மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

ஊழலின் பரிணாமம்

Posted by நட்புடன் ரமேஷ் Thursday, December 9, 2010 ,



    ஊழல் என்பது அதிர்ச்சியான, அருவருப்பான செய்கையாய் பார்க்கப்படாமல், வெகு இயல்பாக பேசி கலைகிற சங்கதியாய் மாறி வருகிறது. இது தேசத்தை நேசிப்பவர்களை அச்சம் கொள்ள வைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து மட்டங்களிலும்  ஊழலால் ஏதோ ஒரு முறையேனும் பாதிக்கப்படுகிற இந்திய குடிமகன் அதற்கு எதிராக கோபம் கொள்வது குறைந்துக்கொண்டே இருக்கிறது. "யாருதான் சார் தப்பு செய்யல, எல்லோருமே அப்படிதான்" என்ற சொல்லாடலுக்குப் பின்னால் அரசியலை அந்நியப்படுத்தும் போக்கும் ஊழலை ஏற்றுக்கொள்ளும் போக்கும் தலைதூக்கி நிற்கிறது. நமது தேச விடுதலைக்கு பிறகு நிறைய ஊழல்கள் நடந்துள்ளது. அது குறித்து கொஞ்சமேனும் உறுத்தல் இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மிகவும் தெம்பாக இருக்கிறனர். 
  
    ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி நமது நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்திய ராசாவை இன்றுவரை கருணாநிதி காப்பாற்றி வருகிறார். அவர் தலித் என்று சாயப்பூச்சு வேறு நடக்கிறது. 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் இந்திய அரசுக்கு மொத்தம் கிடைத்தது 10,300 கோடி மட்டும். ஆனால் ஸ்வான் டெலிகாம் லைசன்ஸ் மதிப்பு 1537 கோடி இதில் 45 சதம் பங்கை விற்று அந்த நிறுவனம் சம்பாதித்த தொகை 4200 கோடி, யூனிடெக் நிறுவன லைசன்ஸ் மதிப்பு 1661 கோடி இதில் 60 சதம் பங்குகளை விற்று அந்த நிறுவனம் சம்பாதித்த தொகை 6200 கோடி. ஆக நமது தேசத்தின் இழப்பை விட "தலித் இனத்தின் தகத்தகாய கதிரவன்" ராஜாவின் இழப்பை கலைஞரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே நம்புங்கள் "பட்டிக்காட்டு பொட்டலில் பூத்துக் குலுங்கி வரும் புரட்சியாளர்" ராஜா நல்லவர்.

    காமவெல்த் போட்டிகளில் சீரமைப்புக்கு என ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் 961 கோடி, இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் 669 கோடி, தியான் சந்த் ஹாக்கி அரங்கம் 262 கோடி, கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் மையம் 262 கோடி என பல சீரமைப்பு பணிகளுகாக 4500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் நாக்பூரில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கத்திற்கான மொத்த செலவு 84 கோடி என்பதுடன் ஒப்பிட்டால் இதில் நடந்த கொள்ளையின் அளவு தெரியும். காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கால்மாடி கடுமையான விமர்சனஙளுக்கு பின்புதான் விலகினார்.

    மகாராஸ்டிர மாநில தாலைநகர் மும்பையில் கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்களுக்கு ஆதர்ஷ் வீடுகட்டும் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்ட வீடுகளில் நடந்த ஊழல் மிகவும் மனித தன்மையற்றது. 6 மாடி மட்டுமே அனுமதி பெற்று கொலாபா மாவட்ட முக்கிய பகுதியில் 31 மாடி அடுக்கை கட்டினர். தியாகிகளுக்கு சேர வேண்டிய பல வீடுகளை ராணுவ அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் பங்கு போட்டுக்கொண்டனர். அதைவிட கேவலம் போராட்டத்தில் ஈடுபடாத இரண்டு பெயர்களை பட்டியலில் இணைத்ததுதான். இந்த கொள்ளையை மத்திய புலணாய்வுதுறை அம்பலப்படுத்தி உள்ளது. வேறுவழி இல்லாமல் தேஷ்முக் பதவி விலகினார்.
    கர்னாடக மாநிலத்தில் அந்த மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா பெங்களூருக்கு அருகில் உள்ள ஜிகனி தொழிற் பேட்டையில் தனது உறவினர்களுக்கு நிலம் ஒதுக்கிய முறைகேடு தொடர்பாக சர்ச்சை உருவாக்கி உளளது. அவர்கள் கட்சி உள்குத்து முடிந்ததும் இனிப்பு பரிமாறி எடியூரப்பா பதவி தொடர்கிறார். ஏதோ இவைகள் மட்டும் இந்திய நாட்டை உலுக்கிய ஊழல்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இந்த ஊழல்களுக்கு என நாட்டில் ஒரு பரிணாமம் இருக்கிறது. அது விடுதலை பெற்றபோதே துவங்கி விட்டது.
    1948 ஆம் ஆண்டு காஷ்மீர் யுத்தம் நடந்த போது போர்களத்திற்கு அவசரமாக 4063 ஜீப்கள் தேவைப்பட்டது. அமெரிகாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ஜீப்கள் வாங்கப்பட்டது. பிரிட்டனின் ஹை கமிஷ்னராக இருந்த வி.கே.கே மேனன் ஜீப்களை வாங்குவதற்கு முன்பே 65 சதமான தொகையை செலுத்தியது இல்லாமல் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சொல்லாமல் முடிவு செய்தார். யுத்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து 155 ஜீப்கள் வந்தது. இன்னும் பல நிபந்தைனைகள் மீறப்பட்டன. இதில் பல கோடி கைமாறியது. ஜீப்கள் வாங்குவதில் ஊழல் நடந்ததால் அமைக்கப்பட்ட விசாரனை கமிஷ்னயும் மேனன் சந்திக்க மறுத்தார். கடுமையான எதிர்ப்பு கிளம்பியும் அவர் தண்டிக்கப்படவில்லை. அவருக்கு காங்கிரஸ் அரசு மத்திய ராணுவ அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தது.

    1957 ஆம் ஆண்டு ஹரிதாஸ் முந்திரா என்பவர் நட்டத்தில் இருந்த, மதிப்பிழந்த தனது கம்பெனி பங்குகளை டி.டி. கிருஷ்னமாசாரி என்ற அன்றைய நிதியமைச்சருக்கு தெரிந்தே எல்.ஐ.சி நிறுவனத்திற்கு விற்பனை செய்தார். இதில் கைமாறிய பணத்தின் திருவிலையாடலால் டி.டி.கே பதவி விலகினர்.

    1964 ஆம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக பதவி விலகிய முதல் முதல்வர் என்ற புகழை பஞ்சாப்பின் சர்தார் பிரதாப் சிங் கெய்ரோன் பெற்றார். அவரது ஆட்சியில் அவரின் செல்வாக்கை பயன்படுத்தி குடும்பத்தாருக்கும் உறவினர்களுகும் சலுகை செய்ததால் இது நடந்தது. அதே நேரத்தில் இப்படிப்பட்ட தவறை செய்த காரணத்தால் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் பக்சிகுலாம் முகமதுவும் ராஜினாமா செய்தார். பின்பு 1980 ஆம் ஆண்டில் மகாராஸ்டிர முதல்வராக இருந்த அப்துல் ரகுமான் அந்துலே ஊழல் புகார் காரணமாக ராஜினாமா செய்தார். இந்திராகாந்தி பெயர் உட்பட பல பெயர்களில் அறக்கட்டளைகளை துவக்கி அதன் மூலம் வசூல் என்ற பெயரில் அவர் குடும்பம் அடித்த கொள்ளையே காரணம்.

    கர்னாடகா முதல்வராக ராமகிருஷ்ண ஹெக்டே 1984ல் பதவி வகித்தார். அப்போது பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையம் 110 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களூக்கான வீட்டுவசதி சங்கத்திடம் கொடுத்தது. 130 கோடி மதிப்புள்ள நிலத்தை 2 கோடியே 20 லட்சம் என்ற அடிமாட்டு விலைக்கு வழங்கியதுதான் பிரச்சனைக்கு அடிப்படை. இதில் நடந்த முறை கேட்டில் நீதிபதி குல்தீப்சிங் கமிஷன் ராமகிருஷ்ண ஹெக்டே மீது குற்றம் சுமத்தியது. தீர்ப்பின் போது அவர் திட்ட கமிஷ்ன் துனைத் தலைவராக இருந்தார். பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த காலகட்டத்திற்கு முன்பு தமிழகத்தில் சர்காரியா கமிஷனால் வீராணம் ஏரி ஊழலில் கருணாநிதி கண்டிக்கப்பட்டதும், அதன்பின் எம்ஜிஆர் ஆட்சியில் பல ஊழல்கள் நடந்ததும் வெளியானது. 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுவீடன் நாட்டின் ரேடியோ அறிவிப்பின் வழியே கசிந்த போர்பஸ் ஊழல் இந்தியாவை உலுக்கியது. "மிஸ்டர் ஜென்டில்மேன்" ராஜிவ்காந்தியின் ஊழல்முகம் அம்பலமானது. வி.பி.சிங் பிரதமராக இது ஒரு காரணமாய் அமைந்தது.

    நரசிம்மராவ் ஆட்சிகாலம்தான் குதிரை பேரம் வெளிப்படையாக நடந்திட துவக்கத்தை தந்தது. 1991 ஆம் ஆண்டு தனது சிறுபாண்மை அரசை பாதுகாத்துக்கொள்ள ஜாட்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நான்கு எம்.பிகளை தலா ஐம்பது லட்சம் கொடுத்து வாங்கினார். இந்த குற்றத்தை கண்டரிந்த சி.பி.ஐ நீதிமன்றம் நரசிம்மாரவுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. அவர் தப்பித்தது கொடுமையிலும் கொடுமை. சற்றும் மனம் தளராத நரசிம்மராவ் 1986 ஆம் ஆண்டு சந்திராசாமி, அவரது உதவியாளர் கே.என்.அகர்வால் ஆகியோருடன் இணைந்து லண்டனின் ஊறுகாய் வியாபாரியான லக்குபாய் பகத் என்பவரிடம் இந்தியாவில் காகிதக்கூழ் ஒப்பந்தம் பெற்றுதருவதாக கூறி ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பெற்றனர், 1994 ஆம் ஆண்டு கரும்பு உற்பத்தி வீழ்ச்சி காரணமாய் சர்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி உள்நாட்டு கருப்பு சந்தைகாரர்கள் கொள்ளை லாபம் அடித்தனர். இதில் பல கோடிகள் பிரதமர் நரசிம்மராவ் உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கு கிடைத்தது. உயர்த்தப்பட்ட விலை காரணமாக ஐந்தாயிரம் கோடி பொதுமக்களின் பணம் வர்த்தக சூதாடிகளால் கொள்ளையடிக்கப்பட்டது. 1996 ல் 133 கோடி மதிப்புள்ள இரண்டு லட்சம் டன் உரியா ஊழல் வழக்கும் நரசிம்மராவ் ஆட்சியில் நாட்டின் பெயரை கெடுத்தது.
    ஊழல் வரலாற்றில் விநோத கூட்டணி அமைந்தது 1991 ஆம் ஆண்டு வெளியானது. பீகாரை சேர்ந்த சுரேந்திர குமார் ஜெயின் என்பவர் தனது பிலாய் என்ஜினியரிங் கார்ப்பரேஷன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மின் உற்பத்தி திட்டங்களை துவக்குவதற்கு உதவினார். அந்த நிறுவங்கள் மூலம் டாலராக வந்த லஞ்சப்பனத்தை 1988 முதல் 1991 வரை மூன்று காபினெட் அமைச்சர்கள், 30 அரசியல் வாதிகள், 32 அதிகாரிகள் உட்பட 115 பேருக்கு 65 கோடி கமிஷனாக அளித்தார். காங்கிரஸ், பா.ஜ.க, ஜனதா தளம் போன்ற அனைத்துக் கட்சியினரும் அம்ம்பலப்பட்டனர். இடதுசாரிகளை தவிர. இதுவே ஹவாலா ஊழல் என்று பெயர் பெற்றது.

    1992 ஆண்டு பங்கு சந்தையை பயன்படுத்தி ஹர்ஷத் மேத்தா 5000 கோடி ஊழல் செய்தான். இதை உதாரணமாகக் கொண்டு கேத்தன் பரேக் 6400 கோடி ரூபாய் ஊழல் செய்தான், இந்த இரு ஊழல்களிலும் எவ்வித உறுதியான நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, இதிலிருந்து எந்த பாடத்தையும் நமது ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ளவில்லை.
    1991 - 96 காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்யாதவர்களே இல்லை என்ற நிலை உருவானது. தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த சுக்ராம் வீட்டில் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி படுக்கை விரிப்புகள், பிளாஸ்ட்டிக் பைகள், சூட்கேஸ் உள்ளிட்ட பல இடங்களில் ரூபாய்கள் கிடைத்தன. ரொக்க மதிப்பு மூனறைக் கோடி இதுவல்லாமல் பல விலை உயர்ந்த பொருட்கள் கிடைத்தன. தொலைதொடர்பு துறைக்கு ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி அளவில் பொருட்கள் வாங்கியதில் இவர் புகுந்து விளையாடினார். குற்றம் நிருபிக்கப்பட்டு மூன்றாண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டும் அவர் சுதந்திரமாகத்தான் இருந்தார்.

    இதே ஆண்டில்தான் பீகாரில் 1000 கோடி அலவில் நடந்த கால்நடை தீவன ஊழலும் வெளியே வந்தது. விளைவு? அதன்பின் மத்திய ரயில்வே மந்திரியாக லாலு இருந்தார்.

    இதே காலத்தில் தமிழகம் யாருக்கும் சலைக்காமல் ஈடு கொடுத்தது. ஜெயலலிதாவின் ஆட்சியில் வரலாறு காணாத ஊழல்கள் நடந்தன. அவர் மீது மட்டுமல்ல அவரது அமைச்சரவை சகாக்கள் இந்திரகுமாரி, ராஜகண்ணப்பன், எஸ்.முத்துசாமி, சி.அரங்கநாயகம், கே.ஏ.செங்கோட்டையன், கே.பொன்னுசாமி, டி.எம்.செல்வகணபதி, சபாநாயகர் சேடபட்டி முத்தையா ஆகியோர் மீதும் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டது. விளைவு தமிழ் கூறும் நல்லுலகு அறிந்ததே!

    1998 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சி கவிழ்ந்து வாஜ்பாய் தலைமையில் காபந்து ஆட்சி நடந்தது. அப்போது அதுவரை வரலாறு கானாத 50,000 கோடி நட்டத்தை அரசுக்கு உருவாக்கினார்கள். செல்லுலார் நிறுவனங்களுக்கு லைசன்ஸ் சலுகை வழங்கியதில் இந்த நட்டம் உருவானது. இதில் பலகோடி கைமாறியது. குறிப்பாக வாஜ்பாய் குடும்பத்தை சார்ந்தவர்கள் 300 கோடி வாங்கியது வெளியானது. எதிர்வினை எதுவும் நடைபெறவில்லை.

    அடுத்து டெஹல்கா டாட் காம் என்ற இணைய பத்திரிக்கை அரசியல் வாதிகள் அதிகாரிகள் முகத்திரையை கிழித்தது. பொய்யான ராணுவ தடவாள கம்பெனி பெயரில் ஊழலை அம்பலப்படுத்தினர். அன்றைய பா.ஜ.க அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமனன், சமதா கட்சி தலைவர் ஜெயாஜேட்லி ஆகியோர் பணம் வாங்கியது ஒளிநாடாவில் பதிவானது. அன்றைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வீட்டிலேயே பேரம் நடந்தது மிகவும் அதிர்ச்சியானது. இவர்கள் மட்டுமல்ல ராணுவ அதிகாரிகள் மஞ்சித் சிங் அலுவாலியா, மேஜர் ஜெனரல் பி. எஸ்.கே. சௌத்ரி, மேஜர் ஜெனரல் முர்காய், பிரிகேடியர் இக்பால்சிங், பிரிகேடியர் அனில் ஷேகால், ஐ.எஸ் அதிகாரி எல்.எம்.மேத்தா ஆகியோர் அம்மபப்பட்டனர். உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்களுக்கு வாங்கும் தடவாளங்களில் இவர்கள் அடித்த கொள்ளை அந்த வீரர்களை கொச்சைப்படுத்துவதாக அமைந்தது.

    இவைகளை விவரிக்கத் துவங்கினால் பக்கங்கள் போதாது. 1996 யூரியா இறக்குமதி ஊழல், 1997 பன்சாலி பங்கு வர்த்தக ஊழல், 1998 தேக்கு மரக்கன்று ஊழல், 1999ல் நடந்த கார்கில் யுத்தத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வாங்கிய சவப்பெட்டியில் ஊழல், 2001ல் யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியாவில் நடந்த 5,500 கோடி ஊழல், தினேஷ் டால்மியா பங்கு வர்த்தக ஊழல், 2002ல் சஞ்சய் அகர்வாலின் வீட்டு வர்த்தக ஊழல், 2003ல் போலி முத்திரைத்தாள் ஊழல், 2005ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல், பீகார் வெள்ள நிவாரண ஊழல், ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், 2006ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், உத்திரபிரதேசத்தில் தாஜ் காரிடார் ஊழல், 2008ல் சத்தியம் கம்பியூடர் நிறுவன ஊழல், பூனாவை சேர்ந்த ஹசன் அலிகான் வருமான வரி ஏய்ப்பு மற்றும் சவுராஸ்டிரா வங்கி ஊழல், ஜார்கண்ட் மருத்துவ உபகரண ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், ஒரிசா சுரங்க ஊழல், மதுகோடா ஊழல் என மலைப்பை தரும் ஊழல்கள் தொடர்கின்றன. 

    ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷ்னல் என்ற சர்வதேச அமைப்பு ஊழல் செய்வதில் இந்தியா வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து கோபப்படவேண்டிய மக்கள் திரள் தொலைகாட்சியுனுள் அமிழ்ந்துக் கிடப்பதை எப்படி மாற்றுவது.

    நமது நாட்டிலிருந்து ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 240 கோடி ரூபாய் திருட்டுத்தனமாக வெளியேறுகிறது. 1948 - 2008 வரை 9 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் நமது சட்டத்தின் கண்களுக்கு தெரியாமல் கடத்தப்பட்டுள்ளதாக உலக நிதி ஒழுங்கு நிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 2004 - 08 வரை மட்டும் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி என்பது கவனிக்கத்தக்கது. நமது நாட்டின் கருப்பு பணம் ஸ்விஷ் வங்கியில் 70 லட்சம் கோடி இருப்பதாக தகவல் வந்ததும் யாரையும் கோபப்படுத்தவில்லை.

    நமது இந்திய நாட்டில் ஒரு நாளைக்கு 20 ரூபாய் வருமானத்தில் 80 கோடி மக்கள் வாழ்வதாக முறைசாரா துறைகளுக்கான தேசிய ஆணையம் தனது கவலையை வெளியிட்டுள்ளது. சாதாரண மக்களின் வாழ்க்கை மிகவும் பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. சென்னையில் வளர்ச்சிப் பணிகளுக்கென கடந்த ஒரே ஆண்டில் 16 ஆயிரம் குடிசைகள் அவர்கள் குடியிருப்பை விட்டு விரட்டப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 1.62 லட்சம் விவசாயிகள் வறுமையின் கோரப்பிடியால் தற்கொலை செய்து மாண்டு போனார்கள். இவையெல்லாம் இருந்தால் என்ன? உலக வரலாற்றில் முதன்முறையாக நமக்கென பல திரைப்படங்கள் காத்திருக்கின்றன, இலவசங்களை பெற்று அமைதியாய் இருக்கப்போகிறோமா? அல்லது ஊழலை எதிர்த்து வீதியில் இறங்கப்போகிறோமா? பொது வெளியில் நடக்கும் சம்பவங்கள் நமது வீட்டிற்குள் வருமா என அலட்சியம் காட்டினால், நாடும் வீடும் வேறா?       


2 comments

  1. Anonymous Says:
  2. Good article with the History of Indian scams and datas which can trigger the thinking of the readers.

    Hope people dont hear when political parties other than left speaks of Scams. We cann't even attract them by alligning with any of these corrupted parties

    Narayanan.N
    Aruppukottai

     
  3. Unknown Says:
  4. தோழர் உங்களின் கட்டுரை வரலாற்று நோக்கில் ஊழலின் பரிணாமத்தை வெட்ட வெளிச்சமாகுகிறது இவர்கள் அரசியலுக்கு வருவதே தன்னையும் தனது உறவுகளுக்கு ஆதாயம் தேடுவதற்குத்தான் எனும் போது இவர்களையெல்லாம் நம்பி ஓட்டு போடும் "மறதியை" அதிகாமாய் தன்னகத்தே வைத்திருக்கும் மக்களின் அவலநிலையை தான் குற்றம் சொல்லவேண்டி இருக்கிறது .....என்ன செய்வது ...

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark