மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

அது என்ன?

Posted by நட்புடன் ரமேஷ் Tuesday, November 17, 2009 ,


மனிதர்கள் அவசரமான வாழ்க்கைக்கு பழகிக்கொண்டிருக்கும் உலகில், நுட்பமான உணர்வுகள், பாசம், தனிமை, ஏக்கம், உறவுகளுக்கான துடிப்பு, ஆத்மாத்தமான நட்பு என்பவைகள் எல்லாம் கேள்விக் குறியாக மாறிக்கொண்டிருக்கிறது.தன் அளவில் மனிதநேயத்திற்காக ஏங்கும் மனித வாழ்க்கை சுற்றும் முற்றும் பார்க்க மறுக்கிறது. பிழைப்புக்கான வாழ்வாதார போட்டியை உலகமயம் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது நம்பிக்கை உள்ளவர்களின் கடவுள் போல..
நீங்கள் செல்லும் சாலைகளில், பேருந்தில், மின்சார தொடர்வண்டியில், திரையரங்குகளில் சோகத்தை மறைக்கும் சுருக்கம் விழுந்த முகங்களுடன், நரைகூடி, கண்களில் மெல்லிய தேடல் கொண்ட வயதானவர்களை சந்தித்திருக்கிறீர்களா? அப்போது உங்களுக்கு என்ன தோன்றும்? உங்களது வயதான பெற்றோர்கள் நினைவுக்கு வருவார்களா? அல்லது வெற்றிலைக் கறைபடிந்த அல்லது மூக்குப்பொடியின் வாசம் கமழும் அல்லது திருநீரின் வாசம் நிரம்பிய உங்கள் பிரியமான தாத்தாவை ஏன் அப்பா நம்முடன் வைத்துக்கொள்ள மறுக்கிறார் என்ற எண்ணம் உதித்ததுண்டா? வயதானவர்களின் ஏக்கம் எப்படிபட்டது என்று ஒரு கணமேனும் உங்கள் நினைவுகளில் அசைபோட நேரம் ஒதுக்குவீர்களா? ஆம் எனினும் இல்லை எனினும் உங்களுக்காகத்தான் இந்த வாட் இஸ் தட்? அது என்ன?
**********
சமீபத்தில் என்னுடைய ஆர்குட் வலைதளத்தில் அரவிந் மணி என்ற நண்பர் ஒரு வீடியோக் காட்சியை அனுப்பி இருந்தார். அது மூன்று நிமிடங்கள் மட்டுமே ஓடும் கிரேக்க குறும்படம். 2007ல் வெளிவந்தது. படத்தின் பெயர் ‘அது என்ன? (வாட் இஸ் தட்)’.
ஒரு படைப்பு அல்லது படைப்பாளி எங்கு வெற்றியடைகிறான் எனில் அவனது படைப்பை வாசகன் அல்லது ரசிகன் பார்த்து அல்லது படித்து முடித்ததும் அவனுக்கு அந்தப் படைப்பில் பேச நிறைய இடம் இருக்க வேண்டும். அதாவது பார்வையாளனை அவனது படைப்பு சார்ந்த பங்கேற்பாளனாக உள்ளடக்க வேண்டும். பார்வையாளனுக்கும் அந்தப் படைப்பில் பேச மிச்சம் வைக்க வேண்டும். உலகின் சிறந்த படைப்புகளில் எல்லாம் இது நிகழ்ந்துள்ளது.
60 - 70 ஆண்டுகளை இந்த மண்ணில் கழித்த, தனது அனுபவத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்களை கடந்துவிட்ட வயதான மனிதனுக்கு என்ன வேண்டும்? நம்மால் ஆயிரம் பொருட்களை வாங்கிக்கொடுக்க முடிந்தாலும் அவர்களுக்கானது அதுவல்ல. குளிரூட்டபட்ட அறையும் தொலைகாட்சிப்பெட்டியும் அவர்களது தனிமையைப் போக்கிடுமா? இல்லை... அவர்களுக்குத் தேவை, தனது வளர்ந்துவிட்ட குழந்தைகளுடன் தினமும் கொஞ்ச நேரம் பேசவேண்டும் அவ்வுளவுதான். மூன்று மணிநேரம் ஒரு திரைப்படம் சொல்லுவதை இந்தப் படம் ஐந்து நிமிடங்களில் சொல்லி அந்த வெற்றியைப் பெறுகிறது. வாருங்கள் படத்தினுள்..
***********
ஒரு சுவற்றின் மீது கேமிரா மெல்ல மெல்ல நகரும். சுவற்றின் இறுதியில் ஒரு பச்சைநிறக் கதவு, அங்கிருந்து கேமிரா தூரத்தில் தோட்டத்தின் சிமெண்ட் பலகை மீது இருவர் அமர்ந்திருப்பதைக் காட்டும். அடுத்த காட்சி ஒரு முதியவரின் முகம் அருகாமைக் காட்சியாக காட்டப்படும். அதே போல பாதிமுகம் தெரிய ஒரு இளைஞன் செய்தித்தாள் படித்துக்கொண்டிருப்பான். அடுத்த காட்சியில் முதியவரும் இளைஞனும் அமர்ந்திருப்பார்கள். அவர்களின் வலதுபுறம் கேமிரா நகரும். ஒரு செடி. அந்த செடியின் மீது ஒரு குருவி வந்து அமரும்.
அந்த முதியவர் கேட்பார் "அது என்ன"?
செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும் அவரது மகன் முகம் திருப்பி அந்தக் குருவியைப் பார்த்து "அது சிட்டுக்குருவி" என்று சொல்லிவிட்டு மீன்டும் செய்தித்தாளில் முகம் புதைப்பான்.
அடுத்து அருகாமைக் காட்சியாக அந்த சிட்டுக்குருவி வந்து போகும். குருவியின் பின்னாலிருந்து குருவியும் அந்த இருவரும் சேர்த்து காட்சியாக்கப்படுவர்.
மீண்டும் அந்த முதியவர் கேட்பார் "அது என்ன''?
கொஞம் அலுப்புடன் அவரது மகன் "இப்பதானே சொன்னேன்.. அது சிட்டுக்குருவி" என கூறிவிட்டு செய்தித்தாளை உதறி மீண்டும் படிக்கத்துவங்குவான்.
அந்த குருவி மேலே எழுந்து பறக்கத்துவங்கும். நிமிர்ந்து பார்க்கும் முதியவர் வெய்யிலுக்கு நெற்றியில் கைவைத்து அதை பார்த்துக்கொண்டிருப்பார். அது அவர்களது இடப்புறம் சென்று அமரும்.
அந்த முதியவர் மீண்டும் கேட்பார் "அது என்ன"?
கொஞ்சம் எரிச்சல் மற்றும் கோபத்துடன் அவரது மகன் "சிட்டுக்குருவிப்பா அது சிட்டுக்குருவி சி.ட்.டு.க்.கு.ரு.வி..."
அந்த முதியவரின் சோகமான முகம் அருகாமைக் காட்சி.
அவர் மீண்டும் கேட்பார் "அது என்ன"?
கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் அவரது மகன், முகம் சிவக்க "என்ன செய்றீங்கன்னு தெரியுதா? நான் எத்துணைவாட்டி சொல்லுறேன்... அது சிட்டுகுருவின்னு.. நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா" அவன் உச்சஸ்தாயில் கத்த..
அவர் சோகமாக எழுவார், தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடக்கத் துவங்குவார். நொடிப்பொழுதில் கொஞ்சம் நிதானித்த அவன் அவரைப் பார்த்து "எங்க போறீங்க"? என்பான்
அவர் அவனை நோக்கித் திரும்பாமல் பொறு என்பது போல சைகைகாட்டி வீட்டை நோக்கிச் செல்வார்.
அங்கு இருந்த சிட்டுக்குருவி பறந்து செல்லும். அது இல்லாத அந்த இடம் வெறுமையாய் இருக்கும். தான் அப்படி கோபப்பட்டிருக்க வேண்டாமோ என்று அவன் யோசிக்கும் போது அவனது தந்தை கையில் ஒரு டைரியுடன் வருவார். அவன் அருகில் அமர்ந்து அதில் ஒரு பக்கத்தைத் தேடி அவனிடம் கொடுத்து படிக்கச் சொல்லுவார். இடது புறத்திலிருந்து இருவரின் முகமும் அருகாமைக் காட்சியாக திரை முழுவதும் தோன்றும்.
அவன் மௌனமாய்ப் படிக்க அவர் "சத்தமாய் படி" என்பார்.
அவன் அந்த பக்கத்தை படிக்க துவங்குவான். இன்று என் செல்ல மகனுக்கு மூன்று வயது. என்னுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான். எங்கள் முன்னால் ஒரு சிட்டுக்குருவி. எனது மகன் அது என்னவென்று தொடர்ந்து இருபத்தியோரு முறை கேட்டான், நானும் அவன் கேட்ட இருபத்தியோரு முறையும் அது சிட்டுக்குருவி என்று பதில் சொன்னேன்.
நான் பதில் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவன் அதே கேள்வியை என்னிடம் கேட்பான் மீண்டும் மீண்டும்...
அவனுக்கு மூளை கோளாறு அல்ல.. அந்த வயதுக்கான உணர்வுகள், என்மீது உள்ள பிரியத்தால்.. மீண்டும் மீண்டும் என்னோடு உரையாடும் ஆர்வதில் கேட்பான் எனது ஏதுமறியாத செல்ல மகன்.
ஆயிரம் உணர்வுகளை தேக்கி உணர்வற்றது போல் இருக்கும் அவரது முகம் அருகாமைக் காட்சியாய் வந்து போகும்.
அவனது கை அன்னிச்சையாய் நாட்குறிப்பை மூடும். அவனது தந்தையை கட்டியணைத்து முத்தம் கொடுப்பான்.
அவர்களது உருவங்களின் பின்புறத்திலிருந்து கேமிரா பின்னோக்கி நடந்து ஒரு மரத்தின் மேல் நோக்கி ஊர்ந்து செல்லும். உச்சியில் ஒரு கிளையின் மீது சிறகுகள் படபடக்க பறந்து அந்த சிட்டுக்குருவி அமரும்.
படம் முடிந்து பெயர்கள் ஓடத்துவங்கும். பெயர்கள் மட்டுமல்ல நமது சிந்தனைகளும்....

5 comments

 1. che Says:
 2. nanum parthen ungalil irundhuthan..
  mudhal murai puriya villai,meendum..meendum...piragu purindhadhu

   
 3. princenrsama Says:
 4. வணக்கம் தோழர்! இன்னும் உங்கள் கட்டுரையைப் படிக்கவில்லை ஆயினும் நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் அட்டகாசமான படத்திற்காகவே நன்றி!! படம் பார்த்துவிட்டேன்.... அருமை... அருமையிலும் அருமை....! மீண்டும் பதிவைப் படித்தூவிட்டு வந்து பதிலிடுகிறேன். நன்றி!

   
 5. JR Says:
 6. dear comrade , good to know

   
 7. பின்னூட்டம் செய்த நண்பர்களுக்கு நண்றி

   
 8. i thought most of us would shame about us, while read this or while see that short film... ( ayyo unnaku sonna puriyathu veduma.... enakku theriyum pa naan onnum kulantha illa. Like this we cuts our parents interctions more times) Thanks com. SG

  GOPI

   
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark