மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

1948 இல் அதாவது திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு, வைக்கோலின் மீது வைரமாய் ஏசுபிரான் பிறந்த நாள் என்று கிருத்துவர்கள் நம்பும் கிருஸ்துமஸ் தினத்தில்... ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேலூர் ஒன்றியத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் அரைப்படி நெல்லை கூலியாக உயர்த்திக் கேட்ட தலித் மக்கள் செங்கொடியின் தலைமையில் போராடிய காரணத்தால், 44 மனித உயிர்களை கோபாலகிருஷ்ன நாயுடு என்கின்ற நிலபிரபுகளின் தலைவன் எரித்துக்கொன்ற கொடூரம் நடந்தது. அன்று வைத்த நெருப்பின் மிச்சம் இன்றும் வெவ்வேறு வடிவங்களில் எரிந்துக்கொண்டிருக்கிறது.

கூலி உயர்வு என்ற வர்க்கப் போராட்டம் சாதியவிடுதலையுடன் இணைக்கப்பட்ட தஞ்சையில் சாணிப்பால் சவுக்கடியை எதிர்த்து தலித் மக்கள் தொடர்ந்து போராடினர். அடித்தால் திருப்பி அடி என்ற கோஷத்தை வத்த செங்கொடி இயக்கம் அன்று முதல் இன்று வரை தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராடி வருகிறது. இடதுசாரி இளைஞர் இயக்கமான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அந்த வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தில் இன்றூம் தொடர்கிற தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தை அறிவித்தது. அறிவிப்பு செய்தி (தீக்கதிர் மற்றும் தினத்தந்தி) அதற்கு கலைஞர் விடுத்துள்ள அறிக்கை இரண்டையும் உங்கள் பார்வைக்கு...


சென்னை, டிச. 23 -
வெண்மணி தியாகிகள் நினைவு தினமான டிசம்பர்25 அன்று தீண்டாமைக்கு எதி ராக 31 இடங்களில் ஆலய நுழைவு உள்ளிட்ட நேரடி நடவடிக்கைகளில் ஈடு படப்போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக புதன ன்று (டிச.23) சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:

தமிழகத்தில் 7ஆயிரம் கிராமங்களில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது என்று அரசே ஒப்புக் கொண்டுள் ளது. ஆலயங்களுக்குள் செல்ல தடை, திருவிழாவில் பங்கேற்க தடை, தேநீர் கடை களில் இரட்டைக் குவளை முறை, பொதுப்பாதையில் நடக்கத் தடை, செருப் பணிந்து நடக்க தடை, குளத்தில் குளிக்க தடை, குடி நீர் எடுக்கத் தடை, பொதுக் கடையில் முடிவெட்டிக் கொள்ள தடை, சைக்கிளில் செல்ல தடை, மயான பாதை யில் செல்ல தடை, மயானத் திற்கு ஒதுக்கிய இடம் ஆக் கிரமிப்பு என எண்ணற்ற வடிவங்களில் தீண்டாமை நிலவுகிறது. நகரங்களில் கூட வாடகை வீடு பெறு வது இயலாததாக இருக் கிறது.

ஆகவே, மாநில அரசு தீண்டாமையை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பொது நடவடிக்கைகளிலும் தலித் மக்களை அனுமதிக்க வேண் டும். வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் முழுமையாக அம லாக்க வேண்டும். சிறப்பு உட்கூறு திட்ட நிதியை முழுமையாக செலவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகி றது. 44 விவசாய தொழிலா ளர்களான தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்ட வெண்மணி நினைவு நாளான டிசம்பர் 25 அன்று 21 இடங் களில் நேரடி நடவடிக்கை யும், 10 இடங்களில் ஆர்ப் பாட்டமும் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை ஈஸ்வரன்கோவில் ஆலய நுழைவு போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ் பாபுவும், புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமரவாதி, கோவ னூர் பகுதிகளில் பொதுக் குளத்தில் குளிக்கும் போராட் டத்திற்கு செயலாளர் எஸ். கண்ணனும், திருப்பூர் வேலம் பாளையத்தில் மயானத் திற்கு பாதை கேட்டு நடை பெறும் போராட்டத்திற்கு பொருளாளர் எஸ்.முத்துக் கண்ணனும் தலைமை தாங்கு கின்றனர். மதுரை ஆர்ப்பாட்டத் தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், வடசென் னையில் எஸ்.கே. மகேந்திரன் எம்எல்ஏ உள் ளிட்டோர் கலந்து கொள் கின்றனர்.

ஆலய நுழைவு போராட் டம், மயான ஆக்கிரமிப்பை அகற்றுதல், செருப்பணிந்து செல்லுதல், பொதுக்குளத் தில் தண்ணீர் எடுத்தல், அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது, பொதுக் கடையில் சென்று முடி வெட்ட கோருவது, கழிப் பிடத்திற்குள் செல்வது, மாநகராட்சி சமூக நலக் கூடத்தை திறந்து விடுதல் என போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ஈரோடு மாவட்டம் நசியனூர், தொகுப்பு வீடு கட்ட ஒதுக்கிய தொகையை திருப்பி அனுப்பிய பஞ் சாயத்து தலைவரை கண்டி த்தும், சுடுகாடு ஆக்கிர மிப்பை எதிர்த்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் நடைபெறுகிறது.

இச் செய்தியாளர் சந்திப் பின் போது மாநிலத் தலை வர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள் ளிட்ட தலைவர்கள் உட னிருந்தனர்.




ஆலய நுழைவுப்போராட்டம் வேண்டாம்


பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சியினரும் விரைவில் முயற்சி மேற்கொள்வோம்

கம்ïனிஸ்டு கட்சி நடத்தவுள்ள ஆலய நுழைவுப்போராட்டம் வேண்டாம் என்றும், பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சியினரும் விரைவில் முயற்சி மேற்கொள்வோம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

பெங்களூருக்கு சென்றுள்ள முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உரிமை இல்லை
`சற்றே விலகியிரும் பிள்ளாய்; சன்னிதானம் மறைக்கிறது' என்று ஆண்டவனிடத்தில் ஆதி திராவிடர் குலத்து நந்தன் முறையிட்டு அதற்கிணங்க அவருக்கு வழிவிட்டான் ஆண்டவன் என்பது பழைய புராணம். பக்தர்களின் வேண்டு கோளுக்கிணங்க நந்தியை விலகி நிற்கச் சொன்னதில்லை ஆண்டவன் "நந்தா அருகில் வா; நீ வருவதற்கு எந்தத் தடையும் இல்லை'' என்று நந்தனை அழைத்து ஆண்டவன் ஆசி கூறவில்லை. அவர் அந்தக் காலத்து ஆண்டவன். ஆனால் இந்தக் காலத்தில் நந்தனை உள்ளே நுழையாதே; என் அருகில் வராதே என்று உத்திரவிட சட்டப்படி எந்த ஆண்டவனுக்கும் உரிமை இல்லை.

ஆண்டவன் அருகில் நின்று அவனுக்கு அர்ச்சனை செய்யும் உரிமையையும் தி.மு.கழக அரசு பெற்றுத் தந்துள்ளது. ஆனால் அரசியல் சட்டமே ஏற்றுக் கொண்டுள்ள நிலைக்கு மாறாகவும், ஆன்றோரும், சான்றோரும் அறிவியக்கப் பெரியவர்களும், ஆன்மீகப் புரட்சியாளர்களும் ஏற்றுக் கொண்டு சர்வேஸ்வரனை வணங்கவும் துதித்துப் பிராத்திக்கவும் - சம உரிமை அனைவருக்கும் உண்டு என்ற நிலை நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் காலக்கட்டத்திலும் "இது தகுமா முறையா; இது தர்மம்தானா'' என்று ஐதீகபுரியின் வைதீகக் கொள்கையினர் சிலர்; இன்னமும் ஆலயத்திற்குள் அனைவரும் நுழையலாம் எனும் அறிவியக்கக் கொள்கைக்கு மாறாக மனிதரில் ஒரு பகுதியினரை "இவர் தொடத்தகாதவர்.... ஆண்டவனை தொழத்தகாதவர்'' எனும் அநீதியைக் கடைபிடிப்பது 21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்றதுமல்ல; இறைவனிடம் கையேந்தி எதிர்பார்க்கும் வரமும் அல்ல.
புத்தியை தீட்டு

இதனை பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் - அண்ணாவின் சிந்தனைப் பாசறை - அண்ணல் அம்பேத்கரின் சமுதாயத் தத்துவம் - அண்ணல் காந்தியடிகளின் சாதி ஒழிப்புப் பிரகடனம் ஆகிய அரிய லட்சியங்கள் வழிவந்த நாம் சாதி, மத வேறுபாட்டால் விளைவிக்கும் கொடுமைகளை ஏற்றுக் கொண்டதுமில்லை, அவற்றை அனுமதித்ததுமில்லை.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உரமேறிப் போயும் வைரம் பாய்ந்தும் மணலாக இருந்து கெட்டிப் பாறை போல் ஆகிவிட்டதுமான சாதி, மத வேறுபாட்டுக் கொடுமைகளையும் அவற்றால் விளையும் மூடநம்பிக்கைக் கேடுகளையும் ஒரு நொடியில் அணுகுண்டு வீசி அழித்து விடுவது போல் அழித்துவிட இயலாது. அதனால்தான் கேடுகளைக் களைய "கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு'' என்று அண்ணா உரைத்திட்டார்.

தேவைதானா?

திரேதா யுகத்தில் இருந்து இந்த தீய சாதி, மத வேறுபாட்டுக் கொடுமை இருந்துதான் வருகின்றது. ஏதோ திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்தான் புதிதாக முளைத்ததாகக் கருதக் கூடாது. அதற்காக எப்படியோ முளைத்திட்ட இந்தக் கொடுமைக்கு நடைபாவாடை விரித்து பூர்ண கும்ப மரியாதை செலுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசு சொல்லவில்லை. அப்படி சொல்பவர்களை கண்டிக்கத் தவறியதுமில்லை.

சாதி, மத வேறுபாட்டுக்கு சந்தனம் பூசுவது யாராயினும் அவர்களை சட்டம் அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்து, ஆட்சி நடத்தும் நமக்கு சங்கடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல, அந்தக் கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என்று இப்போது திடீரென நினைத்துக் கொள்பவர்களைப் போல ஆலயங்கள் சிலவற்றில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது தேவைதானா என்பதை சிந்தித்து ஒருமித்த கருத்தோடு ஒழித்திடுவோம் சாதி, மத வேற்றுமையை என ஓரணியில் திரண்டு நின்று ஒலித்திடுவதே துளியும் வன்முறைக்கு வழிவகுக்காத நன்முறையாகும்.
முயற்சி மேற்கொள்வோம்

ஆலய நுழைவுக்காக போராட்டம் நடத்துவோராயினும் அதை எதிர்க்கும் வைதீகக் கூட்டத்தினரா யினும்; அறவழியில் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள சட்ட ரீதியான அணுகு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சமத்துவத்துக்கு ஆலயங்களிலும் வழிவிடுங்கள் என்றும் ஆத்தீகப் பெருமக்களையும் போராட்டத் தைத் தடுக்கும் முயற்சியிலும் அதை மீறி உள்ளே நுழையும் முயற்சியில் ஈடுபடும் இருசாராரையும் வன்முறைக்கு வழிகோல வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆலய நுழைவுப் போராட்டத்தின் தத்துவத் திற்கு இந்த அரசு முரணானதல்ல; அதே நேரம் ஐதீகம் என்ற போர்வையால் பகுத்தறிவைப் பாழ்படுத்தி பள்ளத்தில் புதைக்கும் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே இந்த சமுதாயப் பிரச்சினையில் சகலரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சமரச முடிவு காண்பதற்கு பொதுவுடமைக் கட்சியினர் மேற் கொள்ளும் இந்தப் போராட்டம் ஒரு தூண்டுகோல் என்ற அளவோடு இருக்குமேயானால் அதில் அரசுக்கு மறுப்பு ஒன்றுமில்லை; சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பை இந்த அரசிடம் தந்துள்ள மக்களில் ஓர் அங்கம்தான் ஆலய நுழைவுக் கிளர்ச்சியில் ஈடுபடுவோரும் என உணர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அரிதாகக் கிடைத்துள்ள இந்த ஓய்வை ஓரிரு நாட்களில் முடித்துக் கொண்டு திரும்பியவுடன் இதற்குத் தீர்வுகாண அனைத்துக் கட்சியினர் சேர்ந்து முயற்சி மேற்கொள்வோம்
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியிருக்கிறார்

1 Responses to டிசம்பர் 25 ஆலய நுழைவு போராட்டம். இரண்டு பத்திரிக்கை செய்திகள்

  1. நல்ல தகவல்கள். பகிர்தலுக்கு நன்றி.

    - பொன்.வாசுதேவன்

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark