மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

நான் ரசித்த கவிதைகள் -3

Posted by நட்புடன் ரமேஷ் Sunday, April 17, 2011 , ,



தோழர் எட்வின் பள்ளி ஆசிரியர். நல்ல நண்பர். நான் இளைஞர் முழக்கம் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த நேரத்தில் அவரிடம் இதழுக்காக கவிதைகள் கேட்பதுண்டு. அவரும் பல நல்ல கவிதைகளை எழுதி தந்துள்ளார். கிழே உள்ள கவிதை பகத்சிங் நினைவு தினத்திற்காக அவரிடம் எழுதிக்கேட்டது. பொதுவாக பகத்சிங் குறித்து நிறைய கவிதைகள் வந்துள்ளது. எனவே பொதுவாக வேண்டாம் என தொலைபேசியில் அவரிடம் கேட்டுக்கொண்டேன். எப்படி வேண்டும் என நிங்களே சொல்லுங்கள் என்றார். அப்போது அவரிடம் சொன்னேன் " பக்கத்தின் கடைசி நொடிகளை நினைத்துக்கொள்ளுங்கள். அவன் சிறை கொட்டடிக்கும் துக்கு கயிறு தொங்கும் இடத்திற்கும் இடையில் உள்ள சில அடி தூரங்களில் என்ன நினைத்திருப்பான் என்பதை கவிதையாக தாருங்கள்" என்றேன். அந்த நொடிகளை அவர் கவிதையாக்கியது வெயிலாய் கசிவேன் நான். படியுங்கள்  உங்களையும் இக்கவிதை வசீகரம் செய்யும். அதே போல இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டாவது கவிதையான ராவண அவஸ்த்தையும் மிகவும் முக்கிய பகடி. படிக்கவும்.    


வெயிலாய் கசிவேன் நான்

கண்கள் கலங்க 
கைகள் நடுங்க ... 
என்ன இது? 

என் இறுதி நொடிகளின் 
சாட்சி நீ 
என் இறுதிப்   பயணத்தின் 
சக பயணி நீ 

கலங்காதே 
காயம் பட்டு விடும் 
என் மரணத்தின் கம்பீரம் 
எங்கே 
ஒரு புன்னகையோடு 
கதவு திற காவல் நண்பனே 

மரணம் வாங்க 
ஒரு மகத்தான பேரணி 
என்ன பேரணி...
முழக்கமேயில்லாமல் ? 
எங்கே 
என்னோடு சேர்ந்து 
நீயும் முழங்கு 

"இன்குலாப் இன்குலாப் 
இன்குலாப் ஜிந்தாபாத் "

நாளை போய் உலகு சொல் 
காற்று வாங்க 
கடற்கரை போகும் 
குதூகலத்தோடும் ...
விருது வாங்கப் போகும் 
வீரனின் மிடுக்கோடும் 
மரணம் வாங்க 
நடந்தான் பகத் என்று 
உலகை  நோக்கி 
உரக்க சொல் நண்பா!

எந்தத் தேவதையும் 
என் இறுதி வழியில் 
பூ மாறிப் பொழியவில்லை 

ஒளி வட்டம் முளைக்க
வானம் கிழித்து வந்த 
வாகனமேறி 
நான் 
வைகுந்தம் போகவில்லை 

போகிற பாதை எங்கும் 
தன் சொந்தப் புன்னகையை 
தூவிப் போனான் 
இவனென்று சொல் நண்பா 

மக்கள் போராளிகளின் 
உதிரத்திலும் 
வியர்வையிலும் 
கசிவேன் நான் 

நீ கதவில் கை வைத்த 
நொடி வரைக்கும் 
லெனின் படித்தேன் 

உனக்கு 
லெனின் தெரியுமா? 

நண்பா 
எனக்கே 
தாமதமாய்த் தெரியும் 

கிடைக்க வேண்டிய 
எங்களுக்கு 
லெனின் மட்டும் 
கிடைத்திருந்தால் 
நாங்கள் இதயத்தில் 
லெனினை ஏந்தியிருப்போம் 

அடடா... 
போராட்டப் பாதையே 
திசை மாறிப் போயிருக்கும் 

தேச விடுதலையோடு 
ஜனங்களின் விடுதலையும் 
சேர்த்தே வந்திருக்கும் 

இந்தா
இந்த முத்தத்தை 
சிந்தாமல் சிதறாமல் 
சேர்த்துவிட்டு 
துர்கா மகளிடம் 

இறுதி வரை 
மாமன் உன்னை 
நினைத்திருந்தான் 
என்று சொல் 

கருணை மனு தந்த 
சங்கடம் 
என் தூக்குமேடை வரைக்கும்
கூடவே தொடர்ந்ததாய்
என் தந்தையிடம் சொல் 

என்ன இது 
துக்கம் காட்டும் 
கருப்புத் துணி 
தூர எறி

பூமி பார்த்துப் பிறந்தால் 
பூமி வாங்குவானாம் 
பூமி பார்த்து சாகிறேன் 
என் மக்கள் 
பூமி மீட்கட்டும் 

அதிகாரிகளே 
கொடுத்து வைத்தவர்கள்:
நீங்கள் 
சிரித்துக் கொண்டே 
சாகும் மனிதனை 
உங்களைத் தவிர 
யார் பார்க்க முடியும்

"எல்லாம் முடிந்தது "
என்று சொல்ல 
நான் ஒன்றும் ஏசுவல்ல 
தொடங்கச் சாகிறேன் 
தொடர்வார்கள் என் தோழர்கள் 

விடுதலை பூமியில் 
உச்சி சூரியனின் 
வெயிலாய் கசிவேன் நான் 

"இன்குலாப் இன்குலாப் 
இன்குலாப் ஜிந்தாபாத் " 


ராவண அவஸ்தை


வியப்பு
ஆனந்தம்
சிலிர்ப்பு 
அச்சம் என 
எல்லாம் தரும் என் தலைகள் 

ராமனின் 
வீரமும் வெற்றியும் 
பத்து மடங்கு நீண்டன 
என் தலைகளின் எண்ணிக்கையால் 

லேபிளில் என் படம் 
பத்து மடங்கு 
விற்பனை கூட்டியது தைலமொன்று 

இப்படியாய்
ஆச்சரியப் படும்
அச்சப்படும் 
ஆதாயம் கொள்ளும் 
யாருக்கும் புரிவதில்லை 

பல் விளக்க 
தலை சீவ 
சவரம் செய்துகொள்ள 
ஒழுகும் 
ஒரு ஓரத்து மூக்கை சிந்த 
நான் படும் அவஸ்தை  

1 Responses to நான் ரசித்த கவிதைகள் -3

  1. Unknown Says:
  2. super ...

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark