மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


நேற்று (31.10.09) அவரது இறுதி அஞலிக்காக மதுரை சென்றிருந்தேன்.. மாட்டுதாவணி துவங்கி மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகம் இருக்கும் மாபூப்பாளையம் செல்லும் வழியெல்லாம் சுவர்களில் அவரது படங்களை தாங்கிய போஸ்டர்கள் கண்ணில் பட்டது. "இமயம் சரிந்தது இதயம் அழுகிறது" என்று அதில் ஒரு போஸ்டர். கட்சிகாரர்கள் மட்டுமல்லாது பொதுவான சிலரும் பல அமைப்புகளும் போஸ்டர் போட்டிருந்தனர். சிம்மக்கல் அருகில் அவரது படத்தை வைத்து மாலை அணிவித்து "மக்கள் தொண்டன் திரு. மோகன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்" என எழுதி கீழே சிம்மக்கல் தொழிளாளகள் என்று எழுதி இருந்தனர். கட்சிக்கும் அப்பாற்பட்ட பலர் அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில் அவர் குறித்த தனது வருத்தங்களை தெரிவித்திருந்தனர்.

இத்தனைக்கும் காரணம் அவரது எளிமை என்பது அங்கு வந்த மக்கள் கூட்டத்தை பார்த்தபோது தெரிந்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாலிபர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய சமயம், தோழர் மோகனின் துணைவியார் கடலூரில் ஆசிரியர் பணியில் சேர்ந்த சமயத்தில் அவர் தனது குழந்தையுடன் கட்சி அலுவலகத்தில் தங்கி இருந்தார். கடுமையான வாழ்வியல் சூழல். ஒருமுறை தோழர் மோகன் கடலூர் வந்த போது நான் அவரிடம் சொன்னேன் "தோழர், வேண்டுமானால் தோழரை குழந்தையுடன் என்வீட்டில் தங்கச்சொல்லுங்கள்" அதற்கு அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் " நீங்க முழுநேர ஊழியர் எப்படியும் ஒத்த ரூமில்தான் குடியிருப்பிங்க.. அதனால் தொந்தரவு வேண்டாம். அவர்கள் அலுவலகத்திலேயே தங்கட்டும் என்றார். (உண்மையும் அதுதான் திருமணமாகி நான் மிகச்சிறிய வீட்டில் அப்போது குடியிருந்தேன்) ஒரு கம்யூனிஸ்ட் குடும்பம் கடுமையான சூழல்களை தாங்குவது மிகவு எளிதானது என்றார்.

பல மாதங்கள் அவரது துணைவியார் அந்த கட்சி அலுவலகத்தில் தான் தங்கி இருந்தார். அப்போது தோழர் மோகன் கட்சியின் மாவட்ட செயலாளர். அதன் பிறகுதான் முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆனாலும் அவரது எளிமை அப்படியே தொடர்ந்தது.

இரண்டாம் முறையாக அவர் பாராளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்பட்டபின் சிதம்பரம் நகரத்திற்கு ஒரு பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தார். அவர் மாலை வந்து இரவே புறப்பட வேண்டும். பயண அசதியில் அவர் குளித்துவிட்டு பொதுக்கூட்டத்தில் பேசவிரும்பினார்.

நமது தோழர்கள் ஹோட்டலில் ரூம் போடலாம் என்றார்கள். அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை அறைமணி நேரத்திற்கு எதற்கு அறை என மறுத்துவிட்டு, என்னுடன் எனது வீட்டிற்கு வந்தார். சிதம்பரம் மேல வீதியிலிருந்து நாங்கள் காரில் புறப்பட்டபோது ஆர்வமான இளம் தோழர்கள் 20க்கும் மேற்பட்ட மோட்டர் பைக்குகளையும், 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களையும் எங்கள் வாகனத்திற்கு முன்னால் அணிவகுக்கவிட்டனர். அவர் கரில் இருந்தபடியே அவர்களை அப்படி முன்னால் போகவேண்டாம் என கேட்டுப்பார்த்தார்.

அவர்கள் கேட்பதாக இல்லை. கீழவீதி வரும் போது நாங்கள் சென்ற காரை நிறுத்தச்சொல்லி கீழே இறங்கினார். முன்னால் அணிவகுத்த தோழர்களை அழைத்து சொன்னார் " நமது கட்சியின் பெருமையே எளிமைதான். ஆனால் நீங்கள் இப்படி முன்னால் அணிவகுத்துச்சென்றால் நமது கட்சிக்கு கெட்டபெயர் வரும். நீங்கள் கலைந்து செல்லவில்லை என்றால் நான் ரமேஷ் வீட்டிற்குச் சென்று குளித்து வருவதை விட்டு மேடைக்கே திரும்பிப்போய் விடுவேன்" அதோடு தோழர்கள் கலைந்து சென்றனர்.

எங்கள் தெருவில் கார் எனது வீட்டின் முன்புறம் சென்றதும். எனது தாயாருடன் தெருவில் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அக்கம் பக்கத்து பெண்கள் யாரோ எங்கள் சொந்தக்காரர் வருவதாக கருதி பேச்சை சற்று நிறுத்தி மீண்டும் துவங்கினர். எனது அம்மா யாரோ தோழரை அழைத்து வந்திருக்கிறேன் என கருதி உள்ளே அழைத்தார். நான் சொன்னேன் இவர்தான் தோழர் மோகன் மதுயில் இரண்டாம் முறையாக எம்.பியாக உள்ளார் என்று. செய்தி பரவி கொஞ்சம் நேரத்தில் எங்கள் தெருவின் பலவீட்டு பெண்கள் எங்கள் வீட்டினுள் வந்து எட்டிபார்த்தபடியே நின்றனர்.

அதை கவனித்த மோகன் அவர்களை சிரித்தபடியே உள்ளே அழைத்தார். பக்கத்துவீட்டு அக்கா கேட்டார் நீங்க நெசமாலுமே எம்.பி யா? தம்பியோட தனியா வந்திருக்கிங்க.. எம்.பி ன்னா வரிசையா காரும், கட்சிகாரங்க கூட்டத்தோடவுந்தானே வருவாங்க என்றார்.

அதற்கு தோழர் மோகன் சொன்னார் " எங்க கட்சியில எம்.பி அப்படின்னா பெரிய பதவி எல்லாம் கிடையாது. நானும் ரமேஷ¨ம் ஒரே தோழர்கள்தான். அதான் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த மாதரி கட்சியை எல்லாம் நீங்கதான் ஆதரிக்கனும்"

அதன் பிறகு அவர் எங்கள் வீட்டில் எங்களுக்ளுக்கா தயாரிதிருந்த சேமியா உப்புமாவை கேட்டுவாங்கி சாப்பிட்டுவிட்டு பொதுக்கூட்டம் வந்தார். பல தினங்கள் எங்கள் தெருவில் அந்த எளிய மனிதன் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.

என்னைப்போல இயக்க ஊழியர்களுக்கு அவருடனான நினைவுகள் இப்படியே தமிழகம் முழுவதும் கிடைத்திருக்கும். அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது நினைவுகள் அழிவதில்லை... அவர் குறித்த அறிந்த பலருக்கு பல நிகழ்வுகளில்.

வீரவணக்கம் தோழர் மோகன்.

4 comments

  1. ganesh Says:
  2. Excellent tribute, Comrade. Please visit my blog also. I have shared some of my experiences with Comrade. Mohan.

     
  3. தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி பரவலான மக்களுக்கு பொ.மோகன் தெரிந்தது எளிமையின் எடுத்துக்காட்டாகத்தான். அவர் குறித்த நினைவுகள் பலருக்கு காதலி குறித்த சுவாரசியமான பதிவுகள் நெஞ்சுக் கூட்டுக்குள் கிடப்பதைப் போல கிடக்கும். தோழர் ரமேஷீக்கு கிடைத்த அனுபவம் போல மதுரையில் எங்கள் பலருக்கு பல அனுபவங்கள் ஞாபக வெளிச்சங்களாய் உள்ளது.
    - ப.கவிதா குமார்

     
  4. Anonymous Says:
  5. Every year i used to say "Happy New year" wishes to him. He also in the next morning expressed his wishes till his death.Such a "personalities" -alone- assets of left movements-vimalavidya

     
  6. பின்னூட்டம் செய்த நண்பர்களுக்கு நண்றி. தோழர் மோகன் குறித்து பலரிடமும் உள்ள நினைவுகளை பகிர்ந்துக்கொள்வது இன்றைய இளைய அரசியல் ஊழியர்களுக்கு நல்லது

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark