மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


இத்தாலியில் மாஜினியின் “யங் இத்தாலி’’ என்ற அமைப்பின் நீட்சி தாங்கள் தான் என்று, தேசபக்தப் போர்வையை பொய்கூறி தனதாக்கிக் கொண்டு, கொடுங்கோலன் முசோலினி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினான். அந்நாட்டு மக்களை சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராட வைத்த கம்யூனிஸ்டுகளை அவனது அரசாங்கம் வேட்டையாடியது. மக்கள் உரிமையை பாதுகாக்கப் போராடிய கம்யூனிஸ்டுகள் நரவேட்டையாடப்பட்டனர். கட்சியின் செயலாளர் அன்டோனியா கிராம்ஷியை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது நீதிபதி சொன்னான் “ எனக்கு மட்டும் வாய்ப்பிருக்கும் என்று சொன்னால் 20 வருடங்களுக்கு கிராம்ஷியின் மூலையை செயல்படாமல் நிறுத்தி வைப்பேன்’’. வன்மம் மிக்க இந்த வார்த்தை ஏதோ இத்தாலியில் மட்டும் ஒலித்ததல்ல. உரிமைகேட்ட தேசபக்தர்கள் மீது உலகமெங்கும் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு வார்த்தைகளில் தீர்ப்பாய் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் நீங்கா புகழ் படைத்த நாடாளுமன்ற  குண்டு வீச்சு வழக்கில் பகத்சிங்கையும், பி.கே.தத்தையும் ஆயுள் முழுவதும் நாடு கடத்தத் தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி மெல்டின். அவர் தன்னுடைய தீர்ப்பில் ‘’இந்த நபர்கள் நீதிமன்றத்தில் நுழையும் போதெல்லாம் “புரட்சி ஓங்குக” என்றும் “பாட்டாளி வர்க்கம் வெல்லட்டும்” என்றும் கோஷமிட்டுக் கொண்டுதான் வருவார்கள். இது அவர்கள் எந்த மாதிரியான கொள்கைகளைப் போற்றுபவர்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இந்தக் கொள்கைகள் பரப்பப்படுவதை தடுப்பதற்காகவே நான் அவர்களை நாடு கடத்துகிறேன்” என்று தீர்ப்பு வழங்கினார்.
இது போராளிகளின் அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடாய் அமைந்தது. இவர்களை பொருத்தவரை தேச விடுதலை என்பது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டலுக்கும் முடிவு கட்டுவதாகும். மகத்தான சோவியத் புரட்சி நடந்து சில ஆண்டுகளே ஆனதால், தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை எனினும் சோசலிசம் அவர்களது மனங்களை ஈர்த்தது. பாட்டாளிகள் சார்ந்த நிலைபாட்டை எடுத்த இவர்களின் நிலைபாடு திடீரென பெற்ற ஞானம் அல்ல. அதற்கென ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

கொஞ்சம் பின்னணி...
நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி உயிரைத் தியாகம் செய்த இந்த புரட்சியாளர்கள் வெறுமனே சாகச மனோபாவம் கொண்டவர்கள் அல்ல. அதைவிட முக்கியமாக சுதந்திர இந்தியாவை மதசார்பற்ற, சோசலிச மற்றும் சமத்துவ சமுதாயமாக மாற்ற வேண்டும் என்று புரட்சிகர லட்சியம் கொண்டிருந்தனர்.

ஆனால் துவக்ககால புரட்சியாளர்கள் இந்து மதத்தின் தீவிர தத்துவங்களை தங்களது எழுச்சிகரமான பாதையாகக் கண்டனர். கீதையின் சாரமென அர்ச்சுனனுக்கு கண்ணன் சொன்ன தத்துவத்தை திலகர் மக்களை திரட்டப் பயன்படுத்தினார். சிவாஜியையும், விநாயகர் பண்டிகையையும் திரட்டலுக்கு பயன்படுத்தினார். இவரின் உரைகளால் ஈர்க்கப்பட்ட சாபேகர் சகோதரர்கள் “இந்து தர்ம சம்ரக்ஸனி சபாவை’’ துவக்கினர். இது வெறுக்கப்பட்ட பல பிரிட்டிஷ் அதிகாரிகள் பலரின் மரணத்திற்கு காரணமாய் அமைந்தது. ஆயுத புரட்சியின் பதாகையை உயர்த்தப்போவதாய் வி.டி.சாவர்கர் துர்கை முன்பு சபதம் ஏற்றார். 1900 ஆம் அண்டு நாசிக்கில் “மித்ர மேளா’’ என்ற அமைப்பை துவக்கினார். 1904 ஆம் ஆண்டு அது “அபிநவ் பாரத் சொசைட்டி’’ என்று பெயர் மாற்றப்பட்டது. இவர்கள் விநாயகர் சதுர்த்தி விழா, சிவாஜி விழாக்கள் நடத்தி மக்களைத் தூண்டினர்.

வங்கத்தில் இருந்த புரட்சிக்குழுக்கள் பக்கிம் சந்திர சட்டர்ஜி, சுவாமி விவேகானந்தர் உரைகளை முன்னோடியாகக் கொண்டனர். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுத்திலிருந்து பெறப்பட்ட வார்த்தையான “அனுசீலன் சமிதி’’ என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டது. இதில் அரவிந்த் கோஷ், பரித்திர கோஷ், சி.ஆர்.தாஸ், ஜதீன் பானர்ஜி ஆகியோர் அங்கம் வகித்தனர். இத்தகைய குழுக்கள் இந்துமத அடையாளங்களை மட்டுமே உயர்த்திப்பிடித்தது இதற்குள் இருந்த பல புரட்சியாளர்களை யோசிக்க வைத்தது. அனைத்து மத மக்களும் கலந்து வாழும் இந்த நாட்டின் மதசார்பற்ற பதாகையை உயர்த்திப்பிடிக்க முயன்றனர்.

1905 இல் நடந்த வங்கப்பிரிவினை இந்த புரட்சியாளர்களை மிகவும் சினம்கொள்ளச் செய்தது. 1907 டிசம்பர் 23 இல் குதிராம் போசும், பிரபுல்ல சகியும் வங்கப்பிரிவினைக்கு காரணமான கிங்ஸ் போர்டு என்ற ஆங்கிலேய அதிகாரிக்கு  குண்டு வைத்தனர். 1908 இல் சசீந்திரநாத் சன்யால் பனாரசில் இளைஞர்களை திரட்டும் அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றினார். ஹர்தயால் 1913 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து “கதார்’’ என்ற பத்திரிகையை துவக்கினார். பின்பு இந்த பெயரில் இயக்கம் துவக்கப்பட்டு கத்தார் சிங் சராபா என்ற இளம் புரட்சியாளனை கொடுத்தது. இந்த அமைப்பு முன்பு இருந்த அமைப்புகளை எல்லாம் விட மதசார்பற்ற தன்மையை வலியுறுத்தியது. மேற்கொண்ட குழுக்கள் எல்லாம் தங்களுடைய ஊழியர்களுக்கு தொடர்ந்து அரசியல் வகுப்பை நடத்தினர். குறிப்பாக கல்கத்தா அனுசீலன் சமிதி அலுவலக நூலகத்தில் 4000 புத்தகங்கள் இருந்தது. இந்த நூல்கள் தேசபக்த உணர்வையும், தியாக உணர்வையும், அடிமைத்தனத்தின் மீது வெறுப்பையும் தூண்டின. முந்தைய புரட்சிகள் மற்றும் விடுதலை போராட்டங்கள் மற்றும் படிப்பினைகளை போதித்தன. இறுதியாய் பிரிட்டிஷ் இந்தியாவை ஆக்ரமித்திருப்பதால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவு மற்றும் துன்பத்தை விளக்கின.

மாற்று தடத்தில்...
இதற்கிடையில் 1919 இல் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடக்கின்றது. இதனையட்டி புரட்சியாளர்கள் கோபம் அதிகரிக்கிறது. இந்நேரத்தில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவிக்கிறார். இதற்கு புரட்சிகர குழுக்களின் ஆதரவை கோருகிறார். 1921 இல் சி.ஆர்.தாஸ், காந்திக்கும் புரட்சியாளர்களுக்குமிடையே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார். இதில் காந்தியின் வேண்டுகோளை ஏற்று புரட்சியாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாய் ஓராண்டு தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள சம்மதிக்கின்றனர். மக்கள் அமோக ஆதரவளித்த ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது. உண்மையில் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்துக் குழுக்களும் ஒன்றாய் முழுமனதுடன் ஈடுபட்ட இயக்கமாய் முதலும் கடைசியுமாய் இதுவே இருக்கக்கூடும்.

ஆனால், 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி சௌரி சௌராவில் நடந்த சம்பவத்தை காரணம் காட்டி,  புரட்சிகர குழுக்கள் மிகவும் எதிர்பார்த்த ஒத்துழையாமை இயக்கம் காந்தியால் வாபஸ் பெறப்பட்டது. இது இளம் புரட்சியாளர்கள் மத்தியில் மிகவும் அவநம்பிக்கையை விதைத்தது. இனி காங்கிரஸை நம்பி பயன் இல்லை என முடிவு செய்தனர். உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப்பை சார்ந்த புரட்சிகர இளைஞர்கள் 1924 ஆம் ஆண்டு இந்துஸ்த்தான் குடியரசு கழகம் என்ற அமைப்பை தோற்றுவித்தனர். 1925 ஆம் ஆண்டு இவர்களின் கட்சி அறிக்கையான “தி ரெவல்யூசனரி’’ அவர்களது தத்துவார்த்த நிலைபாட்டை விளக்கியது. மனிதனை மனிதன் சுரண்டுவதை சாத்தியமற்றதாக்குவது பற்றியும், பெரிய பொதுப்பணிகளையும் தொழிற்சாலைகளையும் தேசியமயமாக்குவது பற்றியும், தனியார் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத தொழில்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைக்க வேண்டும் என்றும், மதவாதம் அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்றும் வர்க்க அரசியலை சோசலிசம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் பேசியது.
இந்துஸ்தான் குடியரசு கழகம் ஏகாதிபத்திய அரசை ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் தூக்கிஎரியவேண்டுமென மக்களை அழைத்தனர். “வாளின் நியாயம் தவிர அவர்கள் இந்தியாவை ஆள்வதற்கு வேறு நியாயம் இல்லை, எனவே புரட்சிகர கட்சி வாளை ஏந்தியுள்ளது. ஆனால் புரட்சிக்கட்சியினுடைய வாளின் முனை கருத்துகளைத் தாங்கியுள்ளது’’

இந்த காலகட்டத்தில் இவர்கள் பல செயல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக காகோரியில் நடந்த சம்பவம் இவர்களை பிரபலப்படுத்தியது. ஆனால் அதுவே இவர்களின் செயல்பாடு முடங்கவும் காரணமாய் இருந்தது. அமைப்பின் முக்கிய தூண்கள் சன்யால் உட்பட பலர் கைதாயினர் அல்லது தலைமறைவாயினர். இயக்கத்தின் மிக முக்கிய புள்ளியான அசாபுல்லாகான் 1927 இல் தூக்கிலிடப்பட்டார்.

பஞ்சாப்பின் பொறி...
1919 இல் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்த போது இளம் மாணவனாய் இருந்த, பின்பு பஞ்சாப்பில் லாகூர் நேஷனல் கல்லூரியின் முன்னால் மாணவனய் மாறிய, இன்றைய வரலாற்றின் நாயகன் பகத்சிங், தீவிர தேசிய இயக்கத்தை தத்துவார்த்தப் பாதையில் செலுத்த 1926 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நவஜவான் பாரத் சபா என்ற இயக்கத்தை துவக்க காரணமாயிருந்தார். பகவதிசரண் வோரா, தன்வந்தரி, ஈசான் இலாஹி உள்ளிட்ட பலர் அவருக்கு உறுதுனையாய் இருந்தனர். ராம் சிங் தலைவராகவும், பகத்சிங் செயலாளராகவும், பகவதிசரண் வோரா கொள்கை பரப்புச் செயலாளராகவும் பொறுப்புவகித்தனர். இவர்களது கொள்கையாக (1) மொத்த இந்தியாவிலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முழு சுதந்திர குடியரசை நிறுவுவது. (2) ஒன்றுபட்ட தேசத்தை உருவாக்க நாட்டின் இளைஞர்கள் மத்தியில் தேசபக்த உணர்வை உருவாக்குவது (3) தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணிதிரட்டுவது (4) இந்த லட்சியங்களுக்கு உதவும் மதசார்பற்ற இயக்கங்களுடன் ஒத்துழைப்பது. (5) அனைத்துவித ஏகாதிபத்திய சக்திகளையும் எதிர்ப்பது.

எந்த லாலாலஜபதி ராய்க்காக பின்னாளில் பகத்சிங் ஆங்கில அதிகாரி சாண்ட்ரஸனை கொலை செய்தாரோ அந்த லஜபதிராயை அவர் கண்டித்த சம்பவமும் நடந்தது. காரணம் அவர் இந்து மகா சபையுடன் கூட்டு வைத்த காரணத்தால். அந்த அளவு மதவாத அமைப்புகளை நவஜவான் பாரத் சபா எதிர்த்தது. பின்னாளில் இந்த அமைப்பு பஞ்சாப்பின் பெருமைமிகு அடையாளமாக மாறியது. காங்கிரசுக்கு மாற்றாய் பிரம்மாண்டமான மக்களை திரட்டும் சக்தியாய் எழுந்தது. அதே நேரம் பகத்சிங் தேசிய அளவில் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட துவங்கினார்.
தேசம் தழுவிய இயக்கத்திற்காக..
இந்துஸ்தான் குடியரசு கழகம் காகோரி சதிவழக்கால் பலவீனமான  காரணத்தால் அதை சக்திமிக்கதாக்க முயற்சி செய்தனர். அதன் அனுபவமிக்க புரட்சியாளர்கள் பலர் சிறையிலிருந்தனர். எஞ்சியவர்கள் கைதிலிருந்து தப்ப தலைமறைவாகயிருந்தனர். இந்த நிலைமையில், அந்த அமைப்பின் இளம் உறுப்பினர்களான பகத்சிங், சுகதேவ், சிவவர்மா, சந்திர சேகர ஆசாத் மற்றும் விஜயகுமார் சின்கா ஆகியோர் இயக்கத்தை கட்டமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

பகத்சிங், வி.கே சின்கா ஆகியோர் உத்தர பிரதேசம், பிகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு ஆதரவு திரட்ட சுற்றுப்பிரயாணம் செய்தனர். 1928 செப்டம்பர் 8,9 தேதிகளில் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் கட்சியின் மத்திய குழு அமைக்க நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேசம், பிகார், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் கட்சியின் பெயரில் சோசலிசம் சேர்க்கப்பட வேண்டும் என சுகதேவ் மற்றும் பகத்சிங் காரணங்களுடன் விளக்க, கூட்டம் ஒப்புக்கொண்டது. அன்று முதல் இயக்கம் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு கழகம் என அழைக்கப்பட்டது. ஏதோ பெயரில் மட்டுமல்ல பண்பு நிலையில் கூட சுகதேவும் பகத்சிங்கும் பலமாறுதல்களை கொணர்ந்தனர். சுகதேவ் கம்யூனிஸக் கருத்துக்களை ஊன்றிப் படித்தவர். சொல்லப்போனால் சுகதேவும், வி,கே.சின்காவுமே கட்சியினுள் தத்துவார்த்த பணிகளை மேற்கொண்டவர் ஆவார்கள். இவர்களது லட்சியம் சோசலிச இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவதே. 

இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு கழகம் அமைக்கப்பட்ட 1928 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் புயல் மையம் கொண்ட ஆண்டு. ஏனெனில் அப்போதுதான் சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்தது. இந்தியர்களின் தகுதியை சோதிக்க வந்த அந்த கமிஷனுக்கு எதிராக இந்திய நாடு கிளர்ந்தெழுந்தது. ஏகாதிபத்திய அடக்கு முறை காரணமாய் லாகூரில் தடியடியில் லாலா லஜபதி ராய் மரணமடைந்தார். இந்த மரணத்தை இந்தியா சகித்துக்கொண்டிருக்காது என்பதை காட்ட இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு கழகம் எதிர்வினைக்கு திட்டமிட்டது. பகத்சிங், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோர் தடியடிக்கு காரணமான அதிகாரி சான்ட்ரஸனை கொலைசெய்வது என முடிவு செய்யப்பட்டது. லாலா இறந்த 28 ஆம் நாள் 1928 டிசம்பர் 17 ஆம் தேதி அந்த தீர்ப்பு எழுதப்பட்டது. சாண்டரசின் பிணத்தின் மீது பறந்த நோட்டீஸ் இப்படி இருந்தது. “ஒரு மனிதனின் ரத்தத்தை சிந்த செய்ததற்காக நாங்கள் வருந்துகிறோம். ஆனால் புரட்சியின் பீடத்தில் இரத்தபலி கொடுக்கவேண்டியுள்ளது. மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முடிவு கட்டும் புரட்சியே எங்கள் குறிக்கோள். இந்த கொலை மூலம் லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு பதில் சொல்லியுள்ளோம்’’

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொண்டுவந்த பொதுபாதுகாப்பு மசோதாவும், தொழில் தகராறு மசோதாவும் இந்தியர்களை மேலும் அடிமைப்படுத்த வந்த மசோதாக்கள் எனவே அதை எதிர்ப்பது, மசோதா தாக்கல் ஆகும் நாளில் நாடாளுமன்றத்தில் ஜெயதேவ் கபூரும், பி.கே.தத்தும் குண்டு வீசுவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் சுகதேவ் ஏன் பகத்சிங் அதில் பங்கெடுக்க வேண்டும் என விளக்கினார். நமது லட்சியத்தை பகத்சிங்கைவிட யாராலும் மக்கள் மத்தியில் விளக்கிட முடியாது என்பதை எடுத்துச்சொல்லி பகத்தையும், பி.கே. தத்தையும் குண்டுவீச அனுப்பினார். 1929 ஏப்ரல் 8 ஆம் தேதி  நாடாளுமன்றத்தில் எழுந்த குண்டின் ஓசை இன்றுவரை பல கேள்விகளை எழுப்பிக்கொண்டிருப்பதை நாடு அறியும். குண்டுகளை வீசி விட்டு ஓடாமல் ஏகாதிபத்தியம் ஒழிக! புரட்சி ஓங்குக! என முழக்கமிட்டு கைதாயினர். பலர் கைது செய்யப்பட்டனர். பின் விசாரணை நாடகம். இறுதியில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்படது.

1907 செப்டம்பர் 27 இல் பஞ்சாப் மாநிலம் நவான் சாகர் மாவட்டத்தில் பிறந்த பகத்சிங்கும், 1907 மே மாதம் 15 ஆம் தேதி அதே மாநிலம் லூதியானாவில் பிறந்த சுகதேவும், 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் பூனே நகரில் பிறந்த ராஜகுருவும், ஒரே தினத்தில் 1931 மார்ச் 23இல் மரணத்தை கண்டு அஞ்சாத செருக்கோடு, உலகை வென்றுவிட்ட மிடுக்கோடு, மரணம் அச்சப்படும் உறுதியோடு முஷ்டியை உயர்த்தி இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டு தூக்கு கயிற்றை முத்தமிடச் சென்றனர்.

இந்திய இளைஞர்களின் கதாநாயகர்களாய் உயர்ந்துவிட்ட பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் இந்திய புரட்சிகர இயக்கத்தை மக்கள் ஜனநாயகப் பாதையில் திருப்புவதை வெற்றிகரமாக செய்தவர்கள். சோசலிசம் ஒன்றே மாற்று என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். மதவாதத்தை வேறோடும் வேறடி மண்ணோடும் சாய்க்க உழைத்தவர்கள். அவர்களது கனவு கானல் நீராக மாறாமல் இருப்பது யார் கையில் இருக்கிறது?

எனவே..
இந்தியாவின் ஆளும் வர்க்கம் முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. முதலாளிகள் என்றால் 1991 ஆம் ஆண்டுக்கு இதில் உலக முதலாளிகளும் அடக்கம். அதாவது உலகமய உடுக்கடிக்கு ஆடத்துவங்கிய பின்பு. உலகமயத்தை இந்தியாவில் அமலாக்க “நான் வளர்கிறேனே மம்மி’’ என்ற விளம்பரம் போல இந்தியா வல்லரசாகப் போகிறது என்று மாறிமாறி ஆட்சியாளர்கள் பயாஸ்கோப் காட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் வறுமை குறைந்துகொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. குறைவது காட்டு எருமையா அல்லது மக்கள் வறுமையா என்று கேள்வி கேட்பவர்கள் ஞானசூன்யங்கள். 6.5 கோடிபேர் மட்டுமே வறுமைகோட்டுக்கு கீழே உள்ளதாக அரசு கண்டுபிடித்துள்ளது. என்ன அளவுகோல் என கேட்கிறீர்களா? கிராமப்புறத்தில் ஒருவர் 11 ரூபாய் 80 காசு சம்பாதித்தால் அவர் வறுமை கோட்டுக்கு கீழ். 18 ரூபாய் சம்பாதித்தால் அவர் வறுமை கோட்டுக்கு மேல், நகர்புறத்தில் இதன் எல்லை 17ரூபாய் 80 காசு. அதாவது 20 ரூபாய் விற்பனையாகும் தோசையை உண்டால் நீங்கள் வறுமைகோட்டுக்கு மேலே! எப்ப்பூடி!?

அறிவின் அடையாளம் தெரியாத இந்த கணக்கீட்டால் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமை கோட்டுக்கு மேலே உள்ளனர். ஆனால் பொருளாதார வல்லுநர் அர்ஜுன் சென்குப்தா தலைமையிலான “அமைப்பு சாரா தொழில்துறை பற்றிய தேசிய ஆணையம்’’ நமது நாட்டில் 83 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாயில் குடும்பம் நடத்துவதாக சொல்கின்றது. மருத்துவம், உணவு, வீடு என எல்லாமும் இதில்தான். உலகின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளவர்கள் இருக்கும் நாட்டில்தான் இதுவும். ஏன்?
சமச்சீர் கல்வி கேட்டால் கிண்டலடிக்கிற அல்லது தடியால் அடிக்கின்ற, சுகாதாரம் வேண்டும் என்றால் காப்பீடு திட்டம் போட்டு ஏமாற்றுகிற, வேலை கேட்டால் முதியோருக்கு வேலைவாய்ப்பு தரும் மாநில அரசும், ஓய்வு பெரும் வயதை அதிகரிக்கும் மத்திய அரசும் ஆள்கிற நாட்டில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு என்ற வார்த்தைகளை பெயராய் மட்டும் பார்த்து நினைவஞ்சலி செலுத்தப் போகிறோமா? அல்லது அவர்கள் வரலாற்றுப் பின்னணியில் கற்றுக்கொண்டு மக்களிடம் கொண்டுசெல்ல முயற்சித்த, அதற்காக தியாகம் செய்த சோசலிசம் என்ற பதாகையால் மாற்றம் கொண்டுவர உழைக்கப்போகிறோமா? விடை சொல்ல வேண்டியது உங்கள் கடமை.

2 comments

  1. Anonymous Says:
  2. A very good article.Mahatma Gandhi totally refused to rescue the THREE REVOLUTIONARIES FROM THE British government's death penalties .That important matter and points must also be mentioned everywhere.They are the inspiration of the nation.
    The article could be reduced to half size in contentions.The blog articles if exceeds the size it will create a mentality among the readers to postpone reading.Nice article. vimala vidya

     
  3. Unknown Says:
  4. அற்புதமான பதிவு...தோழா!
    தொடரட்டும் உங்கள் பணி.....!!!!
    சந்திப்போம்.

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark