மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

கல்வியாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தியுடன் நேர்காணல் ஜே. கிருஷ்ணமூர்த்தி இந்திய அளவிலான கல்வி ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர். 1953-ல் புதுவையில் பிறந்தவர். புதுவை பெத்தித் செமினார் பள்ளியில் 10ம் வகுப்புவரையும், தாகூர் கல்லூரியில் புதுமுக வகுப்பு மற்றும் பட்டப்படிப்பும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பும் முடித்தவர். 1976ல் பெத்துசெட்டிபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் இணைந்தார். 2003 வரை பட்டதாரி ஆசிரியர் பணி. 2003 நவம்பரில் பூரணாங்குப்பம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு. 2006-ல் துவங்கி இன்றுவரை ஆலங்குப்பம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்.

புதுச்சேரி நகரத்தினுள் வேலைசெய்ய அழைப்பு வந்தும், அதை நிராகரித்து ஆரோவில் பகுதியில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தின் பள்ளியோடு தன்னைக்  கரைத்துக் கொண்டு அங்குள்ள மாணவர்களின், வெற்றியில் தனது வாழ்வின் அர்த்தத்தை தேடிக் கொண்டிருப்பவர். அந்தப் பள்ளியில் உள்ள எந்த ஒரு மாணவரும் இவரை எந்த நேரத்திலும் அணுகி தன்னுடைய குடும்பப் பிரச்சனையை விவாதிக்க முடியும் என்கிற அளவுக்கான ஜனநாயகத்தை தனது பள்ளி வளாகத்தில் உருவாக்கி வைத்துள்ளவர்.

அந்தப் பள்ளியின் இரவு நேரக் காப்பாளர் ‘மலையாளத்தாரை’ நமக்கு அறிமுகம் செய்யும் போது மிகப்பெருமையுடன் ‘‘இவர் எங்க பள்ளியில் மிக முக்கிய அங்கம், பள்ளியின் குடும்ப உறுப்பினர், இங்கு இரவு நேர காப்பாளராக செயல்படுகிறார்’’ என அவருக்குச் சமமான நாற்காலியில் அமரவைத்து அறிமுகம் செய்யும் ஜே.கே வை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்.

சகமனிதனுடனான அவரது அன்புமிக்க அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பும் போதுதான் அவரது ஆசிரியர் பணியின் மற்றொரு பரிமாணம் தெரியும். ‘1978 முதல் 1985 வரையிலான ஆசிரியர் சங்கப் பணிதான் என்னை ஆசிரியர்கள் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றங்களை உருவாக்க முடியும் என அறியவைத்த ஆண்டுகள்’’ என்கிறார்.

1986ல் போபால் கொடூரம் நடந்த சில மாதங்கள் கழித்து ‘‘யூனியன் கார்பைடு பொருட்களைப் புறக்கணிப்பீர்கள்’’ என்ற துண்டுப்பிரசுரம் புதுச்சேரியின் அனைத்து மக்களிடமும் சென்றடைந்தது. கீழே புதுச்சேரி அறிவியல் இயக்கம் என்ற வாசகத்துடன். அப்போதுதான் புதுவை அறிவியல் இயக்கத்தை ஜே. கிருஷ்ணமூர்த்தி, டாக்டர். தி. சுந்தர்ராமன். மருத்துவ மாணவர் ஜார்ஜ், பொறியாளர் மதன கோபால், டாக்டர் ராமானுஜம், டாக்டர் ராமதாஸ், தனபால் ஆகியோருடன் மேலும் சிலர் இணைந்து துவக்கினர். 1986 முதல் ‘‘அறிவியல் மக்களுக்கே’’ என்ற முத்திரை வாசகத்துடன் இயங்கும் புதுவை அறிவியல் இயக்கத்தின் ஊழியனாகத் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றுகிறார். 1994 முதல் 1996 வரை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். துளிர் பத்திரிகையை உருவாக்கிய முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். துளிர் என்ற அறிவியல் பத்திரிகை முதல் இதழ் வெளியானது புதுச்சேரியிலிருந்துதான்.

அறிவியல் இயக்கம் மட்டுமல்ல 1989ல் புதுவை அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு 1996 வரை அதில் பெருமிதப்படத்தக்க பங்களிப்பை செலுத்தியவர். அறிவொளி இயக்கத்தின் மாநிலத் திட்ட  ஒருங்கிணைப்பாளராக, தேசிய எழுத்தறிவு ஆணையத்தின் ஆலோசகராக, BGVSன் தமிழகத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளராக என இவரது உழைப்பு அபாரமானது. இவரது அறிவொளி இயக்க அனுபவம் தனியே பதியப்பட வேண்டிய அவசியம் நிறைந்தவை. அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து...

கல்வியாண்டுத் துவக்கத்தில், சமச்சீர் கல்வி 
அறிமுகமாகும் என எல்லோரும் எதிர்பார்த்த வேளையில் இப்படி ஒரு சிக்கல், ஏற்பட்டது குறித்து?
சமச்சீர் கல்வி என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான்குவிதமான பாடத்திட்டங்களை ஒரே முறையில் மாற்றியதும் வரலாற்று சாதனைதான். இந்த சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அது சமச்சீர் கல்வி அமலாக்கத்தை நிறுத்திவிட்டுச் செய்யவேண்டும் என்ற அவசியத்துடன் தொடர்புடையது அல்ல. திட்டத்தை அமலாக்கிக் கொண்டே குறைகளைக் களையலாம். அதுதான் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறை உள்ள செயலாக இருக்கும். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

நான்கு பாடத்திட்டங்களை ஒரே பாடத்திட்டமாக்கியது வரலாற்று சாதனை என்கிறீர்களே.. அப்படியென்றால்?
நிச்சயமாக. இதில் சந்தேகம் இல்லை. தமிழக பாடத்திட்டம், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் என்ற நான்கு முறைகள் மாற்றப்பட்டுள்ளது அனைத்து மாணவர்களுக்கும் நல்லது. இந்த நான்கு பிரிவுகளின் தேவை என்ன? தனியார் கல்வி நிறுவனங்கள் செழித்து வளரவும், பாடநூல் அச்சிடும் பல்வேறு வணிக புத்தக நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கவும்தான் பயன்பட்டது. மக்களிடம் உருவாக்கப்பட்ட ஆங்கில மோகத்திற்கு தீனிபோட இந்த மெட்ரிக் பள்ளிகள் உதவின. இதற்கு தரம் என்ற பெயரில் விளம்பரம் வேறு செய்யப்படுகிறது.

அப்படியானால் தரம் என்ற வாதம் எதைச் சார்ந்துள்ளது., தனியார் பள்ளியினர் சமச்சீர் கல்வி வந்தால் தரம் பாதிக்கப்படும் என்கிறார்களே?
தரம் என்ற அளவுகோளை யார் தீர்மானிப்பது. ஒரு உதாரணம் சொல்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு சர்வே எடுப்பதற்காக ஒரு தேர்வு நடத்தப்பட்டது. அதாவது அவர்கள் நடத்தும் பாடத்திலிருந்து கேள்விகள் தயாரிக்கப்பட்டு இந்தத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு முடிவில் 60-70 சதவிகிதம் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மிகவும் மோசமாகத் தேர்வை எழுதியிருந்தனர். ஆனால் அதே அளவு அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தேர்வை எழுதியிருந்தனர். இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வருவீர்கள்? இன்று நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களில் 90 சதம் பேர் அரசுப் பள்ளிகளிலும், தாய்மொழியிலும் படித்தவர்கள் தான். ஆக தரம் என்பது எவ்வளவு அதிகமான அழுத்தமான பாடங்களை நடத்துவது என்பதில் இல்லை. எவ்வளவு தெளிவாக மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான். தரம் என்ற சொல்லைப் பயன்படுத்தி தங்கள் லாபவேட்டையைத் தொடரவே தனியார் கல்வி நிலையங்கள் திட்டமிடுகின்றன.

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் குறித்து..?
இயல்பாகவே மாணவர்களை ஈர்க்கும் தன்மையுடன் வண்ணமயமாக அச்சிடப்பட்டு நிறைய படங்களுடன் புத்தகம் வெளிவந்துள்ளது இன்னும் சிறப்பாக உள்ளது. செயல்முறையில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏராளமாக உள்ளது. இது போன்ற ஏற்பாடுகள் தான் மாணவர்களை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும். இதில் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கியச் செய்தி, ஒரு நல்லமாற்றம் என்னவெனில் வகுப்பறைக்குள் அதிக நடவடிக்கைகளும் வீட்டுப்பாடச் சுமை குறைந்தும் இருப்பதுதான்.
இந்த வகையிலான புத்தகங்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைச் சேர்ந்து இயக்கும் தன்மை கொண்டது. ஆசிரியர்-மாணவர்களின் உறவுப் பாலமாக புத்தகங்கள் அமைந்துள்ளன. முன்பு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டே இருப்பார். மாணவர்கள் வெறும் பார்வையாளர்களாக இருப்பர். இப்போது பார்வையாளர்களான மாணவர்களை பங்கேற்பாளர்களாக மாற்றிட புதிய சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் ஒரு முயற்சியைத் துவக்கி உள்ளன. மாணவர்கள் படிப்பு எனும் தளத்தில் தாங்களாக பங்கேற்க சில வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணிதத்தில் செயல்முறை வடிவியலும், புள்ளி விபர சேகரிப்பு சம்பந்தப்பட்ட வரைபடங்களும் மிகவும் எளிமையாக இருக்கின்றன. பாடங்களின் எண்ணிக்கைகளைக் குறைத்து தரத்தை உயர்த்தியுள்ளார்கள்.

பொதுவாக தமிழகத்திலும், புதுவையிலும் கல்வி நிலை எப்படி உள்ளதாகக் கருதுகிறீர்கள்?
NCERT, ASER ரிப்போர்ட் கணக்குப்படி தமிழகம் தரமான கல்வி வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் புதுச்சேரி கடைசியிலிருந்து இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. எழுத்துக்களைக் கூட இன்னும் அடையாளம் காட்டத் தெரியாத 30 சதமான மாணவர்கள் புதுச்சேரியில் உள்ளனர். தேசிய அளவில் 23 சதம் என்பதையும் விஞ்சியது இது. அனைத்துப் பள்ளிகளிலும் எடுத்த சர்வே இது. ஒரு வேளை அரசுப் பள்ளிகள் மட்டும் எனில் இன்னும் கூட குறையும் என நினைக்கிறேன். 35 வருட ஆசிரியர் பணியின் காரணமாய் ஆசிரியர் சமூகத்தில் உள்ள எனக்கு இது மனக்குனிவை ஏற்படுத்துகிறது.

வளர்ச்சிக் குறியீட்டில் (EDI) புதுச்சேரிதானே முதலிடம் வகிக்கிறது?
ஆமாம் EDI யில் புதுச்சேரி மாநிலம்தான் முதலிடம். அதாவது ஒரு கிலோமீட்டருக்கு ஒரு துவக்கப்பள்ளி, மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி போன்றவையும், கழிப்பிடம், குடிநீர், ஆய்வகம், நூலகம் போன்ற அடிப்படை வசதிகளில் தன்னிறைவும் தகுதியான பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், 1:25 என்ற ஆசிரியர், மாணவர் விகிதமும் இருக்கிறது. இது பாராட்டத்தக்கதுதான். இருப்பினும் மாணவர்களின் அடைவுத் திறனை அதிகரிக்கவில்லை என்ற உண்மையும் பின் தொடர்வது வேதனையானது. இந்த இரண்டும் கடுமையான முரண்பாட்டை முன்வைக்கின்றன.

இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது?
இரண்டு விஷயங்களில் நாம் கருத்தை செலுத்தலாம். ஒன்று ஆசிரியர்கள் தங்கள் பயிற்சி காலத்தில் பெறுகின்ற பயிற்சி மட்டுமல்லாமல் ஆசிரியரான பிறகும் அவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. ஆனால் வகுப்பறையில் இந்த பயிற்சி பயன்படவில்லை என்பதுதான் பிரச்சனை. இது ஏன் என்பதுதான் ஆசிரியர் சமூகப் பிரதிநிதியாக எனக்குள் நான் எழுப்புகின்ற கேள்வி. எனவே கல்வியாளர்கள், அரசு, சமூக அக்கறை உள்ள சங்கங்கள் இந்த ஆசிரியர்களின் குறைந்தபட்சத் திறனை வளர்க்கும் ஆசிரியர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. பிரச்சனை என்னவெனில் கடுமையாக உழைப்பவர்கள் மட்டும் போதாது. மாணவர்களின் பிரச்சனைகளை முகம் கொண்டு பார்ப்பவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்பதுதான். ஒரே கிராமத்தில் ஒரே விதமான கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளில் ஒருவன் தனியார் பள்ளியிலும், ஒருவன் அரசுப் பள்ளியிலும் படிக்கின்ற போது அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவனின் அடைவுத் திறன் குறைவாக இருந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பது முக்கியமான கேள்வி இல்லையா?
இரண்டாவதாக நமது வகுப்பறைகளை இன்னும் ஜனநாயகப்படுத்த வேண்டும். அதாவது மாணவர்களின் பங்கேற்பை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியர் மாணவர் இணைந்த பங்களிப்பை உருவாக்க வேண்டும். அதாவது சமன் செய்யப்பட்ட இயக்கம் வகுப்பறைக்குள் வேண்டும். பாடம் நடத்துவது ஆசிரியர் வேலையாகவும், கற்பது மாணவர்கள் கடமையாகவும் பிரிந்து நிற்கிறது. கற்பதும், கற்பிப்பதும் இருசாராருக்கும் பொதுவானதாய் மாற வேண்டும். இது பொதுவாக இல்லாததால் ஒருபக்க இயக்கம் மட்டுமே உள்ளது.

அப்படியானால் இந்த இருபக்க இயக்கம்  தனியார் பள்ளிகளில் இருக்கிறதா?
இல்லை. அப்படி எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நாம் அரசுப் பள்ளிகளின் பிரச்சனைகளைத் திறந்த மனதுடன் விவாதிக்கின்றோம். எனவேதான் தனியார் பள்ளிகள் திறமை என்ற வாதத்தால் இதனை திசைதிருப்பி மக்களை அழைக்கிறது. தனியார் பள்ளிகளில் இருப்பதும் ஒருபக்க இயக்கம்தான். அது மதிப்பெண் சார்ந்த ஒரு பக்க இயக்கமாகும். அதாவது அங்கு தரமான கல்வி என்பது தேர்ச்சி சார்ந்த இயக்கமாக கட்டணமாக்கப்படுகிறது. அவர்களுக்கு அதுதான் முக்கியம். அங்கு இன்றைய நாட்டின் தேவை சார்ந்த சந்ததியை உருவாக்குவதில் அக்கறை இல்லை. சந்தைக்குத் தேவையான சந்ததியை உருவாக்குவது. அவர்களின் நோக்கமாக உள்ளது. அதுவும் 1990 க்குப்பின் பன்னாட்டுச் சந்தையின் தேவையைக் கொண்டே சந்ததியை உருவாக்குகிறார்கள்.
ஆக கடுமையாக உழைக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் முகம் கொண்டு அவர்களைப் புரிந்து கொள்பவர்களாக இருப்பதுடன், வகுப்பறைகள் ஜனநாயகத் தன்மையுடன் இருபக்க இயக்கம் உள்ளதாகவும் இருக்கும் இரு விஷயங்களும் முக்கியமானவை.

சந்தை சார்ந்த மாணவ சந்ததி உற்பத்தி குறித்து இன்னும் பேசலாமே?
நிச்சயமாக. அடிப்படை ஆராய்ச்சிகள் கேள்விக் குறியாக மாறி இருக்கின்றன. இயற்கை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதும், அதை வளர்த்தெடுப்பதும் விவாதத்திற்கு வரவில்லை. 80 சதவிகித மக்கள் வறுமையில் உழல்கின்றனர். தொலைந்துபோன தங்கள் வாழ்க்கையை உழைப்பால் அவர்கள் தேடித்திரிகின்றனர். இப்படியான ஒரு சூழலில் மக்கள் குறித்தும், சமயச்சார்பு, இறையாண்மை போன்ற நடவடிக்கைகளில் மாணவ சமூகம் இயல்பாக கவனம் செலுத்தும் சந்ததியாக வெளிவராதது ஏன்? வகுப்பறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது எனில் அந்த இடத்தில் மேற்கண்ட விவாதங்கள் நடக்கிறதா? வகுப்பறை ஜனநாயகம் என்பது ஆசிரியரும் மாணவரும் சமமாக இணைந்து கற்றலில் பங்கேற்பது. ஆனால் நடப்பது என்ன? அதிகாரம் ஙீ அடங்குதல் என்ற ஒரு பக்க இயக்கம்தானே. இது சமூகத்தில் ஒரு அங்கமாக வரும் மாணவனை அதிகாரம் செலுத்தும்; அல்லது அடங்கிப்போகும் ஒருவனைத்தானே உருவாக்கும்.
ஆக சமூகத்திற்கான மாணவர்களை சந்தைக்கான மாணவர்களாக மாற்றுவது சரியான வளர்ச்சியா? அதுவும் குறிப்பாக மதிப்பெண்களே அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றால் அவர்களின் சமூக அக்கறை எப்படி இருக்கும்.

பாடத்திட்டம் இதற்கு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறதுதானே?
நிச்சயமாக. சிறந்த எதிர்கால சமுதாயத்திற்கான பாடத்திட்டம் என்பதிலிருந்து அன்றைய ஆட்சியாளர் களின் தேவையை உள்ளடக்கிய பாடத்திட்டங்களாக மாற்றப்படுவது வேதனைக்குரியது. கல்வியாளர்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள். இருப்பினும் பாடத்திட்டம் அதிகபட்சம் நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட பிரதான அம்சங்களை இன்னும் இழந்துவிடவில்லை.
பாடத்திட்டம் எப்படி இருப்பினும் அதை அடிப்படையாக வைத்து வகுப்பறையை எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியம். ஆசிரியர்கள் நினைத்தால் இந்தப் பாடத்திட்டத்தை வைத்தும் மாற்றத்தை உருவாக்க முடியும்.
நமது நாட்டின் இருபெரும் தலைவர்களான ஜோதிபாசுவும் இந்திராகாந்தியும் வெளிநாட்டில் ஒரே பல்கலைக்கழகத்தில்தான் படித்தார்கள். அங்கு வரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில டியூஷன் நடத்தினார்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு இரு துருவங்களாகப் பிரிந்து நின்றது. இதில்  அவர்களின் வகுப்பறைக்குப் பங்கு இல்லை என சொல்ல முடியுமா?

பாடத்திட்டத்தை தீர்மானிக்கும் கல்விக் கொள்கை குறித்த உங்கள் விமர்சனம் என்ன?
நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 1970களில் சோவியத் யூனியனில் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அதாவது அப்போதெல்லாம் அங்கு ஐந்து வயது நிறைவடைந்தால்தான் பள்ளியில் சேர்க்க முடியும். ஆனால் அதே சமயம் அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்று வயது நிறைவடைந்தால் மழலையர் பள்ளிகளில் சேர்க்கலாம். இரண்டு வருடம் முன்பே குழந்தைகள் கல்வி நிலையத்திற்கு வரும் முறையை நாமும் ஏன் செய்யக்கூடாது என்று எண்ணிய சோவியத் அரசு, அதற்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் அடங்கிய குழுக்களை உருவாக்கியது. ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் மாதிரிப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ்வப்போது பெற்றோர்களுடன் கலந்துரையாடல், குழந்தைகளின் விருப்பங்களைக் கேட்டறிதல் என நடந்தது.
இறுதியாக பெற்றோர்களின் உதவியுடன் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. 1. வகுப்பறை செயல்பாடுகள் குறைந்த அளவு இருக்க வேண்டும். 
2. விளையாட்டுக்கான நேரம் கூடுதலாக்கப்பட வேண்டும். 3. ஓய்வுக்கான சூழல் இருக்க வேண்டும். 4. எழுத்துப் பயிற்சி மிகக் குறைந்த அளவே வேண்டும் என ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சுற்றுக்கு விடப்பட்டது. பெற்றோர்களிடம் விவாதம் நடத்தப்பட்டது. இரண்டுவருடம் முன்பே கல்விக்கூட ஒழுங்குமுறைக்கு குழந்தைகள் பழகுவது மகிழ்ச்சி என்றாலும் ‘‘எங்கள் குழந்தையின் விளையாட்டுப் பருவம் இரண்டு வருடம் திருடப்பட்டு விடுமோ என அஞ்சுகிறோம்ÕÕ என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்துச் சொன்னார்கள். இந்த எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படாத வண்ணம் அமலாக்க வேண்டும் என்றனர். அதற்கு பின்னரே சோவியத் அரசு இந்த முறையை ஏற்றுக் கொண்டது.
எனவே பெற்றோர் மாணவர் பங்கேற்புடன் கல்வித் திட்டம் அமலாவதுதான் ஒரு சிறந்த சமூக அமைப்பின் அடிநாதமாய் இருக்க முடியும். இங்கு அப்படி இருக்கிறதா? ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இவர்களுக்குத் துணையாக பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து கல்விக்கொள்கையைத் தீர்மானிக்கும் சமூகமே கல்வியில் சிறந்த சமூகமாக இருக்க முடியும். கல்வித் திட்டம் மாறும்போது ஒரு வருடம் பரிசோதனையின் அடிப்படையில்தான் அது தீர்மானிக்கப்பட வேண்டும்.
அதே போல் சமூக, அறிவியல், புவியியல் உள்ளிட்ட மாற்றங்கள் அன்றைய  நவீன மாற்றங் களுடன் போதிக்கப்படும் வகையில் கல்விக் கொள்கை இருப்பது அவசியமானது. மேற்கண்ட அடிப்படையில் அதாவது பெற்றோர், மாணவர், ஆசிரியர், கல்வியாளர்கள், அரசு ஆகியோர் இணைந்து கல்விக் கொள்கைகளை உருவாக்க இன்னும் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டி இருக்கிறது.
இதற்கு மாற்றாக எதை முன்வைக்க விரும்புகிறீர்கள்?
பாவ்லோ பிரையர் கருத்துக்களைத்தான் நானும் முன்மொழிய வேண்டியுள்ளது. அவர் சொன்னார் ‘‘கல்வி என்பது நடுநிலையாக இருக்க முடியாது. அது வர்க்கம் சார்ந்துதான் இருக்க முடியும். இருக்கும். கல்விப் பரிமாற்றத்தில் நீங்கள் எந்தப்பக்கம்?
எல்லாவற்றையும் இழந்து தொலைந்துபோன வாழ்க்கையைத் தங்கள் உழைப்பால் தேடித்திரியும் மக்கள் பக்கமா அல்லது பலர் வாழ்க்கையைத் தொலைக்க காரணமான சுரண்டுபவர்கள் பக்கமா?” எனவே கல்வி என்பது வர்க்கம் சார்ந்துதான் இருக்க முடியும் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன். கல்வியே அப்படி எனில் பாடத்திட்டமும் அப்படித்தான் இருக்கும். உங்களுக்கு ஏற்றுக்கொள்ளச் சிரமமாக இருந்தாலும் உண்மை இதுதான்.
ஆள்பவர்களின் நலன் சார்ந்தே கல்வி காலகாலமாக இருந்துள்ளது. உயர்கல்விக்குப் போகப்போக இந்த உண்மை உங்களுக்கு தெளிவாகப் புரியும். அங்கு யாரை நிர்வகிக்க அல்லது எதை கற்பிக்க அல்லது எந்த சந்தைக்காக மாணவர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனர். கல்வி தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் ஒரு கருவியாக இருக்க வேண்டும். இந்த வெளிச்சத்தில் பார்த்தால் இன்றைய நிலை புரியும்.
ஏழைகள் அதாவது உழைப்பாளி மக்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டுமானால் அதற்கு தேவையான கல்விச்சூழலும், கல்வி முறையும், நாளைய சமூகத்தை உருவாக்கும் ஜனநாயகப்படுத்தப் பட்ட வகுப்பறைகளும் தேவை. இதுவே சிறந்த அரசியலாக இருக்க முடியும்.

------- ஜூலை 2011 புதிய புத்தகம் பேசுது இதழுக்காக நான் எடுத்த பேட்டி

3 comments

 1. 1989 இல் திரு ஜே கே, பிரளயன், முகில், வெங்கடேஷ் ஆத்ரேயா என்ற பெரிய வீதி நாடகக்கலைஞர் பட்டாளம் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் B G V S கலைப்பயணத்தை நடத்தியதும் அதன் வேர்கள் என்னை விழுதாகப்பிடித்துக்கொண்டது. அப்புறம் 1990 ஜூலையில் புதுவை அறிவொளியில் சென்று என்னை ஒரு வீதி நாடகக்கலைஞனாக மாற்றிக்கொண்டேன். விருது நகர் வந்து பேரா. ச. மாடசாடி, தனிஸ்லாஸ், குழந்தைவேல் பாண்டியன் ஆகியோர் வழிகாட்டுதலில் நானே ஒரு குழுவை அமைத்து 1990இல் அக் 2 துவங்கி நவ 14 வரை ஒரு 44 நாடகள் காமராஜர் மாவட்டம் முழுதும் சுமார் 165 இடங்களில் வீதி நாடகங்களின் மூலம் அறிவொளி பரவ வேலை செய்தோம். மன நிறைவான பாண்டி அறிவொளி இயக்கத்தின் முன்னோடியின் பேட்டி பாராட்டுதலுக்குரியது.

   
 2. திலீப் நாராயணன், வணக்கம். வாழ்த்துக்கள். பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களை போன்ற தோழர்கள் உங்களின் அனுபவங்களை எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 165 இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்திய அதற்காக உழைத்த, உங்களுடன் பழகிய தோழர்களின் அனுபவங்களை எழுதுங்கள்.

   
 3. vimalavidya Says:
 4. சமச்சீர் - கல்வி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு-It is a historic event..A long struggle was conducted..The role of Educationist Mr.Pu.Pa.Prince Gajendra Babu's
  is a impressive one.His case at last won and we got சமச்சீர் - கல்வி.we should not forget/fail to mention him whenever we talk about சமச்சீர் - கல்வி ..

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark