மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

First Published : 12 Dec 2011 10:47:43 AM IST


திருப்பூர், டிச.11: முதலாளித்துவத்தால் பொருளாதாரம் மட்டுமின்றி நாட்டு மக்களின் அன்பு, கருணை, கலாசாரம் என அனைத்தும் புதைகுழியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இந் நிலைக்கு எதிராகப் போராட மக்கள் ஒன்றிணைய வேண்டுமென, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு பேசினார். 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், பாரதி விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  அதில், புதை குழியில் பொருளாதாரம் என்ற தலைப்பில் எஸ்.ஜி. ரமேஷ் பாபு பேசியது: பொருளாதாரம் என்பது மிகப்பெரும் பிரச்னை. நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு, பெருமுதலாளிகள் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக வங்கிகளில் பெற்ற பல்லாயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் உள்ளதே காரணம். தங்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான பெருமுதலாளிகளுக்கு எதிராக அமெரிக்க மக்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டுள்ளனர். அடிப்படையில், உலக ஏகாதிபத்திய முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டமாகும் இது. 
இப் போராட்டம் இந்தியாவிலும் நடத்தப்பட வேண்டும். இப்போது நிலவும் தொழில் நெருக்கடிகளுக்கும், விவசாயப் பாதிப்புகளுக்கும் வளர்ச்சி பெற்றுள்ள விஞ்ஞானம் மூலம் தீர்வு காண முடியும். ஆனால், அத் தீர்வை நோக்கிப் போகாதது தான் முதலாளித்துவம். நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஊழலின் ஆணி வேரை அறுக்காதவரை ஊழலை ஒழிக்க முடியாது.  
மிகப் பெரிய வறுமையில் நாடு இருக்கும்போதும், விவசாயிகள் தற்கொலை செய்தும், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்தும், வேலைக்காக கிராமங்களை விட்டு பெண்கள் வெளியேறிக் கொண்டுள்ளபோதும் கோடி கோடியாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. கிராமங்கள் அழிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் பெருகும்போதும் நாட்டில் வேலைவாய்ப்பு உருவாவதில்லை. இதனால், வேலை கிடைக்காமல் வீதிக்குத் தள்ளப்படும் இளைஞர்கள், கிடைக்கிற கூலிக்கு அலைமோதுகின்றனர். அங்கு, உழைப்புச் சுரண்டலை திணிப்பது முதலாளித்துவத்தின் நோக்கம். இதற்கு லாப வெறியும், மூலதன ஆசையுமே காரணம். இந்நிலைமைக்கு எதிராக அமெரிக்காவில் துவங்கியுள்ள போராட்டம், உத்வேகம் அளிக்கும் போராட்டமாகும். அதை எதிர்த்துப் போராடாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி அன்பு, கருணை, கலாசாரம் என அனைத்தும் புதை குழிக்குள் தள்ளப்படும் என்றார். முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன், கவிஞர் நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 நன்றி - தினமணி, 12.12.2011 

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark