழத்தஞ்சைக்கென ஒரு கூலிச்சட்டம் அமலுக்கு வந்தது. குத்தகைதாரர் பாதுகாப்புச்சட்டம் நிரந்தரமானது. இவைகளுக்கெல்லாம் வெண்மணியின் வீரபுதல்வர்கள் செய்த தியாகம் மகத்தானது. வீரவணக்கம் தியாகிகளே! தீயின் நாக்குகள் உங்களின் மேல் சுட்டதை விட இன்னும் அதிகமாய் எங்களுள் அனலாய் எரிந்துக்கொண்டிருக்கிறது தோழர்களே! அந்த நெருப்பை அனையவிடமாட்டோம்! வெண்மணி தியாகிகளே உங்கள் நினைவுகளை சுமந்து வர்க்கப்போரை நடத்தி முடிக்க களத்தில் நிற்கிறோம். நிற்ப்போம்.


2 comments

  1. Anonymous Says:
  2. //தீயின் நாக்குகள் உங்களின் மேல் சுட்டதை விட இன்னும் அதிகமாய் எங்களுள் அனலாய் எரிந்துக்கொண்டிருக்கிறது//உங்கள் போராட்டம் அணையா நெருப்பாய் பரவட்டும்.சமூகத்தில் அடிமைத்தனமும் அவலநிலையும் எங்கெல்லாம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் அடிமைத்தனத்தை பொசுக்கிவிட்டு,பாமர மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி சுடராய் மலரட்டும்.

     
  3. baappu Says:
  4. Super

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark