மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!நிகழ்


ஆண்டெனா கம்பிகளில்
கூடுகட்டி
வாழத் தொடங்கிய
குருவியும் மறந்த்து...
தமிழை.

வலி


கடலை விட்டு
பிரிந்து வந்த சோகத்தை
இன்னமும் சொல்லித் தீரவில்லை.
காதோரம் வரும் போதெல்லாம்
ஓயாது கேட்கிறது...
சங்கின் விசும்பல்.

ஈரம்


கீழே விழுந்து
அடிபட்ட இடத்தில்
எச்சிலை தொட்டுவைத்து
மண்ணெடுத்துப்
பூசி விட்டுப் போனாய்.
வலிக்காத இடத்தில்
உலராமல் இருக்கிறது..
இன்னமும் உன் ஈரம்.

சரி/தவறு


செத்துத் தொலை என்கிறாய்
கோபம் தலைக்கேறி.
செத்துப் போய்
தொலைந்துவிடவா..
அல்லது
தொலைந்து போய்
செத்துவிடவா..
சரியாய் சொல்லித் தொலை
முதலில்.

உயிர்ப்பு


வீட்டுக்குள்
விழுந்து கிடந்த
கண் திறக்காத
அணில்குஞ்சை
கையில் பொத்தியெடுத்து
தோட்டத்தில் விடும் பொழுதில்
கைகளை நடுங்க வைக்கிறது..
மெலிதாய் அதிரும்
அதன் உடல் துடிப்பு.

வேர்க்குரல்


தொட்டிச் செடியிலிருந்து
சொட்டிக்கொண்டிருக்கும்
நீர் சொல்கிறது...
பரவ முடியாமல்
முடங்கியே கிடக்கும்
வேர்களின் சோகத்தை.

நிழல் பார்த்தல்


பூச்சற்று
அஸ்திவாரத்தோடு
பாதியில் நின்றுபோன
கட்டடத்தை
வெறித்துப் பார்த்தபடியே
தினமும் கடந்து போகிறான்...
வீட்டுக் கடன்
விண்ணப்பத்தை
பூர்த்தி செய்யாத ஒருவன்.

சிதைதல்


தோட்டத்து மரம் அறுத்து
செய்த நாற்காலியில்
சாய்ந்து உட்கார்ந்தேன்.
கயிறு கட்டி
அதே மரத்தில்
ஊஞ்சலாடிய சுகம்
வாய்த்ததேயில்லை ஒருநாளும்.

மு.முருகேஷின் கடவுளோடு விளையாடும் குழந்தைகள் என்ற கவிதை தொகுப்பில் உள்ள சில கவிதைகள் மேலே உள்ளவை. மிகவும் நுட்பமான இதயம் படைத்தால் மட்டுமே இப்படியான கவிதைகள் உருவாகக்கூடும். உலகத்தை, இயற்கையை, மனிதத்தை நேசிக்கும் இதயம் படைத்த முருகேஷின் பணிரென்டாவது புத்தகம் இது. 
விரல் நுனியில் வானம் (1993),
என் இனிய ஹைக்கூ (1995),
பூவின் நிழல் (1996),
கொஞ்சும் ஹைக்கூ, கொஞ்சம் புதுக்கவிதை (1998),
தரை தொடாத காற்று (2001),
நீ முதல் நான் வரை (2001),
36 கவிதைகளும் 18 ஓவியங்களும் (2001),
நிலா முத்தம் (2002),
மின்னல் பூக்கும் இரவு (2003),
குழந்தைகள் ஊருக்குப் போய்விட்டன (2005),
என் இனிய ஹைக்கூ (2007)
போன்றவை அவரது பிற படைப்புகள்.
புரிந்த மொழியில் புரியாத நடையில் எழுதுவது மட்டுமே கவிதை என்று பலர் சாதித்துக்கொண்டு இருக்க, தினம் நாம் கடக்கும் பாதைகளில் எதிர்ப்படும் சராசரி விஷயங்களை மிகவு நுட்பத்துடன் எளிய வார்த்தைகளில் படைப்பது இவரது பாங்காக இருக்கிறது. காரணம் கேட்க்கும் போது அவர் சொல்வது இதைத்தான் "கலை மக்களுக்கானது" மனித நேயம் நிரம்பும் அவரது படைப்புகள் தொடர வாழ்த்துவோம். மேற்கண்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளது "அகநி வெளியீடு" 3. பழைய பள்ளிக்கூட வீதி, வந்தவாசி - 8, தொலைபேசி: 04183 - 226543, 94443 60421. வாய்ப்பு இருப்பின் படித்துப்பாருங்கள். 

8 comments

 1. நல்லதொரு அறிமுகம்.
  நல்ல கவிதைகளுடன்.
  நன்றி.

   
 2. தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ் ஜெகதீசன்...

   
 3. leninv87 Says:
 4. good one comrade :)

   
 5. lenin thanks for your comment

   
 6. சிதைத்தல் வேர்க்குரல் கவிதைகள் மிகவும் நெகிழச் செய்கிறது, இன்றைய எந்திர யுகத்தில் புரியும்படி பேசாததையும். பிறர் பேசியதை புரிந்து கொள்ள முடியாமல் போவதையும் சரி/தவறு என்ற கவிதை சொல்லி உள்ளது, மகிழ்ச்சி தோழர்,

   
 7. தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி கவாஸ்கர்.

   
 8. BARKAVI Says:
 9. நல்ல கவிதை தொகுப்பு தோழா

   
 10. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தோழர் பார்கவி

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark