மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!







செப்டம்பர் மாதம்தான் அது நடந்தது. உலகம் அதிர்ந்து பார்த்த, யாரும் நெருங்க முடியாது என யூகிக்கப்பட்ட அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இரட்டைகோபுர தாக்குதல். அது நடந்து 10 ஆண்டுகள் வேகமாய் ஓடிவிட்டது. இதோ 2011 மீண்டும் அதே செப்டம்பரில் அமெரிக்காவின் தலைவலி துவங்கியுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகம் யாருக்காக படுகொலைகளை உகலம் முழுவதும் செய்து வருகிறதோ அந்த முதலாளிகளின் தலைமையகமான வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவேம் என்று பேர்க்குரல் எழுப்புகிறார்கள் அமெரிக்க மக்கள். 

செப்டம்பரில் சிலநூறு போராளிகள் துவங்கியப் போராட்டம் இரண்டு மாதங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களை வீதியில் இறக்கியுள்ளது. இரட்டைக் கோபுர தாக்குதலுக்கூட அதிராதா அமெரிக்க "வால் ஸ்டிரீட் நம் வாழ்க்கையைக் கைப்பற்றியதால், நாம் வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்" என மக்கள் போராடுவதை பார்த்து பதறி துடிக்கிறது. எங்களுக்கு வேலை இல்லை. குடியிருக்க வாடகை வீடு இல்லை. தண்ணீர் வரி கட்ட முடியாததால், குடிநீரும் ரேஷன்தான். நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். எங்கள் உடல் உழைப்பை, அதன் மூலம் கிடைத்த பணம், வசதிகளை எல்லாம் வர்த்தக, தொழில், நிதி நிறுவன பணமுதலைகள் ஆக்ரமித்துக்கொண்டு, எங்களை அடிமையாக்கி விட்டன. மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசு. ஆனால், பட்ஜெட்டில் வரி போடுவது, மானியத்தை ரத்து செய்வதெல்லாம் அதன் பின்னால் உள்ள இந்த பண முதலைகள் நிர்ணயிக்கின்றனர். ஓட்டு போட்டு அரசை தேர்ந்தெடுப்பது நாங்கள் ஆனால், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களை கையில் போட்டு ஆதிக்கம் செலுத்தி நாட்டை நடத்துவது இந்த பண முதலைகளா? எங்களுக்கு சமத்துவம் வேண்டும்; அமெரிக்காவில் உள்ள எல்லா வளங்களை, பணத்தை, வசதியை ஒரு சதவீத பண முதலைகள் அனுபவிக்க, 99 சதவீதம் அப்பாவி மக்கள் ஒதுக்கப்படுவதா? நாகரிக அடிமை வாழ்க்கையை அனுபவிப்பதா? விடமாட்டோம் இனி.எங்கள் வாழ்க்கையை நீங்கள் முடக்கினீர்கள் இதோ உங்களை நாங்கள் முடக்க வருகிறோம் என அணிதிரண்டுள்ளனர்.

  அமெரிக்காவில் 10 கோடி மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள். 5 கேடிப்பேருக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. 2.5 கேடிப் பேருக்கு வேலை இல்லை. இருப்பினும் பணக்காரர்களுக்கு வரிவிலக்கு தாராளமாக வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பெயர்கள்தான் வேற்றுமையுடையவை அவை இரண்டும் முதலாளிகளின் கைக்கூலி கட்சிகள்தான். அவர்களின் நிதியால்தான் இவர்கள் மாறிமாறி ஆட்சியை பிடிக்கின்றனர். ஆகவேதான் வால் ஸ்டிரீட் முற்றுகையை வர்க்கப்பேர் என்று புரிந்துக்கொண்டு ஆட்சியாளர்கள் அலறுகின்றனர். முதலாளித்துவப் பெருளாதாரத்தை வீழ்த்துவதற்கு நடக்கும் உலகு தழுவிய கம்யூனிஸ்டு சதி என்று அச்சுறுத்துகின்றனர். பாக்ஸ் நியூஸ் என்ற தெலைக்காட்சி வால் ஸ்டிரீட்டை எது தாக்குகிறதே அதுதான் உலகின் முதன்மை அபாயம் என அறிவிக்கிறது.

வர்க்க போர் என்ற சொல்லாடல் ஏன் உலக முதலாளிகளை, அல்லது ஏகாதிபத்திய சக்திகளை ஏன்அச்சுறுத்துகிறது?? அதுதான் நவம்பர் புரட்சியின் வெற்றி. 

நவம்பர் 7- உழைக்கும் வர்க்கத்தின் பெருமையை, வலிமையை இந்த பூவுலகம் உணர்ந்த நாள். அன்றுதான் ரஷ்ய தேசத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு புதிய அரசு முறை அமைந்தது. ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று மகாகவி பாரதி பாடிய புரட்சி. இந்த உலகை தங்கள் உழைப்பால் உருவாக்கிய தொழிலாளர்கள் மனித தன்மையில்லாமல் சுரண்டப்பட்டனர். பாட்டாளிகளின் உழைப்பை முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஒட்டச்சுரண்டினர். மாமேதை லெனின் தலைமையில் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஜாரின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டியது. 

இந்தப்புரட்சியைத் தொடர்ந்து சோவியத் யூனியன் என்ற அதுவரை உலகம் கண்டிராத புதிய அரசுமுறை அமைந்தது. உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது.அதுவரை இருந்த வாழ்க்கை முறை முற்றிலும் மாறியது. மக்கள் ஆட்சியாளர்களை சந்திக்கும் முறை மாறி அரசு மக்களை சந்தித்தது. மக்கள் வாழ்க்கை முன்னுக்கு நிறுத்தப்பட்டு அவர்களுக்கான வாழ்க்கை உத்திரவாதம் செய்யப்பட்டது. அதனால்தான் முதலாளித்துவ நாடுகளில் கூட தவிர்க்க இயலாமல் சில சலுகைகளை தொழிலாளர்களுக்கு முதலாளிகள் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சேமநல அரசு என்ற சொல்லாடல் இதன் பின்தான் வந்தது.

சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்பு முறைக்கு பின்னடைவு ஏற்பட்டபோது, இனி சோசலிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்றனர். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவிலேயே தொழிலாளர்கள் போராடுகிறார்கள். இதன் கதிர்வீச்சு ஐரோப்பிய கண்டத்தையும் கடந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஏற்கனவே பிரிட்டன், பிரான்சு,  கிரீஸ், ஸ்பெயின், பேர்த்துகல், இத்தாலி என்று கடந்த 3 ஆண்டுகளாக தாவிப்பரவும் போராட்டம் இஸ்லாமிய நாடுகளிலும் பற்றியுள்ளது. 

பின்லேடனுடன் ஆயுதம் சுமந்த எகிப்து இளைஞர்கள் ஆயுதங்களை தூர எரிந்து உழைப்பதற்கு வேலை கொடு! பசித்தவனுக்கு உணவு கொடு என போராட்டகளத்தில் குதித்தனர். இருப்பவருக்கும் இல்லாதவருக்குமான போராட்டம் உலக அரங்கில் உக்கிரமாக நடந்து வருகிறது. இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்பட்டபிறகு தொழிலாளர்களைச் சுரண்டுவது அதிகரித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் நம்நாட்டுச் செல்வங்களை கொள்ளையடிப்பதோடு தொழிலாளர்களின் உரிமைகளையும் ஒடுக்க முயல்கின்றன.

இப்போது நம்முன் ஒரே கேள்விதான் முன் நிற்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை இந்திய அரசாங்கம் கடைபிடிக்கிறது. மக்களை கொள்ளையடிக்கிறது. அமெரிக்க மக்கள் சுரண்டலுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கின்றனர். போராடுகின்றனர். இந்திய அரசு அமெரிக்க அரசை பார்க்கிற போது, இந்திய மக்கள் அமெரிக்க மக்களை பார்க்க வேண்டாமா? அவர்கள் போராடுகின்றனர். நாம் என்ன செய்யப்போகிறோம்? 

1 Responses to நவம்பர் புரட்சியும் வால் ஸ்டிரீட் போராட்டமும்

  1. // இந்திய மக்கள் அமெரிக்க மக்களை பார்க்க வேண்டாமா? அவர்கள் போராடுகின்றனர். நாம் என்ன செய்யப்போகிறோம்? //
    நல்ல பகிர்வுக்கு நன்றி!
    போராட்டத்தில் ஈடுபட மக்கள் தயாராகிவிட்டனர் என்பதை திசைதோறும் நடைபெறும் விதவிதமான போராட்டங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தேவை, நல்ல வழிகாட்டி, தலைவன்!

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark