மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

அக நக நட்பதே நட்பு

Posted by நட்புடன் ரமேஷ் Sunday, August 1, 2010 ,

இன்று நண்பர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மற்ற தினங்களைப் போல இதற்கு தேதியை நிர்ணயிக்காமல் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிறு என்று வைத்துக் கொண்டார்கள். இதன் நதிமூலம், ரிஷிமூலத்தை ஆய்வு செய்தால் அமெரிக்காவை நோக்கியே செல்கிறது. நட்பின் அருமையை ஆராதிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் சில நண்பர்கள் முடிவு செய்தனர். இது நடந்தது 1935 ஆம் ஆண்டில். இது கொஞ்சம், கொஞ்சமாகப் பரவி பல நாடுகளிலும் அனுசரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த காலத்தைவிட தற்போது இந்தியாவிலும் இதுகுறித்து நிறையப் பேசுகிறார்கள். இதைத் துவங்கிய அமெரிக்கர்கள், நட்பைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சிகளை மீறி நட்பு என்பது அந்நாட்டவரைப் பொறுத்தவரை கேள்விக்குறியாக மாறிக் கொண்டிருக்கிறது. 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு நட்பு மீதான நம்பிக்கை அமெரிக்கர்களிடம் தகர்ந்து வந்துள்ளது. 2006 ஆம் ஆண்டில்மேற்கொள்ளப்பட்ட  ஆய்வின்படி 25 விழுக்காடு அமெரிக்கர்கள், தங்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் என்று யாரையுமே சொல்ல முடியவில்லை என கூறியிருக்கிறார்கள். சராசரியாக ஒரு அமெரிக்கருக்கு நான்கு பேர் நம்பத்தகுந்தவர்கள் என்ற நிலை மாறி தற்போது இரண்டு பேர் மட்டுமே நம்பத்தகுந்தவர்கள் என்று வந்துவிட்டது.

நண்பர்களுடனான பழக்கம் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது. ரஷ்யாவில் குறைவான அளவில் நண்பர்களை வைத்துக் கொள்கிறார்கள். குடும்பப் பெயரைச் சேர்க்காமல் முதல் பெயரைச் சொல்லி அழைக்கும் உரிமை நண்பர்களுக்கே உள்ளது. பெயரைச் சுருக்கி அழைக்கவும் செய்கிறார்கள். மேற்கு நாடுகளில் மிகவும் கொச்சைப்படுத்தும் அம்சமாக நட்பு என்ற வார்த்தை மாறி வருகிறது என்கிறார்கள் சமூகவியல் வல்லுநர்கள். ஸ்பெயின் மற்றும் பல மத்தியத் தரைக்கடல் நாடுகளில் பணியிடங்கள், வாழ்விடங்கள் ஆகியவற்றில் உடனிருப்பவர்கள் நட்பு என்ற வட்டத்துக்குள் வந்துவிடுகிறார்கள்.

புரட்சிகர நட்பு என்று மார்க்ஸ்-ஏங்கல்ஸ், பிடல்-சே ஆகியோருக்கிடையிலான நட்பைக் குறிப்பிடுகிறார்கள். பிரான்சிலுள்ள பெரிஸ் என்ற நகரத்துக்கு நாடு கடத்தப்படுகிறார் மார்க்ஸ். அங்குதான் அவர் ஏங்கல்ஸைச் சந்திக்கிறார். அப்போதிருந்து இறுதிக்காலம் வரை இருவரின் நட்பும் நீடித்தது. 1849 ஆம் ஆண்டில் கார்ல் மார்க்சை பின்தங்கிய கிராமம் ஒன்றுக்கு நாடு கடத்துவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்குப் பணிய மாட்டேன் என்று கூறிவிட்டு லண்டன் சென்றார் மார்க்ஸ். உடன் மனைவி மற்றும் பிள்ளைகளையும் அழைத்துச் செல்கிறார். அங்கு வறுமையால் மிகவும் அவதிப்பட்டார். இந்த சந்தர்ப்பங்களில் ஏங்கல்ஸ்தான் மார்க்ஸூக்கும், குடும்பத்துக்கும் தேவையான பண உதவியை வழங்கினார். 12 ஆண்டுக்காலம்தான் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேரா ஆகிய இருவருக்குமிடையில் பழக்கம் என்றாலும் அவர்களின் நட்பு காலங்கடந்து நிற்கிறது. அணுகுமுறையில் இருவருக்கும் வேறுபாடு இருந்தபோதிலும் புரட்சிகர நட்பு நீடிக்கவே செய்தது. அதைப் பொறுக்க முடியாமல்தான் சேகுவேராவைக் கொலை செய்து விட்டு காஸ்ட்ரோ மீது ஏதாவது ஒரு வகையில் கறை பூச முடியுமா என்று கூட ஒரு கட்டத்தில் அமெரிக்கா ஆலோசனை செய்தது. இருவரின் உறவு பற்றி விரிவாக எழுதியுள்ள ரீட் ஹென்றி, அவரவர் சூழலுக்கேற்ப சில முடிவுகளை எடுத்து இருவரும் செயல்படுத்தினர். இவற்றை கருத்து வேறுபாடுகளாகக்கூட பார்க்க முடியவில்லை என்கிறார்.

நமது திருவள்ளுவரோ, கூடிப்பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும் ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும் மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்றார். சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனுக்கும், புலவர் பிசிராந்தையாருக்கும் இடையிலான நட்பு இத்தகை யதுதான் என்று சொல்லலாம். இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கருத்தால், உணர்வால் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நேரில் சந்தித்துக் கொண்டால்தான் இது சாத்தியம் என்பதில்லை. ஆனால், திருவள்ளுவரின் மற்றொரு குறளை எவ்வளவு பேர் திறந்த மனதுடன் உள்வாங்கிக் கொள்வார்கள் என்பது கேள்விக்குறிதான்.
“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.”
இதற்குரிய விளக்கத்தை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் வார்த்தைகளில் கூறவேண்டுமானால், ஒருவரோடு நட்பு கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று. நண்பரிடம் வேண்டாத செயல் இருக்கக்கண்டபோது விரைந்து கண்டித்து, புத்தி சொல்வதற்கும் ஆகும் என்பதுதான் அதன் அர்த்தம். இப்படித்தான் நட்பு இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தால் இப்போதுள்ள உறவுகளில் எத்தனை தாக்குப்பிடிக்கும் என்பது ஒருபுறம். ஆனால், இதையெல்லாம் தாண்டி நீடித்த நட்புறவுகள் இருக்கின்றன. அவற்றை ஆராதிப்பதன் மூலம் உண்மையான நட்புறவை முன்னிறுத்தலாம். அதற்கு நண்பர்கள் தினம் உதவும்.
-----------------------------------------------------------------------------நன்றி " தீக்கதிர் "

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark