மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


                                      
சரியாக ஓராண்டுக்கு முன் சர்வதேச மக்கள் தொகை அறிவியல் நிறுவனம் மற்றும் சில அமைப்புகளும் சேர்ந்து சுகாதாரம் குறித்த ஒரு சர்வேயை நடத்தினர். தமிழகம், ஆந்திரா, பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடத்திய சர்வே முடிவுகள் வெளியிட்டது ஒரு நிகழ்ச்சியாக நடந்தது.. இதில் கலந்துக்கொண்ட தமிழக சுகாதார துறை முதன்மை செயலாளர் சுப்புராஜ், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளில் சுமார் 65 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் இருக்கும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அவர் அத்துடன் விடவில்லை. மேலும் பல தகவல்களை வேதனையுடன் பகிர்ந்துள்ளார். தமிழகம் அடுத்து சந்திக்கவிருக்கும் முக்கிய சுகாதார பிரச்சனையாக ரத்தசோகை மாறியுள்ளது. இதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் ஆளாக்கப்பட்டுள்ளோம்.  தமிழக அரசு மதிய உணவுத் திட்டத்தை 30 ஆண்டுகளாக நல்ல முறையில் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் கூட இளம் பெண்கள்  ரத்த சோகை நோய்க்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தாய்மை அடையும் போது அவர்களுக்கு பல பிரச்சனைகள் உருவாகும். இதனால் பிரசவத்தின் போதான இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம். இதை தடுக்க பெண்களிடம் ரத்தசோகை குறித்து போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். என்கிறார். சரிதான். ஆனால் விழிப்புணர்வு யாருக்கு வேண்டும் என்பதுதான் இப்போது விவாதத்திற்குறியது.
    உலக அளவில் சுகாதாரம் என்பது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. சுகாதாரம் மக்கள் வாழ்வின் அடிப்படை உரிமை என்ற குரல் இன்று எழுந்தது அல்ல. உலக அளவிலான சுகாதாரத்திற்கான மாநாடு சோவியத் யூனியனில் உள்ள அல்மா அட்டாவில் நடந்தபோது "அடிப்படை உரிமை" என்ற தீர்மானம் இயற்றப்பட்டு பல பத்தாண்டுகள் ஆகிறது. ஆனாலும் சோசலிச நாடுகளைத் தவிர, உழைப்பாளி மக்களுக்கு இன்றுவரை உலகம் முழுவதும் சுகாதாரம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. உலகமய அமலாக்கத்திற்குப் பின் மூன்றாம் உலக நாடுகள் வேட்டைக்காடாக மேலும் மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் அடைபட்டுக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக மருத்துவத்துறையில் பன்னாட்டு கம்பெனிகள் அசைக்கமுடியாத இடத்தை அடைந்துள்ளது. இதில் மக்கள் வாழ்க்கையின் அடைப்படை அம்சமான சுகாதாரமும் விதிவிலக்கல்ல. இந்திய அரசு மக்கள் நல்வாழ்வைவிட பன்னாட்டு முதலாளிகளின் நலனையே கவனித்து வருகிறது. இந்திய மைய ஆட்சியில் பங்கெடுத்துள்ள திமுக அரசு இதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் இவர்களின் பாசம் கொஞ்சம் அதிகம் என்று கூறலாம்.  சுகாதாரத்தை தனியாரிடம் கொடுக்க எந்தவித தயக்கமும் காட்டவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம். இந்திய மக்களில் 20 கோடிபேர் நம்பும் இந்திய அரசின் காப்பீட்டுக் கழகமான எல். ஐ. சியை கலைஞர் நம்பவில்லை. தங்கள் குடும்பத்துக்கு சாதகமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 2400 கோடி ரூபாய் திட்ட மதிப்புள்ள கலைஞர் காப்பீட்டு திட்டத்தை ஒப்படைத்துள்ளார்.
    கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு, உயிர் காக்கும் உயர்சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதையட்டி, அதன் அருமை பெருமைகள் என்னே தெரியுமா? என்று கலைஞர் அறிக்கைக்குமேல் அறிக்கையும், உடன்பிறப்புகளுக்கு கடிதமும், அரசின் பணத்தில் பக்கம் பக்கமாய் விளம்பரமும் கொடுத்துக்கொண்டு இருந்தார். எப்போதும் போல அவருக்கே உரித்தான பழக்கத்தில் புள்ளி விபரங்கள் பறந்தன. இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,53,257 நோயாளிகள் நலம்பெற்றுள்ளனர். மருத்துவமனைகளுக்கு 415 கோடியே 43 லட்ச ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டில் 1,44,45,117 குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, அவர்களில் 1,33,60,439 குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் திட்டம், கிராமபுற சுகாதார மேம்பாட்டுக்கு இந்த ஆட்சி உழைத்தை பார்த்தாயா? என்றெல்லாம் வினா எழுப்பி மொத்தத்தில் தமிழகம் மக்கள் சுபீட்சமாய் இருப்பது போல காட்ட முனைந்துள்ளார். அவர் அறிக்கை விடுவதற்கு ஓராண்டுக்கு முன்பு  தமிழக சுகாதார துறை முதன்மை செயலாளர் சுப்புராஜ் மேற்கண்டது போல பேசியதை வசதியாக மறந்துவிட்டார்.
    கலைஞர் சொல்வது போல தமிழகத்தின் சுகாதாரம் அப்படி என்ன மேம்பட்டுள்ளது? இந்த காப்பீட்டுத் திட்டத்தின் உண்மை முகம் என்ன? தமிழக அரசின் சுகாதார துறை முதன்மை செயலாளர் சொன்ன உண்மை முகத்தில் அறையவில்லையா? அரசின் புள்ளி விபரங்களைப் பார்ப்போம். தமிழகத்தில் மருத்துவப் பயிற்சிப் பள்ளி 12, மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் 26, வட்ட மருத்துவமனைகள் 162, வட்டமல்லாத மருத்துவமனைகள் 77, டிஸ்பன்சரிகள் 12, காசநோய் மருத்துவமனைகள் 5, பிற மருத்துவமனைகள் 25, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் 6, நடமாடும் மருத்துவக்குழுக்கள் 11, தொழிலாளர் மருத்துவமனைகள் (இ. எஸ். ஐ) 7, இ. எஸ். ஐ டிஸ்பென்சரி 160, ஊரக குடும்பநல மையங்கள் 382, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1409, துணை சுகாதார நிலையங்கள் 8682, பிரசவத்திற்கு பின்னான தாய் சேய் நலவிடுதிகள் 118, நகர்புற குடும்ப நல மையங்கள் 65, நகர்புற சுகாதார மையங்கள் 245 என்று உள்ளது. தமிழக மக்கள் தொகைக்கும் 12 ஆயிரத்தி 618 பஞ்சாயத்துகளை அதாவது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை பலநூறு நகராட்சிகளை, பேரூராட்சிகளை  கொண்ட தமிழகத்திற்கு இது போதுமானதா என்ற கேள்வி முக்கியமானது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி 6 கோடி மக்கள் தமிழகத்தில் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 60 லட்சம் உயர்ந்திருக்கும் (1991 - 2001 விகிதம் 11 சதம் இதனடிப்படையில்) என வைத்துக்கொண்டால் 6.6 கோடி மக்கள் உள்ளனர்.
    போர் கமிட்டி அறிக்கையின் படி 30,000 மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் அதில் ஒரு மருத்துவரும் தேவை. இப்படி பார்த்தால் இன்று 2200 ஆரம்ப சுகாதார நிலையம் தேவை. இருப்பது  1409 ஆக 791 ஆரம்ப சுகாதார மையங்கள் தற்போது பற்றாகுறையாக உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப அடிப்படை கட்டுமானத்தை உயர்த்துவது குறித்து சிந்திக்காமல் இலவசங்கள் மூலம் வசியம் செய்ய நினைப்பது ஆட்சியாளர்களின் வேலையாக மாறி உள்ளது.  கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணிகள் பல. அதில் உள்ள பிற பணிகளுடன் ஒப்பிடுகையில் புறநோயாளி சிகிச்சை என்பது முக்கியத்துவம் குறைந்த பணிதான். (அதாவது பிற பணிகள் மிக மிக முக்கியம் என்ற அர்த்தத்தில்) குடும்ப நலம், தடுப்பூசி, சுகாதாரம், காச நோய் தடுப்பு, தொழுநோய் தடுப்பு, எய்ட்ஸ் தடுப்பு, பல்ஸ் போலியோ, பள்ளி சிறார் நலம், ஆய்வுப்பணி, திருவிழா நேரங்களில் தொற்று நோய் பரவாமல் தடுப்பது என்று பல பணிகள் உண்டு  இதை செய்வதற்கு பல பயிற்சிகள் தேவை. இவைகள்தான் சமூக அடிப்படையை சுகாதாரமாக வைத்திருக்க உதவும். க.கா திட்டம் போட்ட மு.க இதை அறியாதவரா என்ன?
    மாநிலத்தில் 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற புள்ளி விபரம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும் உண்மை நிலை கசப்பானது நகர்புறத்தில்தான் அதிக மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமப்புறத்தில் மருத்துவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. சுகாதாரத்துறையின் அடிப்படை கட்டுமானங்கள் மிகவும் மோசமானதாய் இருக்கிறது. ஆரம்பசுகாதார நிலையங்களின் சுவற்றில் பளப்பளப்பாக நிறங்களை பூசுவதல்ல வளர்ச்சி. தமிழகத்தில் பல்லாயிரம் கிராமங்களில் இன்னும் கழிப்பிடம், குடிநீர் போன்றவை கடுமையானப் பிரச்சனையாக இருக்கிறது. இதை பூர்த்தி செய்வதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். பல நோய்கள் உருவாக திறந்த வெளிக் கழிப்பிடமும், சுகாதாரமற்ற குடிநீருமே காரணமாய் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் மருத்துவத்துறை அதீதமாக வளர்ந்துள்ளதாக தமிழகத்தின் முதல்வர் புலகாங்கிதம் அடைகிறார்.
    ஆனால் இந்த வளர்ச்சி யாருக்கு அதிக பயன் கொடுக்கிறது? பணம் இருப்பவர்களுக்குதானே. அரசு மருத்துவமனைகளை புறம் தள்ளிய காப்பீட்டுத் திட்டம் தனியார்களிடம் கொள்ளை லாபத்திற்கு வழிவகுத்தது. ஹைபடைடஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டு கிட்னி டயாலிசிஸ் செய்ய ஆண்டுக்கு 30 ஆயிரம் தேவைப்படும் நோயாளிகள் இருக்கிற மாநிலம் தமிழகம், இதய அடைப்பு நோய்க்கு மருந்து பல ஆயிரம் ஆனால் இதற்கு இந்த காப்பீட்டுத் திட்டம் உதவாது? இவைகளுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம் பதில் சொல்வது கிடையாது. பல நோய்களுக்கு இந்த திட்டத்தின் பட்டியலில் இடம் கிடையாது. இந்த திட்டத்தில் பயனடைவது கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமே. இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் துவக்கத்தில் தனியார் மருத்துவமனைகள் இடவசதி 7000 சதுர அடியில் இருந்தால் அந்த மருத்துவமனைகளுக்கு அனுமதி கிடைத்தது. போட்டி அதிகமானதும் ஒருநாள் திடீரென இடவசதி 9000 சதுரஅடி என மாற்றம் பெற்றது. திட்டம் எப்படி திடீரென மாறியது என்கிறீர்களா? சின்ன சின்ன மருத்துவமனைகளுக்கு இதில் இடம் கிடைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தால், பிரும்மாண்டமான கட்டடங்களை கட்டியுள்ள படகாசூர மருத்துவமனைகளின் லாபநோக்கால் இந்த மாற்றம் விளைந்தது. திட்டம் தீட்டியவர்களுக்கும் அதனால் பயன் அடைபவர்களுக்கும் லாபம் மட்டுமே நோக்கம் எனில் மக்கள் நிலை என்னாவது. அது சரி மக்களைப் பற்றி கவலைப் படும் ஆட்சியாளர்களிடம் தானே இதுகுறித்து பேச முடியும்?













4 comments

  1. நல்ல அலசல் ... சுகாதாரம் உலகத்திற்கே சவால் ஆனால் பல நாடுகளால் சிறப்பான திட்டமிட்ட நடவடிக்கைகள் ஊழல் இல்லாமல் நடைபெற்று தான் வருகிறது .

     
  2. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சுதர்சனன்...
    தாங்கள் சொல்வது உண்மைதான். உலகில் பல நாடுகளில் சுகாதாரம் மக்களின் அடிப்படை உரிமையாக மாறி உள்ளது. ஆனால் நமது நாடுதான் அதற்கு விதிவிலக்கு

     
  3. Unknown Says:
  4. neegal solvadhu sari thaan....
    indraiya kala kattathil sughadharam enbadhu ulaga naadugalukae savalagathaan irukkirudhu.
    nam arasin immathiri vaedikaiyana pala thittangalal nadapathu ennavendral
    director 'shankar' kooruvathai pola
    "RICH GETS RIHER AND POOR GETS POOR".
    Indraiya nilavaramum adhuthaan..
    indha nilai thodarndhu needithal innum sila aandgalil nam tamilnaattin nilai???
    ulaithu saapidum oruvanukku ilavasam endra payeril avanai soamberi aakuvadhai vida avani kadina ulaipaliyaga maatra nam arasu pala nalla thittangalai vaguthaal nandru.....

     
  5. Unknown Says:
  6. This comment has been removed by the author.  
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark