மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


மகாராஷ்டிரா மாநிலம் மன்மத்தில் மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சேனாவானை, ‌எரிபொருள் கடத்தல் கும்பல் உயிருடன் எரித்துக்‌ கொன்ற சம்பவம், மகாராஷ்டிராவை மட்டுமல்லாது, நாட்டையே கவலைக்குள்ளாக்கியுள்ள சம்பவமாகும்.. இந்த பகுதியில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை பதுக்குவது, கடத்துவது, கலப்படம் செய்வது போன்ற சட்ட விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் பலர் அரசியல் செல்வாக்கு படைத்தவர்களின் பினாமிகள். இவர்களுக்கு எதிராக யஷ்வந்த் கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். இந்நிலையில், சோனேவான், நந்தோகானில் நடக்கவிருந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ள இடத்திருக்கு அருகில் சில லாரிகள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தை அவர் கண்டார். இதையடுத்து, அவர் காரை விட்டு இறங்கி, அருகில் நின்று கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது போபட் ஷிண்டே என்பவன் அங்கு வந்தான். இவன், பெட்ரோல், டீசல் கடத்தல் தொழில் செய்து வருபவன். இவனுடன் வன்முறை கும்பல் ஒன்றும் அங்கு வந்தது. விசாரணை நடத்திக் கொண்டிருந்த யஷ்வந்தை தாக்கிய அந்த கும்பல், திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி, தீ வைத்தது. இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. அதிகாரி ஒருவர் வன்முறை கும்பலால், பொது இடத்தில் உயிருடன் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம், மகாராஷ்டிரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சோனாவான் ‌கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மாநில அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர், தங்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கொலையாளிகளை உடனே கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்,  குற்றங்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை குற்றவாளிகள் கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது. இந்த அசா‌தாரண சூழ்நிலையை மாநில அரசு தடுத்து நிறுத்த ‌வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துஎன்பதை வலியுறுத்தி அவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதன்பின் அரசு விழித்துக்கொண்டதால் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 எண்‌ணெய் கடத்தலில் ஈடுபட்டிருந்ததை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரி, அதுவும்  உதவி கலெக்டர் படுகொலை, தனக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக, கூறிய மத்திய பெட்ர‌ோலியத்துறை  அமைச்சர் ஜெய்பால் ரெட்டி   அவரது குடும்பத்திற்கு, மத்திய அரசு சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. எண்ணெய் கடத்தலை, சட்டப்படி தடுக்க முடியாது. இதனை தடுக்கும் பொருட்டு, மார்க்கர் சிஸ்டத்தை அமல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடந்த கொலை ஏதோ தற்செயல் நிகழ்வாய் தெரியவில்லை... நேர்மையாய் நடக்க நினைக்கும் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிப்பதற்காக திட்டமிட்டு செய்த கொலையாக தெரிகிறது. தமிழகத்திலும் மணல் கடத்தலை தடுத்த பல் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் ஏதோ பேட்டை ரவுடிகள் அல்ல. அவர்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும், அவர்களுக்கும் காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உதாரணத்திற்கு மகாராஷ்டிரா சம்பவத்தையே எடுத்துக்கொள்வோம். மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சோனாவான் ‌கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மகாராஷ்டிரா நிர்வாகம், அதிரடி சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது. 

மகாராஷ்டிரா போலீசார் தீவிரப்படுத்தியுள்ள அதிரடி சோதனையால், பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. எரிபொருள் கடத்தல் கும்பல், எவ்வாறு இந்த செயலை மேற்கொள்கிறது. நூதன முறையில் கடத்தல் செய்வது எப்படி உள்ளிட்ட ரகசிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, இந்த கடத்தல் செயல்களில் பெரும்பாலும் தனியார் எண்ணெய் நிறுவன வாகனங்களே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு வாகனத்தில், 12 கிலோ லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பப்படும். இந்த வாகனம், தலா, 4 கிலோ கொள்ளளவு கொண்ட 3 பிரிவுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இது வழக்கமான நடைமுறை ஆகும். ஆனால், கடத்தல் கும்பல் பயன்படுத்‌தும் வாகனங்களில், சிறப்பு அம்சமாக, ஒரு ரகசிய பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இந்த பகுதியில் 50 முதல் 100 லிட்டர் எரிபொருளை பதுக்க முடியும்.

எண்ணெய் நிறவனங்களிலிருந்து எரிபொருளை நிரப்பிக் கொண்டு , பல்வேறு சோதனைகளை கடந்து, கிடங்கை விட்டு வெளியேறும் லாரி, அங்கிருந்து நேராக, கடத்தல் கும்பல் இருக்கும் பகுதிக்கு செல்லும். அங்கு தயாராக நிற்கும் கடத்தல் கும்பல், ரகசிய பகுதியில் உள்ள எரிபொருளை எடுத்து விடுவர். இந்த செயல்பாடுகள் பெரும்பாலும், நாசிக் - மும்பை நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது.

இந்த கடத்தல் சம்பவங்களில், தனியார் நிறுவன ஊழியர்கள், கடத்தல் கும்பல்களுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளனர்.. கடத்தல் கும்பலின் கைக்கு வரும் எரிபொருள், பல்வேறு கலப்படத்திற்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. பெட்ரோல் விலை சமீபகாலமாக உயர்ந்து வரும் நிலையிலும், மண்ணெண்ணெய் விலை உயராததற்கு, அதில் கலப்படம் அதிகளவில் நடைபெறுவதே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2005ம் ஆண்டில் மட்டும், கள்ளச்சந்தையில், ரூ. 10,000கோடி அளவிற்கு எரிபொருள் விற்பனை நடந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

ஆக கோடிகோடியாக நடக்கும் கொள்ளையை தடுக்க சாதாரண அதிகாரிகள் ஆர்வத்துடன், நேர்மையுடன் செயல்படும் போது அவர்களது உயிரையே அதற்கு விலையாக கொடுக்கவேண்டியுள்ளது.  இந்திய நாட்டு வரலாற்றில் இத்தகையை சம்பவங்கள் தொடர்ந்து நடக்க காரணம் ஆட்சியாளர்களின் கொள்ளையடிக்கும் ஆர்வமும், அவர்களது கொடுமையான மக்கள் விரோத நடவடிக்கைகளுமே காரணம் ஆகும். ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போன்ற உழல்களை தொடர்ந்து இந்த கடத்தல் தொழிலில் காங்கிரசுக்கு எவ்வுளவு ஆதாயம் என்பது இனிமேல்தான் தெரியுமா?
                                                                                                                       (தினமலர் செய்தி உதவியுடன் எழுதியது)

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark